World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Tamil Nadu state government impose price hikes

தமிழ் நாடு மாநில அரசாங்கம் விலை உயர்வுகளை திணிக்கிறது

சசி குமார்
18  December 2011
Back to screen version

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள ஜெயலிலதா தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அஇஅதிமுக) அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்திற்குள்ளேயே அதன் நிஜ ரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது. முந்தைய திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) கடந்த மே மாத மாநில தேர்தலில் புரையோடிய ஊழல்கள் மற்றும் தாங்கமுடியாத உணவு விலைவாசி ஏற்றத்தினால் ஆட்சியை இழந்தது. திமுகவிற்கு எதிரான வெகுஐன எதிர்ப்பு அலையில் ஆட்சிக்கு வந்துள்ள, தற்போதைய முதலமைச்சர்  தன்னுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்த்தாது என்று அறிவித்தார். ஆனால் தற்பொழுது அந்த பேச்சு தேர்தல் ஏமாற்றுக்கான மலிவான ஜனரஞ்சக பேச்சு என்பதை நிருபித்துள்ளார்.

நவம்பர் 17ல் பேருந்து கட்டணத்தை 28 லிருந்து 42 வரை புறநகர் சேவைக்கு உயர்த்தியுள்ளது.விரைவு போக்குவரத்து சேவைக்கான கட்டணம் 32 பைசாவிருந்து 56 பைசாவாக உயர்த்தியுள்ளது. அரை சொகுசு சேவை 38லிருந்து 60 பைசாவாகவும் டீலக்ஸ் சேவையில் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மற்றும் பஸ் டயர் விலை உயர்வே பேருந்து கட்டணம் அதிகளவு உயர்த்தப்பட்டதற்கு காரணமாக கூறப்பட்டது. அதே நேரத்தில் பால் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 17.75 ($US0.36) ரூபாயிலிருந்து ரூபாய் 24 ($US 0.48) ஆக அதிகரித்துள்ளது.

அதிமுக அரசாங்கம் மின்சார கட்டணத்தையும் விரைவில் உயர்த்தப் போவதாக சமிக்ஞை காட்டியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆழ்ந்த நிதி நெருக்கடியை ஜெயலலிதா குறிப்பிட்டு ‘‘இந்த கடனுக்கு சில உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த கடன் சுமை (தற்போதைய நிதி நெருக்கடி 42,175 கோடி ரூபாயிலிருந்து - $US 8.4 billion) 53,000 கோடி ரூபாயாக ($US10.6 billion) இந்த நிதி ஆண்டின் இறுதியில் உயர்ந்துவிடும்’’ என்றார்.

‘‘மரண படுக்கையில் உள்ள பொதுத்துறை பிரிவுகள்’’ நீடிப்பதற்கு ஆக்ஸிஜன்’’ வழங்குவதற்கு விலைவாசி உயர்வுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு பித்தலாட்ட பாணியில் ஜெயலிலதா கேட்டுக் கொண்டார். மேலும் விலைவாசி உயர்வுகளுக்கு எதிரான ஏழை மக்களின் எதிர்ப்புகளை மாநில ஊழியர்களுக்கு எதிராக தீய எண்ணத்தோடு திசை திருப்பும் விதமாக ஜெயலலிதா ‘‘மொத்த அரசாங்க வருவாயில் 75 சதவீதம் அரசாங்க ஊழியர்களின் ஊதியங்களுக்கு செலவிடப்படுவதாக’’ குறிப்பிட்டார். இப்படியாக அவர் பொதுத்துறை பற்றி குறிப்பிடுவது பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் வேலைகள் மீது தாக்குதல்கள் தொடுக்க அவர் தயாராகிறார் என்பதை காட்டுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசாங்கம் சமீபத்தில் எரிவாயு விலையை உயர்த்திய பொழுது எதிர்க்கட்சிகடன் சேர்ந்து அதிமுக அதனை எதிர்ப்பதாக கூறியது. எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதலாக மானியம் வழங்குவதை பராமரிப்பதன் காரணமாக வரவு-செலவுத் திட்ட நெருக்கடி ஏற்படுவதாக குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன்சிங் எரிவாயு விலை ஏற்றத்தை நியாயப்படுத்தினார். ஒரு செய்தி மாநாட்டில் பேசும்பொழுது வெகுஜனங்கள் நாட்டின் பொருளாதார கஷ்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தன்னுடைய அரசாங்கம் விலைவாசி உயர்த்தியதற்கு காரணம் முந்தைய திமுக அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை கடன் பொறிக்குள் தள்ளியதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசாங்கம் காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங்களை ‘‘மாற்றான் தாய் மனப்பான்மையில்’’ நடத்துவதும் தான் என்று இரண்டு அரசாங்கங்களையும் ஜெயலலிதா குறை கூறினார்.

