World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party (Sri Lanka) holds founding congress

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபக காங்கிரஸை நடத்தியது

By our correspondents
21 June 2011
Back to screen version

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), கொழும்பில் மே 27 முதல் 29 வரை அதன் ஸ்தாபக காங்கிரஸை நடத்தியது. இது 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் ஒரு தீர்க்கமான முன்நோக்கிய நகர்வாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) சகோதரக் கட்சிகள் நடத்திய ஸ்தாபக காங்கிரஸுகளை அடுத்து இந்த மூன்று நாள் காங்கிரஸ் இடம்பெற்றது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜேர்மனியில் இருந்து நா.அ.அ.கு. பிரதிநிதிகளும், அதே போல் முழு இலங்கையிலுமுள்ள பிரதிநிதிகளும் பங்கெடுத்துக் கொண்ட இந்த மாநாடு முற்றிலும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இந்தியாவில் இருந்து நா.அ.அ.கு. ஆதரவாளர் ஒருவரும் மற்றும் நா.அ.அ.கு. உடன் அரசியல் உடன்பாடு கொண்டுள்ள பாகிஸ்தானில் மார்க்சிச குரலின் ஒரு பிரதிநிதியும் வருகை தந்திருந்தனர். மாநாட்டு நடவடிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

நா.அ.அ.கு. மற்றும் சோ.ச.க.யும் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக மேற்கொண்ட தத்துவார்த்த அரசியல் வேலைகளின் ஊடாகவே இந்த காங்கிரஸ் தயாரிக்கப்பட்டது. காங்கிரசுக்கு முன்னரும் காங்கிரசின் போதும் நடந்த தீவிரமான கலந்துரையாடல்களின் பின்னரே, (இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் அனைத்துலக அடித்தளங்கள் என்ற சோ.ச.க.யின் ஸ்தாபக முன்னோக்குத் தீர்மானத்தை பிரதிநிதிகள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். இந்த முன்நோக்கு இந்தியத் துணைக் கண்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தின் இன்றியமையாத மூலோபாய அனுபவங்களை ஆய்வு செய்கின்றது.

இந்த காங்கிரசில் (அமெரிக்க) சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் அனைத்துலக அடித்தளங்கள் என்ற முன்நோக்கும் ஒருதலைப்பட்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மார்க்சிசத்தின் தோற்றத்தில் இருந்து இன்றுவரை புரட்சிகர மார்க்சிசத்துக்கான அனைத்துலக போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை சுருக்கிக் கூறுகின்றது.

காங்கிரசில் தேர்வு செய்யப்பட்ட புதிய மத்திய குழுவினால், சோ.ச.க. பொதுச் செயலாளராக விஜே டயஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கமலசிறி ரட்னாயக்க உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியராகவும் தீபால் ஜயசேகர சோ.ச.க.யின் துணைப் பொதுச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

(இலங்கை) சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் அனைத்துலக அடித்தளங்கள், கடந்த 75 ஆண்டுகளாக இலங்கையிலும் தெற்காசியாவிலும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி முன்நோக்குக்காக நான்காம் அகிலம் முன்னெடுத்த போராட்டங்களின் தீர்க்கமான படிப்பினைகளை வெளிக்கொணர்ந்துள்ளதோடு சோ.ச.க.யின் அடிப்படை அரசியல் கடமைகளை ஸ்தாபிக்கின்றது.

இந்த ஆவணத்தின் ஆரம்பப் பகுதி, மோசமடைந்துவரும் பூகோள பொருளாதார நெருக்கடியின் புரட்சிகர தாக்கங்களை சுட்டிக் காட்டுகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஒரு புறம் தமது சர்வதேச பகையாளிகளின் செலவிலும், மறு புறம் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளை திணிப்பதன் மூலமும் தமது நிலைமைகளை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. சர்வதேச போட்டிகள் பூகோள பதட்ட நிலைமைகளையும், மோதல்களையும் மற்றும் யுத்தத்துக்கான முயற்சிகளையும் பெருமளவில் விரிவுபடுத்துகிறது; தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் வர்க்கப் போராட்டங்களையும் புரட்சிகர எழுச்சிகளின் புதிய காலகட்டத்தையும் திறந்துவிடுகிறது.

