World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French petty-bourgeois “left” plots military intervention in Syria

பிரெஞ்சு குட்டி-முதலாளித்துவ "இடது" சிரியாவில் இராணுவ தலையீட்டிற்கு சதி செய்கிறது

By Kumaran Ira
28 November 2011
Back to screen version

மேற்கத்திய சக்திகள் சிரியாவில் பஷீர் அல்-ஆசாத்தின் ஆட்சியை நிலைகுலைக்கவும், அதற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிடவும் நகர்கின்ற நிலையில், பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை திட்டமிட ஒத்துழைத்தும், உதவியும் வருகிறது. இது லிபிய தலைவர் மௌம்மர் கடாபிக்கு எதிராக, “பொதுமக்களை பாதுகாக்கிறோம்" என்ற நச்சுத்தனமான போலிவேஷத்தின் கீழ் நடந்த நேட்டோ யுத்தத்திற்கு அவர்கள் அளித்த ஆதரவைப் பின்தொடர்கிறது.

NPA இணைந்திருக்கும் சர்வதேச பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் ஓர் அங்கத்தவரும், இலண்டனில் உள்ள ஓரியண்டல் மற்றும் ஆபிரிக்க ஆய்வு பயிலக பேராசிரியருமான ஜில்பேர்ட் அஷ்கார், “சிரியா; இராணுவமயமாக்கல், இராணுவத் தலையீடு, மற்றும் மூலோபாயமின்மை" என்ற தலைப்பில் Al Akhbar இதழில் ஒரு கட்டுரை பிரசுரித்தார். அது அக்டோபர் 8-9இல் ஸ்வீடனில் நடந்த சிரிய ஒருங்கிணைப்பு குழுவின் ஒரு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டதை விவரிக்கிறது. அக்கூட்டத்தில் சிரிய தேசிய சபையின் (SNC) தலைவர் பர்ஹன் கஹாலியோனும் கலந்து கொண்டார். அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு NPA வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

அஷ்கார் கூறியது: “அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், சிரியாவின் தற்போதைய நிலைமையில் வெளிநாட்டு இராணுவ தலையீடு குறித்து பேச என்னை அழைத்திருந்தனர்.” “வெளிநாட்டு இராணுவ தலையீடு இருக்க வேண்டுமா இல்லையா என்பதில் சிரிய எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு ஒரு முக்கிய தாக்கத்தை  கொண்டிருக்குமென்பதால், அது தலையீடு குறித்த பிரச்சினையில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்,” என்றவர் வலியுறுத்தினார்.

சிரிய எதிர்க்கட்சியினர் அழைப்புவிடுத்தால் ஒழிய, மேற்கத்திய சக்திகள் ஓர் இராணுவ தலையீட்டை செய்யாதென அவர் குறிப்பிட்டார். அவர் எழுதியது: “மேற்கத்திய மற்றும் பிராந்திய அரசுகளின் தரப்பிலிருந்து ஒரு நேரடியான தலையீடு மீது இன்று நாம் பார்க்கும் தயக்கம், சிரிய எதிர்ப்பாளரின் சார்பில் தலையீடு செய்யக்கோரும் கோரிக்கைகள் அதிகரித்தால், நாளையே மாறக்கூடும்.”

அமெரிக்க ஆதரவிலான டமாஸ்கஸ் பிரகடனத்தையும் (Damascus Declaration) மற்றும் துருக்கி-அரேபிய அரசுகளின் ஆதரவிலான சுன்னி முஸ்லீம் சகோதரத்துவத்தையும் உள்ளடக்கிய சிரிய தேசிய சபையுடனான ஒரு கூட்டம், ஏகாதிபத்திய மூலோபாயத்தை திட்டமிடுவதற்குரிய ஓர் அரங்கமாக உள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் லிபிய யுத்தம் தொடங்கிய போது லிபிய இடைக்கால தேசிய சபை (NTC) செய்ததைப் போல, சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டிற்கு சிரிய தேசிய சபைக்கு அழுத்தமளிக்கும் என்பதற்கு சமிக்ஞை காட்ட, அதில் கலந்து கொண்டதன் மூலமாக மேற்கத்திய சக்திகளின் ஒரு முகவராக அஷ்கார் செயல்பட்டு வந்தார்.

