World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Thousands protest, clash with police in Yemen and Algeria

யேமனிலும் அல்ஜீரியாவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்

By David Walsh
14 February 2011

Back to screen version

வார இறுதியில் அரசாங்கத்தின் ஊழல், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றிற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் ஆர்ப்பாட்ட எதிர்ப்புக்களில் ஈடுபட்டனர். துனிசியா, ஜோர்டான், ஈராக் இன்னும் சமீபத்தில் பஹ்ரைன் உட்பட, பல மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கப் பகுதிகளிலும் அமைதியின்மை படர்ந்தது.

யேமனில் தலைநகர் சானாவில் நடந்த மூன்று நாட்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டம் இதுவரை நடந்தவற்றிலேயே மிகப் பெரியது ஆகும். எகிப்தில் ஹொஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிச் செய்தியைத் தொடர்ந்து இக்களிப்பு அங்கு தொடங்கியது.

சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் எகிப்திய தூதரகத்திற்கு சென்ற அணிவகுப்பு ஆயிரக்கணக்கில் பெருகியது என்று சனிக்கிழமையன்று BBC கூறியுள்ளது.முபாரக்கிற்கு பின்னர் இப்பொழுது அலி ஓட வேண்டும்என்று மக்கள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேயைப் பற்றிக் குறிப்பிட்டுக் கோஷம் எழுப்பினர். மிகவும் வெறுக்கப்படும் பிந்தைய சர்வாதிகாரி அமெரிக்காவின்பயங்கரவாதத்தின் மீதான போருக்குமுக்கிய ஆதரவாளர் ஆவார்.

சனிக்கிழமையன்று அரசாங்க சார்பு குழுக்கள் கத்திகள் மற்றும் தடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி கூட்டத்தினரை விரட்டியடித்தனர்.

ஞாயிறன்று சானாவில் எதிர்ப்புக்கள் பெருகிவிட்டன. பல இளைஞர்களைக் கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசுடனும் அரசாங்கச் சார்புடைய குண்டர்களுடனும் மோதினர். “யேமனி பொலிசார், தடிகள், சிறுகத்திகளுடன் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்….சீருடை அணிந்த பொலிசார் பல பல்கலைக்கழக மாணவர்கள் நிறைந்திருந்த  எதிர்ப்பாளர்களை தலைநகரின் மத்திய ஹாடா சதுக்கத்தை அடையாமல் நிறுத்துவதற்கு சிறப்புத் தடிகளைப் பயன்படுத்தினர். சீருடைய அணியாத பொலிசார் கத்திகளையும் தடிகளையும் தாங்கி பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து கொண்டு எதிர்ப்பாளர்களை விரட்டியடித்தனர்என்று அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்களைஇந்த மகத்தான ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்மின்சக்தி ஏற்றிய தடிகளாலும், துப்பாக்கியின் கத்திமுனையினாலும் தாக்கினர் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் கொடுத்துள்ளது. பல மக்கள் காயமுற்றனர் என்று Xinhua நிருபர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீனச் செய்தி நிறுவனத்தின்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிறன்று ஜனாதிபதி அரண்மனைக்குள் அணிவகுத்துச் செல்ல முற்பட்டனர். சலே அகற்றப்பட வேண்டும், அவருடைய குடும்பத்தினரும் இராணுவம், பாதுகாப்புப் படைகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். சலேயின் மகன் அஹ்மத் அலி இரகசியப் போலிசுக்குத் தலைவராக இருப்பவரும் இதில் அடங்குவார்.

ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். முபாரக்கை அடுத்து இப்பொழுது சலேயின் முறை வந்துவிட்டதுஎன்று கூட்டம் முழங்கியது.

