World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Egypt destabilised in wake of bomb attack on Coptic Church

கோப்டிக் தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலையடுத்து எகிப்து சீர்குலைந்துள்ளது

By Jean Shaoul
4 January 2011
Back to screen version

அலெக்சாந்திரியாவில் புத்தாண்டிற்கு முன்னதாக 1,000 பேருக்கும் மேலாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அல்-குடிசின் கோப்டிக் தேவாலயத்தின் மீது நடந்த ஒரு குண்டுத் தாக்குதலில் 21ல் இருந்து 25 பேரைக் கொன்றதுடன் குறைந்தது 97 பேரைக் காயப்படுத்தியது என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகேயிருந்த ஒரு மசூதியும் சேதத்திற்கு உள்ளாயிற்று. காயமுற்றவர்களில் மசூதியிலிருந்த 8 முஸ்லீம்கள் மற்றும் மூன்று பொலிசார், தேவாலயப் பாதுகாவல் அதிகாரி ஆகியோரும் அடங்குவர்.

ஜனவரி 7ம் தேதி கோப்டிக் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக எகிப்து நேற்று உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டது. பொலிசாருக்கு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன. ஆயுதங்கள் நிறைந்த சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டன. குண்டுவீச்சையொட்டி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிறன்று கெய்ரோவில் புனித மார்க் கதீட்ரலில் மோதல்கள் இருந்தன. அவற்றில் 45 பொலிசார் காயமுற்றனர். அரசாங்கப் பொருளாதார வளர்ச்சித்துறை மந்திரியான உஸ்மான் மகம்மது உஸ்மான் மீது கற்கள் வீசப்பட்டன.

எகிப்தின் கிறிஸ்துவ சமூகத்தின் மீது இன்று வரை நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் இக்குண்டுவீச்சு மிகத் தீவிரமானது ஆகும். மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதமிருக்கும் கோப்ட்டுக்கள் பெரும் பொருளாதார, சமூக, மத ரீதியிலான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர். இது பெரும்பாலும் மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பற்றி கொண்டுள்ள சீற்றத்தை குறும் பற்று பாதைகள் (sectarian lines) மீது திசைதிருப்பும் அதிகாரிகளுடைய முயற்சி ஆகும்.

எகிப்தின் தேவாலயங்கள் பெரிதும் பொலிசாரால் பாதுகாக்கப்பட்டு வருகையில், இத்தாக்குதல் எப்படி நிகழ்ந்தது என்ற சீற்றமான வினாக்கள் எழுந்துள்ளன. எகிப்தின் உள்துறை அமைச்சரகத்தின் கருத்துப்படி, இத்தாக்குதல் ஒரு கார்க் குண்டு அல்லது தற்கொலைக் குண்டுத்தாக்குதல்காரர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது எனக் கூறப்படுகிறது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிப் பொருட்களானது ஆணிகள் மற்றும் பந்துக் கோளங்களால் நிரப்பப்பட்டு தாக்குதலில் இறந்துவிட்ட குண்டுத் தாக்குதல் செய்தவரால் அணியப்பட்டிருந்தன. இதுவரை எவரும் இதற்குப் பொறுப்பை ஏற்கவில்லை.

அபூர்வமாக தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இத்தாக்குதலுக்குச்சர்வதேச பயங்கரவாதம்தான்காரணம் என்று குற்றம் சாட்டினார். “அயல்நாட்டினரின் செயல்கள் என்பதற்கான அனைத்து அடையாளங்களையும் இது கொண்டுள்ளது என்றார் அவர். இது அல் கெய்டாவுடன் தொடர்புடைய இஸ்லாமியப் போராளிகள் பற்றிய குறிப்பு ஆகும். அவர்கள் எகிப்தைச் சீர்குலைக்க முற்படுகின்றனர் என்பது பொதுக் கருத்து. ஆனால் எகிப்தில் அல் கெய்டாவிற்குக் கணிசமான பிரசன்னம் இல்லை என்று முபாரக் ஆட்சி பல முறை கூறிவருவதை இக்குற்றச்சாட்டு எதிரிடையாகக் கொள்ளுகிறது. நாட்டின் மீதான எத்தாக்குதல்களிலும் அதற்குத் தொடர்பு இருந்ததாக உறுதியாகக் காணப்படவில்லை.

