World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Mounting prospect of military intervention in Ivory Coast

ஐவரி கோஸ்ட்டில் இராணுவத் தலையீட்டிற்கான வாய்ப்பு பெருகுகிறது

By Ann Talbot
5 January 2011
Back to screen version

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் மீது இராணுவத் தலையீடு என்னும் தங்கள் அச்சுறுத்தல்களை சச்சரவிற்குட்பட்ட தேர்தல் முடிந்த நிலையில் முடுக்கிவிட்டுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி லாரென்ட் க்பாக்போவும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அலசானே ஔட்டராவும் நவம்பர் 2010ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறுகின்றனர். அமெரிக்கா, .நா., மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஔட்டராவின் கூற்றிற்கு ஆதரவு கொடுத்து  க்பாக்போ விலக வேண்டும் என்று கோரியுள்ளன. அண்மையிலுள்ள மேற்கு ஆபிரிக்க அரசுகள் ECOWAS என்னும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகம் என்ற அமைப்பில் இருப்பவைகள் அவர் மறுத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அச்சுறுத்தியுள்ளன.

ஒபாமா நிர்வாகம் அதன் தூதரக அதிகாரிகளை அகற்றிக் கொள்ளுவதற்குத் தயாரிப்புக்களை செய்து வருகிறது. இது ஆயுதத் தலையீட்டிற்கு ஒரு முன்னுரை என்றுதான் விளக்கம் காணப்பட முடியும். அதிக முக்கியத்துவம் இல்லாத அதிகாரிகள் ஏற்கனவே நாட்டை விட்டு அகன்றுவிட்டனர். நிர்வாகம் இப்பொழுது லைபீரியாவில் தலையிட்டது போன்ற தலையீட்டிற்குத் தயாரிப்பைக் கொண்டுள்ளது என்பது ஒதுக்க முடியாத கருத்து ஆகும். அங்கு 2003ம் ஆண்டு அமெரிக்கத் தூதரக அலுவலர்களை மீட்பது என்னும் போலிக்காரணம் கூறப்பட்டு மரைன்கள் அனுப்பப்பட்டனர். இது மேற்கு ஆபிரிக்க அரசுகள் தலையீடு செய்வதற்கு முன்னோடியாக அமைந்தது. அமெரிக்க இராணுவப் படையினர் இன்னும் லைபீரியாவில் ஆலோசகர்களாக உள்ளனர்.

மற்றொரு ஆத்திரமூட்டும் தன்மையாக Hotel du Golf  உள்ளது. இங்கு ஔட்டராவும் அவருடைய போட்டி அரசாங்கமும் பிரெஞ்சு மற்றும் ஐ.நா. துருப்புக்களின் பாதுகாப்பின் கீழ் தளம் கொண்டுள்ளன. .நா.பிரதிநிதி ஒய்.ஜே.ஷோய் துருப்புக்கள் நடவடிக்கைக்குத் தயார் என்பதைத் தெளிவுபடுத்தினார். “அவர்களால் ஒருவேளை கோல்ப் ஓட்டலைக் கைப்பற்ற முடியாமல் போகலாம். நாங்கள் நிறைய ஆயுதங்களைக் கொண்டு, தயாரிப்புக்களையும் மேற்கொண்டுள்ளோம். அவர்கள் தோற்கடிக்கப்படுவர், அவர்கள் விரட்டி அடிக்கப்படுவர். இதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.

க்பாக்போவின் ஆட்சிக்கு எச்சரிக்கையும் ஷோய் கொடுத்தார். அந்த ஆட்சியோ இளைஞர்களை ஐ.நா. நிலைப்பாட்டிற்கு எதிராகத் திரட்ட இருப்பதாக அச்சுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்தால்  பெரும் வெடிப்புத் தன்மைதான் ஏற்படும் என்றார்.

