World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

When the US defaulted: 40 years since the collapse of the Bretton Woods Agreement

பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் பொறிந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னர்: அமெரிக்கா திவாலானது

Nick Beams
15 August 2011

Back to screen version

கடன்தர மதிப்பீட்டு பட்டியலில் Standard and Poor நிறுவனம் அமெரிக்காவை கீழிறக்கியதன் முக்கியத்துவத்தின் மீதான ஏராளமா விமர்சனங்கள், 'அமெரிக்கா அதன் கடனை செலுத்தமுடியாது ஒருபோதும் திவாலாகாது' என்ற அடித்தளத்தில் அந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை புறக்கணித்துள்ளன. ஆனால் தங்கத்திற்கு அமெரிக்க டாலர்கள் மாற்றீடு என்பதை 'அமெரிக்கா இனியும் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க முடியாது' என்று உலகிற்கு அறிவிக்க, இன்றிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர், ஜனாதிபதி நிக்சன் ஞாயிறன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றிய போதே அமெரிக்கா திவாலாகிவிட்டது.

ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்ட இந்த முடிவானது, யுத்தத்திற்கு பிந்தைய முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளத்தை வழங்கிய மற்றும் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டை மீட்டெடுக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 1944 பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தைத் தகர்த்தது.

பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்த பிரதான பொருளாதார மற்றும் நிதியியல் முக்கியஸ்தர்களுக்கு இடையில் நடந்த பல ஆண்டு பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்களுக்கு பின்னர் ஏற்பட்டதாகும். ஒரு புதிய சர்வதேச நிதியியல் அமைப்புமுறை ஸ்தாபிக்கப்படாவிட்டால், சமூக புரட்சியின் அச்சுறுத்தலோடு, யுத்தத்திற்குப் பிந்தைய பொருளாதாரம் மிக விரைவில் 1930களின் நிலைமைகளுக்குத் திரும்பக்கூடும் என்ற ஒரு பரந்த புரிதல் இருதரப்பிலும் இருந்தது.

ஆனால் இரண்டு தரப்பிலும் கூர்மையான கருத்துவேறுபாடுகளும் இருந்தன. முதலாம் உலக யுத்தத்தோடு முடிவுக்கு வந்த 1919 வேர்சைசெய்ல்ஸ் உடன்படிக்கையைக் (Versailles Treaty) கடுமையாக விமர்சித்து பெயர்பெற்ற பிரதான பிரிட்டிஷ் பேச்சுவார்த்தையாளர் ஜோன் மெனார்ட் கெய்னெஸ் பிரிட்டனின் பொருளாதார நிலைப்பாட்டைத் தக்கவைப்பதில் மிகவும் ஆர்வத்தோடு இருந்தார். அதேவேளை அமெரிக்காவின் எழுச்சிபெற்றுவந்த பொருளாதார மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் நிர்பந்திக்கப்பட்டிருந்தார். வர்த்தகத்தை நெறிப்படுத்தும் ஒரு சர்வதேச கணக்கீட்டு ஆணையத்தின் (International Clearing Union) நிர்வாகத்தின்கீழ், பேன்கர் (bancor) என்ற ஒரு சர்வதேச நாணயத்தை கெய்னெஸ் முன்மொழிந்தார்.