திமுக தலைவரான கருணாநிதி இந்த விலைவாசி ஏற்றத்திற்கு ‘’ஜெயலலிதாவின் நிர்வாக குறைபாடுதான் காரணம்’’ என்று குறிப்பிட்டார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் ‘‘மின்சாரத் துறையிலும் போக்குவரத்து துறையிலும் உள்ள ஊழல் மற்றும் நிர்வாக குறைபாடே இதற்கு காரணம்’’ என்று கூறினார். இவ்வாறாக விலைவாசி ஏற்றங்களுக்கான உண்மையான காரணங்களை திமுகவும் பாமகவும் மூடி மறைப்பதன் மூலமாக ‘‘நிர்வாக குறைபாடு’’, ‘‘ஊழல்’’ ஆகியவற்றை சரிசெய்யும் பெயரில் ஜெயலலிதா ஆட்சி பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிராக தயார் செய்யும் தாக்குதல்களை நியாயப்படுத்துவார்கள்.

தேசிய முற்போக்கு திராவிட கட்சி (தேமுதிக)  தலைவரும் எதிர் கட்சி தலைவருமான விஜயகாந்த் குறிப்பிடும்பொழுது மக்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வந்ததே தங்களின் துயரை துடைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான். திமுகவிற்கு எதிராக அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்கி கடந்த மே மாத சட்ட மன்ற தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக தேமுதிக உருவானது. ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவந்ததில் தனக்குள்ள பொறுப்பை மூடிமறைக்க விஜயகாந்த் முயற்சிக்கிறார்.

தற்போது தமது நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கூறும் இப்படியான கட்சிகள் முன்னதாகவே இவற்றிற்கு ஆதரவு தெரிவித்ததை ஜெயலலிதா நினைவூட்டினார்; ‘‘தற்போது  எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர், தேர்தலுக்கு முன்னால், என்னைச் சந்தித்து  மோசமான நிதி நெருக்கடியை சரி செய்ய கடினமான முடிவுகளை, தைரியமாக, என்னால் மட்டும் தான் எடுக்க முடியும் என்று’’ கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

 இரண்டு பிரதானமான ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது சிபிஜ -கடந்த மே மாத தேர்தலில் அதிமுக வுடன் தேர்தல் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சிக்கு வர உடந்தையாக செயல்பட்டதன் மூலமாக அதிமுக ஆட்சி இன்று தொழிலாளர் மற்றும் ஏழை மக்களுக்கு எதிராக தொடுக்கும் தாக்குதல்களுக்கு பிரதான பொறுப்பாளிகளாக இருக்கின்றன. இதனை மூடிமறைக்கவே இரண்டு ஸ்ராலினிச கட்சிகளும் லேசான விமர்சனங்களை எழுப்புகின்றன. கொழுந்துவிட்டு எரியும் சமூக பொருளாதார பிரச்சனைகளை திசை திருப்புவதற்கு ஒட்டுமொத்த ஆளும் மேல் தட்டு தூண்டிவிடும் தமிழ் தேசியவாத மற்றும் பிராந்திய பேரினவாதத்தை தட்டி எழுப்பும் நடவடிக்கைகளில் அதிமுக அரசாங்கத்தின் பின்னால் ஸ்ராலினிச கட்சிகள் அணிதிரள்கின்றனர்.

