World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Israeli protests and the reemergence of the working class

இஸ்ரேலிய போராட்டங்களும், தொழிலாள வர்க்கத்தின் மீள்-எழுச்சியும்

Alex Lantier
9 August 2011

Back to screen version

சனியன்று டெல் அவிவ் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், அபிவிருத்தி அடைந்துவரும் சர்வதேச நிலைமைகளின் அடிப்படை தன்மையான அதாவது உலக அரசியலில் தொழிலாள வர்க்கம் மிகவும் சக்திவாய்ந்த படையாக மீள்-எழுச்சி பெற்றுவருவதை பலமாக எடுத்துக்காட்டுகிறது. குறைந்த சம்பளங்கள் மற்றும் உயர்ந்துவரும் வாழ்க்கை செலவுகளுக்கு எதிராக அழைப்புவிடுக்கப்பட்டு, கால் மில்லியனுக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் பங்கேற்றிருந்த அந்த பேரணி, இஸ்ரேலிய வரலாற்றில் மாபெரும் சமூக போராட்டமாகும்.

செப்டம்பர் 2008 நிதியியல் நிலைகுலைவைத் தொடர்ந்து ஏற்பட்ட மந்தநிலைமைகளுக்கு உலக பொருளாதாரம் மீண்டும் திரும்புமென்ற அச்சுறுத்தல்களின் மத்தியில் பங்குச்சந்தையின் ஒரு புதிய பொறிவிற்கு இடையில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் இராஜினாமாவிற்கு இட்டுச் சென்ற கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த மக்கள் போராட்டங்களால் ஓரளவிற்கு தூண்டப்பட்டு, டெல் அவிவில் உள்ள ரோத்ஸ்செல்ட் பொலிவார்டை, பல வாரங்களாக, கூடார நகரங்கள் ஆக்கிரமித்துள்ளன. மருத்துவர்களும், பொதுத்துறை தொழிலாளர்களும் நிதிஒதுக்கீடு குறைப்பு மற்றும் மோசமான வேலை நிலைமைகளை எதிர்க்க போராட்டங்களில் இறங்கியுள்ளனர். இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹீப்ரூ மற்றும் அரேபிய இரண்டு மொழிகளிலும் எழுத்தப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி நின்றனர். அவர்களில் சிலர் உடனிருந்த சகாக்களை "ஓர் எகிப்தியரைப் போல் நடந்துகொள்ள" தூண்டிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்க ஆதரவுடனான துனிசிய மற்றும் எகிப்திய சர்வாதிகாரிகளுக்கு எதிராக எழுந்த மக்களின் புரட்சிகர போராட்டங்கள், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பை இணைத்துள்ளது. இது இப்போது வெகுகாலமாக யூத மக்களின் தாய்நாடாக சித்தரிக்கப்பட்டு வந்த இஸ்ரேலிலும் பரவியுள்ளது. எவ்வாறிருந்தபோதினும், போராட்டங்கள் வெளிப்படும் விதத்தில், யூத மக்களுக்கு இஸ்ரேல் ஒரு முன்னோக்கிய பாதையை வழங்கவில்லை, மாறாக ஒரு முதலாளித்துவ மேற்தட்டின் நலன்களுக்கு உதவும், யூத மற்றும் அரேபிய தொழிலாளர்கள் இருபகுதியினரையும் ஒடுக்கும் ஒரு காவலரணாக அது உள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பிராந்தியங்கள், லெபனான், சிரியா, எகிப்து, ஈரான் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள யூத தொழிலாளர்களின் வர்க்க சகோதரர்களுக்கு எதிராக சகோதரத்துவ சண்டைகளுக்கு தயாரிப்பு செய்வதே தங்களின் அரசியல் கடமையென்று ஆளும் வர்க்கம் யூத தொழிலாளர்களுக்கு கூறுகிறது. இஸ்ரேலிய அரேபியர்களைப் பொறுத்த வரையில், பெரும்பான்மை யூத தொழிலாள வர்க்கத்தோடு சேர்ந்து மலிவுக்கூலிகளாக சுரண்டப்பட்டுவரும் அவர்கள் இரண்டாந்தர குடிமக்களாக உள்ளனர். இந்த அடிப்படையில் தான் இஸ்ரேல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கிய அரணாக சேவை செய்துள்ளது.

