World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Libya: The criminal face of imperialism

லிபியா ஏகாதிபத்தியத்தின் குற்றம்மிக்க முகம்

Bill Van Auken
27 August 2011

Back to screen version

ஐந்து மாதங்களுக்கு முன் ஆரம்பித்த லிபியா மீதான நேட்டோ தாக்குதல், ஆரம்பத்தில் இருந்தே ஒரு குற்றம்மிக்க போராகவே இருந்ததுடன், சிறப்புப் படையினர் மற்றும் உளவுத்துறை முகவர்கள் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை வேட்டையாடிக் கொலை செய்ய முயலும் முற்றிலும் கொலை செய்யும் நடவடிக்கையாக மதிப்பிழந்து இருத்தது.

ஆரம்பத்தில் இருந்தே இப்போரின் முக்கிய நோக்கங்கள் ஆபிரிக்க கண்டத்தில் மிக அதிக எண்ணெய் வளங்கள் உடைய லிபியாவை கட்டுப்படுத்தி, அமெரிக்க மற்றும் நேட்டோ ஆதரவுடைய எகிப்தின் முபாரக்கையும் துனிசியாவின் பென் அலியையும் சில மாதங்கள் முன் அகற்றிய வெகுஜன மக்கள் இயக்கங்களை ஒடுக்கி திசைதிருப்புவதற்கான ஒரு ஏகாதிபத்திய வன்முறையைக் காட்டுதல் என்பதாகவும்தான் இருந்தன.

ஐக்கியப்பட்ட பாதுகாவல் நடவடிக்கை-“Operation United Protector” - என்று நேட்டோவின் பெயரிட்டிருந்த அதன் இராணுவத் தாக்குதலுக்கு இன்னும் துல்லியமாகஏகாதிபத்திய குண்டர்களின் சூறையாடல் செயல்என விவரிக்கப்பட்டிருக்கலாம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள், ஒவ்வொன்றும் அதன் லிபியா மற்றும் பரந்த பிராந்தியத்தின் மீதான நலன்களைத் தொடரும் வகையில்ஆட்சி மாற்றம்என்னும் பொது நோக்கத்திற்காக ஒன்றாகச் செயல்பட முடிந்தது

இந்த நோக்கத்தை அடைவதற்காக நேட்டோ போர் விமானங்கள் 20,000 தடவைகளுக்கும் மேலாகப் பறந்து, பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் ஆகியவற்றைத் தகர்த்து, ஏராளமான லிபியப் படையினரை படுகொலை செய்தன. இப்படையினரில் பலரும் இளவயதில் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு சேர்க்கப்பட்டவர்களாகும்.

குடிமக்களைக் பாதுகாப்பதற்குதேவையான அனைத்து வழிவகைகளும் கடைப்பிடிக்கப்படலாம் என்னும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் விதிகளை மீறிய வகையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உட்பட நேட்டோ சக்திகள் சிறப்புப் படைத் துருப்புக்கள், இராணுவ ஒப்பந்தக் கூலிப்படைகள் மற்றும் உளவுத்துறை முகவர்களை லிபியாவிற்கு அனுப்பி அங்குள்ளஎழுச்சியாளர்கள்என அழைக்கப்பட்டவர்களுக்கு ஆயுதம் வழங்கி, ஒழுங்கமைத்து லிபிய ஆட்சிக்கு எதிராகத் தலைமை தாங்க அனுப்பிவைத்தன. அதன் முக்கிய செயல்பாடு லிபிய அரசாங்க சக்திகளை அகற்றி, வானில் இருந்து அவர்களை அழித்துவிடலாம் என்பதுதான்.

குடிமக்களை பாதுகாத்தல் என்பது இப்போருக்கான ஒரு போலிக்காரணம் என்பது அறநெறியில் இழிந்த செய்கை என்பது அம்பலப்படுத்தப்பட்டது; ஏனெனில் திரிப்போலியில் மட்டும் இறப்பு எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்று ஆயின. நேட்டோ குண்டுகளும், ஏவுகணைகளும் இன்னும் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது விழுகின்றன.