சானாவின் தஹ்ரின் (விடுதலை) சதுக்கத்தைச் சுற்றி பொலிசார் முள்வேலியால் சுற்றியமைத்ததுடன் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் அப்பகுதியை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் வகையில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தென்மேற்கு யேமனில் 5,000 மக்கள் டைஸ் நகரில் (மக்கட்தொகை 460,000) செங் கடலை ஏடென் வளைகுடாவுடன் இணைக்கும் மன்டப் ஸ்ட்ரைட் அருகே கூடி எதிர்ப்பில் பங்கு பெற்றனர். டைஸும் ஏடெனும் (140 கி.மீ. தொலைவில் உள்ளது) சமீபத்திய வாரங்களில் பல எதிர்ப்புக்களை நடத்திய இடங்களாகும்.

யேமனின் உள்துறை அமைச்சரகம், மிருகத்தனமான உள்பாதுகாப்புப் பிரிவை வழிநடத்துவது, பெரும்பாலான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள்சேதம் விளைவித்தல், குழப்பத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றைப் பரப்பி, நாட்டின் பாதுகாப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் கொடுக்கின்றனர்என்று எதிர்பார்த்த வகையில் கூறியுள்ளது.

யேமனில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் தன்மை ஞாயிறன்று முன்னதாக பெப்ருவரி மாதம் சலே கொடுக்க முன்வந்த பெயரளவு அரசியல் சீர்திருத்தத்தை அது ஏற்றதில் இருந்து கணிக்கமுடியும். அவர் 2013ல் பதவியை விட்டு விலகுவதாகவும் ஆட்சியை தன் மகனுக்கு கொடுப்பதாக இல்லை என்றும் கூறியிருந்தார். எதிர்ப்புக் கூட்டணியும் மீண்டும் சலேயுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தன் விருப்பதை வெளியிட்டிருந்தது.

கூட்டணித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் வெளியுறவு மந்திரி மஹ்மத் பஸிண்ட்வாவைப் பற்றிக் குறிப்பிட்டு அவருடைய சமரசக் கருத்தானஎதிர்தரப்பு ஜனாதிபதியிடம் இருந்து வந்துள்ள அழைப்பை நிராகரிக்கவில்லை, ஒரு வாரத்திற்குள் உடன்பாட்டில் கையெழுத்திடத் தயார்என்று கூறியதையும் ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது.

யேமனி மக்களின் பரந்த தட்டுக்கள் முகங்கொடுக்கும் உண்மையானது வறிய நிலையும் இழிந்த சமூகத் தன்மையும் ஆகும். அதே நேரத்தில் வாஷிங்டனோ சலே ஆட்சிக்குத் தொடர்ந்து நிதியும் ஆயுதத்தையும் அளித்து வருகிறது. மக்களில் 45 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் நாள் ஒன்றிற்கு 2  டொலருக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர். யேமனியர்களில் கிட்டத்தட்ட 32 சதவிகிதத்தினர் அடிப்படை உணவிற்கு வாய்ப்பின்றித் தவிக்கின்றனர் என்றும் கிட்டத்தட்ட 58 சதவிகிதக் குழந்தைகள் உணவு ஊட்டமின்றி உள்ளனர் என்றும் International Food Policy Research Institute தகவல் கொடுத்துள்ளது. ஆயுட்கால எதிர்பார்ப்பு, கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை அளவிடும் மனித வளர்ச்சிக் குறியீட்டில் 177 நாடுகளில் 151வது நாடாக ஐ.நா. யேமனை பட்டியலிட்டுள்ளது. அரபு நாடுகளில் இந்த HDI  (the human development index) பட்டியலில் கடைசி இடத்தில் யேமன் உள்ளது.

அல்ஜீயர்ஸ் எதிர்ப்பு

சனிக்கிழமை அல்ஜீயர்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் எண்ணிக்கை பற்றிய அரசாங்கம், எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின் கூற்றுக்கள் பெரிதும் வேறுபாடு கொண்டுள்ளன. ஆனால் அசோசியேட்டட் பிரஸ் (AP) கிட்டத்தட்ட 10,000 பேர் சனிக்கிழமையன்று அல்ஜீரியாவின் தலைநகரில் பொலிஸாரால் கலைக்கப்படுவதற்கு முன் கூடினர் என்று தெரிவிக்கிறது. 1992ல் இருந்து நடைமுறையிலுள்ள அவசர காலச் சட்டத்தின் கீழ் அல்ஜீரியாவில் ஆர்ப்பாட்டங்கள் தடைக்கு உட்பட்டுள்ளன.