இஸ்ரேலின் பங்குச்சந்தையில் அண்ணளவாக பாதியளவிற்குக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் அந்நாட்டு 16 பில்லினியர்களைக் கொழுக்க வைக்கும் சுதந்திர-சந்தை கொள்கைகளை இஸ்ரேல் ஆளும் மேற்தட்டு பல ஆண்டுகளாக பின்தொடர்ந்தது. தனியார்மயமாக்கல்கள், பெருநிறுவன நெறிமுறைகளை தளர்த்தியமை, இஸ்ரேலின் இராணுவ-தொழில்துறை அமைப்புகளிடமிருந்து நிதியியலை வடிகட்டியமை ஆகியவை தொழிலாளர்களை வெளிறச் செய்யுமளவிற்கு இரத்தத்தை உறிஞ்சியுள்ளது. 2008இல் இருந்து, உயர்ந்துவரும் விலைவாசிகள் தொழிலாளர் வர்க்கத்தின் ஓரளவிற்கு வசதியான பிரிவினரைக்கூட நாசகரமாக ஆக்கியுள்ளன. வீட்டு விலைகள் 55 சதவீதம் உயர்ந்துள்ளது; வாடகை 27 சதவீதம் உயர்ந்துள்ளது; முக்கிய உணவுப்பொருள் வில்லைகளின் விலைகள் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்ற நிலையில், மதம், இனம், நாடு அல்ல மாறாக வர்க்கமே அரசியல் வாழ்வின் மைய பிரச்சினையாக உள்ளதென்பது பெருந்திரளான மக்கள் அதிகமாக புரிந்து வருகின்றனர். இஸ்ரேலிலும், அத்தோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் ஆழமடைந்து வருவது, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒருங்கிணைந்த புரட்சிகர போராட்டங்களுக்கு புறநிலையாக அடித்தளத்தை அமைத்து வருகின்றன.

எகிப்திய புரட்சியின் அனுபவங்கள் இஸ்ரேலிய தொழிலாளர்களுக்கு மிக அவசியமானதாகும். அங்கே மத்தியதட்டு வர்க்க சக்திகள் ஆளும் இராணுவ ஜண்டாவுடன் சேர்ந்து புரட்சியை தடம்புரளச்செய்யவும், பேச்சுவார்த்தை உடன்படிக்கைகள் மூலமாக தோல்வியடைய செய்யவும் முயன்று வருகின்றன. அவர்கள் எகிப்திய தொழிலாளர்களுடன் கூடி ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதை விட, பிரதம மந்திரி பென்யமின் நெத்தென்யாஹூவின் அதிதீவிர-வலது ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க, ஜண்டாவிடம் முறையீடு செய்வதன் மூலமாக அவர்களின் ஒடுக்குமுறையின் காரணங்களை எதிர்த்து போராட முடியாது. இஸ்ரேலிய பாட்டாளி வர்க்கம் நெத்தென்யாஹ் அரசாங்கத்தை வீழ்த்தி, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு புதிய, அரசியல்ரீதியாக சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இதற்கு மாறாக, ஹிஸ்டாட்ரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஓபெர் ஐனி, ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக அடையாள வேலைநிறுத்தங்களை அறிவிக்கக்கூடும் என்றபோதினும், அவருக்கு "அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க" எந்த விருப்பமும் இல்லையென்று தெரிவிக்கிறார். நெத்தென்யாஹையும், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள 16 மந்திரிகள் அடங்கிய "பேச்சுவார்த்தை குழுவும்" வழங்கும் சலுகைகளை உழைக்கும் மக்கள் சார்ந்திருக்குமாறு என ஊக்குவிக்கிறார்.