சிரிய தேசிய சபை மற்றும் அதன் ஆயுதமேந்திய பிரிவையும், துருக்கி ஆதரவிலான சிரிய விடுதலை இராணுவத்தையும் (SFA) உள்ளடக்கியிருக்கும் சிரிய எதிர்ப்பினரை அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள் மற்றும் துருக்கி, சவூதி அரேபியா போன்ற அவற்றின் பிராந்திய கூட்டாளிகள் ஆதரித்து வருகின்றன. சிரிய விடுதலை இராணுவம் துருப்புகளை சிரியாவிற்குள் ஊடுருவ செய்ய துருக்கியும், ஏனைய பிராந்திய சக்திகளும் உதவி வருவதாக பரவலாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு வலதுசாரி தலையாட்டி ஆட்சியைக் கொண்டு ஆசாத்தைப் பிரதியீடு செய்ய, மத்தியகிழக்கு எங்கிலும் நடந்துவரும் தொழிலாள வர்க்க போராட்டங்களால் உத்வேகம் பெற்ற அசாத்திற்கெதிரான மக்கள் எதிர்ப்பை கைப்பற்றுவதற்கு மேற்கத்திய சக்திகள் சிரிய தேசிய சபையை பயன்படுத்த முயன்று வருகின்றன.

சிரிய அரச பத்திரங்கள், தனியார்துறை வங்கி கடன்கள் மற்றும் சிரியாவின் தங்க வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு தடைவிதித்து, கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் சிரியாவிற்கு எதிராக தடையாணைகளைக் கடுமையாக்க ஒப்புக்கொண்டனர்.

சிரிய விடுதலை இராணுவத்தின் இருப்பிடமாக விளங்கும் துருக்கி ஒரு நேரடியான இராணுவ தலையீட்டிற்கு தயாரிப்பு செய்துவருகிறதென்பது பெரிதும் வெளிப்படையாக உள்ளது. EU Observer செய்தியின்படி, “8 கிலோ மீட்டர் சிரிய பிராந்தியத்திற்குள்ளிருக்கும் பாதுகாப்பு மண்டலம் குறித்து சிரிய தேசிய சபை அங்கத்தவர் முஹம்மத் தாய்ஃபர் ஏற்கனவே துருக்கி உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். துல்லியமாக அது சிரிய விடுதலை இராணுவ செயல்பாடுகளுக்கு ஒரு பாதுகாப்பான தளத்தை அமைத்தளிக்கும்.”

டமாஸ்கஸிற்கு எதிரான இத்தகைய நகர்வுகள் மத்தியகிழக்கு முழுவதும் எழுந்துள்ள புரட்சிகர போராட்டங்களுக்கு எதிரான வாஷிங்டனின் பிரச்சாரத்தின் பாகமாகவும், ஆசாத் ஆட்சியின் ஒரு முக்கிய ஆதரவாளரான ஈரானுடன் ஒரு பரந்த மோதலுக்கான அதன் தயாரிப்பின் பாகமாகவும் உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின் தலையீட்டு கொள்கையை ஒரு சாதகமான வெளிச்சத்தில் முன்வைப்பதன் மூலமாக, அஷ்கார் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஒரு மனிதாபிமான முகத்தை கொடுக்க வேலை செய்து வருகிறார். இவ்விஷயத்தில், இந்த ஆண்டு லிபிய யுத்தத்தில் செய்ததைப் போலவே, மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து அஷ்காரும் ஆதரித்து வருகிறார்; NPAஉம் ஆதரித்து வருகிறது.

கடாபி ஆட்சிக்கு எதிரான நேட்டோ தலைமையிலான யுத்தத்தை அஷ்காரும் வரவேற்றார்; புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் வரவேற்றது. அந்த யுத்தம் லிபியாவில் பொதுமக்கள் பாதுகாப்பை நோக்கமாக கொண்டிருந்ததேயன்றி, ஏகாதிபத்திய நலன்களை ஊக்குவிக்கவில்லையென அவர்கள் ஏமாற்றுகரமாக முறையிட்டனர். ஏகாதிபத்திய சக்திகள் இடைக்கால தேசிய சபை துருப்புகளுக்கு ஆயுதங்களை அளிக்க வேண்டுமெனவும் கூட NPA முறையிட்டது. அஷ்கார் அவர் பங்கிற்கு எழுதினார்: “உண்மையிலேயே இங்கே மக்கள் ஆபத்தில் வாழும் நிலைமை உள்ளது. மேலும் அதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நம்பகமான மாற்றீடு எதுவும் இங்கே இல்லை. … ஏகாதிபத்திய-எதிர்ப்பு கோட்பாடுகள் என்ற பெயரில், அப்பாவி மக்களின் படுகொலையை தடுக்கும் ஒரு நடவடிக்கையை நீங்கள் தடுக்க முடியாது,” என்றார்.