ஜனாதிபதி அப்டெல்அஜிஸ் பௌடிபிளிக்காவின் ஆட்சி கிட்டத்தட்ட 30,000 பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரை எதிர்ப்பாளர்களை மிரட்டும் நோக்கத்துடன் பெரும் வலிமைக் காட்சியைக் காட்டுகிறது. ஆயுதமேந்திய வாகனங்கள் அல்ஜீயர்ஸ் முழுவதும்மூலோபாய இடங்களில்நிறுத்தப்பட்டன என்று கூறிய BBC “நீர்ப்பாய்ச்சும் கருவிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது என்று நகரமையத்திற்கு மேலே ஒரு ஹெலிகாப்டர் வட்டமிடுவதாகவும்தெரிவிக்கிறது.

அதிக ஆயுதங்களைக் கொண்ட பொலிசார் அல்ஜியர்ஸில் ஆர்ப்பாட்டங்கள் கூடுவதைத் தடுக்க முயன்றன. அணிவகுப்புப் பாதையின் இரு புறமும் வரிசையாக நின்று, சாலைத் தடுப்புக்களை ஏற்படுத்தி நகரத்திற்கு ஏராளமான மக்கள் பஸ்கள் மூலம் வருவதைத் தடுக்க முயன்றன. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் பொலிசைத் தவிர்ப்பதில் வெற்றிபெற்று மே 1 சதுக்கத்தில் அரசாங்கத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடினர்.

அல்ஜீரிய நாளேடு எல் வாடன் பிற்பகல் 3.30 க்கு நிலவிய காட்சியைப் பற்றி விவரித்தது.பொலிசார் மே1 சதுக்கத்தில் பெரும் மனித வேட்டையை நடத்துகின்றனர். வன்முறையை பயன்படுத்திப் பல ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்து பலரைக் கைதும் செய்தனர். எண்ணிக்கை பெருகி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் பொலிசார் இளைஞர்களின் உறுதிப்பாட்டைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டனர். இவர்கள் மீண்டும் களத்தில் நிறைய இருந்தனர். பொலிசாரும் எதிர்ப்பாளர்களும் பூனை-எலி விளையாட்டைத்தான் நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டக் குழுக்கள் பொலிஸ் பிரிவுகளிடையே அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க நகர்ந்த வண்ணம் உள்ளனர்.”

அப்பட்டமான முறையில் முன்னதாக நடந்த ஒரு காட்சியையும் எல் வாடன் விளக்கியது: “பொலிஸ் தடிகளில் இருந்து வந்த அடிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மழைபோல் பொழிந்தன. எவரும் விட்டுவைக்கப்படவில்லை.”

எதிர்ப்பாளர்கள்ஒயாகியாத் திருடன்என்று பிரதம மந்திரி அஹ்மத் ஒயாகியாவைக் குறிப்பிட்டுக் கோஷமிட்டனர். மேலும்பொலிஸ் அரசு வேண்டாம்!” என்றும், “மக்கள் ஆட்சியின் வீழ்ச்சியை விரும்புகின்றனர்”, “புட்டெபிளிக்கா, வெளியேறு!” என்றும் முழங்கினர். “நாங்கள் புரட்சியாளர்களாக இருப்போம் என்றும் அவர்கள் கூவினர்

எதிர்ப்புச் செய்தித் தொடர்பாளர்கள் கிட்டத்தட்ட 400 பேர் எதிர்ப்பின்போது கைதுசெய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். அல்ஜீரிய மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவரான அலி யாகியா அப்டெனுர், பெண்களும் வெளிநாட்டுச் செய்தியாளரும் சனிக்கிழமை காவலில் வைக்கப்பட்டோரில் அடங்குவர்என்று கூறினார்.