ஜனாதிபதி ஒபாமா, நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோனதனுடன் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடல் செய்தார். அமெரிக்கப் பயிற்சி பெற்ற நைஜீரியத் துருப்புக்கள் மேற்கு ஆபிரிக்கப்  படைகளுக்கு முதுகெலும்பு போல் அமையும்.

ஐவரி கோஸ்ட்டின் மீது படையெடுப்பு என்பது ECOWAS  உடைய இராணுவப் பிரிவாக இருக்கும் ECOMOG க்கு பெரும் விழைவுடைய முயற்சியாக இருக்கும். ஒபாமாவிடம் இருந்து பச்சை விளக்கு வந்திராவிடின், மேற்கு ஆபிரிக்க அரசுகள் இந்த அச்சுறுத்தலை விடுப்பது இயலாத செயலாகும்.

கிழக்கு ஆபிரிக்காவில் கென்யா நாட்டின் பிரதம மந்திரியான ரைலா ஒடிங்கா க்பாக்போவை விரட்டும் பணியில் ஆபிரிக்க ஒன்றியத்தின் சார்பில் நடக்கும் முயற்சிகளில் இணைந்துள்ளார். அவர் ECOWAS உடைய தலைவர்களை, அவர்களுடன் ஐவரி கோஸ்ட்டிற்குச் செல்லுமுன் நைஜீரியாவில் சந்தித்தார். அமெரிக்க ஆதரவுடைய இராணுவத் தலையீடு முறையாக நடக்கவுள்ளது என்பதற்கு அவருடைய வருகை தூதரக வகையில் மற்றொரு அடையாளம் ஆகும். மேலும் ஆபிரிக்கப் பிரிச்சினை ஒன்றிற்கு ஒரு ஆபிரிக்கத் தீர்வு காணப்படுகிறது என்பது போல் கவனமாக இது நடத்தப்படுகிறது.

ஆனால் உண்மை முற்றிலும் மாறானது. ஐவரி கோஸ்ட்டில் தற்பொழுதுள்ள நிலைமை அமெரிக்கக் கொள்கை மற்றும் இப்பகுதியின் மீது நீண்ட கால காலனித்துவ ஆதிக்க வரலாறு ஆகியவற்றின் விளைவு ஆகும். பல இன மதக் குழுக்களிடையே பிரெஞ்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்த ஆழ்ந்த சமூகப் பிளவுகள், மற்றும் செல்வந்தர்களான ஆபிரிக்கர்களுக்கும், 1945 வரை அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கட்டாயத் தொழில் செய்யுமாறு வற்புறுத்தப்பட்ட  சாதாரண மக்களுக்கும் இடையே ஏற்படுத்திய பிளவுகள், இப்பொழுதைய அரசியல் மோதல்களில் பலமுறை வெளிப்பாடுகளைக் காண்கின்றன. இவ்மோதல்கள் இப்பிராந்தியத்தின் பொருளாதாரத்திற்கு தங்கியிருக்கும் தன்மையினால் அதிகமாகியுள்ளன.

இறுதியில், இப்பிராந்தியத்தில் பொருளாதாரப் பிற்போக்குத்தனம் பல நூற்றாண்டுகள் நிலவிய அடிமை வியாபாரத்தில் வேரூன்றியிருப்பதைப் பார்க்க முடியும். அதுதான் மில்லியன் கணக்கான ஆபிரிக்கர்களை அட்லான்டிக் கடந்து குடியேற வைத்தது. அடிமை வணிகத்தைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்காவில் நேரடி ஐரோப்பிய மேலாதிக்கம் வந்தது. அதன்பின் போட்டியில் ஈடுபட்ட ஆங்கில, பிரெஞ்சு மற்றும்  ஜேர்மனியப் பேரரசுகளை நிறுபவர்களால் உள்ளூர் அரசியல் அமைப்புக்கள் தகர்க்கப்பட்டன. அரை நூற்றாண்டிற்கும் மேலாக, மேற்கு ஆபிரிக்கா காலனித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது, பாம் எண்ணெய், நிலக்கடலை வகைகள், காபி, கோகோ போன்ற மூலப்பொருட்களுக்கு ஆதாரமாகவும் இருந்தது.