இன்று போல் 1930 களில் உலக முதலாளித்துவம் பெருந்திகைப்பால் பீடிக்கப்பட்ட நிலையில் இருந்ததைத்தான் இதற்கு இணையான நிகழ்வுகளைக் கூற நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது மனிதகுலம் எத்தியோபியா மீது இத்தாலிய படையெடுப்பு கட்டவிழித்துவிட்ட மிருகத்தன ஆக்கிரமிப்பு, சுடேட்டன் ஜேர்மனியர்களுக்கு ஹிட்லர் ஆதரவு கொடுத்து செக்கோஸ்லோவாக்கியா துண்டாக்கப்பட்டது, மற்றும் ஜேர்மனியின் கொண்டர் படைப்பிரிவு பிரான்கோவின் பாசிச எழுச்சிக்கு ஆதரவாக ஸ்பெயினில் குண்டு வீச்சு நடத்தியது ஆகியவற்றால் பெரும் அதிர்ச்சியை அடைந்தது.

அப்பொழுது இந்த வன்முறை ஆக்கிரமிப்புச் செயல்கள் உலக முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தனத்தில் இறங்கியதில் ஒரு பகுதியாகக் காணப்பட்டது. இன்று லிபியாவில் அதேபோன்ற செயல்கள்மனிதாபிமானம்”, “ஜனநாயகம்ஆகியவற்றின் மலர்ச்சிக்காக என அறிவிக்கப்படுகின்றன.

அக்காலத்தில், அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் அமெரிக்க மக்களுடைய ஜனநாயக உணர்வுகளுக்கு அழைப்புவிட்டதுடன், அதே நேரத்தில் அதன் சொந்த ஏகாதிபத்திய நலன்களுக்காக அமெரிக்காவை நிலைநிறுத்தவும் முற்பட்டார். இதற்கு பாசிச ஆக்கிரமிப்பின் மீதுதடுப்பு தேவைஎன்று கோரினார்.

போர் அறிவிப்பு இல்லாமல், எவ்வித எச்சரிக்கை, நியாயப்படுத்துதலும் இல்லாமல், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உட்படக் குடிமக்கள் இரக்கமின்றி வானில் இருந்து வீசப்படும் குண்டுகள் மூலம் கொல்லப்படுகின்றனர்…. நாடுகள் கொதித்து எழுந்து தங்களுக்கு எத்தீமையும் கொடுக்காத நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப் போர்களில் ஒரு புறத்திற்கு ஆதரவைக் கொடுக்கின்றன. தங்களிடம் சுதந்திரம் உண்டு என்று கூறும் நாடுகள் மற்றவற்றிற்கு அவற்றை மறுக்கின்றன. நிரபராதியான மக்கள், நிரபராதியான நாடுகள் ஆகியவை அதிகாரத்திற்கான பேராசை, மேலாதிக்கம் ஆகியவற்றிற்காக கொடூரமாகத் தியாகம் செய்யப்படுகின்றனர். இதில் எந்தவித நீதி உணர்வோ, மனிதாபிமானக் கருத்துக்களோ இல்லை என்று ரூஸ்வெல்ட் 1937ல் அறிவித்தார்.

75 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இச்சொற்கள் ஒபாமா நிர்வாகம், காமெரோன், சார்க்கோசி மற்றும் பெர்லுஸ்கோனி அரசாங்கங்கள் ஆகியவற்றின் மீதான குற்றச்சாட்டுகளைப் போல்தான் காணப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரை அடுத்து வந்த நூரம்பேர்க் விசாரணைகள் ஆக்கிரமிப்புப் போரைதலையாய சர்வதேசக் குற்றம், தன்னிடத்திலேயே ஒன்றுசேர்ந்துள்ள தீமையையும் உள்கொண்டுவகையில்தான் மற்ற போர்க்குற்றங்களை விட இது மாறுபட்டுள்ளதுஎன்ற கருத்தை நிறுவியது.

