World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in history: January 17-January 23

வரலாற்றில் இவ்வாரம்: ஜனவரி 17-ஜனவரி  23

17 January 2011

Back to screen version

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்: ஜனநாயக ஆளுனர் ஹோமெல் வேலைநிறுத்காரர்களுக்கு எதிராக தேசியப்படைக்கு அழைப்பு விடுத்தார்

1986 ஜனவரி 21ம் திகதி, ஒஸ்டின் நகரத்தில் ஹோர்மல் இறைச்சி அடைக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், கம்பனி தொழிற்சங்கமில்லாத தொழிலாளர்களை கொண்டு உற்பத்தியை ஆரம்பிப்பதாக அறிவித்ததை அடுத்து, மினசோட்டாவின் ஜனநாயக விவசாய தொழில் ஆளுனர் ரூடி பர்பிச் (Rudy Perpich) வேலை நிறுத்தத்தை உடைப்பவர்களை அழைத்துச் செல்ல 500 தேசிய காவலாளர்களை அனுப்பினார்.

நிர்வாகத்தின் சம்பள வெட்டு மற்றும் தொழிற்சங்க விரிவாக்கத்திற்கு எதிரான தடைக்கும் எதிராக, ஐக்கிய உணவு மற்றும் இரசாயண தொழிலாளர்கள் அமைப்பின் (UCFW) லோகல் பீ-9 கிளையை சேர்ந்த சுமார் 1500 தொழிலாளர்கள், ஐந்தாவது மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தமது கார்களை கொண்டு தொழிற்சாலைக்கு பிரவேசிக்கும் வழியை தடைசெய்து அவற்றுக்குள் அமர்ந்து பூட்டிக்கொண்டதையடுத்து பொலிசாரும் தேசிய காவலாளர்களும் அவற்றின் ஜன்னல்களை உடைத்து நொறுக்கி அவர்களை வெளியில் இழுத்தனர்.

UCFW இன் தேசிய அதிகாரத்துவம், பீ-9 கிளையை அழிப்பதற்கு விடா முயற்சியுடன் செயற்பட்டது. இவற்றில் தொழிலாளர்களை ஒஸ்டினிலிருந்து மிட்வெஸ்ட்டில் உள்ள ஹோமேல் தொழிற்சாலைக்கு இலக்கின்றி செல்லும் ஆர்ப்பாட்டத்திற்கு கட்டளையிட்டமை, தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் வேலைநிறுத்த நிவாரண நிதியினை கொடுக்க மறுத்தமை மற்றும் "பீ-9 குடும்பமொன்றை தத்தெடுப்போம்" திட்டத்தின் கீழ் நடுதழுவிய ரீதியில் சேகரித்த நிதியை கூட கையாடியமையும் உள்ளடங்கும். மினசொட்டாவின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியிலும், நாடு பூராவும் இருந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியிலும், மற்றும் UCFW இன் இலக்கற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்படியாத மிட்வெஸ்ட் பூராவும் இருந்த ஹோர்மல் தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்த போதும், ஒஸ்டின் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஓ. தொழிற்சங்கம் எதுவும் செய்யவில்லை.

பர்பிச் தேசியப் படையினரை அனுப்பியமை மிகப்பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அப்போதுதான் ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஓ. 1986 தேர்தலில் ஜனநாயக கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பத்திருந்தன. உலக சோசலிச வலைத் தளத்தின் முனனோடி ஏடான புல்லடீன், "மிக முற்போக்கான மாநிலத்தின் தாராள ஜனநாயகவாதி அரச படைகளை ஒரு தொழிலாள இயக்கத்திற்கு எதிராக திரட்டுகிறார்" என சுட்டிக்காட்டியிருந்தது. சம்பளத்தின் மீதான கூட்டுத்தாபனத்தின் தாக்குதலுக்கு எதிராக போராட, ஜனநாயக கட்சியிலிருந்து   விடுபட்டு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான கட்சியை கட்டி எழுப்ப வேண்டுமென அப் பத்திரிகை விளக்கியது.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: கொங்கோவில் லுமும்பா படுகொலை செய்யப்பட்டார்