பிரெஞ்சு மேற்கு ஆபிரிக்காவின் மிக செழுமை வாய்ந்த பகுதியாக ஐவரி கோஸ்ட் இருந்தது. காலனி 1960ல் சுதந்திரம் அடைந்தபின் பிரிவினைக்கு உட்பட்டபோது, மௌரிடானியா, மாலி, கினியா, பர்க்கினா பாசோ, பெனின் மற்றும் நைஜர் போன்ற சிதைவுற்ற நாடுகள் வெளிப்பட்டன. ஆனால் தங்கள் பொருளாதாரங்களைக் கட்டமைப்பதற்குத் தேவையான மிக அடிப்படையான உள்கட்டுமானங்களையும் பாதுகாப்பான வருவாயையும் இவை பெற்றிருக்கவில்லை. இப்பகுதிகளில் இரண்டாவது பெரும் செழிப்பு நிறைந்த செனகல் கூடநிலக்கடலையைப் பெரிதும் நம்பி உயர்ந்திருந்ததுபிரெஞ்சு உதவித் தொகைகளைத்தான் அதிகம் நம்பியிருந்தது. ஐவரி கோஸ்ட்டின் உயரடுக்கினருக்கு இப்பிளவுகள் நலனைக் கொடுத்தன. ஏனெனில் அவை அவர்களுக்கு கோகோ மற்றும் காபி வருமானங்களில் ஒரு பங்கைக் கொடுத்தன. அதுதான் சுதந்திரத்திற்கு முன்பு பிரெஞ்சு மேற்கு ஆபிரிக்க நிர்வாகத்தை நிலை நிறுத்தியிருந்தது. மற்றவர்களைப் பொறுத்தவரை பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா துண்டாடப்பட்டது பொருளாதாரப் பேரழிவைக் கொடுத்து, தொடர்ந்து அவை பிரான்ஸை நம்பியிருக்க வேண்டிய நிலையைத் தொடர வைத்தது.

பிரான்ஸின் கீழ் ஐவரி கோஸ்ட் அதன் முதல் ஜனாதிபதி Felix Houphout-Boigny ன் கீழ் நெருக்கமாக ஒருங்கிணைந்திருந்தது. அதையொட்டி முன்னாள் காலனித்துவ பகுதிகளில் தன் முக்கிய பங்கைத் தக்க வைத்துக் கொண்டது. ஏராளமான பிரெஞ்சு மக்கள் வசித்து வந்தது, உண்மையில் சுதந்திரத்திற்குப் பின்னர் அதிகமாயிற்று. பிரெஞ்சு நிறுவனங்கள் ஐவரி கோஸ்ட்டில் முதலீடு செய்தன. ஏனெனில் அவற்றிற்கு வரிச்சலுகைகள் கிடைத்தன, மற்றும் தங்கள் இலாபங்களைத் தாய்நாட்டிற்கு அனுப்ப முடிந்தது. அரசின் அனைத்து மட்டங்களிலும் பிரெஞ்சு ஆலோசகர்கள் செயல்பட்டனர். பள்ளிகளில் பிரெஞ்சு ஆசிரியர்கள் நிறைந்திருந்தனர். ஐவரியப் பொருளாதார அதிசயம் என்று பல நேரமும் விவரிக்கப்பட்டது சராசரி 7 சதவிகித ஆண்டு வளர்ச்சியைத் தோற்றுவித்தது.

இந்த அதிசம் திடீரென 1980ல் முடிவிற்கு வந்தது. அப்பொழுது பொருட்களில் விலைகள் சரிந்து ஐவரி கோஸ்ட்டிற்கு பெரும் வணிகப் பற்றாக்குறையும் பெருகிய கடன்களும் ஏற்பட்டன. 1987ஐ ஒட்டி ஐவரி கோஸ்ட் திவாலாயிற்று. Houphout-Boigny சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தி அனைத்து எதிர்ப்புக்களையும் அடக்கினார்.