இக்கருத்தாய்வு ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்டது. அதுஎந்த ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான பலாத்காரத்தின் அல்லது பலாத்காரத்தின் அச்சுறுத்தல்என்பது தடுக்கப்படுகிறது எனக் கூறியது.

ஆயினும் இன்று அரசியல் நடைமுறைக்குள் நேட்டோ நட்புநாடுகள் நடத்தும் ஆக்கிரமிப்புப் போர்கள் பற்றி எந்தவிதக் குறைகூறல்களையும் பார்ப்பதற்கு இல்லை. செய்தி ஊடகங்களின் அயோக்கியர்களே ஏகாதிபத்திய போர் இயந்திரங்களுடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுவிட்டனர். உண்மையில் சடலங்கள்மீது நடக்கின்றன. மேற்கு நாய்களின் போர்களை கண்டு புகைப்படக்கருவிகள் வெட்கப்படுவதை மறைத்து லிபியாவிற்கு புரட்சி”, “விடுதலையளித்தல்என்ற பெயரில் தங்கள் பிரச்சாரத்தை நடத்துகின்றன.

லிபியப் போரின் பின்புலத்தில் இருக்கும் உந்துதல் சக்தி அனைத்து இழிசக்திகளின் பிற்போக்குத்தனம்தான் என்று லெனின் மிகப் பொருத்தமாக விளக்கியுள்ள ஏகாதிபத்தியம் ஆகும். நிதிய மூலதனத்தில் கொள்ளை நலன்களுக்காக தொடரப்படும் போராகும் இது. பெரும் எரிசக்தி நிறுவனங்களுக்குபரிசுமழைகொடுக்கும் என்று நிதியச் செய்தி ஊடகத்தால் பரந்த முறையில் குறிப்பிடப்படுவதுடன், வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் பெரும் பரிசு என்றும் விளக்கப்படுகிறது; அதே நேரத்தில் நிதிய ஊகத்தின் மூலம் ஆளும் உயரடுக்கு பெரும் செல்வங்களை சேகரிப்பதற்கு உதவி, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றில் தொழிலாளர் செலவுகளைக் குறைக்கும் சக்தியாகவும் உலகம் முழுவதும் உள்ள குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டும் உந்துதலையும் கொடுக்கிறது.

சர்வதேசக் குண்டர் குழுமுறை உள்நாட்டில் நடத்தப்படும் பொருளாதார, அரசியல் குற்றங்களுடன் கைகோர்த்துச் செல்லுகின்றது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய நாட்டிலும் பரந்த தொழிலாள வர்க்க மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கத் தரங்கள் ஆகியவற்றின்மீது நடத்தப்படும் இரக்கமற்றத் தாக்குதலில் இருந்து வெளிநாடுகள்மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு தனியே பிரிக்கப்பட முடியாதது ஆகும். எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் வேலைகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் அல்லது முக்கியச் சமூகப் பணிகளுக்குப் பணம் இல்லை என்று கூறப்படுகையில், பில்லியன் கணக்கான நிதி லிபியாமீது குண்டுத் தாக்குதல் நடத்திப் படையெடுப்பதற்கு செலவழிக்கப்படுகின்றது; இதைப் பற்றி எவரும் கேள்வி எழுப்புவதில்லை.

