World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan talks for a “political solution” reach dead-end

அரசியல் தீர்வுக்கான இலங்கை பேச்சுவார்த்தைகள் மரண முடிவை எட்டியுள்ளன

By S. Jayanth
18 August 2011

Back to screen version

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகள், கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்காக அது கொடுத்த கால அவகாசத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து முறிவின் விளிம்பை அடைந்துள்ளன.

நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தோல்வியடைந்ததை அடுத்து, இந்த அரசியல் தீர்வு என்ற பதமானது, தீவின் சிங்கள மற்றும் தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு இடையிலான ஒரு அதிகாரப் பரவலாக்கலுக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ் கூட்டமைப்பு மேற்கொள்ளும் முயற்சிகளையே குறிக்கின்றது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி முதலாளித்துவ ஆட்சியை தக்க வைப்பதற்காக தசாப்த காலங்களாக கையாண்ட தமிழர்-விரோத பாரபட்சங்களின் விளைவே இந்த யுத்தமாகும்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவைப் பொறுத்தளவில், இந்த பேச்சுவார்த்தைகள் எப்பொழுதும் ஒரு சொல் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளன. புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துள்ள அவரது அரசாங்கம், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க சலுகையையும் வழங்குவதற்கு ஒரு காலமும் விரும்பவில்லை. யுத்தத்துக்கு ஒரு அரசியல் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய சக்திகள் விடுத்த வேண்டுகோளை திசை திருப்பும் ஒரு வழிமுறையாகவே இராஜபக்ஷ ஜனவரியில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார்.

தமிழ் கூட்டமைப்பு, ஆகஸ்ட் 4 அன்று பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, அரசாங்கத்துக்கு முன்ஜாக்கிரதையுடன் ஒரு வேண்டுகோளை விடுத்தது. பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கான நிபந்தனையாக அரசாங்கம் மூன்று முக்கிய விடயங்கள் பற்றி இரு வாரத்துக்குள் அர்த்தமுள்ள பதிலை வழங்க வேண்டும் என அது கேட்டுக்கொண்டது. இந்த மூன்று விடயங்கள், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தேசிய அரசாங்கத்திடம் இருந்து மாகாண அரசாங்கத்துக்கு பகிரப்படும் அதிகாரங்கள் பற்றிய விபரங்கள் சம்பந்தப்பட்டவையாகும்.

இந்த வேண்டுகோளில் நல்ல நம்பிக்கையுடன் கவனம் செலுத்துவதற்கு மாறாக, அரசாங்கம் அதை கட்டுக்கடங்காது கண்டனம் செய்தது. அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவின் செயலாளரான சஜின் வாஸ் குணவர்தன, புலிகள் பின்பற்றியவற்றுக்கு சமமான நிபந்தனைகளை தமிழ் கூட்டமைப்பு முன்வைக்கின்றது என குற்றஞ்சாட்டினார். யுத்த காலத்தின் போது ஏறத்தாழ புலிகளின் பாராளுமன்ற பகுதியாக செயற்பட்ட கூட்டமைப்பு, புலிகளின் தனியான முதலாளித்துவ ஈழம் அரசுக்கான புலிகளின் கோரிக்கையை கைவிட்டது. புலிகள் தோல்வியடைந்ததில் இருந்து, கூட்டமைப்பு தன்னை கொழும்பு ஸ்தாபனத்துடன் நெருக்கமாவதற்கு முயற்சித்து வருகின்றது.