1961 ஜனவரி 17 அன்று, ஒரு மாதத்துக்கு முன்னர்தான் கொங்கோவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருந்த பற்றீஸ் லுமும்பா, பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவின் அங்கீகாரத்துடனும் உடந்தையுடனும் ஒரு துப்பாக்கிப் படையால் இரகசியமாக சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பாவின் உதவியாளர்களான மௌரைஸ் எம்பொலோ மற்றும் ஜோசப் ஒகிடோவும் கொல்லப்பட்டார்கள்.

அன்றைய தினம் காலை தைஸ்வில்லேயில் சிறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட லுமும்பா, அடைக்கப்பட்டு வாய்பொத்திய நிலையில் கட்டங்கா மாகாணத்துக்கு கொண்டுவரப்பட்டார். துப்பாக்கி படை பெல்ஜியன் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டதோடு குறைந்தபட்சம் ஒரு சி.ஐ.ஏ. முகவரேனும் இதில் சம்பந்தப்பட்டிருந்தார். சில வாரங்களின் பின்னர், தப்பிச்செல்ல முயன்ற போது சீற்றமடைந்த கிராமத்தவர்களால் கொல்லப்பட்டார் என்று லுமும்பாவின் மரணம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பில் சந்தேகம் கிளம்பிய போது, பெல்ஜியர்கள் திரும்பி வந்து சடலங்களை வெளியில் எடுத்து, அவற்றை கொத்தி காயப்படுத்தி, அவற்றை அசிட்டை ஊற்றி உருமாற்றியதோடு, லுமும்பாவின் பற்களையும் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளையும் நினைவுச் சின்னமாக வைத்தனர்.

லுமும்பாவின் படுகொலை அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்டது, மற்றும் சிலவேளைகளில் கட்டளையிடப்பட்டது என்பதில் சந்தேகம் கிடையாது. லுமும்பா ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என எய்ஸன்ஹொவர் சி.ஐ.ஏ. ஆணையர் அலன் டலஸ்ஸுக்கு தெரிவித்திருந்தார் என்பது பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. அமெரிக்காவால் இயற்றப்பட்ட கொலை சதித்திட்டங்கள் இரண்டு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததோடு, லுமும்பாவின் முன்னாள் கூட்டாளி ஜோசப் மொபுட்டு மேற்கொண்ட சதிப்புரட்சியும் அமெரிக்காவாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (முன்னணி குடியரசுக் கட்சிக்காரரான பிராங்க் கார்லூஸி, கொங்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்ததோடு, சி.ஐ.ஏ. முகவராகவும் இரகசியமாக செயற்பட்டுள்ளார்.)

உலக முதலாளித்துவ முறைமையின் முழுமையான கருணையில், விடுதலைக்குப் பின்னரும் கூட, அங்கு அதிகாரத்தை வைத்திருக்கும் காலனித்துவ சக்திகளால் தேசிய எல்லைகள் வரையப்பட்டுவரும் ஒரு கண்டத்தில், தேசியவாதத்தின் பலவீனத்துக்கு மிகமிக தெளிவான எடுத்துக்காட்டு லுமும்பாவின் கொலையே ஆகும்.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கோட்பாட்டாளர் ரட்யார்ட் கிப்ளிங் காலமானார்

1936 ஜனவரி 18, ரட்யார்ட் கிப்ளிங் தனது 71 வயதில் அல்சர் நோயால் காலமானார். ஆங்கில நாவலாசிரியர், கவிஞர் மற்றும் ஊடகவியலாளரான அவர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கான தனது இனவாத ஆதரவுக்காக நினைவு கூறப்பட்டார். இன்றும் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற இளைஞனாக அவர் பரந்தளவில் சிறு கதைகள் மேலாதிக்கம் செய்யும் இடத்தில் புதுமைகளை புகுத்தியவராக கருதப்படுகிறார். த ஜங்கல் புக்கில் மௌக்லியின் கதை இன்றும் மிகச் சிறந்ததாக புகழ்பெற்றுள்ளது.