திரிப்போலி வீழ்வதற்கு சற்று முன்னால் NPAஆல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், நேட்டோ போதியளவிற்கு பலமாக லிபியா மீது குண்டுவீசாததற்காக அஷ்கார் அதை குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, 1999இல் கொசோவா மீது குண்டுவீசுகையில் நேட்டோ 38,004 குண்டூவீச்சுக்களை நடத்தியதைப் போல, லிபியா மீது 11,107 குண்டுவீச்சுகளை அவர்கள் நடத்தியதற்காக குற்றஞ்சாட்டிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அதிதீவிர-வலதுசாரி கட்டுரையாளர் மக்ஸ் பூட்டை, அவர் உடன்பாட்டோடு மேற்கோளிட்டுக் காட்டினார்.

தம்முடைய ஸ்வீடன் உரையில், “அந்த கொடூரமான சர்வாதிகாரியின் பிடியிலிருந்து அவர்களின் நாட்டை விடுவிக்க, லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு ஏகாதிபத்திய தலையீடு உதவியது...” என்று கூறி, லிபிய மக்களுக்கு எதிரான ஏகாதிபத்திய அட்டூழியங்களை அஷ்கார் மூடிமறைத்தார். அவர், “வெளிநாட்டு விமானப்படை ஒத்துழைப்பு, ஒப்பீட்டளவில் பொதுமக்களின் உயிர்களை மிகவும் குறைவாகவே பாதித்தது" என்று முட்டாள்த்தனமாக குறிப்பிட்டார்.

உண்மையில், நேட்டோ யுத்தவிமானங்கள் பல லிபிய நகரங்கள் மீது குண்டுவீசி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாக கொன்று குவித்தது. இடைக்கால தேசிய சபை அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, அந்த யுத்தத்தின் போது குறைந்தபட்சம் 30,000 மக்கள் கொல்லப்பட்டனர், 50,000 பேர் காயமுற்றனர்.

விமானங்கள் பறக்க-தடை செய்யப்பட்ட வலயத்திற்கு சிரிய தேசிய சபை அழைப்பு விடுத்துவருகின்ற நிலையில், கடுமையான நெறிமுறைகளோடு விமானங்கள் பறக்க-தடைவிதிக்கப்பட்ட ஒரு வலயம் நடைமுறைப்படுத்தப்படும்போது அதனால் சிரியா மிகவும் குறைந்த நன்மையை பெறும்  அல்லது அந்த ஆட்சிக்கு எதிராக கட்டுப்பாடற்ற ஆகாயயுத்த வடிவத்தை எடுத்தால் அது படுகொலை மற்றும் பேரழிவின் நாசகரமான விளைவுகளைக் கொடுக்கும்,” என்று தற்போது அஷ்கார் சுட்டிக்காட்டுகிறார். “ஆகவே சிரியாவில் வெளிநாட்டு இராணுவ தலையீடென்பது, தற்போது வெடிமருந்து பெட்டகமாக விளங்கும் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பற்ற வைத்துவிடக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் அதுபோன்றவொரு தலையீடு செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அஷ்கார் சிரிய தேசிய சபையை கட்டியெழுப்பும் மூலோபாயத்தை முன்னெடுப்பதோடு, சிரிய இராணுவ அதிகாரிகளை எதிர்த்தரப்பிற்கு வென்றெடுக்கவும் முனைகிறார்.

ஒரு பாரிய நேட்டோ குண்டுவீச்சு பிரச்சாரத்தை உடனடியாக தொடங்குவதற்கு எதிரான அவருடைய ஆலோசனைகளுக்குப் பின்னால், சிரியாவிற்கு எதிரான ஆயுதமேந்திய நடவடிக்கைக்கான அஷ்கார் தனது ஆதரவை மறைக்க முயற்சிப்பது ஒரு எரிச்சலூட்டும் ஏமாற்றுவேலையாகும். இது அஷ்காரின் தரப்பிலிருந்து பாரிய குண்டுவீச்சுகள் மீதான எதிர்ப்பை பிரதிபலிக்கவில்லை, மாறாக இது பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் மத்தியில் நடந்துவரும் விவாதத்தையே பிரதிபலிக்கிறது. நேட்டோ தலையீட்டிற்கான சாத்தியக்கூறு குறித்த ஒரு பீடிகையாக, முதலில் அவர்கள் சிரிய மண்ணில் வலதுசாரி கைப்பாவை படைகளின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர்.