இந்தவார ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றம் மற்றும் ஜனநாயகத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு (CNCD) அழைப்பு விடுத்திருந்தது. இந்த முதலாளித்துவ எதிர்ப்பு குழுவில் அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை அடங்கியிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டம் ஒரு வெற்றி, ஏனெனில் மக்கள் அல்ஜியர்ஸில் 10 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, ஒருவித உளரீதியான தடை எற்பட்டுவிட்டதுஎன்று சமூக ஜனநாயக அமைப்புப் பிரிவான முன்னாள் சோசலிசச் சக்திகள் முன்னணியின் தலைவரான அலி ரஷெடி அறிவித்தார்.

ஒரு CNCD உறுப்பினரும் கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்திற்கான அணி (RCD) என்னும் எதிர்க்கட்சி அமைப்பின் தலைவரான சாதி, அணிதிரட்டப்பட்ட பொலிஸ் எண்ணிக்கைஇந்த அரசாங்கத்தின் பயத்தைக் காட்டியுள்ளது. அது பேராபத்தில் இருக்கிறது….நாங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம், இந்த ஆட்சி விழும் வரை.” புட்டெபிளிக்கா இராஜிநாமா செய்யவேண்டும் என்று எதிர்ப்புக் குழு கோரவில்லை, அவர் 2009ல் ஒரு தில்லுமுல்லுத் தேர்தலில் மூன்றாவது பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓரான், அன்னபா மற்றும் கான்ஸ்டன்டைன் ஆகிய இடங்களிலும் சிறிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பெப்ருவரி 19 அன்று ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு CNCD ஒரு அழைப்பு விடுத்துள்ளது. கொள்கையளவில் வரவிருக்கும் நாட்களில் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பையும் ஏற்றுள்ளது.

அல்ஜீரியாவில் மற்றொரு நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட வேலையின்மையிலுள்ள இளைஞர்கள் ஞாயிறு காலை தலைநகரத்தில் இருந்து 480 கி.மீ. தென்மேற்கிலுள்ள மெஜௌரௌவில் அரசாங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பாளர்கள் மெஜௌரௌவ் மற்றும் தெலக் நகர்களுக்கு இடையேயுள்ள முக்கிய சாலையையும் பழைய டயர்கள், குப்பைகளை நிரப்பி மூடினர். இளைஞர்கள் வேலை கோருவதுடன் ஊழல்களையும் கண்டித்தனர்.

ஒரு 36 வயது வேலையற்ற நபர் கிழக்கு அல்ஜீரியாவில் துனிசிய எல்லைக்கு அருகே எல் க்வெட் சிறுநகரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு ஏற்பட்ட காயங்களினால் இறந்துபோனார். ஆறு பேருக்குத் தந்தையான லொப்டி மகாமிர் ஜனவரி 17ம் தேதி ஒரு அரசாங்க அலுவலகத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு இறந்தார். அங்கு அவர் வேலை மற்றும் வீடு கோரச் சென்றிருந்தார். நான்கு பேர் இதுவரை இவ்வகையில் அல்ஜீரியாவில் ஜனவரி மாதம் நெருக்கடி தொடங்கியதில் இருந்து இறந்ததாகத் தெரிகிறது. (மற்றொரு திகைப்பான எதிர்ப்பில், ஒரு வேலையில்லாத ஈராக்கியர் ஞாயிறன்று வடக்கு நகரான மோசூலில் தனக்கே தீவைத்துக் கொண்டு காயங்களினால் இறந்து போனார்.)

அல்ஜீரிய மக்களில் 23 சதவிகிதத்தினர் இப்பொழுது உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். குறிப்பாக அல்ஜீரிய இளைஞர்கள் பெரும் வேலையின்மையினால் அவதியுறுகின்றனர். உத்தியோகபூர்வ விகிதம் இளைஞர்களிடைய 23 சதவிகிதம் என்று உள்ளது (இன்னும் அதிகமாக இருக்கும் என்றுதான் மதிப்பிடப்படுகிறது). மேலும் 70 சதவிகிதம் பேர்கள் வேலையின்மையில் வாடுபவர்களில் 30 வயதிற்கும் உட்பட்டவர்கள் ஆவார்கள்.