இந்த தீர்மானம், சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி கவனம் செலுத்துகிறது. இந்த வளர்ச்சியானது உலக அரசியலின் ஈர்ப்பு மையத்தை ஆசியாவை நோக்கித் திருப்பியுள்ளதோடு, பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான, குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்ட நிலைமைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. அதே சமயம், ஆசியாவானது ஏகாதிபத்தியங்களுக்கு இடையையான போட்டிகள் மட்டுமன்றி சமூகப் புரட்சியினதும் ஒரு பரந்த களமாவதற்கு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது, என இந்த ஆவணம் சுட்டிக் காட்டுகிறது. 2008ல் வெடித்த பூகோள நிதி நெருக்கடி வாழ்க்கைத்தரத்தை சீரழிக்கின்ற நிலையில், ஆசியா மற்றும் சர்வதேசம் பூராவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை வீதிக்கு இறக்கும். வங்குரோத்து இலாப முறைமையையும் காலங்கடந்த தேசிய அரச முறைமையையும் தூக்கி வீசி, உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதன் பேரில் ஒரு பூகோள எதிர்த் தாக்குதலை முன்னெடுக்க அத்தகைய போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இந்த ஆவணத்தின் மையம் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவமாகும். நிரந்தரப் புரட்சி தத்துவமானது பின்தங்கிய காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகள், அதே போல் முன்னேறிய நாடுகளையும் உள்ளடக்கிய உலக சோசலிசப் புரட்சியின் ஒருங்கிணைந்த தத்துவத்தை முன்வைக்கின்றது. எந்தவொரு முதலாளித்துவ பிரிவினராலும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரம் போன்ற வெகுஜனங்களின் அபிலாஷைகளை இட்டு நிரப்ப இலாயக்கற்றது என்பதை 20ம் நூற்றாண்டு முழுவதும் தெற்காசியாவின் வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிக்கொள்வதன் ஊடாக, தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சோசலிசப் புரட்சியின் பாகமாக இத்தகைய ஜனநாயக கடமைகளை பூர்த்திசெய்யமுடியும்.

இந்த தீர்மானம், லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) எழுச்சி, வீழ்ச்சி மற்றும் உச்ச கட்ட காட்டிக்கொடுப்பை தெளிவுபடுத்துகின்றது. 1935ல் ல.ச.ச.க. ஸ்தாபிக்கப்பட்டபோது அது ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக இருக்கவில்லை, மாறாக அது ஒரு ஒழுங்கற்ற சோசலிசத்தை சார்ந்த மற்றும் தேசியவாத காலனித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தை தழுவிக்கொண்டிருந்ததாக உறுதிப்படுத்தும் இந்த தீர்மானம், அதை சம சமாஜ வாதம் என பண்புமயப்படுத்துகின்றது. நெருங்கிக்கொண்டிருந்த உலக யுத்தம் மற்றும் இந்த மோதல்களுக்கு எதிராக ஒரு கொள்கைரீதியான தொழிலாள வர்க்க அனைத்துலக வாதத்தை தெளிவுபடுத்தி இந்தியத் தொழிலாளர்களுக்கு லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதத்தினது தாக்கத்தின் காரணமாக, 1939ல் ல.ச.ச.க. யின் பெரும்பான்மையானவர்கள் நான்காம் அகிலத்தை நோக்கித் திரும்பினர்.

