World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Egyptian working class moves to the forefront

எகிப்திய தொழிலாள வர்க்கம் முன்னிலைக்கு வருகிறது

David North
10 February 2011

Back to screen version

கடந்த சில தினங்களாய் தொடர்ந்து வரும் செய்திகள் முபாரக் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் தீர்மானகரமான பாத்திரம் அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் பெருந்திரள் மக்கள் கூட்டங்களும் மோதல்களும் தான் ஊடகங்களின் பிரதான செய்திகளாக இடம் பிடித்திருக்கின்ற அதே சமயத்தில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் ஆகிய வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க அலை பெருகி வருவது நிகழ்வுகளின் பாதையில் ஒரு பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

தொழிலாள வர்க்கப் போர்க்குணத்திற்கு வரலாற்றுப் புகழ்பெற்ற மையமான கப்ர் அல்-தவார் பகுதியின் தொழிற்சாலை பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான பட்டு மற்றும் ஆடைத் தொழிலாளர்கள் ஊதியப் பற்றாக்குறை மற்றும் மோசமான நிலைமைகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர். கெய்ரோவுக்கு தெற்கே உள்ள ஒரு நைல் நகரமான ஹெல்வானில் கோக் கோல் அண்ட் பேசிக் கெமிக்கல் நிறுவனத்தின் 4000 தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமான ஒப்பந்தங்கள், மற்றும் ஊழலுக்கு முடிவு ஆகியவற்றை கோரியதோடு தலைநகரின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான தங்களது ஆதரவையும் அறிவித்தனர். ஹெல்வானின் இன்னுமொரு முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையில், 2000 பட்டுத் தொழிலாளர்கள் தங்களது நிறுவனத்தின் இயக்குநர் குழுவை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்.

நைல் நதிப்படுகை பகுதியில் அமைந்திருக்கும் மஹல்லா நகரத்தில் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை தாமதமாய் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1500 தொழிலாளர்கள் போராடினர். நகரின் இன்னொரு போராட்டத்தில், ஒரு நெசவு நிறுவனத்திலான நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெகுகாலமாய் நிலுவையில் இருக்கும் பதவி உயர்வை செயல்படுத்தக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் குவெஸ்னாவில், மருந்து தயாரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள் 2000 பேர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். சூயஸ் கால்வாய் ஆணையத்தால் போர்ட் செய்ட், இஸ்மாய்லியா மற்றும் சூயஸ் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் 6000 க்கு அதிகமான தொழிலாளர்கள் தங்களது ஊதிய வேறுபாடுகளை சரிசெய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கினர். மேலும் சூயஸில், மிஸ்ரு நேஷனல் ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியும் 400 தொழிலாளர்கள் தொழிற்துறை நடவடிக்கையை தொடக்கினர்.

ஜனவரி கடைசி வாரத்தில் கெய்ரோவில் பரந்த மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குவதற்கு வெகு முன்பே எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கம் ஆரம்பித்துவிட்டது. எகிப்திய தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் நிபுணத்துவம் படைத்தவரான பேராசிரியர் ஜோயல் பெய்னின் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன் படி, அபிவிருத்தியுற்று வரும் வேலைநிறுத்த அலை அரைநூற்றாண்டுக்கும் அதிகமானதொரு காலத்தில் எகிப்து கண்டிருக்கக் கூடிய மிகப்பெரிய சமூக இயக்கத்தில் இருந்து எழுந்து கொண்டிருக்கிறது. 2004 முதல் 2008 வரையான காலத்தில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் 1,900க்கும் அதிகமான வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற எதிர்ப்பு வடிவங்களில் பங்கேற்றனர்.