இந்தியாவில் மும்பாயில் பிறந்த கிப்ளிங், அவரது பிரிட்டிஷ் பெற்றோர்களால் ஐந்து வயதில் தனிப்பட்ட முறையில் கற்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் சிவில் மற்றும் இராணுவ அரசாங்க வெளயீட்டில் லாகூரில் (இப்போது பாகிஸ்தான்) தனது தந்தையுடன் வேலை செய்வதற்காக இந்தியாவுக்கு திரும்பி வந்தார். கிப்ளிங் தனது முதலாவது கவிதை தொகுதியை 1886ல் வெளியிட்ட போதிலும், அவரும் அவரது மனைவியும் மூன்று வருடங்களின் பின்னர் அமெரிக்காவில் வேர்மொன்டுக்கு நகரும் வரை அவரது எழுத்துத் துறை சரியான முறையில் மேலெழும்பவில்லை. அங்கு, வேர்மொன்ட் குளிர்காலத்தின் மத்தியில்தான் மிகவும் விரும்பப்படும் த ஜங்கல் புக் என்ற சிறுவர் கதையை கிப்ளிங் எழுதினார்.

1899ல், ஐக்கிய இராச்சியத்துக்கு வந்த பின்னர், கிப்ளிங் தனது அருவருக்கத் தக்க வெள்ளையனின் சுமை (The White Man’s Burden) என்ற தனது கவிதையை வெளியிட்டார். ஐக்கிய அமெரிக்காவும் பிலிப்பைனியர்களும் என உப தலைப்பிடப்பட்டிருந்த அது, அந்த தீவை அமெரிக்கா ஆக்கிரமித்திருந்ததை, சுலென் மக்களின் பாதி-பிசாசு மற்றும் பாதி-பிள்ளையை காப்பதற்கான உயர்ந்த நடவடிக்கையாக நியாயப்படுத்தியது.

சிசில் ரொடஸ் (அவரது ரொடிஸியா இப்போது சிம்பாப்வே என பெயரிடப்பட்டுள்ளது) போன்று ஏகாதிபத்தியத்தின் பெரும் போற்றுதலுக்குரியவரான கிப்ளிங், பௌயர் யுத்தத்தில் பிரிட்டனின் நலன்களுக்கு பெருங்கூச்சலுடன் ஆதரவளித்தார். முதலாம் உலக யுத்தம் வெடித்து ஒரு ஆண்டில், ஒரு நிருபராக வெஸ்டர்ன் புஃரன்டுக்கு சென்ற அவர், யுத்தத்தில் பிரான்ஸ் (France at War) என்ற நூலை எழுதினார். ஐரிஷ் படையில் வேலை செய்தபோது, லூசில் நடந்த மோதலில் அவரது ஒரே மகன் ஜோன் கொல்லப்பட்ட பின்னரும் கூட இராணுவவாதத்துக்கான அவரது ஆதரவு தொடர்ந்தது.

சோசலிசத்தினதும் ரஷ்யாவில் போல்ஷவிக் அரசாங்கத்தினதும் கடும் எதிரியான கிப்ளிங், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் கொள்கைப் பிரச்சாரத்தை உத்வேகத்துடன் எழுதினார். ரட்யார்ட் கிப்ளிங் என்ற ஒரு இலகுவான தலைப்பில், ஒரு கதை சொல்பவர் என்ற முறையில் ஜோர்ஜ் ஓவல் அவருக்கு தனது பாராட்டைத் தெரிவித்த போதிலும், பிரித்தானிய ஏகாதிபத்தியம் சம்பந்தமான அவரது புறக்கணிப்பையும் மற்றும் மனோபாவத்தையும் கண்டனம் செய்ததோடு அவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விரிவாக்க நிலையில் அதன் தீர்க்கதரிசி என அழைத்தார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: மெக்சிகோவில் கிளர்ச்சி பரவியது

1911ல் இந்த வாரம், கிளர்ச்சியாளர்கள் முதற் தடவையாக பிரதான மோதல்களில் வெற்றிகண்டதுடன் மெக்ஸிகன் புரட்சி உக்கிரமடைந்தது. இந்தப் புரட்சி நாடு கடந்திருந்த பிரான்சிஸ்கோ மடெரோவால் தலைமை தாங்கப்பட்டதுடன், ஜனாதிபதி போர்பிஃரியோ டயஸ்ஸின் சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக கோரிக்கைகளில் மையப்படுத்தப்பட்டிருந்தது.