இந்தியாவில் ல.ச.ச.க.யினாலும் ட்ரொட்ஸ்கிச ஆதரவுக் குழுவினாலும் 1942ல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.) ஸ்தாபிக்கப்பட்டமை, ஆசியாவில் நான்காம் அகிலத்துக்கு ஒரு தீர்க்கமான முன்னேற்றத்தைக் குறித்தது. சரியாக சம சமாஜ வாதம் என்ற தீவிரவாத, தேசியவாத மனோபாவத்தில் இருந்து பிரிந்து தம்மை பாட்டாளி வர்க்க அனைத்துலக வாதத்தின் அடிப்படையில் திசையமைவுபடுத்திக்கொண்டதனாலேயே, பி.எல்.பீ.ஐ. ஆல் இன்றைய தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தீர்க்கமான அரசியல் மற்றும் கோட்பாட்டு படிப்பினைகளைக் தொடர்ந்தும் கொண்டிருக்கக் கூடிய ஒரு அழிக்கமுடியாத பங்களிப்பை தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் மார்க்சிசத்துக்கான போராட்டத்துக்கு செய்ய முடிந்தது.

உலக முதலாளித்துவத்தின் யுத்தத்துக்குப் பிந்திய மீள்ஸ்திரப்படுத்தலால் ஏற்பட்ட எண்ணிலடங்கா அரசியல் அழுத்தங்களின் கீழ், பி.எல்.பீ.ஐ. தொழிலாள வர்க்க சர்வதேசியவாதத்தில் இருந்து பின்வாங்கியமை, ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்கு ஒரு மிகப் பெரும் அடியாகும். மீண்டும் உயிர்பெற்ற சந்தர்ப்பவாத ல.ச.ச.க.க்கு முரணான விதத்தில், இந்தியப் பிரிவினைக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்த பி.எல்.பீ.ஐ., பிரிட்டனால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது போலி சுதந்திரம் என வகைப்படுத்தியது. ஆயினும், புதிய பிந்திய-காலனித்துவ அரசுகளுக்கு துரிதமாக அடிபணிந்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள், கட்சியை 1948ல் குட்டி முதலாளித்துவ இந்திய சோசலிஸ்ட் கட்சிக்குள்ளும், 1950ல் இலங்கையில் ல.ச.ச.க. உள்ளும் கரைத்துவிட்டனர்.

நான்காம் அகிலத்துக்குள் தோன்றிய பப்லோவாதம் என்றழைக்கப்பட்ட யுத்தத்துக்குப் பிந்திய சந்தர்ப்பவாத போக்கின் உதவியையும் ஒத்துழைப்பையும் ஒவ்வொரு கட்டத்திலும் பெற்ற ல.ச.ச.க., துரிதமாக சீரழிந்து போனது. ல.ச.ச.க. மிஷேல் பப்லோவின் ஸ்ராலினிச-சார்பு திசையமைவை விமர்சித்தாலும், மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை காப்பதற்காக 1953ல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு ஆதரவளிக்க மறுத்தது. அடுத்துவந்த தசாப்தம் பூராவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) சிங்கள இனவாதத்துக்கு நிலையாக வெட்கமின்றி அடிபணிந்து போன ல.ச.ச.க., அதன் உச்சக் கட்டமாக 1964ல் ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டு முழுமையாக காட்டிக்கொடுத்தது.

ல.ச.ச.க. தொழிலாள வர்க்க அனைத்துலக வாதத்துக்கான போராட்டத்தை பகிரங்கமாக கைவிட்டமை, இலங்கையிலும் உலகம் பூராவுமுள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஆழமான விளைவுகளைக் கொண்டிருந்தது. அது தெற்கில் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஜே.வி.பீ. மற்றும் வடக்கில் புலிகள் போன்ற தமிழ் பிரிவினைவாத ஆயுதக் குழுக்கள் போன்று இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட குட்டி முதலாளித்துவ தீவிரவாத போக்குகளுக்கு கதவைத் திறந்துவிட்டதோடு, தீவின் அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்துக்கும் வழி வகுத்தது.