இப்பின்னணியில்தான் லாரென்ட் க்பாக்போ முன்னிலைக்கு வந்தார். ஆசிரியர்களின் எதிர்ப்புக்கள் தொழிலாளர்களின் மற்ற பிரிவினருக்கு ஒரு குவிப்பாயிற்று, அனைவரும் சிக்கன நடவடிக்கைகளினால்  தாக்கப்பட்டிருந்தனர். பிரெஞ்சுக் கல்வி பயின்ற வரலாற்றுப் பேராசிரியரான க்பாக்போவின் Natioanl Trade Union of Research and Higher Education ல் பெற்ற அனுபவம் மற்றும் சிறைத் தண்டனைக்கால அனுபவம், ஆகியவை அவருக்கு ஐவரிய மக்கள் முன்னணியில் உயர் சான்றுகளைஅளித்து ஐவரிய மக்கள் முன்னணியைக் கட்டமைக்க உதவின. 2000ம் ஆண்டில் அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று முந்தைய ஆண்டு இராணுவ ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரத்தை எடுத்திருந்த ஜெனரல் ரோபர்த் குயிக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தினார்.

பிரெஞ்சுப் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் தேர்தலில் நடந்த முறைகேடுகளைப் புறக்கணித்தார்: இவைசிறப்புச் சூழ்நிலையில் நடந்தன என்று அவர் கூறினார். மற்ற அனைத்து எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் ஔட்டாரா உட்பட தேர்தலில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த போதிலும்கூட, பிரான்ஸ் க்பாக்போவை ஜனாதிபதியாக அங்கீகரித்தது. இப்பொழுது க்பாக்வோ அவருடைய எதிர்ப்பாளர்கள் மிரட்டுவதற்கு வன்முறை வழிவகைகள், “கொலை குழு ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்காகக் குறைகூறப்படுகிறார். ஆனால் இதே வழிவகைகளைத்தான் அவர் கடந்த காலத்திலும் அவர் பிரான்ஸிடம் நெருக்கமாக இருந்தபோதும் கடைபிடித்தார். அவர்கள் Houphout- Boigny ஐ எதிர்ப்பதற்கு இவர் ஏற்றவர் என்று கண்டு மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் உகந்தவர் என்று கருதினர்.

பொருளாதாரம் தொடர்ந்து சரிகையில், க்பாக்போ Houphout-Boigny ஐ அதிகாரத்தில் தக்க வைத்திருந்த அரசியல் புரவலர் முறையைத் தக்க வைத்துக் கொள்ள போதுமான பொருளாதார இருப்புக்களைக் கொண்டிருக்கவில்லை. மாறாக அவர் வகுப்புவாத அழுத்தங்களைத் தூண்டுவதிலும், பிளவுகளைப் பயன்படுத்துவதிலும் முனைகிறார். இவை முக்கியமாக நாட்டின் தெற்கேயுள்ள கிறிஸ்துவர்களுக்கும் வடக்கே முக்கியமாக இருக்கும் முஸ்லிமக்களுக்கும் இடையே உள்ளவை ஆகும்.

இப்பிளவு பிரெஞ்சு காலனித்துவவாதம், மற்றும் பிராந்தியத்திலுள்ள மாறுபட்ட பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் மரபாகும். ஐவரி கோஸ்ட் ஏற்றம் பெற்றிருந்த காலத்தில், மற்ற முன்னாள் பிரெஞ்சுப் பகுதிகளிலிருந்து கோக்கோ பண்ணைகளுக்கு காலனித்துவ தொழிலாளர்கள் வந்திருந்தனர், குறிப்பாக Burkina Faso வில் இருந்து. அதுதான் வடக்கே நிலம் சூழப்பட்ட பகுதியில் உள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த தலா நபர் மொத்த உள்நாட்டு உற்பத்திகள் இருக்கும் நாடுகளில் Burkina Faso ஒன்றாகும். அது பெரிதும் உதவி நிதிகளைத்தான் நம்பியுள்ளது.