இது அமெரிக்க நிர்வாகத்தாலும், அதன் தலைமை பேச்சுவார்த்தையாளர் ஹேரி டெக்ஸ்டர் வொயிட்டினாலும் நிராகரிக்கப்பட்டது. அமெரிக்கா அதன் முதலாளித்துவ போட்டியாளர்கள் மீது அதன் மேலாதிக்கத்தைக் கொண்டிருந்த நிலையில், கெய்னெஸின் திட்டம் முன்மொழிந்த சர்வதேச நெறிமுறைக்குள் தன்னை கொண்டு வர அமெரிக்கா தயாராக இல்லை. எவ்வாறாகிலும் முதன்மை உலக செலாவணியாக டாலரை அமெரிக்கா உருவாக்கிக் கொண்ட போதினும், அமெரிக்காவிற்கு வெளியில் இருக்கும் அனைத்து டாலர்களையும் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு $35 டாலர் என்ற வீதத்தில் மாற்றீடுசெய்யப்படும் என்ற உத்தரவாதம் மூலம் ஒரு விட்டுகொடுப்பைச் செய்ய அது நிர்பந்திக்கப்பட்டது. டாலர்-தங்கம் இடையில் இருந்த உறவின் அடிப்படையில், டாலரோடு பிணைந்திருந்த அனைத்து பிரதான சர்வதேச செலாவணிகளும், அதன்மூலம் ஒன்றுக்கேற்ப ஒன்று ஒரு நிலையான விகிதத்தைக் அடைந்தன. கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை உருவாக்கும் முயற்சியோடு சேர்ந்து, 1930களில் வெடித்த நாசகரமான செலாவணி மதிப்புக்குறைப்பு போட்டியைத் தடுக்க, உறுதியான நாணய மாற்றீட்டு நோக்கத்தை கொண்டிருந்தது.

உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் ஒரு முக்கிய பங்குபற்றியது. ஆனால் அதன் பிரமாண்ட வெற்றி புதிய முரண்பாடுகள் எழுவதைக் கண்டது.

சர்வதேச வர்த்தகம் மற்றும் அன்னிய முதலீட்டின் பரவல் என்பது (இதன் மூலம் ஆதாயம் பெற்றவைகளில அமெரிக்க முதலாளித்துவம் பிரதானமாக இருந்தது), அதிகரித்துவந்த சர்வதேச பரிமாற்ற தேவைகளுக்கு நிதியளிக்க தொடர்ச்சியாக டாலரை வெளியில் புழக்கத்தில் விட வேண்டியதைக் குறித்தது. ஆனால் இது டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான உறவுக்கு குழிபறித்தது. உலக பொருளாதாரத்தில் சுழற்சியிலிருந்த டாலர்கள், அமெரிக்காவிற்கு பக்கபலமாக இருந்த அதன் கையிருப்பு தங்கங்களைவிட அதிகமான விகிதத்தில் வளர்ச்சி அடைந்தன. இந்த பிரச்சினை 1960களின் தொடக்கத்தில் (ஜனாதிபதி கென்னடி டாலர்-தங்கத்திற்கிடையில் இருந்த உறவு குறித்து பெரிதாக ஒன்றும் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது) எழுந்ததோடு, அத்தசாப்தம் முழுவதிலும் ஆழமடைந்தது. 1951இல் அமெரிக்காவிற்கு வெளியில் $5 பில்லியனாக இருந்த டாலரின் அளவு 1968இல் $38.5 பில்லியனாக வளர்ச்சியடைந்தது. இது அமெரிக்காவின் தங்க கையிருப்புகளைவிட $23 பில்லியன் டாலர் அதிகமாகும்.

அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீடு மற்றும் அன்னிய நாடுகளுக்கான அரசாங்க செலவுகள், குறிப்பாக கொரிய மற்றும் வியட்நாம் யுத்த செலவுகளின் காரணமாக, செலுத்துமதி நிலுவை (balance of payment) (மொத்த நிதி வருவாய் மற்றும் செலவுகளைக் கொண்டு இது மதிப்பிடப்படும்) பற்றாக்குறையில் இருந்தது. இருப்பினும் வர்த்தக உபரி, அதாவது அமெரிக்க இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருந்ததைக் கொண்டு, ஓரளவிற்கு அது சரிக்கட்டப்பட்டது. எவ்வாறிருந்தபோதினும் உலக சந்தை போட்டியில் அமெரிக்கா வகித்த இடத்தில் ஒரு வீழ்ச்சியை பிரதிபலித்துக் கொண்டு, 1970களின் தொடக்கத்தில் வர்த்தக சமநிலைமை அபாயத்திற்குள் வந்தபோது தான் நிக்சன் தலையிட்டார்.

