World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A welcome advance for the Pakistani and world working class

பாகிஸ்தானிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம்

Keith Jones
3 January 2011

Back to screen version

மார்க்சிச குரல் (Marxist Voice) அளித்திருக்கும் ஒரு அறிக்கையை உலக சோசலிச வலைத் தளம் இன்று தொடராக பிரசுரிக்க ஆரம்பிக்கிறது. இந்த அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளுடன் அரசியல் உடன்பாட்டை தெரிவித்துள்ளதுடன் நா...கு.வை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு அதனுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டிருக்கின்ற ஒரு பாகிஸ்தானிய குழுவாகும்.

நாங்கள் இந்த அறிக்கையை மிகவும் வரவேற்கின்றோம். ஒரு புரட்சிகர முன்னோக்கினை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கியமான முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதோடு பாகிஸ்தானில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஏற்பட்டிருக்கும் ஒரு அரசியல் அபிவிருத்தியை சுட்டிக் காட்டுகிறது.

தெற்கு ஆசியாவில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளுடன் முதலாளித்துவ ஆட்சி முற்றுமுதலாய் ஒத்திசைவின்றி உள்ள நிலை முன்னெப்போதையும் விட வெளிப்பட்டு நிற்கிறது. எழுச்சியுற்றுக்கொண்டிருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சியை ஒடுக்கி, துணைக்கண்டத்தை மதரீதியாகத் துண்டாடிய ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர் இன்று, தெற்கு ஆசியா உலகின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பட்டினியால் வாடுகின்ற வறுமைப்பட்ட மக்களின் தாயகமாக இருக்கிறது.

இதற்கு முன்னிருந்த அமெரிக்க ஆதரவுடனான ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியைப் போலவே, பாகிஸ்தானின் நடப்பு பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசாங்கமும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ்ப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளின் பேரில் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா தற்பெருமை பேசிக்கொள்ளும் எழுச்சியை பொறுத்தவரை, இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் இந்திய பில்லியனர்களின் ஒரு சிறு கூட்டத்தின் எழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்தது, பரந்த கிராமப்புற மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டதும் மிருகத்தனமாய் சுரண்டப்படும் தொழிலாள வர்க்கத்தின் உருவாக்கமும்தான் காரணமாகும்.

வெகுஜனங்களின் பிரச்சினைகளுக்கு எந்த முற்போக்கான தீர்வையும் வழங்க வக்கற்ற நிலையில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கங்கள், தங்களது பிற்போக்குத்தனமான பூகோள-அரசியல் அரசுப் போட்டிச்சண்டைகளின் மூலமாகவும் மதவாத-வகுப்புவாத, தேசிய-இன மற்றும் சாதிப் பிளவுகளை தூண்டி விடுவதன் மூலமாகவும் சமூகப் பதட்டங்களை திசைதிருப்ப முனைகின்றன.

பாகிஸ்தான் இந்தியா இரண்டுமே அமெரிக்காவின் நன்மதிப்பைப் பெற ஆர்வத்துடன் போட்டிபோடுகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் முதல் பாகிஸ்தான் மக்கள் கட்சி வரை பாகிஸ்தான் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளுமே ஆப்கானிஸ்தானிலான போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அடிமைத்தனமாய் கூட்டுவேலை செய்து வருகின்றன. இதில் பாகிஸ்தானுக்குள்ளாக ஆளில்லா விமானங்கள் கொண்டு தாக்குதல்களை நடத்துவதை (இதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்) மவுனமாய் அனுமதித்ததும் பஸ்தூன் பழங்குடியினப் பகுதியில் தலிபான்களுடன் தொடர்புபட்ட போராளிக் குழுக்களை ஒடுக்குவதற்காக ஜனநாயக உரிமைகளைப் பற்றியோ அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பாகிஸ்தான் இராணுவத்தைக் கட்டவிழ்த்து விட்டதும் அடங்கும்.

இதனிடையே, முன்னர் அணிசேராக்கொள்கையின் பரிவாளனாக இருந்த இந்தியா, சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்கத் திட்டங்களுடன் தன்னை மிகவும் நெருக்கமாய் இணைத்துக் கொள்வதோடு, உலக சக்தியாக ஆவதற்கு உதவுவதாக அமெரிக்கா அளிக்கும் சலுகையை பேராசை பொங்க ஏற்றுக் கொள்கிறது.

மார்க்சிச குரலின் அறிக்கை சான்றளிப்பதைப் போல, தெற்காசியாவில் உள்ள வர்க்க-நனவு மிகுந்த தொழிலாளர்களும் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட இளைஞர்களும் மற்றும் புத்திஜீவிகளும் ட்ரொட்ஸ்கிசத்திற்குத் திரும்புவதன் மூலம் ஒரு மார்க்சிச முன்னோக்கிற்கு புத்துயிர்கொடுக்க வேண்டியிருக்கும் அவசியத்தை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பல தசாப்தங்களாக, தெற்காசியாவில் உள்ள தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிச கட்சிகளால் அரசியல்ரீதியாக மூச்சுத்திணறச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஜனநாயகப் புரட்சியின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் (நிலப்பிரபுத்துவவாதம் மற்றும் சாதீயம் ஆகியவற்றை ஒழிப்பது மற்றும் துணைக்கண்டத்தின் பல்தரப்பட்ட மக்களிடையே உண்மையான சமத்துவத்தை ஸ்தாபிப்பது ஆகியவை உட்பட) முதலாளித்துவத்தின் தலைமையிலான ஒரு தேசியப் புரட்சியின் மூலமாகத் தான் தீர்க்கப்பட முடியும் என்கிற காரணத்தைக் கூறி சீரழிவான விளைவுகளுடன் ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்தின் ஏதாவது ஒரு பிரிவுக்கு திட்டமிட்டு அடிபணியச் செய்து வந்திருக்கின்றனர்.

