World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

அரசாங்கம் கபட உபாயத்தின் மூலம் கொழும்புவாசிகளை அகற்றுவதை துரிதப்படுத்துகிறது

Vilani Peris
13 August 2011

Back to screen version

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கொழும்புவாசிகளை அகற்ற புதிய உபாயங்களை கையாள்வதில் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நீதிமன்றத்தில் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், மக்கள் எதிர்ப்பை ஆன்மீகத் தலைவர்களைக் கொண்டு அமைதிப்படுத்துவதும் இந்த புதிய உத்தி முறைகளில் அடங்குகின்றன.

கொழும்பு நகரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட பெரு வியாபாரிகளது  பெரு வர்த்தக மையமாக்கும் அரசாங்கத்தின் தயாரிப்பின் கீழ் 70,000 குடிசைவாசி குடும்பங்கள் அகற்றப்படுகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் இந்த தாக்குதலுக்கு இரையாகவுள்ளனர். புள்ளி விபரங்களின்படி கொழும்பு நகரில் தரமற்ற வீடுகளில் 350,000 மக்கள் வாழ்வதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் (யூ.டி.ஏ.) ஆணையாளரான ஜே.எம்.ஜே. ஜயசிங்க கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை வரை இப்பாவத்த, தொட்டலங்க, தெமடகொட வழியாக செல்லும் எண்ணெய் குழாய் மீதும் அதற்கு சமீபமாகவும் அமைந்துள்ள வீடுகளின் உரிமையாளர்களில் 30 பேருக்கு எதிராக புகையிர திணைக்களம் வழக்கு தொடுத்துள்ளது. இவர்கள் நான்கு தசாப்தங்களாக இவ்வீடுகளில் வசித்து வருகின்றனர். இதற்கு முன் 2009ல் புகையிரத திணைக்களம் தொடுத்த வழக்கு தீர்ப்பின்றி முடிவடைந்திருந்த நிலையில், பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி இவ்வாண்டு மே மாதம் மீண்டும் புதிய வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 7 அன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, புகையிரத திணைக்களம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், இந்த குடிசைவாசிகளுக்கு எதிராக, அவர்கள் அடுப்பு எரிப்பதால் எண்ணெய் குழாய் எரியூட்டப்படும் ஆபத்து உள்ளதாகவும், எண்ணெய் குழாய்களில் இருந்து எண்ணெய் களவாடப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். இவ்வறிய குடிசைவாசிகளால் வழக்கறிஞர் வைத்து வாதாட வசதியற்ற நிலையிலேயே நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களால் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கக் கூட முடியாத நிலையில் நீதிமன்றம் அந்த 30 பேரையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அயலவர்கள் நீதிமன்றத்துக்கு வந்து சரீர பிணையில் விடுதலை செய்யும் வரை அவர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆகஸ்ட் 16 அன்று வழக்கு மீள் விசாரணைக்கு எடுக்கபடவுள்ளது. பல தசாப்தங்களாக இப்பகுதியில் வாழும் குடியிருப்பாளர்களால் எண்ணெய்க் குழாய்கள் தீ பற்றிய சம்பவங்களோ எண்ணெய் களவாடப்பட்ட சம்பவங்களோ நடந்திருக்கவில்லை.

வழக்கை எதிர்கொண்டுள்ள சிறியானி பெரேரா உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகையில், எண்ணெய் களவாடியிருந்தால் நாம் இன்று கோடீஸ்வரர்களாகி இருப்போம், இத்தகைய நரகத்தில் வாழவேண்டிய அவசியம் இருந்திருக்காது, என்றார். இந்த எண்ணெய் குழாய்களுக்கும் புகையிரத பாதைக்கும் இடையில் இந்த வரிசை வீடுகளில் வசிக்கும் இவர்கள், பெரும் சிரமத்துடனேயே அங்கு வாழ்கின்றார்கள். இங்குள்ளவர்களில் அநேகமானவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்தே பிழைக்கின்றனர். மேலும் பலர் பிரதேசத்திலுள்ள சிறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும் வேலை செய்கின்றார்கள்.

கொழும்பில் தகுந்த வீட்டு வசதி செய்து கொடுத்தால் தாம் இந்த வீடுகளில் இருந்து வெளியேறத் தயாராக இருப்பதாக பெரேரா குறிப்பிட்டார். எனினும் அரசாங்கமோ பல தசாப்தங்களாக இங்கு வசித்துவரும் வறிய மக்களை நடுத்தெருவிற்கு துரத்துவதிலேயே குறியாக இருக்கின்றது..