முரண்நகையாய், தோல்தடித்த எகிப்திய ஆட்சிக்கு தொழிலாளர் போர்க்குணத்தின் வளர்ச்சி என்பது சென்ற தசாப்த காலத்தில் பொருளாதார வளர்ச்சியின் ஒரு விரும்பத்தகாத பின்விளைவாய் இருந்திருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் எகிப்திற்குள் சர்வதேச மூலதனம் பெருமளவு பாய்ந்ததில் இந்த வளர்ச்சி வளர்க்கப்பட்டிருந்தது. 2000 ஆம் ஆண்டில் 400 மில்லியன் டாலர்களாய் இருந்த அந்நிய நேரடி முதலீடு 2007-2008 ஆம் ஆண்டில் 13.2 பில்லியன் டாலர்களாய் உயர்ந்திருந்தது. எகிப்து தான் இன்று ஆபிரிக்கக் கண்டத்தில் மிக அதிகமான அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் நாடாகும். 2004 முதல் 2007 வரையான காலத்தில், வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக வளர்ச்சியடைந்திருந்தது. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் அனுகூலங்கள் சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டும் கிட்டக் கூடியதாய் இருந்தது. அவ்வப்போது சில வேலைநிறுத்தங்கள் சலுகைகளைப் பெற்றாலும், உழைக்கும் மக்களில் பெருந்திரளானோர் வறுமையில் உழல்கின்றனர். இதுதவிர, தொழிலாள வர்க்கத்திடமிருந்தான எழுச்சியுறும் சவாலுக்கு அதிகரிக்கும் மிருகத்தனம் மற்றும் அடக்குமுறையைக் கொண்டு ஆட்சி பதிலிறுப்பு செய்திருக்கிறது.

இப்போது, முபாரக் ஆட்சிக்கு எதிராக தேசிய அளவிலான ஒரு மக்கள் இயக்கம் வெடித்துள்ள நிலையில், முபாரக்கின் தலைவிதியை நிர்ணயிப்பதில் மட்டுமல்லாமல் நடப்பு புரட்சிகர கொந்தளிப்புகளில் இருந்து எழுகின்ற ஆட்சியின் தன்மையையும் தீர்மானிப்பதாய் தொழிலாள வர்க்கத்தின் பாத்திரம் இருப்பது தான் தீர்மானகரமான அம்சம் ஆகும்.

எகிப்திய தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், ஒரு வயதான சர்வாதிகாரியின் கரங்களில் இருந்து அதிகாரத்தைப் பறிப்பதற்கு அத்தியாவசியமான சமூக சக்தியை வழங்கி விட்ட பின்னரும், சில தலைமை ஆட்களின் பெயர்களும் முகங்களும் மாறுவதைத் தவிர வேறு எந்த அரசியல் முக்கியத்துவமான மாற்றமும் இருக்காது. அரசியல் அதிகாரமும் பொருளாதார வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடும் எகிப்திய முதலாளிகளின் கைகளில் தான் தொடரும், அதற்கு இராணுவமும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இருக்கும் அவர்களின் ஏகாதிபத்திய மேலாளர்களும் ஆதரவளிப்பார்கள். ஜனநாயகம் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கான வாக்குறுதிகள் எல்லாம் முதல் சந்தர்ப்பத்திலேயே மறுதலிக்கப்படும், அத்துடன் ஒரு மிருகத்தனமான அடக்குமுறையின் ஒரு புதிய ஆட்சி ஸ்தாபிக்கப்படும்.

இந்த அபாயங்கள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. ஜனநாயகத்திற்கான போராட்டமும் ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் நாடுகளின் விடுதலைக்கான போராட்டமும், லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் வலியுறுத்தியதைப் போல, ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வெல்வதன் மூலம் தான் சாதிக்கப்பட முடியும்.

இந்த மூலோபாயக் கோட்பாட்டிற்கான தாராளமான நிரூபணத்தை எகிப்தின் வரலாறு வழங்குகிறது.

எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்குப் போராட்டத்தின் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவாதத்திற்கு எதிரான ஆரம்பகால தேசிய இயக்கத்தில், தொழிலாள வர்க்கம் முக்கிய போராட்டங்களில் ஈடுபட்டது. ஆயினும், மீண்டும் மீண்டும் திரும்ப செய்யக் கூடியதான ஒரு வடிவத்தை அமைக்கும் வண்ணம், ஊழலடைந்திருந்த எகிப்திய முதலாளித்துவ வர்க்கம், பிரிட்டிஷாரிடம் இருந்து குறைந்தபட்ச சலுகைகளைப் பெற தொழிலாள வர்க்கம் அளித்த அழுத்தத்தை அனுகூலமாய் எடுத்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு தான் வழங்கியிருந்த அத்தனை வாக்குறுதிகளில் இருந்தும் பின்வாங்கிக் கொண்டது. 1922ல் பிரிட்டிஷாரால் பிரகடனப்படுத்தப்பட்ட போலியான சுதந்திரத்திற்குப் பின்னரும் முழுமையாய் கூலிக்கு மாரடிக்கக் கூடிய ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி செயலமைவுத்திட்டம் மூலம் இங்கிலாந்து தான் தொடர்ந்து ஆட்சி செய்ததுடன், தொழிலாள வர்க்கம் இரக்கமற்ற அரசு அடக்குமுறைக்கு தொடர்ந்தும் இலக்காகி வந்தது.