ஜனவரி 23 அன்று, கேனல் ஒர்டெகாவின் கட்டளையின் கீழ் மெக்ஸிகன் கிளர்ச்சியாளர்கள் ஒஜினகாவில் அரசாங்க இராணுவத்தை தோற்கடித்தனர். சுமார் 200 பெடரல் படையில் 50 பேர்தான் உயிர்தப்பினர். மெடரோவின் பிரதான அதிகாரியிடம் இருந்து அனுப்பப்பட்ட தந்தியின்படி, டயஸுக்கு விசுவாசமான படைகள், காதஸ் கிரன்டில் சுமார் 300 பேர்கொண்ட கிளர்ச்சிப்படையிடம் இன்னுமொரு மோதலில் தோல்விகண்டு, ரயில்பாதைகளை கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் விட்டுச் சென்றதோடு ஜெனரல் நவாரோ முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தார். சுமார் 600 பேரைக்கொண்டதாக மதிப்பிடப்படும் கிளர்ச்சிப் படைகளால் 500 பெஃடரல் படைகள் ஜனவரி 20 அன்று தோற்கடிக்கப்பட்டதாக சியுடாட் ஜூரஸில் உள்ள அமெரிக்கத் தூதர் அனுப்பிய தந்தி தெரிவித்தது. ஜனவரி18, மெக்ஸிகன் மற்றும் அமெரிக்கன் ரயில் பொறியியலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மெக்ஸிகோவில் தெற்கு பசுபிக் ரயில்பாதையின் கிளை பாதைகள் ஆயிரம் மைல்களுக்கு போக்குவரத்து மூடப்பட்டது.

இந்தக் கட்டத்தில் புரட்சியின் முதன்மை அரங்கேற்ற களமாக டெக்ஸாஸ் இருந்தது. 1910 அக்டோபரில் சிஹுவாஹுவாவின் அப்போதைய ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த, மடெரிஸ்டா மெக்ஸிகன் புரட்சிகர படையின் ஒரு தலைவரான அப்ரஹாம் கொன்ஸலேஸ் இருந்ததைப் போல் மெடெரோவும் டெக்ஸாஸில் இருந்தார்.

போர்பிஃரியடோ என்றழைக்கப்படும் டயஸின் நீண்டகால ஆட்சியின் போது, பெரும் செல்வத்தையும் நிலத்தையும் சம்பாதித்துக்கொண்ட மெக்ஸிகன் பிரபுக் குடும்பங்களைச் சேர்ந்த மடெரோ, காணி சீர்திருத்தம் போன்ற சமூக ஒழுங்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவுமின்றி, அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதன் மூலம் ஆளும் தட்டின் அதிகாரத்தை பேணிக்கொள்ள எதிர்பார்த்தார். எவ்வாறெனினும், சான் லூயிஸ் பொடொசி திட்டத்தில் மடெரோ ஆயுதம் ஏந்த விடுத்த அழைப்பு 1910 நவம்பரில் வெளியிடப்பட்டது. டயஸ், வெற்றிபெற்ற அண்மைய ஜனாதிபதி தேர்தல் திருடப்பட்டது மற்றும் செல்லுபடியற்றது என்று தெரிவித்தும் தற்போதைய மெக்ஸிகன் அரசாங்கத்தின் ஜனாதிபதி நானே என அறிவித்தும் மடெரோ வெளியிட்ட அந்த அறிக்கை, வெகுஜன இயக்கத்துக்கு கிளர்ச்சியூட்டியது.