க்பாக்போ பர்கினபேக்கு எதிராள இனவெறியைத் தூண்டி ஐவரியத் தேசியவாதக் கருத்தையும் வளர்த்தார். தன் போட்டியாளர்களை அரசியல் அதிகாரத்திலிருந்து அவர் ஒதுக்க முயன்று ஔட்டாரா ஒரு பர்கினபேக்காரர், உண்மையான ஐவரியர் அல்லர் என்றார். 2002 ஐ ஒட்டி இவ்மோதல்கள் ஒரு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. அதையொட்டி நாடு பிளவுற்றுள்ளது.

ஐவரி கோஸ்ட்டில் நடக்கும் மோதல்களில் தன்னை ஒரு நடுநிலை நடுவர் என்று பிரான்ஸ் காட்டிக் கொள்கிறது. ஆனால் அப்பகுதி பற்றிய பொது நிலை ஆய்வு பிரான்ஸ் தான் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், அவ்மோதல்களுக்கு எல்லாம் காரணம் என்று காட்டுகிறது.

முதலில் பிரான்ஸ் Houphout-Boigny ஐயும் பின்னர் க்பாக்போவையும் ஆதரித்தது. இப்பொழுது அது ஔட்டாராவிற்குத் தன் ஆதரவைக்  காட்ட முற்படுகிறது. இது கொள்கையில் ஓரளவு மாற்றம் என்பதைப் பிரதிபலிக்கிறது. பிரெஞ்சு அரசியல் உயரடுக்கு ஆப்பிரிக்காவில் அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமாக உழைக்கத் தயார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.

மேற்கு ஆபிரிக்கா பெருகிய முறையில் அமெரிக்காவிற்கு எரிசக்திக்கான ஆதாரமாக உள்ளது. தற்பொழுது அமெரிக்க எண்ணெய் இறக்குமதிகளில் ஐந்தாவது பெரிய இடத்தில் நைஜீரியா உள்ளது. அங்கோலா ஏழாவது இடத்திலும், காபோன் 15ம் இடத்திலும் உள்ளன. ஆனால் தற்பொழுது கடலுக்கு அருகே புதிய கண்டுபிடிப்புக்கள் கானாவிற்கு அருகே உள்ளன. அதேபோல் மேற்கு ஆபிரிக்கக் கடலோரப் பகுதிகளிலும் இதுவரை எடுக்கப்படாத எண்ணெய் இருப்புக்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இப்பகுதி முழுவதிலும் கட்டுப்பாடு கொள்ளுதல் என்பது அமெரிக்காவிற்கு ஒரு மூலோபாயச் சிந்தனையாகியுள்ளது. மேற்கு ஆபிரிக்கா அரசுகள் ஒவ்வொன்றிலும் சொல்வதற்கு உடன்படும், நம்பகத் தன்மை உடைய அரசாங்கங்களை நிறுவுதல் இப்பொழுது வாஷிங்டனுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஒரு முன்னுரிமை ஆகிவிட்டது.

சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவையும் தங்கள் நிலைப்பாட்டை ஆப்பிரிக்காவில் கொள்ள முயல்வதால், ஐரோப்பாவும் அமெரிக்காவும் பெருகிய முறையில் ஒன்றாக வந்து தங்கள் நீண்ட கால நலன்களைக் கண்டத்தில் நிலைத்திருக்கச் செய்யவும் உலகப் பொருளாதாரத்தில் மிக அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுவரும் இயற்கை இருப்புக்களுக்கு உரிமை கோருகின்றன. ஐவரி கோஸ்ட்டின் சுத்திகரிப்புச் செய்யப்படாத எண்ணெய் உற்பத்தி இந்த தசாப்தத்தின் இறுதியில் நாள் ஒன்றிற்கு 200,000 பீப்பாய்கள் என ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர, அந்நாட்டில் நிலப்பகுதியில் தாதுப்பொருட்கள் உள்ளன என்பதோடு உலகின் மிக அதிக கோக்கோ உற்பத்தி செய்யும் நாடாகவும் இது உள்ளது.

பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் ஒருகாலத்தில் தீவிரப் போட்டிக்களமாக இருந்த பகுதி இப்பொழுது இரு முன்னாள் காலனித்துவ சக்திகளும் ஒற்றுமையில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறது. ஐவரி கோஸ்ட்டில் பிரெஞ்சுப் படைகளுடன் செயலாற்ற பிரிட்டன் ஒரு இராணுவ ஒத்துழைப்பு அதிகாரியை அனுப்பியுள்ளது. 2000த்தில் சிரா லியோனில் தன்னுடைய இராணுவத் தலையீட்டையும் அது நடத்தியது. அப்பொழுதும் ECOMOG பங்கு பெறுமாறு செய்யப்பட்டது.

பிரான்ஸ் தன்னுடைய முன்னாள் காலனியில் 2002லும் பின்னர் 2004லும் தலையிட்டு, ஐவரிய விமானப் படை முழுவதையும் அழித்து அபிட்ஜானில்  எதிர்ப்பாளர் கூட்டத்தில் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ஆபத்தான கையெறி குண்டுகளையும் வீசியது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இரண்டுமே இந்த நவ காலனித்துவ மிருகத்தனம் காட்டப்பட்டதற்கு ஆதரவைத் தெரிவித்தன. அதேபோல் ஐ.நா.வும் ஆதரவு கொடுத்தது. அக்காலக்கட்டத்தில் ECOMOG தலையீடு செய்வதற்குத் தயங்கியது. இப்பொழுது அது தலையிடத் தயாராக இருப்பது வாஷிங்டனிலிருந்து வந்துள்ள அழுத்தத்தைக் காட்டுகிறது. மற்றும் ஐவரி கோஸ்ட் மீது கட்டுப்பாட்டைக் கொள்ள பொது உறுதி அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளிடையே இருப்பதையும் காட்டுகிறது.

மேற்கு ஆபிரிக்காவில் பலமுறையும் தலையீடுகள் நடப்பது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானின் மீது நடத்தப்பட்ட படையெடுப்புக்களைப் போல் காலனித்துவ விரிவாக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளதைத்தான் பிரதிபலிக்கின்றன. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் செயற்பட்டியல் அந்நாடுகளில் எந்த அளவிற்கு மனிதாபிமானத்தைக் கொண்டிருந்தனவோ அதேபோல்தான் மேற்கு ஆபிரிக்காவிலும் உள்ளது. இது மூலோபாய நலனுக்காக இருப்புக்களையும் நிலைப்பாடுகளையும் கைப்பற்றும் முயற்சியைப் பிரதிபலிக்கிறது.

ஔட்டாரா ஒன்றும் க்பாக்போவிற்கு ஒரு ஜனநாயக ரீதியான மாற்றீடு அல்ல. அவர் பல ஆண்டுகள் Houphout-Boigny ன் கீழ் பிரதமராக பணியாற்றியுள்ளார். பெரும்பாலான மக்களுடைய இழப்பில் ஐவரி கோஸ்ட்டின் செல்வத்தின் மூலம் பலன் அடைந்த அரசியல் உயரடுக்கின் ஒரு பகுதி ஆவார்.

இவருடைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குனர் என்ற பின்னணி அவரை அமெரிக்கா மற்றும் அதன் மேற்கு ஆபிரிக்க நட்பு நாடுகளின் நலன்களைப் பிரதிபலிக்க நம்பகமான நபர் என்று ஆக்குகிறது. ஜனாதிபதி என்னும் முறையில் அவர் தனியார்மயமாக்கலைச் செயல்படுத்துவதுடன் சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சமூகநல வெட்டுக்களையும் செயல்படுத்துவார்.