என்னவொரு மோசடி! மத்தியகிழக்கு முழுவதிலும் உள்ள தொழிற்சங்கங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்களின் போலி-இடது கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்கும் மற்றும் தணிக்கும் வேலைகளை செய்யும் நிதியியல் பிரபுத்துவத்தின் ஒரு முகவர் என்பதை ஐனி அவரே வெளிப்படுத்துகிறார்.

விக்கிலீக்ஸால் பிரசுரிக்கப்பட்ட அமெரிக்க இரகசிய ஆவணங்களும், Haaretz நிகழ்ச்சியும் நெத்தென்யாஹ் கொள்கைகளுக்கு எனி ஆதரிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. மே 2009 அமெரிக்க இராஜாங்க தூதுவர்களுடனான ஒரு சந்திப்பில், நெடன்யாஹின் வரவு-செலவு திட்டம் மற்றும் பொருளாதார கொள்கைக்கு தம்முடைய ஒப்புதலை வழங்கிய எனி, இஸ்ரேலிய பாராளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிப்பதை உறுதிப்படுத்த அவசியமான "சட்டத்தை உறுதிப்படுத்துபவராக" இருந்தார். இஸ்ரேலிய மக்கள் மீது வலதுசாரி முறைமைகளைத் திணிக்கும் பேச்சுவார்த்தைகளில் எனி ஒரு "சக்திவாய்ந்த முக்கிய தரகராவார்" என்று அமெரிக்க இராஜாங்கவிவகார பிரதிநிதிகள் தீர்மானித்தனர்.

இஸ்ரேல் அரசாங்கத்தை உலுக்கிவரும் மற்றும் யூத அரேபிய தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டிவரும் இஸ்ரேலின் எழுச்சிமிகு மக்கள் போராட்டங்கள், போராட்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதையும், மத, இன அல்லது தேசிய கோடுகளால் அவர்களைப் பிரித்து வைத்திருக்கும் அனைத்து முயற்சிகளையும் தாண்டி வரவும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிக்கும்.

இந்த தன்னியல்பான உணர்வை எவ்வாறு அரசியல் உணர்மையுள்ளதாக திருப்பி, தங்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்கான மூலோபாயங்களை வகுப்பது என்பது தான் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் மைய பிரச்சினையாக உள்ளது. உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டம் ஒன்று மட்டுமே இதற்கான அடித்தளத்தை அளிக்கும் ஒரே முன்னோக்காக உள்ளது. இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே முன்னெடுக்கிறது.

இஸ்ரேல், எகிப்து மற்றும் ஏனைய அரேபிய நாடுகளின் போராட்டங்கள் தெளிவுபடுத்துவதைப் போல, மத்திய கிழக்கு பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பொதுவான போராட்டமானது, முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று ரீதியிலான நெருக்கடிக்கு இடையில் எழுந்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பல தசாப்தங்களாக கொள்ளையடித்த நிதியியல் ஒட்டுண்ணிகளின் கரங்களில் தங்களின் வாழ்க்கை தரங்கள் கொடூரமாக வெட்டுப்படுவதை முகங்கொடுத்துவரும் அந்நாடுகளின் தொழிலாளர்களிடம் தான் மத்திய கிழக்கு தொழிலாளர்கள், அவர்களின் போராட்டங்களுக்கு, அவர்களின் கூட்டாளிகளைக் காண முடியும்.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதும், பெருந்திரளான தொழிலாள வர்க்க போராட்டத்திற்கு புதிய அமைப்புகளை உருவாக்குவதுமே முக்கிய பிரச்சினையாக உள்ளது. உயர்ந்துவரும் தொழிலாளர்களின் போராட்ட அலை, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்கை மிகவும் பலமாக உறுதிப்படுத்துகிறது. உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக ஒரு மத்தியகிழக்கு சோசலிஸ்ட் அமைப்பிற்கான போராட்டத்தில் யூத மற்றும் அரேபிய தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த இஸ்ரேலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பிரிவு கட்டியெழுப்பப்பட வேண்டும்.