பிரெட்டன் வூட்ஸ் முறை முடிவுக்கு வந்தமை, வெறுமனே அமெரிக்காவின் சார்புரீதியிலான வீழ்ச்சியின் ஒரு விளைவு மட்டுமல்ல. அது முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு தீர்க்கமுடியாத முரண்பாட்டின், அதாவது அதிகளவில் ஒருங்கிணைந்த உலக பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய போட்டி அரசுகளுக்குள் உலகம் பிளவுபட்டிருந்தமைக்கும் இடையில் இருந்த முரண்பாட்டின், வெளிப்பாடாகவும் இருந்தது.

1960கள் முழுவதும், வெற்றிபெற்றுவந்த அமெரிக்க நிர்வாகங்கள், டாலர்களின் புழக்கத்தை தடுக்கும் நெறிமுறைகளைத் திணித்ததன் மூலம் பிரெட்டன் வூட்ஸ் முறையைத் தக்கவைக்க முயன்றன. ஆனால் அவை தொடர்ச்சியாக யூரோ-டாலர் சந்தை என்று எது அழைக்கப்பட்டதோ அதனால் நிலைகுலைக்கப்பட்டன. எந்தவொரு தேசிய அரசாங்க கட்டுப்பாடுமின்றி ஐரோப்பிய நிதியியல் அமைப்புமுறைக்குள் சுழன்றுவந்த டாலர்களை யூரோ-டாலர் சந்தை கொண்டிருந்தது. மிகவும் சக்திவாய்ந்த தேசிய அரசாங்கங்களாலும் கூட இந்த சந்தையை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடியாததால் அதிகரித்துவந்த விரக்தியை பிரதிபலிக்கும் வகையில், பிரிட்டிஷ் தொழிற்கட்சி பிரதம மந்திரி ஹாரோல்ட் வில்சன் "சூரீச்சின் சூத்திரங்களை" (gnomes of zurich) (இதன் மையத்தில் சுவிஸ் வங்கியாளர்கள் இருந்ததாக கருதப்படுகிறது) அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தார்.

ஆகஸ்ட் 1971க்குப் பின்னர் அமெரிக்க டாலர் உலக கையிருப்பு  செலாவணியாக இருந்தபோதினும், மதிப்புமாறும் செலாவணி விகிதங்களின் புதிய முறையானது (floating exchange rates) உலக நிதியியல் அமைப்புமுறைக்கு அதிகளவில் ஸ்திரமின்மையை கொண்டு வந்தது. இன்றைய ஆழமடைந்துள்ள பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடியில் ஒரு முக்கிய பங்கு வகித்துவரும் நிதியியல் கருவிகளில் (derivatives) ஏற்பட்டுள்ள அதியுயர்ச்சி, இந்த காலகட்டத்திலிருந்து தான் உருவானது என்று குறிப்பிடலாம்.

முன்பேர ஒப்பந்தங்கள் போன்ற நிதியியல் கருவிகள் (derivatives) நீண்டகாலமாகவே இருந்துவந்துள்ளன. ஆனால் பிரெட்டன் வூட்ஸ் முறையின் பொறிவுக்குப் பின்னர், இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ள உலக பொருளாதாரத்தோடு சேர்ந்து செலாவணி மற்றும் ஏனைய நிதியியல் சந்தைகளின் ஸ்திரமின்மையானது, அபாயங்களுக்கு எதிராக உத்தரவாதமளிக்கும் புதிய நிதியியல் முறைகளை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையை ஏற்படுத்தியது. அந்த தேவையை பூர்த்தி செய்யவே நிதியியல் கருவிகள் (derivatives) நடைமுறைக்கு வந்தன. ஆனால் விரைவிலேயே அவை வந்த அவற்றின் மூலங்களையும் கடந்து வெடிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்துவிட்டன.