இரு தரப்பில் எவரும் பேச்சுக்கள் முறிந்துவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆயினும், தமிழ் கூட்டமைப்பு முன்வைக்கும் எந்தவொரு குறிப்பிடத்தக்க கோரிக்கையும், பயங்கரவாத புலிகளின் வழிமுறைக்கு சமமானது, என நிராகரிக்கப்படும் என்பதையே குணவர்தனவின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

பல அமைச்சரவை அமைச்சர்கள், இனப் பிரச்சினை பற்றி பேசுவதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை அமைப்பதற்கான தீர்மானங்களை ஆகஸ்ட் 9 அன்று பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்தனர். இராஜபக்ஷ ஒரு அரசியல் தீர்வுக்காக கொழும்பில் இருந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்த இந்திய உயர்மட்ட அதிகாரிகளின் கோரிக்கைகளை எதிர்கொள்வதற்காக ஜூலை மாதம் இத்தகைய குழு சம்பந்தமாக முதலில் குறிப்பிட்டார்.

விவகாரத்தை பாராளுமன்ற குழுவுக்கு நகர்த்துவதன் மூலம், அரசாங்கம் விளைபயனுள்ள வகையில் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைக்கு முடிவுகட்டும். எல்லா பாராளுமன்ற கட்சிகளும் பிரதிநித்துவம் செய்வதோடு, கூட்டமைப்பின் குரலும் பல குரல்களில் ஒன்றாக ஆக்கப்படும். கொழும்பில் உள்ள ஒவ்வொரு பிரதான கட்சியும் சிங்கள மேலாதிக்கவாதத்தை அடித்தளமாகக் கொண்டிருப்பதோடு புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்ததுடன், தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுடனான எந்தவொரு சமரசத்தையும் விரும்பப் போவதில்லை.

அரசாங்கம் முன்னரும் இதே போன்ற திட்டங்களை பயன்படுத்தியுள்ளது. 2006ல் இராஜபக்ஷ நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்துக்குள் மூழ்கடித்துக்கொண்டிருந்த போது, தமிழ் பிரச்சினையை கலந்துரையாடுவதற்காக ஒரு சர்வ கட்சி மாநாட்டை கூட்டினார். அதன் அறிக்கை 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது. அதை பகிரங்கப்படுத்துவது பற்றி கூட இராஜபக்ஷ கவலைப்படவில்லை.

சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த முன்னணி கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ. சுமந்திரன், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் அளிக்காவிட்டால் பாராளுமன்ற தேர்வுக் குழுவில் தனது கட்சி பங்கெடுக்காது என கடந்த வாரம் தெரிவித்தார். ஆயினும், அரசாங்கத்தின் பதில் அடுத்த பேச்சுக்களுக்கான முன்நிபந்தனையாக இருக்காது எனக் கூறி, அவர் கதவுகளைத் திறந்தே வைத்தார்.

பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோடாபய இராஜபக்ஷவினால் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 அன்று இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஹெட்லைன்ஸ் டுடே என்ற ஊடகத்துக்கு கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை உண்மையில் பொருத்தமற்றது... தற்போதுள்ள அரசியலமைப்பு எமக்கு ஒன்றாக வாழ்வதற்குப் போதுமானது... இப்போது புலிகள் இல்லை, இப்போது [அரசியல் தீர்வுக்கான] எந்தவொரு தேவையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, என்றார்.

சிங்களத்தை அரச மொழியாகவும் பௌத்தத்தை அரச மதமாகவும் ஆக்கியுள்ள நாட்டின் அரசியலமைப்பு, சிங்கள ஆளும் தட்டின் அரசியல் மேலாதிக்கத்தை அரசியலமைப்புமயப்படுத்தியுள்ளது. 1978ல் திருத்தப்பட்ட, 1972ல் வரையப்பட்ட அரசியமைப்புக்குள் இத்தகைய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டமை, தீவின் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவதில் கணிசமான காரணியாக இருந்துள்ளது. இதுவே இறுதியில் 1983ல் உள்நாட்டு யுத்தமாக வெடித்தது.