கடந்த புதனன்று, பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி அலன் ஜூப்பே பாரீசில் சிரிய தேசிய சபை தலைவர் பர்ஹன் கஹாலியனைச் சந்தித்தார். அவர் பத்திரிகைகளுக்கு கூறுகையில், “சிரிய தேசிய சபை சட்டப்பூர்வ பேச்சுவார்த்தையாளராகும். அதைக்கொண்டு நாம் வேலையைத் தொடரலாம்,” என்றார். “மக்களின் துயரங்களைத் தீர்க்க மனிதாபிமான நடவடிக்கைகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாம் மனிதாபிமான பாதைகளை அல்லது மனிதாபிமான மண்டலங்களை உருவாக்க வேண்டுமா? என்பது குறித்தும் நாங்கள் எங்களின் ஐரோப்பிய கூட்டாளிகளையும் கேட்டுக்கொள்வோம்,” என்பதையும் முன்மொழிந்தார்.

EU Observer பின்வருமாறு எழுதுகிறது: “தந்திரோபாயங்களைப் பொறுத்தவரையில், ஒரு பாதுகாப்பான "மனிதாபிமான மண்டலத்தை" உருவாக்குவதென்பது சிரிய ஜனாதிபதி பஷர் ஆசாத்தை எவ்வாறு கீழிறக்குவது என்ற பிரெஞ்சு இராணுவ சிந்தனையோடு சரியாக பொருந்துகிறது. …”

EU Observer ஒரு பிரெஞ்சு இராணுவ ஆதாரத்தை மேற்கோளிட்டுக் காட்டியது: “அங்கே விமானம் பறக்க-தடைவிதிக்கப்பட்ட வலயம் அல்லது இடைத்தாங்கி மண்டலத்தை ஏற்படுத்தும் விருப்பம் எதுவும் இல்லை. லிபியாவைப் போன்றே சிரியாவில் செய்வது சாத்தியமில்லை, ஏனெனில் அங்கிருக்கும் மலைப்பகுதிகள் விமான தாக்குதல்களை மிகவும் சிக்கலாக ஆக்கும். ஆனால், '(லிபியாவில்  பெங்காசியைப் போன்று சிறியளவில்) சிரிய எதிர்ப்பாளர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியுமானால், பின்னர் அனைத்து வாய்ப்புகளும் ஆலோசிக்கப்படும்,'” என்ற துல்லியமான சொற்களை என்னால் சகநண்பர்களிடம் கேட்க முடிந்தது.'”

சிரிய மண்ணில் சிரிய தேசிய சபை ஒரு கைப்பாவையாக செயல்பட வேண்டுமென பிரெஞ் ஏகாதிபத்தியம் விரும்புவதால் தான், அஷ்கார் அவர்களைச் சந்திக்க பயணித்தார் என்பது நிதர்சனமாக உள்ளது. “எந்த ஆட்சியாக இருந்தாலும் அதை கவிழ்த்திவிடுவதென்பது, ஒரு மூலோபாய நோக்கமாகும். இதற்கான வழிமுறைகள் நிலைமைக்கு  ஏற்பவும், நாட்டிற்கு ஏற்பவும் மாறுபடும். புரட்சியாளர்கள் பதவியிலிருந்து கீழிறக்க முயன்றுவரும் ஆட்சியினது உட்சேர்க்கையை அந்த மூலோபாயம் சார்ந்திருக்கும்,” என்றும் அஷ்கார் அவர்களுக்கு ஆலோசனையும் கூட அளிக்கிறார்.

எவ்வாறிருந்த போதினும் இந்த சிரிய தேசிய சபை புரட்சிகரமானதோ அல்லது சிரியாவின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோ இல்லை. சிரிய தேசிய சபையை புரட்சிகரமானதாக காட்டும் அஷ்காரின் முயற்சி, சிரிய தேசிய சபைக்கு மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுடனும், ங்காரா மற்றும் ரியாத்தில் உள்ள இஸ்லாமிய ஆட்சிகளுடனும் இருக்கும் நெருக்கமான உறவுகளால் முற்றிலும் நிராகரிக்கப்படுகின்றது. அஷ்கார் தான் ஏகாதிபத்தியத்தின் ஒரு மூலோபாயவாதியாக மற்றும் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார்.