அனைத்து எகிப்துமே இலக்குத்தான்என்று கூறிய முபாரக், “நாம் இதில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு பயங்கரவாதத்திற்கு முகங்கொடுத்து அதை எதிர்ப்போம்என்றார். கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் பொது விரோதிக்கு எதிராகஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள செய்தி ஊடகம் ஒரு உள்நாட்டுப் போர் வெடிக்கலாம் என்று எச்சரித்துள்ளது. அரசாங்க ஆதரவு நாளேடான Rose al-Youssel  “இந்நாடு வெடித்துச் சிதற வேண்டும் என எவரோ விரும்புகின்றனர்மத, உள்நாட்டுப் போர்களைத் தூண்டும் நோக்கத்தையுடைய சதி உள்ளது என்பதை நாம் உணரவேண்டும்என்று எழுதியுள்ளது.

அரபு லீக்கின் செயலாளரான ஜேனரல் அமர் மூசா, கோப்ட்டுக்களும் முஸ்லீம்களும்எகிப்தின் பாதுகாப்பு, உறுதிப்பாடு ஆகியவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கம் கொண்ட ஆபத்துக்களை எதிர்கொள்ளுவதற்கு தங்கள் முயற்சிகளில் இணைந்து செயலாற்ற வேண்டும்என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முஸ்லிம் தலைவர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.  அதே நேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான Muslim Brotherhood என்பது உலகில் எந்த மதமும் இத்தகைய குற்றத்தை மன்னிக்காது என்று கூறியுள்ளது.

தேவாலயத்திலிருந்து சீற்றத்துடன் வெளியேறிய வழிபாடு செய்தவர்கள் பொலிசாரோடு மோதினர். அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் அவர்களைக் காப்பாற்ற அதிகம் செய்யவில்லை என்றும் குறைகூறினர்.

இதற்கு அடுத்த நாள் ஆயிரக்கணக்கான மக்கள் பிரேத ஊர்வலங்களில் கலந்து கொண்டதுடன், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து இரங்கற் செய்திகளை ஏற்க மறுத்தனர். ஒரு தேவாலய அதிகாரி முபாரக்கிடமிருந்து வந்த இரங்கற் செய்தியைப் படிக்க முயன்றபோது, கூட்டத்தினர்வேண்டாம், வேண்டாம், வேண்டாம்என்று கூச்சலிட்டனர். கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன. எதிர்ப்பாளர்கள் அரசாங்க எதிர்ப்புக் கோஷங்களை முழங்கியதுடன் பொலிசாரை எள்ளி நகையாடினர். அவர்கள் மீது கற்களை வீசினர். “முபாரக்கே, கோப்ட்டுக்கள் இதயம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறதுஎன்று அவர்கள் கூவினர் பொலிசார் அதை விடையிறுக்கும் விதத்தில் கண்ணீர்ப் புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

அலெக்சாந்திரியாவின் ஆளுனர் அடெல் லபிப் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று பலர் கூறினர். குண்டுவீச்சின் மூலம் அல் கெய்டாவோடு நேரடியாக அவர் தொடர்புபடுத்தப்பட்டார். ஆனால் இந்தக் கூற்று பரந்த அளவில் நிராகரிக்கப்பட்டது. எதிர்ப்புக்கள் ஞாயிறன்று கெய்ரோவிலும் படர்ந்தன. நூற்றுக்கணக்கான இளம் கோப்ட்டுக்கள் பொலிசாருடன் சண்டையிட்டு பல மணி நேரம் மதில் போல் சுற்றி நின்ற பொலிஸ் பாதுகாப்புச் சுவருக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.

Orthodox Pope Shenouda வின் இருப்பிடமான St.Mark ல் எதிர்ப்பாளர்கள், “புரட்சி தேவை, எகிப்தில் புரட்சி தேவை, அனைத்து எகிப்து தேவாலயங்களிலும் புரட்சி வேண்டும்என்று கூக்குரலிட்டனர்.

1970ல் நாசர் இறந்தபின் இஸ்லாமிய அரசியல் வளர்ச்சிக்கு ஆட்சியில் ஊக்கம் கொடுத்ததால், அதையொட்டி குறுகியவாதப் பற்று விரிவடைந்துள்ளது. அப்பொழுதுதான் ஷரியா சட்டம் மறுபடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கோப்ட்டுக்களுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட தாக்குதல்கள் பற்றிய சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாதம் பொலிஸ் கலகமடக்கும் பிரிவிற்கும் கோப்ட்டுக்களுக்கும் இடையே மோதல்கள் ஒரு தேவாலயம் கட்டுதல் நிறுத்தப்பட்டவுடன் ஏற்பட்டது. பல ஆண்டுகள் பெருகிய முறையில் பழைய தேவாலயங்களைப் புதுப்பித்தல் அல்லது விரிவாக்குதல் அல்லது புதிய தேவாலயங்களைக் கட்டுதல் ஆகியவற்றிற்கு இடர்பாடுகள் அதிகமாகக் கொடுக்கப்பட்ட பின்னர்தான் தொடர்கின்றன. இம்மோதல்கள் குறுகியவாத பற்றுக்களை ஒட்டிய வன்முறையாக வெடித்தன. பல டஜன் முஸ்லிம்களும் மோதலில் இறங்கியபோது, இரு கிறிஸ்துவர்கள் இறந்து போயினர். கலகங்களைக் கண்காணிக்க வந்த பாதுகாப்புப் படையினரை கொலைசெய்ய முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 150க்கும் மேற்பட்ட கோப்ட்டுக்கள் கைது செய்யப்பட்டனர்.