கூட்டமைப்பு தன் பங்கிற்கு, இலங்கை அரசாங்கத்தை அதிகாரப் பகிர்வு ஒழுங்கை ஏற்றுக்கொள்ளச் செய்வதன் பேரில் அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்திய மற்றும் மேற்கத்தைய சக்திகளின் ஆதரவில் தங்கியுள்ளது. புலிகளைப் போலவே, தமிழ் கூட்டமைப்பும், தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்க இலங்கையில் அல்லது சர்வதேச ரீதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கு எந்தவொரு வர்க்க ரீதியான வேண்டுகோளையும் விடுப்பதில் இயல்பிலேயே இலாயக்கற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் கூட்டத்தில் கடந்த மாதம் உரையாற்றிய தமிழ் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்தியாவின் கைகளிலேயே உள்ளது, என பார்வையாளர்களுக்குத் தெரிவித்தார். ஆகஸ்ட் 7 அன்று வெளியான தமிழ் நாளிதழ் வீரகேசரியின் ஆசிரியர் தலையங்கம், சர்வதேச மற்றும் இந்திய மருத்துவிச்சிகளாலேயே (தீர்வின்) சுகப் பிரசவத்திற்கு உதவ முடியும் என்பதை தமிழ் மக்கள் திரும்பத் திரும்பக் கூறுவதை இங்கு பதிவு செய்கின்றோம், என பிரகடனம் செய்துள்ளது.

புலிகளைப் போலவே தமிழ் கூட்டமைப்பும், உழைக்கும் மக்களின் நலன்களை அன்றி, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. தனியான முதாலளித்துவ அரசு என்ற வடிவிலும் சரி, அல்லது இலங்கை அரசுக்குள்ளான கூட்டாட்சி முறையிலான மாகாண அரசினுள்ளும் சரி, தமது சிங்கள சமதரப்பினருடன் தமிழ் முதலாளித்துவ தட்டுக்கள் முயற்சிக்கின்ற ஒழுங்குகள், சிங்கள மற்றும் தமிழ் உள்ளடங்களாக தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதை மட்டுமே உக்கிரமாக்கும்.

இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு மோதலின் கடைசி மாதங்களில் மட்டுமே அவரது அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை மட்டும் முன்வைத்த பெரும் வல்லரசுகள் சம்பந்தமான ஒரு மாயையையே தமிழ் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பரப்புகின்றது. இராஜபக்ஷவை சீனாவுடனான நெருக்கமான பிணைப்பில் இருந்து தூர விலகிக்கொள்ள நெருக்குவதே வாஷங்டனின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்துக்கு ஆதரவளிப்பதில் இந்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இருந்தது. இலங்கை தமிழர்களின் தலைவிதி பற்றி பரந்தளவில் அனுதாபம் நிலவிய தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் எதிர்ப்புக்களை தனிப்பதற்காக புது டில்லி முயற்சித்தது. அதே சமயம், இந்தியா தனது கொல்லைப்புறமாக கருதும் கொழும்பில் பெய்ஜிங் செல்வாக்குப் பெறுவதையிட்டு கடும் கவலை கொண்டுள்ளது.

இந்தியா இலங்கையுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும் என தமிழ் நாட்டில் இருந்து அண்மையில் வந்த அழைப்புக்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்தார். இலங்கையுடனான பொருளாதார உறவுகளில் எந்தவொரு கட்டுப்பாட்டையும் விதிப்பது, இலங்கையின் மூலோபாய மற்றும் வர்த்தக பங்காளி என்ற நிலையில் இருந்து இந்தியாவை அகற்றுவதற்கு சீனாவை ஊக்குவிக்கும் என அவர் எச்சரித்தார். 

பெரும் வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம், அல்லது பல்வேறு முதலாளித்துவ கட்சிகளை நம்புவதன் மூலம் மற்றும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற முடியாது. இனவாதம் வேரூண்றியுள்ள முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசுவதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவது மட்டுமே தசாப்த கால பாகுபாடுகளுக்கு முடிவுகட்டுவதற்கான ஒரே வழி.

இதன் அர்த்தம், சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கு எதிராக, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையை பொறுப்பேற்று, தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவிலான தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாகும்.