லிபியப் போரில் முக்கிய கூறுபாடு தனக்குப் பின் எப்படி அது மத்தியதர வகுப்பு முன்னாள் இடதுகள், தாராளவாத உயர்கல்விக்கூடத்தினர் மற்றும் முன்னாள் எதிர்ப்பாளர்கள் ஆகியோரை ஒரு சமூக-அரசியல் அடுக்காக திரட்டியது என்பதுதான். இந்த நிகழ்வுப்போக்கு பல தசாப்தங்களாக வளர்ச்சி அடைந்துவருகிறது; இந்த அடுக்கின் ஒரு பிரிவுஇடது போக்கைக் கொண்டுசோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தைப் பெரிதும் சார்ந்திருந்து உளச்சோர்விற்கு உட்பட்ட நிலையில், அவ் அதிகாரத்துவம் தன்மையை அழித்துக் கொண்டபின் கரையத் தொடங்கியது. மற்றவர்கள் பால்கன்களின் ஏகாதிபத்தியத் தலையீட்டின் பின் துணை நின்றனர். இப்பொழுதுபோல் அப்பொழுதும் அது உலகின் மிகப் பெரிய ஆக்கிரமிப்பாளர்களைப் போலித்தனமாகமனித உரிமைகளுக்காகப்போராடுகிறது என்று கூறி ஆதரவளித்தனர்.

இன்று இந்த அடுக்கிற்குள் ஆழ்ந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணவில்லை என்றால் ஒருவருக்குப் பார்வை இல்லை என்ற பொருளாகும். உயர்கல்விக்கூட அயோக்கியர்கள், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு வரலாற்றுப் பேராசிரியர் ஜுவான் கோல் போன்றவர்கள் தங்கள் புஷ் நிர்வாகம் ஈராக் மீது போர் நடத்தியதைக் குறைகூறிப் பெற்ற புகழை லிபாய மீது ஒபாமா நிர்வாகம் நடத்துவதற்கு ஆதரவாக விற்கின்றனர்.

ஐரோப்பாவில் NPA எனப்படும் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற குழுக்கள் இப்போரைப் பயன்படுத்தி தங்கள் அரசாங்கங்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து, தங்கள் சொந்த ஆளும் உயரடுக்கின் நலன்களையும் வளர்க்கின்றன. இவை சலுகை பெற்ற மத்தியதர வர்க்கத்தின் முழுத் தட்டையும் பிரதிபலிக்கின்றன; ஏகாதிபத்தியத்திற்கான புதிய தளம் என்று அவர்கள் உறுப்பினர்களாக்கப்படுகின்றனர். இவர்களுடைய அரசியல் அனைத்து அடிப்படைகளிலும் ஒபாமா, CIA ஆகியவற்றின் கொள்கைகளில் இருந்து சிறிதும் பிரித்துப் பார்க்க முடியாதவை.

லிபியப் போர், ஆக்கிரமிப்பு நடத்தும் நாடுகளில் எத்தகைய குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவையும் பெற்றிருக்கவில்லை. உழைக்கும் மக்களின் உள்ளுணர்வில் இப்போர், இதற்கு முந்தையவற்றைப் போலவே, நிதியத் தன்னலக்குழுவின் நலனுக்காகவே நடத்தப்படுகிறது, பரந்த மக்களின் இழப்பில் நடத்தப்படுகிது என்றுதான் சந்தேகிக்கின்றனர்.

போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தினை மையமாக கொண்டிருந்தால்தான் முன்னேறிச்செல்ல முடியும். போருக்கு எதிரான போராட்டம் வேலை அழிப்புக்கள், வாழ்க்கைத்தர அழிப்புக்கள், அடிப்படை சமூக ஜனநாயக உரிமைகள் அழிப்புக்கள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தில் இருந்து சற்றும் பிரிக்க முடியாதது ஆகும். வெளிநாட்டில் இராணுவவாதக் கொள்கை உள்நாட்டில் சமூக எதிர்ப்புரட்சி ஆகியவை உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடியின் பொதுப் புறநிலை வேர்கள் ஆகும். சோசலிசத்திற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஐக்கியப்பட்டு, அரசியல்ரீதியாக அணிதிரள்வதன் மூலம்தான் இவை தோற்கடிக்கப்பட முடியும்.