2001 மாநில தேர்தலில் ஸ்டாலினிச கட்சிகளின் அரசியல் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசாங்கத்தின் 2003 நடவடிக்கைகளை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 200,000 அரசாங்க ஊழியர்களை அதிமுக ஆட்சி வேலையை விட்டு நீக்கியது மட்டுமல்லாமல் வேலைநிறுத்தத்தை நசுக்க அரசாங்க ஊழியர்களை பெருமளவில் கைது செய்யும் நடவடிக்கைகளையும் வேலை நிறுத்த இயக்கத்தை உடைப்பதற்கு கருங்காலிகளையும் துப்பாக்கி சூடுகளையும் பயன்படுத்தியது.

தற்பொழுது அரசியல் அப்பாவிகள் போல் பாசாங்கு செய்யும் ஸ்ராலினிச கட்சிகள் அதிமுக அரசாங்கம் மக்களின் நம்பிக்கைகளை காட்டிக்கொடுத்தாகவும் தேர்தல் வாக்குறுதிகளை அமுல்படுத்துவதில் தோல்வியடைந்ததாகவும் சாடுகின்றன. இந்திய கம்யூனிஸ் கட்சியின்  தமிழ் நாடு மாநில செயலாளர் பாண்டியன் குறிப்பிடும்பொழுது மக்கள் அதிமுக வுக்கு வாக்களித்தது ஆட்சிக்கு வந்து ஏழைகளுக்கு பெரிய நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலும் உதவி மற்றும் தேவைகளை வழங்கும் என்றுதான் ஆனால் அரசாங்கம் அவர்கள் மீது கட்டண உயர்வை திணித்துள்ளது. அவர் அரசாங்கம் விலைவாசி உயர்வை வாபஸ் பெற வேண்டுமென்றும் நிதி நெருக்கடியை சரிசெய்ய மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றார்.

இங்கே தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான எந்த தலையீட்டையும் நிராகரிக்கும் ஸ்ராலினிச தலைவர், ஜெயலலிதா அரசாங்கம் அதன் சொந்த வழியில் நெருக்கடியை கையாளும்படி விட்டு விட்டுவிடுகிறார்.

அதிமுக அரசாங்கம் ‘‘தவறான அணுகுமுறையை’’ கைவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி ஸ்ராலினிச சிபிஎம் கோரிக்கை விடுக்கின்றது,கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் எண்ணற்றவை உள்ளன. பன்னாட்டு தொழில் நிறுவனங் களில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது, சங்கம் அமைத்த தொழிலாளர் களை பழிவாங்குவது, தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது போன்றவை தொடர்கின்றன…”. இந்த அறிக்கையை, சிபிஎம்க்கு எதிரான குற்ற அறிக்கையாகவே எடுக்கப்பட வேண்டும்.

உழைக்கும் மக்களை அதிமுகவிற்கு வாக்களிக்கும்படியும் தேர்தலுக்கு பிறகு அவர்களது நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்று சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள் தான் கூறியன.

மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களினால் கூட்டாக உழைக்கும் மக்களுக்கு எதிராக தீவிரப்படுத்தப்படும் தாக்குதல்கள் உலக முதலாளித்துவ அமைப்பின் ஆழ்ந்த நெருக்கடியின் விளைவே என்ற உண்மையை உழைக்கும் மக்களிடமிருந்து ஸ்ராலினிஸ்டுகள்  உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் மூடிமறைக்கின்றன. இலாப அமைப்பு முறை பராமரிக்க வேண்டுமாயின் உழைக்கும் மக்களை வறுமைக்குள்ளாக்குவதை தவிர வேறு மாற்றீடு கிடையாது என்று நிதிய மூலதனத்தின் அரசியல் சேவகர்கள் வலியுறுத்துகின்றனர். ‘‘நிதிநிலையை பலப்படுத்தல்’’ செய்ய அல்லது பெரும் நிதி நெருக்கடியை சமாளிக்க உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துகின்றன.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் விலைவாசி உயர்களின் பாதிப்புகள் பற்றி பலரிடம் பேட்டி கண்டனர். ரகுராம் 50 வயது WSWS-யிடம் குறிப்பிடும்பொழுது’’ நான் 29 வருடமாக ஆக்ஸில் இந்தியா லிமிடெட் கம்பெனியில் பணிபுரிகிறேன். இவ்வளவு நாட்கள் பணிபுரிந்த பிறகு தான் நான் இப்பொழுது ஒரு மாதம் சம்பளம் 20,000ரூபாய்  பெறுகிறேன். எங்க குடும்பத்தில் மூன்று பேர் உள்ளனர். விலைவாசி எங்களை கடுமையாக பாதித்துள்ளது. பஸ் கட்டண உயர்வால் காய் கறிகள் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசாங்கம் பல முறை எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் மாநில அரசாங்கம் திடீரென்று பஸ் கட்டணத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது.