ல.ச.ச.க.யின் காட்டிக் கொடுப்பில் இருந்து அவசியமான அரசியல் படிப்பினைகளைப் பெறவும், நா.அ.அ.கு. முன்னெடுத்த ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்துக்கான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் மீண்டும் ஆயுதபாணிகளாக்கவும் 1968ல் சோ.ச.க.யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்டது. ஆவணம் விளக்குவது போல், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதமானது, பப்லோவாதத்துக்கு எதிராக அனைத்துலகக் குழு முன்னெடுத்த அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தினதும், மற்றும் 1968 முதல் 1975 வரை சர்வதேச ரீதியிலான புரட்சிகர எழுச்சிக் காலகட்டத்தை முன்னறிவித்த இலங்கையில் தொழிலாளர்களதும் இளைஞர்களதும் தீவிரமயமாதலினதும் ஒரு உள்ளார்ந்த உற்பத்தி ஆகும்.

இலங்கையில் மிகவும் கடினமான நிலைமையின் கீழ் சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும் இனவாதத்துக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மேற்கொண்ட கொள்கை பிடிப்பான உத்வேகமான போராட்டத்தின் படிப்பினைகளை ஆவணம் சாராம்சப்படுத்தியுள்ளது. பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மையப் பாகம் ஆற்றிய பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் பின்னர் தொழிலாளர் புரட்சிக் கட்சி என அழைக்கப்பட்டதன்- அரசியல் சீரழிவினால் அந்த கடினங்கள் மேலும் குவிந்தன. சோசலிச தொழிலாளர் கழகம் (எஸ்.எல்.எல்.) நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை கைவிட்டமை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த வேலைகளில், குறிப்பாக தமிழ் பிரிவினைவாத ஆயுதக் குழுக்களின் தோற்றம் சம்பந்தமான வேலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1985-86 பிளவில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகள் தோற்கடிக்கப்பட்டமை, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் புதிய யுகத்தை திறந்துவிட்டதோடு மார்க்சிசத்தின் புத்துயிர்ப்புக்கும் வழிவகுத்தது. தேசியப் பிரச்சினை தொடர்பாக மார்க்சிஸ்டுகளின் அணுகுமுறை உட்பட, தீர்க்கமான அரசியல் கோட்பாட்டு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற தலைப்பில் 1988ல் வெளியிடப்பட்ட நா.அ.அ.கு.வின் முன்நோக்கு தீர்மானம், உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் உள்ளர்த்தங்களை ஆராய்ந்ததோடு, சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் அடுத்து வந்த இரு தசாப்தங்களின் ஆழமான மாற்றங்களுக்கு கட்சியையும் தொழிலாள வர்க்கத்தையும் தயார் செய்தது.

சோசலிச சமத்துவக் கட்சி, முன்னர் பு.க.க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்- 1996ல் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையில் 1983ல் வெடித்த இனவாத யுத்தத்தை இடைவிடாமல் எதிர்த்து, தீவின் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காவும் மற்றும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டவும் போராடிய ஒரே கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தில் கொல்லப்பட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கும் மற்றும் 1987ல் இதய நோயினால் தனது 39 வயதிலேயே காலமாவதற்கு முன்னதாக, கட்சியின் அரசியல் அடித்தளங்களை இடுவதில் முன்னணிப் பாகம் ஆற்றிய பு.க.க. ஸ்தாபக பொதுச் செயலர் கீர்த்தி பாலசூரியவுக்கும் ஆவணத்தில் தகுந்த மதிப்பினை செலுத்தியுள்ளது.

காங்கிரஸ் தீர்மானத்தின் முடிவு தெரிவித்ததாவது: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் பகுதிகள் அனைத்தும் சமகால மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று மரபுரிமைகளை உள்ளடக்கிக்கொண்டுள்ளன. அந்த அடிப்படையிலேயே, சோ.ச.க.யும் நா.அ.அ.கு.வில் உள்ள ஏனைய சகோதரக் கட்சிகளும் அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்துக்கு கல்வியூட்டி, அணிதிரட்டி மற்றும் ஐக்கியப்படுத்த முயற்சிக்கின்றன. மிகவும் தூர நோக்குள்ள மற்றும் சுய அர்ப்பணிப்பு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தனது பதாகையின் கீழ் வெற்றிகொண்டு, உலக சோசலிச புரட்சியை முன்னெடுக்க இன்றியமையாத சக்தியை வழங்க முடியும் என அவை நம்புகின்றன.

மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், உலகம் பூராவும் புரட்சிகர போராட்டங்கள் கட்டவிழ்கின்ற நிலையில், இலங்கையிலும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் வெடிக்கும் நிலையிலான அரசியல் நிலைமைக்குள் நுழையும். பல காரணங்களால், இலங்கை ஆசியப் பிராந்தியத்தில் தீர்க்கமான அரசியல் அபிவிருத்திகளின் வரலாற்று ரீதியில் முன்னோடியாக இருந்துள்ளது, என வலியுறுத்தினார்.

இங்கு கலந்துரையாடப்பட்டு வரும் முன்நோக்கு ஆவணம் பூராவும் ஒரு மத்திய விடயம் காணப்படுகின்றது. அது இலங்கையிலும் இந்தப் பிராந்தியத்திலும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. அந்த வரலாற்று அனுபவங்கள், எமது தற்போதைய அரசியல் தயாரிப்புகளுக்கும் எதிர்கால போராட்டங்களுக்கும் அத்தியாவசியமான வழிகாட்டிகளாகும், என டயஸ் தொடர்ந்தார்.

இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி பற்றி குறிப்பிட்ட அவர் தெரிவித்ததாவது: தீவிரவாத குட்டி முதலாளித்துவ, தேசியவாத சமசமாஜவாதத்தை நிராகரித்தமை, ஒரு பண்புரீதியான மாற்றத்தையும், பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து உண்மையான சுதந்திரத்துக்கும் சோசலிசத்துக்குமான போராட்டத்தில் தொழிலாள வர்க்க சர்வதேசியவாதத்தை ஏற்றுக்கொள்வதையும் குறிக்கின்றது. இது எமது மரபுரிமையில் இன்றியமையாத பாகமாகும். ஆனால் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள் 1950ல் ல.ச.ச.க.யில் மீண்டும் இணைந்ததோடு, அது ட்ரொட்ஸ்கிச கொள்கைகளில் இருந்து தூர விலகிச் சென்ற நீண்ட காலகட்டத்தின் தொடக்கமாக இருந்தது. 1964ல் ல.ச.ச.க. மாபெரும் காட்டிக்கொடுப்பை செய்த பின்னர், நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பணியை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஏற்றுக்கொண்டது. இது ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை காப்பதற்காக, சர்வதேச மட்டத்தில் நா.அ.அ.கு. முன்னெடுத்த சளைக்காத போராட்டத்தினால் மட்டுமே சாத்தியமானது.

உலகத்தை அணுவாயுத யுத்தத்தை நோக்கித் தள்ளிச் செல்லும் உக்கிரமடைந்துவரும் ஏகாதிபத்திய உள் மோதல்களின் சுழிக்குள் தெற்காசியா அகப்பட்டுக்கொண்டிருக்கின்றது என டயஸ் விளக்கினார். இத்தகைய நிலைமைகளின் கீழ், சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக போராடுவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தம், ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய முதலாளித்துவத்துக்கு சரணடையாமல் இருப்பதும், முதலாளித்துவ ஆட்சியை தூக்கிவீசுவதற்கான போராட்டத்தில் ஏதாவதொரு ஏகாதிபத்திய சக்தியிடம் சரண்டையாமல் இருப்பதுமாகும். நிரந்தரப் புரட்சிக் தத்துவத்தின் அடிப்படையிலான போராட்டத்தில் உள்ளடங்கியிருப்பதும் மற்றும் இந்த மாநாடு ஏற்றுக்கொள்ள வேண்டிய இந்த ஆவணத்தில் கொண்டுவரப்பட்டிருப்பதும் இத்தகைய இன்றியமையாத படிப்பினைகளே ஆகும்.