கொழும்பு துறைமுகத்தை அண்டியுள்ள மீனவ வீடுகளையும் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த விஜேந்திர நமது வலைத் தளத்துக்கு தகவல் தரும்போது, கடந்த தினங்களில் யூ.டி.ஏ. அனுப்பி வைத்த பல்கலைக்கழக மாணவர்கள், இந்த வீடுகளுக்கு அடையாளமிட்டு அங்கு வசிப்போரது விபரங்களையும் திரட்டிச் சென்றனர் என்றும், இத்துறைமுகத்தை அண்டி ஏறத்தாள 100 குடும்பங்கள் வரை உள்ளன, கடலோரமாக மட்டுமே மீனவர்களுக்கு தொழில் செய்ய முடியும், இவர்களை இவ்விடத்தில் இருந்து வெளியேற்றுவது குடும்பத்தோடு அழிப்பதாகும், என்றும் தெரிவித்தார்.

ஜூலை 16ம் திகதி முகத்துவாரம் புளூமென்டல் வீதியில் உள்ள 821ம் தோட்டத்தில் 28 வீடுகளினதும், அதற்கு சற்று அப்பால் வசதியுள்ள வீடுகளினதும் விபரங்களை யூ.டி.ஏ. அதிகாரிகள் திரட்டிச் சென்றனர். வீட்டின் நீள அகலத்தை அளந்து குறித்துக்கொண்டனர். வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, தொழில் செய்யுமிடம் ஆகிய விபரங்களுக்கும் மேலாக, அவர்கள் கொழும்புக்கு வெளியே அவிசாவலை பிரதேசத்துக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பார்களா என்ற விபரமும் பெறப்பட்டன. அவ்வாறு திரட்டிய விபரங்களில் குடும்பத்தவர்களை கையொப்பமிடும்படி அதிகாரிகள் கூறிய அதே வேளை, பலர் கையொப்பமிட மறுத்துள்ளனர்.

இந்த குடியிருப்பாளர்கள் 50-60 ஆண்டு காலங்களாக இந்த வீடுகளில் வாழ்ந்து வருபவர்கள். கடன் பெற்று தமது சொந்த செலவில் கல், சீமெந்து கொண்டு உறுதியான வீடுகளை அவர்கள் கட்டியெழுப்பியுள்ளனர். இரு மாடிக் கட்டிடங்கள் சிலவும் இவற்றில் அடங்கும். இந்த நிலங்களை 1970வது தசாப்தத்தில் யு.டி.ஏ. பொறுப்பேற்றுள்ளது. வீட்டுப் பத்திரம் இல்லாதிருப்பினும் மின்சாரம் மற்றும் நீர் கண்டனங்கள் செலுத்தப்பட்டுகின்றன. சில வீடுகளில் தொலைபேசி வசதியும் உண்டு.

யூ.டி.ஏ. இந்த விபரங்களை திரட்டிய பின், இலக்கம் குறிப்பிட்ட டோக்கன் ஒன்று வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவித்த, வீட்டை இழக்க நேரிட்டுள்ள ஒரு இளம் தாய், கொழும்பு நகரை அபிவிருத்தி செய்ய இந்த வீடுகளை உடைக்கவுள்ளதாக அவர்கள் எமக்கு கூறினர். எமக்கு மாடி வீடு தருவதாக கூறினர். அரசாங்கத்தால் வழங்கப்படும் மாடி வீடுகளை நாம் விரும்பவில்லை. நாங்கள் இந்த தோட்டத்தினை சுத்தமாக வைத்துக்கொண்டு ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றோம். மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடையில் அரசாங்க மாடிவீடுகள் துர் நாற்றம் விசுகின்றன, மலசல கூடங்கள் நிரம்பி வழிகின்றன, என்றார்.