அடுத்து வந்த தசாப்தத்தில், எகிப்திய முதலாளித்துவ வர்க்கம் தொழிற்சங்கங்களை நிறுவும் தொழிலாளர்களின் முயற்சிகளைக் கடுமையாய் எதிர்த்தது. இரண்டாம் உலகப் போரின் அழுத்தத்தின் கீழ் பரந்த ஆதரவைப் பெறுவதற்காக பிரிட்டிஷ் ஆதரவுடனான ஆட்சி சலுகைகளை அளித்தபோது தான் தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் போர்க்கால அவசரநிலை கடந்த உடனேயே ஆட்சி இந்த குறைந்தபட்ச வெற்றிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டது. போருக்குப் பிந்தைய காலத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதுப்பிக்கப்பட்ட எழுச்சிக்கான பதிலிறுப்பாக, முதலாளித்துவ வர்க்கம் இடைவிடாமல் பின்தொடர்ந்து வந்த ஒடுக்குமுறைகளுடனான சலுகைகளை கொடுத்தது.

ஜூலை 23, 1952ன் சுதந்திர அதிகாரிகளின் இராணுவ சதி (The Free Officer coup) முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இராணுவக் சதிக்கு முந்தைய மாதங்களில் முடியாட்சியை பலவீனப்படுத்திய தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழுச்சி அலை நிகழ்ந்தது. ஆயினும்,  அதன் தலைவராக கேர்னல் கமால் அப்துல் நாசர் விரைவில் எழுச்சியுற்ற புதிய ஆட்சியின் வர்க்கத் தன்மையானது சில வாரங்களில் வெளிப்பட்டது. தொழிலாளர்கள் இந்த கவிழ்ப்பை வரவேற்றனர். இராணுவத் தலைவர்களின் புரட்சிகர வாய்வீச்சுகளில் அவர்கள் கொண்டிருந்த பிரமைகள் ஸ்ராலினிச தேசிய விடுதலைக்கான ஜனநாயக இயக்கத்தால் (DMNL) ஊக்குவிக்கப்பட்டது. இது சுதந்திர அதிகாரிகள் இயக்கத்துடன் வெகு நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்தது (இன்னும் இராணுவக் கவிழ்ப்புத் திட்டங்கள் குறித்தும் கூட இதற்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது). இரண்டு-கட்டப் புரட்சி (முதலில் ஜனநாயகம், பின்னர், வருங்காலத்தில் என்றோ ஒருநாள் சோசலிசம்) என்னும் ஸ்ராலினிச தத்துவத்தை அடியொற்றி DMNL, நகுப் மற்றும் நாசருக்கு ஒரு முற்போக்கான பாத்திரத்தை அளித்தது. இது ஏறக்குறைய உடனடியாக துயரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. கப்ரு அல்-தவார் தொழிற்துறை சமுதாயத்தில் அமைந்திருக்கும் மிஸ்ரு ஃபைன் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 1952 ஆகஸ்டில் நீண்ட காலத் துன்பங்களுக்குத் தீர்வு கோரி வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர். இந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் பின்னாளில் இவ்வாறு நினைவுகூர்ந்தார்:

கப்ரு அல்-தவாரில் தொழிலாளர்கள் ஒரு இயக்கத்தை தொடக்குவது என்பது வெகு இயல்பான ஒரு விடயமாய் இருந்தது ஏனென்றால் அவர்கள் புரட்சி குறித்த செய்திகளைக் கேட்டிருந்தனர். முடியாட்சி தடை செய்யப்பட்டு விட்டதென்றும், இந்த ஆட்சி அநீதிக்கு எதிரானது என்றும், மக்களின் உரிமைகள் மீட்கப்படும் என்றும் அது அறிவித்திருந்தது. வெகு காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை அப்போது முன்வைப்பதென்பது இயல்பானதே.... [மேற்கோள்: எகிப்திய கம்யூனிஸ்டுகளும் சுதந்திர அதிகாரிகளும்: 1950-54”, செல்மா போட்மேன், மத்திய கிழக்கு ஆய்வுகள், தொகுதி 22, எண். 3 (ஜூலை 1986), பக். 355]