தெற்காசியாவில் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையான மூலோபாய அனுபவங்களின் மீதான திறனாய்வின் அடிப்படையிலும் அத்துடன் நா...கு. தலைமையிலான அரசியல் போராட்டங்களின் படிப்பினைகளில் இருந்தும், பாகிஸ்தானிய தொழிலாளர்கள் நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தை தங்களது போராட்டங்களுக்கு அடித்தளமாகக் கொள்வதன் அவசியத்தை மார்க்சிச குரலின் அறிக்கை விளங்கப்படுத்துகிறது.

மார்க்சிச குரல் பின்வருமாறு அறிவிக்கிறது: பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவில் ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் முதலாளித்துவம் அல்லது அதன் எந்த பிரிவினாலோ, அல்லது அதனுடன் கூட்டணி வைத்தோ நிறைவேற்றப்பட முடியாது, மாறாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான மற்றும் முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் தான் நிறைவேற்றப்பட முடியும். முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து செல்வதையும், வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளை அது உதாசீனப்படுத்துவதையும், அதன் வர்க்க நலன்களை மூர்க்கத்துடன் நாடிச் செல்வதையும் அம்பலப்படுத்துவதன் மூலமாக, அதன் அரசியல் செல்வாக்கில் இருந்து வெகுஜனங்களை விடுவிப்பதற்கான ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்தை நிகழ்த்துவதன் மூலமாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாளனாகவும் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான கூட்டின் தலைவனாகவும் தொழிலாள வர்க்கம் எழுந்து நிற்க முடியும். ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமானது புரட்சிகர ஜனநாயக நடவடிக்கைகளை இணைக்கும் (மிக முக்கியமாக நில உறவுகளில் ஒரு தீவிரமான மாற்றத்துடன் பெரு வணிகங்களை அரசுடைமையாக்குவதும் மற்றும் பிற சோசலிச நடவடிக்கைகளும் இருக்கும்). அத்துடன் முதலாளித்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை தனது மூலோபாயத்தின் இருதயத்தானத்தில் வைக்கும்.

தேசியவாதத்தின் மற்றும் தேசியவாத மற்றும் வகுப்புவாத அரசியலின் அனைத்து வடிவங்களையும் மார்க்சிச குரலின் அறிக்கை நிராகரிக்கிறது. பிரிவினையிலும் மற்றும் இந்தியா பாகிஸ்தான் போட்டி அரசுகளிலும் புனிதப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான மதவாத சித்தாந்தம், மற்றும் பாகிஸ்தானை தேசிய-இன அடிப்படையில் துண்டாடுவதற்கு உபதேசிக்கும் சக்திகள் ஆகிய வடிவங்களை நிராகரிப்பதும் இதில் அடங்கியுள்ளது.

இஸ்லாமியத்தையும் பயங்கரவாதத்தின் பிற்போக்குவாத அரசியலையும் அது கண்டனம் செய்கின்ற அதே சமயத்தில், ஆப்கான்-பாகிஸ்தான் போருக்கு எதிராகவும் மற்றும் பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான இராணுவ-மூலோபாய கூட்டணியைத் தகர்த்தெறியவும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாய் அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதை மையக் கடமையாக முன்நிறுத்துகிறது.

இறுதியாக ஆயினும் முக்கியத்துவத்தில் சளைக்காத வகையில், மார்க்சிச குரலின் அறிக்கையானது, பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக நா...கு. நிகழ்த்திய சமரசமற்ற போராட்டத்தின் படிப்பினைகளை அடித்தளமாகக் கொள்வதின் தீவிரமான முக்கியத்துவத்தின் மீது வலியுறுத்துகிறது. போராட்டம் (சர்வதேச மார்க்சிச போக்கினுடையது), பாகிஸ்தான் தொழிலாளர் கட்சி (இது பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியுடன் இணைந்த ஒன்று) மற்றும் பிற பப்லோவாத குழுக்களால் நிகழ்த்தப்பட்ட அரசியல் சேதாரங்களை சுருக்கமாக, ஆனால் அழுத்தமாக, அது அம்பலப்படுத்துகிறது.  

இந்த குழுக்கள் எல்லாம் முதலாளித்துவ பாகிஸ்தான் மக்கள் கட்சி, பல்வேறு இன-தேசியவாத இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் உலக சமூக மன்றத்துடன் (World Social Forum) தொடர்புபட்ட அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் அரசியல் சுற்றுவட்டத்தில் செயல்படுவதோடு, ஏதேனும் ஒரு மட்டத்தில் (கோண அளவில்) அவற்றை நோக்கித் தான் நோக்குநிலை கொண்டிருக்கின்றன.

மார்க்சிச குரலின் அறிக்கையை கவனமாகப் படிப்பதற்கும், அத்துடன் கருத்துகளையும் கேள்விகளையும் எங்களுக்கு அனுப்புவதன் மூலமாக பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியைக் கட்டுவதில் வழிநடத்தக் கூடிய முன்னோக்குகள் மற்றும் வேலைத்திட்டம் குறித்த விவாதத்தில் பங்களிப்பு செய்வதற்கும் பாகிஸ்தான், தெற்கு ஆசியா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் வாசகர்களுக்கு உலக சோசலிச வலைத் தளம் அழைப்புவிடுக்கின்றது.