1972இல், பிரெட்டன் வூட்ஸ் முறையின் மறைவின் ஓராண்டிற்குப் பின்னர், முன்பேர செலாவணியுடன் (currency futures) ஒரு சந்தை சிகாகோவில் கொண்டு வரப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் நிதியியல் முன்பேர பங்குகளுக்கு விலை நிர்ணயிக்கும் ஒரு சூத்திரம் அபிவிருத்திசெய்யப்பட்டு மற்றும் முன்பேர பங்குகளுக்கான பங்குச்சந்தை உருவாக்கப்பட்டது. 1975இல் சிகாகோ வர்த்தக ஆணையம் (Chicago Board of Trade) முன்பேர ஒப்பந்தங்களுக்கான முதல் வட்டிவிகிதங்களை அறிமுகப்படுத்தியது. சர்வதேச தீர்வைகளுக்கான வங்கியின் (Bank for International Settlements) கருத்துப்படி, 1973இல் தோற்றப்பாட்டளவில் நிதியியல் வழக்கங்கள் இருந்திருக்கவில்லை. ஜூன் 2008இல், லெஹ்மென் நிலைகுலைவு சம்பவ சூழலில் தான், நேரடி பங்குப்பேர உடன்படிக்கைகள் (over-the-counter agreements) என்றழைக்கப்படுவது கருத்தளவில் $683.7 ட்ரில்லியனாக அல்லது உலக உற்பத்தி மதிப்பை விட 10அதிகமாக இருந்தது.

கடந்த நான்கு தசாப்தங்களில் நிதியியல் வழக்கங்களின் பகட்டான வளர்ச்சியானது, கடன்களைப் பற்றி மார்க்ஸ் பகுப்பாராய்ந்த ஒரு நிகழ்வுப்போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர் குறிப்பிட்டார்: முதல் கட்டத்தில், "மூலதனதிரட்சிக்கு அடிபணிந்த பணிவான சேவகனைப் போல, கடன் ஊர்ந்துசெல்கின்றது,” ஆனால் ஒரு பிரமாண்டமான சமூக மற்றும் நிதியியல் இயந்திரமுறையாக அது முடிவு பெறுகிறது. இதைப் போன்றே, நிதியியல் வழக்கங்கள் அபாயங்களுக்கு எதிராக அது தன்னைக் பாதுகாத்துக்கொள்ள மூலதனத்திற்கு ஒரு சேவகனைப் போல முதலில் நுழைந்தது. ஆனால் வரலாற்றில் மிகப்பெரிய நிதியியல் பேரழிவை உருவாக்க உதவிசெய்து முடிந்துள்ளது.

பிரெட்டன் வூட்ஸ் முறையின் பொறிவும், அது உருவாக்கிய கொந்தளிப்பும் 1970களின் தொடக்கத்தில் இருந்த வெடிப்பார்ந்த சமூக மற்றும் வர்க்க போராட்டங்களை தூண்டிவிடுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. ஆனால் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த தலைமையின் காட்டிகொடுப்புகளால் தடுக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் அந்த தோல்விகள் பிரெட்டன் வூட்ஸ் முறையை கிழித்தெறிந்த உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் முரண்பாடுகளை தீர்த்துவிடவில்லை. உண்மையில், அவை ஆழமடைந்துள்ளன. அமெரிக்காவின் வரலாற்றுரீதியிலான வீழ்ச்சி தொடர்ந்தது. அது இப்போது உலக பொருளாதாரங்கள் மற்றும் அரசியலில் மிகவும் ஸ்திரமற்ற காரணியாக உள்ளது. அதேவேளை உலக பொருளாதாரத்திற்கும், தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையில் நிலவும் முரண்பாடு, சர்வதேச நிதியியல் அமைப்புமுறை உடைவின் வடிவத்தில் எழுந்துள்ளது.

அதாவது நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புரட்சிகர போராட்டங்களின் அளவையும், வீச்சையும் விட அதிகமாக அவை மீண்டும் எழும் என்பதை இது குறிக்கிறது. கடந்த தோல்விகளின் படிப்பினைகளைப் பெற்று, தொழிலாள வர்க்க தலைமையின் நெருக்கடி தீர்த்தாகப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.