இந்த இயக்கம் இராணுவத்தால் மிருகத்தனமாய் ஒடுக்கப்பட்டது. வேலைநிறுத்த தலைமையில் இருந்த தொழிலாளர்கள் மீது புதிய புரட்சிகர அதிகாரக் குழு அவசரமாய் ஒரு இராணுவ விசாரணையை கூட்டியது. முகமது காமிஸ் மற்றும் அகமது அல்பக்கிரி ஆகிய அதன் இரண்டு தலைவர்கள் ஆகஸ்டு 18, 1952 அன்று மரணதண்டனை விதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு பின்னர் தொழிற்சாலை மைதானத்தில் தூக்கிலிடப்பட்டனர். இராணுவ விசாரணைக்குத் தலைமை வகித்த புரட்சிகர அதிகாரக் குழுவின் உறுப்பினரான அபித் அல்முனிம் அமினுக்கு கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்புகள் இருந்தது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இதற்குப் பின், எகிப்திய விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளில் மிகக்குறைந்த மேம்பாடுகளை வழங்கிய சீர்திருத்தங்களின் தொடர்ச்சியை நாசரின் ஆட்சி முன்னெடுத்தது. சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியது எகிப்தின் பரந்த மக்களிடம் ஆதரவை வென்றது. பின்னர் அந்நிய நிறுவனங்களையும் மற்றும் எகிப்திய நிறுவனங்களின் ஒரு கணிசமான பகுதியையும் தேசியமயமாக்கியதில் வாழ்க்கைத் தரங்கள் உயர்ந்தன. ஆயினும் தொழிலாள வர்க்கத்தின் எந்த சுயாதீனமான சமூக அல்லது அரசியல் முன்முயற்சியும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது நாசர் ஆட்சியின் சவால்விட முடியாத விதியாக இருந்தது. நாசரின் வார்த்தைகளில், “தொழிலாளர்கள் கேட்க வேண்டாம், நாங்களே கொடுப்போம். இந்த விதியை தொழிலாளர்கள் மறுத்து கோரிக்கை விடுப்பார்களேயானால், அவர்கள் சிறை செய்யப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள் இன்னும் மரண தண்டனைக்கும் ஆளானார்கள்.

தேசியவாத அரவணைப்புவாதம் மற்றும் அடக்குமுறை ஆகியவற்றின் கலவையை அரபு சோசலிசம் என்று நாசர் அழைத்தார் என்றாலும், எகிப்திய முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தில் உறுதிப்பட அமர்ந்திருந்தது. 1970ல் நாசரின் திடீர் மரணத்தை அடுத்து, இஸ்ரேலுடனான ஆறு நாள் போரில் எகிப்தின் பேரழிவான தோல்விக்கு மூன்றே வருடங்களுக்குப் பின்னால், அன்வர் சதாத் ஜனாதிபதி ஆனார். புதிய ஆட்சியானது நாசரின் போலி-சோசலிசக் கொள்கைகளையும் அதேபோல் அமெரிக்காவின் கோபத்தை சம்பாதித்திருந்த நாசரின் அயலுறவுக் கொள்கைக் கூறுகளையும் இரண்டையும் மறுதலிக்கச் சென்றது. பொருளாதார விடயத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு தக்கவாறு சதாத் தனது கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ளச் சென்றார்.

வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தான் சதாத் தனது மிகவும் அதிரடியான அடியை எடுத்து வைத்தார். 1977 நவம்பரில் ஜெருசலேமுக்குப் பயணம் சென்ற அவர் 1978ல் இஸ்ரேலுடன் கேம்ப் டேவிட் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை பாலஸ்தீன விடுதலை அமைப்பினை அழிப்பதற்கு உறுதியளித்ததோடு பாலஸ்தீனிய மக்களின் தேசிய அபிலாசைகளை ஒட்டுமொத்தமாய் காட்டிக் கொடுத்ததைப் போன்றதாய் தான் இருந்தது. அதன் பிரதிபலனாய் 1981 அக்டோபரில் சதாத் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து வந்த ஹோஸ்னி முபாரக், இன்னும் இரக்கமற்றதொரு வடிவத்தில், சதாத்தின் கொள்கைகளை தொடர்ந்தார்.