மாநாட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த (அமெரிக்க) சோ.ச.க. தேசிய தலைவர் டேவிட் நோர்த், கட்சியின் வரலாற்றின் முக்கியத்துவத்தின் மீது கவனம் செலுத்தினார். தொழிலாள வர்க்கத்தின் முன் சென்று, தம்மீது நம்பிக்கை வைக்குமாறு கோரும் எந்தவொரு அரசியல் கட்சியும், தொழிலாளர்கள் இயற்கையாக எழுப்பும் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளித்தே ஆகவேண்டும்: எப்படி மற்றும் எந்த அடிப்படையில் நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் தலைமைக்கு உரிமை கோருகின்றீர்கள்? நாங்கள் ஏன் உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்? ஏதோவொரு முறை சோசலிசத்தைப் பிரநிதித்துவம் செயவதாக கூறிவிட்டு எங்களை தவறாக வழிநடத்திய ஏனைய அனைத்து கட்சிகளில் இருந்து இது ஒரு வேறுபட்டுள்ள கட்சி என்று ஏன் நாங்கள் நம்பவேண்டும்?

நீங்கள் எங்களை நம்ப வேண்டும், நாங்கள் வேறுபட்டவர்கள், என தொழிலாளர்களுக்கு சொல்லுவது எங்களது பதில் அல்ல. இல்லை, நாங்கள் சொல்லும் பதில்: இந்த ஆவணத்தில் எங்களது வரலாறு சாராம்சப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாசியுங்கள். அரை நூற்றாண்டுகாலத்தில் எங்களது கட்சியின் அபிவிருத்தியை அது தெளிவுபடுத்தும். 20ம் நூற்றாண்டு பூராவும் இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்கள் முழுவதற்கும் கட்சிக்கும் இடையிலான உறவை நாங்கள் ஸ்தாபித்துள்ளோம்.

நோர்த் தொடர்ந்தார்: வரலாற்றைப் பற்றி ஆய்வுசெய்வது என்பது கடந்த காலத்தைப் பற்றிய வெறும் அறிவுசார்ந்த நடவடிக்கை அல்ல. கடந்த காலத்தைப் பற்றி கற்பதன் ஊடாகவே நிகழ்காலம் தெரியவருகின்றது. ஏனெனில், நிச்சயமாக தற்போதைய காலகட்டத்தில் புரட்சிகர போராட்டங்கள் புதுப்பிக்கப்படுவதனால், தொழிலாள வர்க்கத்தின் கடந்த கால அனுபவங்களைப் பற்றி ஆய்வு செய்வது எல்லா வகையிலும் அத்தியாவசியமானதாகும். இந்த வரலாற்று அணுகுமுறையானது [ரஷ்யாவில்] 1905 புரட்சிகர காலகட்டத்தில் ட்ரொட்ஸ்கி பின்பற்றிய அதே வழியை தொடர்கின்றது. 1905ல் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்ட எண்ணிலடங்கா புரட்சிகர கடமைகளைப் பற்றி ஆராயும் போது, ட்ரொட்ஸ்கி 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 18ம் நூற்றாண்டினதும் வரலாற்று அனுபங்களை மீளாய்வு செய்தார்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆசியா பூராவுமான தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சிகண்டுவரும் தீவிரமயமாதல், வரவிருக்கும் நிகழ்வுகளில் இந்த இயக்கத்தின் அதிகாரத்தை பெருமளவில் மாற்றியமைக்கும். இந்தப் பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பகுதியினர் மத்தியில் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை யாதார்த்தமாக்குவதற்கு இந்தக் கட்சி மிகவும் தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றப் போகின்றது. இந்த இயக்கத்தின் முழு வரலாறும், அந்த வரலாற்றுக் கடமையை மேற்கொள்ளக்கூடிய கட்சி இதுவே என்பதற்கு சான்றாளிக்கின்றது.