4000 000 (US $ 80) இலிருந்து 5000 ரூபாய் (US $ 100). வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு பால் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோன்று மின் கட்டணம் உயர்வு மேலும் சுமையை அதிகரிக்கும். எனது மாத மின் கட்டணம் 200 ரூபாய் (US $ 4) இலிருந்து  500 ரூபாய் (US $ 4) வரை அதிகமாகும். காய்கறிகளுக்கு மாதம் 400 ரூபாய் (US $ 8) இலிருந்து  750 ரூபாய் (US $ 15) அதிகமாகும்.

நோக்கியா வளாகத்தை சேர்ந்த பெண் தொழிலாளர் WSWSயிடம் குறிப்பிடும்பொழுது’’நான் மாத சம்பளமாக 4000 ரூபாய் பெறுகிறேன். வாடகைக்கு 1500 ரூபாய் செலவிடுகிறேன். நாங்கள் பெண்கள் என்பதால் நிறைய செலவுகள் உண்டு, ஆனால் எந்தவித ஆடம்பர செலவினங்களும் இல்லாமல் பெரும்பாலான பணம் வாடகைக்கும் உணவுக்கும் செலவிடப்படுகிறது. யார் ஆட்சிக்கு  வந்தாலும் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கிறது ஆனால் தொழிலாளர் சம்பளம் மட்டும் உயர்வதில்லை’’.

 ‘‘நாங்கள் கிராமத்திலிருந்து வருகிறோம். எங்களுடைய பெற்றோர்கள் எங்களை நம்பி உள்ளனர்.ஆனால் 500 ரூபாய் கூட அனுப்பமுடியவில்லை. தற்பொழுது பஸ் கட்டணம் உயர்த்தியதால் வீட்டிற்கு சென்று பார்ப்பது கடினமாகியுள்ளது. பால் விலை உயர்வால் நான் கூடுதலாக 200 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. மின்சார கட்டணத்திற்கு நான் 700 ரூபாய் செலவிடுகிறேன். மேலும் மின்சார கட்டணம் உயருமாயின் என்னுடைய சம்பளத்தில் வாழ்வது கடினமாகிவிடும்’’.

புருஷோத்தமன் 23 பாக்ஸ்கான் தொழிலாளி WSWS-யிடம் குறிப்பிடும்பொழுது’’ எனது மாத சம்பளம் ரூ 9,000 (US $ 180) ஆகும். எரிவாயு விலை அதிகரித்திருப்பது இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் என்னைப் போன்றவர்களுக்கு கடினமாகியுள்ளது. தற்பொழுது ஒருலிட்டர் பெட்ரோலுக்கு ரூ 70 செலவிடுகிறேன். நான் பன்னாட்டு கம்பெனியில் பணிபுரிகிறேன். நாங்கள் கடுமையாக பணிபுரிகிறோம் ஆனால் சம்பளம் குறைவாகதான் பெறுகிறோம். விலைவாசி ஒரு வருடத்தில் பல முறை அதிரித்துகொண்டே செல்கிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது சம்பளம் உயர்த்தினால் நல்லாக இருக்கும்.’’

மாநிலத்திலுள்ள இரண்டு பெரிய பிராந்திய கட்சிகளின் நிலைப்பாடு பற்றி குறிப்பிடும்பொழுது’’இரண்டு கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சார்பாகதான் செயல்படுகின்றன. போலீஸ் மற்றும் நீதிமன்றங்களும் கூட கம்பெனி நிர்வாகத்தின் பக்கம் தான் உள்ளது. பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போலீசாரால் மட்டும் தாக்குதலுக்கு உட்படவில்லை பல தொழிலாளர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். நீதிமன்றம் விசாரணையை இழுத்துக்கொண்டு செல்வதன் மூலமாக  தொழிலாளர்  போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது’’.