பொருளாதார முனையில், நவ-தாராளவாதம் திடகாத்திரமாய் அமர்த்தப்பட்டது. நாசரால் தேசியமயமாக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தின் பெரும் பகுதிகள் தனியார் சொத்துடைமையாக மீண்டும் திரும்பின. நாட்டுப்புறங்களில், நாசரால் செயல்படுத்தப்பட்ட நில மறுபங்கீட்டு நடவடிக்கையின் பெரும்பகுதி தலைகீழாய் திரும்பியது.

வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில், சதாத்தும் முபாரக்கும் எகிப்தை நிபந்தனையின்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளின் கீழ் நிறுத்தினர்.

தாமதப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தியுடனான வேறெந்த முன்னாள் காலனித்துவ நாட்டிலும் கடந்த 30 ஆண்டுகளில் முதலாளித்துவ அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட கொள்கைகளில் இருந்து சதாத்-முபாரக் ஆட்சியின் கொள்கைகள் எந்த அர்த்தத்திலும் கணிசமாய் மாறுபட்டிருக்கவில்லை.

இன்று, முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு உலகளாவிய நெருக்கடிக்கு நடுவில் அனைத்து முதலாளித்துவ நாடுகளும் ஆழமாய் பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு உலகளாவிய தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவ கொள்கையின் திசை சீர்திருத்தத்தை நோக்கி அல்ல, மாறாக பிற்போக்குத்தனத்தை நோக்கியதாகும். இந்த உலகளாவிய போக்கில் எகிப்தின் எந்த முதலாளித்துவ அரசாங்கமும் முரண்படப் போவதில்லை.

இப்போது எகிப்தில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம் நீடித்த தன்மையை கொண்டதாகும். தொழிலாளர்கள் பிரம்மாண்டமான அரசியல் அனுபவங்களைக் கடந்து செல்கையில், அவர்களிடையே அதிகாரத்திற்கான ஒரு சுயாதீனமான போராட்டத்தின் அவசியம் குறித்த புரிதலை அபிவிருத்தி செய்வது புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் பொறுப்பாகும். முதலாளித்துவ கட்சிகளின் கவசத்தின் கீழ் தங்களது ஜனநாயக அபிலாசைகள் சாதிக்கப்பட முடியும் என்று தொழிலாளர்களிடையே நிலவும் அத்தனை நப்பாசைகளுக்கும் எதிராக அவர்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும். அத்துடன் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளின் பொய்யான வாக்குறுதிகளையும் அவர்கள் இரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும். அரசியல் போராட்டம் தீவிரப்படும்போது, தொழிலாள வர்க்கத்துக்கு அதிகாரம் மாற்றப்படுவதற்கான அடிப்படையாக ஆகத்தக்க தொழிலாளர் அதிகாரத்தின் சுயாதீனமான உறுப்புகளை உருவாக்க அவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் அத்தியாவசியமான ஜனநாயகக் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதென்பது சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இருந்து பிரிக்கவியலாததாகும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாய், எகிப்திய தொழிலாளர்களின் அரசியல் அனுபவ எல்லைகளை அவர்களது சொந்த நாட்டின் எல்லைகளைத் தாண்டி புரட்சிகர மார்க்சிஸ்டுகள் உயர்த்த வேண்டும். எகிப்தில் இப்போது அவிழ்ந்து வரும் போராட்டங்கள் உலக சோசலிசப் புரட்சியின் எழுந்து வரும் உலகளாவிய நிகழ்முறையுடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளன என்பதையும் எகிப்தில் புரட்சியின் வெற்றிக்குத் தேவை ஒரு தேசிய மூலோபாயம் அல்ல மாறாக சர்வதேசிய மூலோபாயம் தான் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும், முபாரக்-சுலைமான் ஆட்சிக்கும் எகிப்திய ஆளும் வர்க்கத்திற்கும் எதிரான போராட்டம் என்பது, இறுதி ஆய்வில், ஒட்டுமொத்த அரபு முதலாளித்துவத்திற்கும், இஸ்ரேலின் சியோனிச ஆட்சிக்கும் மற்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான ஒரு போராட்டமே. இந்த உலகளாவிய போராட்டத்தில், எகிப்தின் பரந்த மக்களின் பிரிக்கவியலாத மாபெரும் கூட்டாளி என்றால் அது சர்வதேச தொழிலாள வர்க்கம் தான்.

மேலே விவரிக்கப்பட்டதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கும் மூலோபாயமும் ஆகும்.