இந்த வீட்டை கடன் வாங்கியே கட்டினோம். எனக்கு இந்த வீட்டைக் கட்ட 1,500,000 ரூபா வரை செலவானது. இன்னமும் கடன் கட்டி முடிந்தபாடில்லை. பிள்ளைகளது பாடசாலை ஆஸ்பத்திரி எல்லாவற்றுக்கும் இது வசதியானது. இந்த வீடுகளை உடைப்பதை நாம் எதிர்க்கின்றோம், என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வீடுகளுடன் முகத்துவாரம் புனித ஜேம்ஸ் கத்தோலிக்க ஆலயமும் கூட உள்ளடக்கப்படவுள்ளது. இந்த ஆலய பிதா தேவாலயத்துக்கு அருகாமையில் உடைக்கப்பட்டவுள்ள வீடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினார். இதற்கு விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டவர்கள், வீடுகளை உடைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சிலவா, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்க சார்பானவராக பேர் போன கத்தோலிக்க சபை கத்ரினால் மல்கம் ரஞ்சித் ஆகியோராவர். இது வீடு உடைப்புக்கு எதிரான கூட்டம் போல் தோன்றினாலும், நடந்தது என்னவெனில், கத்ரினாலின் ஆதரவுடன் வீடுகள் உடைக்கப்படுவதை அனுமதிப்பதே ஆகும். கொழும்பு நகரை சுத்தப்படுத்த வீடுகளை உடைப்பதாக துமிந்த சில்வா ஒரேயடியாக கூறியுள்ளார்.

குடிசைகளை உடைப்பதாகவே இந்த கூட்டம் முடிவுற்றது. எனினும் இவை குடிசைகளல்ல. எல்லாம் நன்றாக கற்களால் கட்டப்பட்ட வீடுகளே. பயப்பட வேண்டாம், உடைக்கப்பட்ட வீடுகளுக்கு இந்த வீதியிலேயே நாம் வீடு கொடுப்போம் என துமிந்த சில்வா கூறுகிறார். அது அப்பட்டமான பொய். அப்படியாயின் இந்த வீடுகளை உடைப்பதற்கு முன் வீடுகளை கட்டிக் கொடுக்கலாமே? வீடு கட்ட இந்த தெருவில் வேறு இடம் இல்லையே என இந்தக் கூட்டம் பற்றி ஒரு குடியிறுப்பாளர் கூறினர்.

இப்பகுதியில் வீடுகளை உடைக்க வேண்டாம் என கத்ரினால் கூறினார். அரசாங்கத்துக்கு தேவையான வழியிலேயே அவர் செயற்படுவார் என்பது எமக்குத் தெரியும் என அவர் மேலும் கூறினார்.

வீடு இழப்பை எதிர்கொண்டுள்ளவர்கள் இவ்வாறு தெரிவிக்கையில், கொழும்பு வீட்டு உரிமையாளர்களை நோக்கி கூட்டமொன்றில் பேசிய யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, குடியிருப்பாளர்களையும் ஆன்மீகத் தலவர்களையும் ஒன்று கூட்டி வீடு உடைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். அவர் கூறியதாவது: அரசியல் கட்சிகள், தேசிய மற்றும் மத வேறுபாடுகளை ஓரங்கட்டிவிட்டு, சகல ஆன்மீகத் தலைவர்களையும் முன்னணியில் இருத்தி, நாம் எல்லோரும் ஒருங்கிணைவோமாக.

இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் அதி கூடிய அரசியல் நடவடிக்கையையும் எடுப்போம், என அவர் மேலும் கூறினார். இது பற்றி கருத்து தெரிவிக்கும் ஒரு குடியிருப்பாளர் கூறியதாவது: சட்டம் அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது. நெம்புகோலும் அரசாங்கத்தின் கையில் உள்ளது. எனவே வழக்கு போட்டு பயனில்லை. எம்மிடம் வீட்டுப் பத்திரம் இல்லாதபடியால், நாம் அனுமதியற்ற வீட்டுரிமையாளர் என்பதால், குறிப்பிட்ட திகதியில் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். வழக்குப் பதிவு செய்வது எங்களுக்கு பாதகமானது. யூ.என்.பீ.யின் சஜித் பிரேமதாச அடுத்த வாரம் வருவார் என்று கேள்விப்படுகிறோம். உள்ளூராட்சி தேர்தல் முடிந்ததும் ஒருவரையும் காண முடியாது.”

யூ.என்.பீ.யிடம் அரசாங்கத்துக்கு எதிரான மாற்று வேலைத் திட்டமொன்று கிடையாது. வர்த்தக சந்தை பொருளாதார கொள்கைகளின் ஒரு அம்சமாகவே இராஜபக்ஷ அரசாங்கம் வீடுகளை உடைக்கின்றது. இலங்கைக்குள் சுதந்திர சந்தை பொருளாதாரத்தை ஆரம்பித்ததும் கொழும்பு நகரை ஆசியாவில் பெரும் நகரமாக்கும் திட்டத்தை முதலில் சமர்ப்பித்ததும் யூ.என்.பீ.யே ஆகும்.

யூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, கட்சியின் நோக்கத்தை மிக நன்றாக தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.கொழும்பில் பரம்பரை பரம்பரையாக வசிக்கும், கொழும்பு நகரத்தில் தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்ளும் வாக்களர்களை இவ்வாறு வேறு நகரங்களுக்கு விரட்டுவது, யூ.என்.பீ.யின் கோட்டையான கொழும்பு நகரில் வாக்காளர் தளத்தை நாசமாக்கும் ஒரு சதியாகும், என அது கூறிகின்றது.

கொழும்பு நகர நிர்வாகமும் அரசாங்க ஆட்சியும் யூ.என்.பீ.யின் கையில் இருந்த போதும் வறிய குடிசைவாசிகளின் வீட்டுப் பிரச்சினை தீர்க்க அது எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. அந்த கட்சி இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது கரைந்து போகும் வாக்காளர் தளத்தை தக்க வைத்துக்கொள்வதற்கே ஆகும். அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள, கொழும்பு நகர் உட்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கே இக்கட்சி வாய்சவடால்களுடன் தயாராகின்றது.

தீவிரவாதத்தை மிகைப்படுத்தும் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), இப்பிரதேச மக்களை பார்க்க இதுவரை வரவில்லை. தீவிர இடது கட்சி என காட்டிக்கொள்ளும் விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சியோ, அல்லது சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிச கட்சியோ இந்த மக்களை சந்திக்க வரவில்லை.

2010ல் அரசாங்கம் குடியிருப்பாளர்களை விரட்டும் திட்டத்தை பகிரங்கமாக முன்வைத்த நாள் தொடக்கம், அதற்கு எதிராக வீட்டுரிமையை பேணும் வேலைத் திட்டத்தை முன்வைத்தது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி ஆரவில் அமைக்கப்பட்ட வீட்டுரைமையைப் பேணும் நடவடிக்கைக் குழு 2010 நவம்பர் 8ம் திகதி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

எங்களுக்கு கொழும்பு நகரில் பொருத்தமான வீடுகள் வேண்டும். அது எமது உரிமை. எங்களது போராட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து குடிசைவாசிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்த வேண்டுகோளின் பிரதிகளை விநியோகியுங்கள். வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழுவுக்கு உங்களது பிரதிநிதிகளை அனுப்பிவையுங்கள், அப்போது எங்களது பிரச்சாரத்தை விரிவுபடுத்த முடியும்.

மின்சாரம் மற்றும் குழாய் நீர் உட்பட சகல அத்தியாவசிய வசதிகளுடனும் பொருத்தமான வீடுகளை கட்டியெழுப்ப பலநூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். இலாப அமைப்பை பாதுகாக்கும் இந்த அரசாங்கம், உழைக்கும் மக்களின் ஏனைய அவசரத் தேவைகளை வழங்கத் தவறியுள்ளதைப் போலவே, எங்களுக்கும் பொருத்தமான வீடுகளை வழங்காது. யூ.என்.பி. அல்லது மக்கள் விடுதலை முன்னணி போன்ற எதிர்க் கட்சிகளிலும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவையும் முதலாளித்துவத்தையே பாதுகாக்கின்றன. ஒரு சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அடிப்படை உரிமையையும் காக்க முடியும்.

அந்தப் பிரச்சாரத்தின் போது சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு சுட்டிக் காட்டியது.

சகல வசதிகளுடனான வீட்டுக்கான உரிமையின் பொருட்டு முன்னெடுக்கப்படும் போராட்டம், இலாப முறைமைக்கு எதிரான போராட்டத்தை அவசியமாக்கியுள்ளதோடு, சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சகலருக்கும் வீட்டு வசதி வழங்குவதற்காக பல நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சில தனவந்தர்களது இலாபத் தேவைக்காக அன்றி, வெகுஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவல்லதாக சமுதாயத்தை மீளமைக்கும், தொழலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும். இத்தகைய வேலைத் திட்டத்துக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.”

அரசாங்கத்தினால் திட்டமிட்டவாறு துரிதப்படுத்தப்படும் வெளியேற்றத்துக்கு எதிராக, உறுதியான அரசியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே நகரின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுரிமை பேணும் குழுவை கொழும்பு பூராவும் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணையுங்கள். எதிர்வரும் கொழும்பு மாநரக சபை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி. போட்டியிடுகின்றது. இப்போராட்டத்தை தயார்படுத்துவதே அதன் பிரதான பிரச்சார மையமாக இருக்கும்.