தேர்தலுக்கு முன்னதாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் பல வாரங்களில் கெய்ரோ நடுப்பகுதியில் வெகுஜன முஸ்லீம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இவற்றிற்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்திருந்தனர். கோப்டிக் பாதிரிமார்களின் மனைவியராகிய Camillia Shehata, Wafa Constantine இருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவர்கள் விருப்பத்திற்கு எதிராக தேவாலயக் கூடங்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். அல் கெய்டாவுடன் தொடர்புடைய ஈராக்கியக் குழு ஒன்று பாக்தாத்தில் ஒரு தேவாலயத்தைத் தாக்கி அதில் 53 பேர் மடிந்த பின்னர், அக்குழு பெண்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் எகிப்தியக் கோப்ட்டுக்கள் மீது தாக்குதல் நடக்கும் என்று அச்சுறுத்தல் விடுத்தது.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஆறு கிறிஸ்துவர்களும் ஒரு முஸ்லிம் பொலிஸும் உயர் எகிப்தில் ஒரு தேவாலயத்திற்கு வெளியே கோப்டிக் கிறிஸ்துமஸுக்கு முன்னதாக காரில் சென்றவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதைச் செய்தவர் நன்கு அறியப்பட்டிருந்த ஒரு குற்றவாளி ஆவார். ஆனால் முபாரக்கின் ஆளும் குழுவுடன் தொடர்புடையவர்களால் பாதுகாப்பைப் பெற்றிருந்தார். கிறிஸ்துவர்களுடைய கடைகளையும் வீடுகளையும் முஸ்லீம்கள் சூறையாடியபோது பொலிசார் வாளாவிருந்தனர்.

ஏப்ரல் மாதம் Egyptial Initiative for Personal Rights வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 2008க்கும் 2009க்கும் இடையே மத வன்முறை அதிகரித்துள்ளதை உயர்த்திக்காட்டி தாக்குதல் நடத்துபவர்கள் மீது குற்ற விசாரணை வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

2009ம் ஆண்டு பன்றிக் காய்ச்சலுக்கு அரசாங்கத்தின் விடையிறுப்பு 300,000 பன்றிகளைக் கொலை செய்தது ஆகும். ஆனால் மனிதர்கள் பன்றி இறைச்சியை உட்கொள்ளுவதால் பன்றிக் காய்ச்சல் நோயைப் பெறமாட்டார்கள் என்ற சான்றுகள் இருந்தும் இவ்வாறு நடந்தது. கெய்ரோவில் மிக அதிகமாகப் பன்றிகளை வளர்க்கும் கோப்ட்டுக்கள் தங்கள் வாழ்வின் மீதான தாக்குதல் இது என்று கருதினார்கள். Zabaleen என்னும் குப்பை சேகரிப்பவர்கள்கெய்ரோவில் வீடுகளில் இருந்து குப்பைகளை அள்ளும் பெரும்பாலான கோப்ட்டுக்கள்அவற்றைப் பொதுவாகப் பிரித்து மறு உபயோகத்திற்கு பயன்படுத்துவர். பன்றிகளுக்கு காய்கறிச் சேதங்களை உணவாகப் அவர்கள் போடுவார்கள். பின்பு அவைகள் கொல்லப்பட்டு கெய்ரோவின் கடைகளிலும் உணவு விடுதிகளிலும் பன்றி இறைச்சியாக விற்கப்படும்.

முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி, உள்நாட்டில் மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளுகிறது. அவர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அனைத்து எதிர்ப்புக்களையும் அகற்றிவிடும் அவசரக்காலச் சட்டங்கள் மூலம் நாட்டை ஆண்டு வருகிறார். வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை சட்ட விரோதமானவை. செய்தி ஊடகம் தணிக்கைக்கு உட்படுகிறது. செய்தித்தாட்கள் தணிக்கை செய்யப்பட்டு வாடிக்கையாக மூடப்பட்டுவிடும். “ஆட்கள் மறைந்து போதல்”, விசாரணையின்றி காவலில் வைத்திருத்தல், பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் மற்றும் சித்திரவதை ஆகியவை வாடிக்கையாக நிகழ்பவை. சாதாரண உழைக்கும் மக்களை எதிர்கொள்ளும் நிலைமைகள் ஆழ்ந்த அதிருப்திதான் உள்ளது. எகிப்து மக்களில் 40 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் உத்தியோகப்பூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழே அல்லது அதையொட்டி வாழ்கின்றனர். வேலையின்மை மிகவும் அதிகமாகும். வசதியான வீடுகள் வாங்குவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. உணவுப் பொருட்களின் விலைகள் வானளாவாக உயர்ந்துள்ளன.

வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என்பவைகளால் கெய்ரோ நகர நடுப்பகுதியானது சமூக அமைதியின்மையின் பிடியில் எகிப்து தத்தளிக்கிறது. இதற்கு உத்தியோகபூர்வ அரசியல் வெளிப்பாடு ஏதும் இல்லை. நவம்பர் மாத இறுதியில் நடைபெற்ற தேர்தலில், அரசாங்கமானது Muslim Brotherhood அமைப்பிலிருந்து போட்டியிட்ட வேட்பாளர்களை அகற்றுவதற்கு அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதுதான் முக்கிய எதிர்க்கட்சி ஆகும், 2005 தேர்தல்களில் 20 சதவிகித தொகுதிகளை மற்ற கட்சிகளுடன் பெற்றது. தேர்தலில் வன்முறை, மோசடி, வாக்குச் சீட்டு தில்லுமுல்லுகள் அனைத்தும் இருந்தன.

எப்படிப் பார்த்தாலும், முபாரக்கின் புதிய ஜனநாயகக் கட்சிக்கு மன்றத்தில் 12 இடங்களைத் தவிர மற்றவை அனைத்தும் கிடைத்தன. மொத்த வாக்காளர்களில் 15 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தான் வாக்குப் பதிவிற்கு வந்திருந்தனர். ஏனெனில் இந்த முழு ஏமாற்றுத்தனத்திலும் அவர்கள் இகழ்வுற்றிருந்தனர். இதற்கும் மேலாக இவருக்கு அடுத்து எவர் பதவிக்கு வருவார் என்பதில் உறுதியற்ற தன்மையும் உட்பூசல்களும் உள்ளன. ஒரு வணிகரான தன்னுடைய மகன் கார்மல் முபாரக் பின்னர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்கு முபாரக் முயன்றாலும்கூட, பழைய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்திற்கு இதில் உடன்பாடு இல்லை. அவர்கள் முபாரக்கை வெறுமனே பெயரளவிற்குப் பதவியில் இருத்தி, நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் வசம்தான் கொண்டுள்ளனர்.

உள் பிளவுகளுக்கு எரியூட்டுவதுடன் கோப்டிக் தேவாலத்தின் மீது நடந்த குண்டுத் தாக்குதல் இப்பொழுது சர்வதேச அளவில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டத்தான் பயன்படுத்தப்படுகிறது.

புத்தாண்டு உரையை வெளியிட்ட போப் பெனிடிக்ட், “இத்தீய இறப்பு வழிவகை, ஈராக்கில் கிறிஸ்துவர்களுடைய வீடுகளுக்கு அருகே குண்டுக்களை வைத்தல் போன்றவை, அவர்களை நாட்டை விட்டு விலக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படுத்துபவை, இறைவனுக்கும் அனைத்து மனிதகுலத்திற்கும் ஒரு பெரும் தாக்குதல் ஆகும்.”

இத்தாலியின் வெளியுறவு மந்திரி பிராங்கோ பிராட்டனி ஐரோப்பிய ஒன்றியம்இந்த மதச் சகிப்புணர்வு அற்ற தன்மைக்கு எதிராக, எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பொறுத்துக் கொள்ளாத்தன்மைக்கு எதிராக விடையிறுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மனியில் ஆளும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகள் கட்சியின் துணைத் தலைவர் Annette Schavan உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியத் தலைவர்கள் மத வன்முறைக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் பாராளுமன்றப் பிரிவின் தலைவர் Stefan Mueller, கிறிஸ்துவர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா இல்லையா என்பதை ஒட்டி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில் பசுமைக் கட்சியின் பாராளுமன்ற மனித உரிமைகள் பற்றிய செய்தித் தொடர்பாளர் Volker Beck, “இத்தகைய தாக்குதல்களை வெறுமனே கண்டித்தால் மட்டும் போதாதுஎன்றார். ஜேர்மனியிலுள்ள முஸ்லிம்கள்தங்கள் வெறுப்பை உலகம் முழுவதும் நடப்பது போல், நன்கு, தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்என்று எதிர்பார்க்கிறார் என்று Deutsche Welle  மேற்கோளிட்டுள்ளது.