World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Arm Pakistani workers with a revolutionary socialist program

Build the Pakistani section of the International Committee of the Fourth International!

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!


Statement of Marxist Voice
4 January 2011

Back to screen version

பகுதி 2

பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்கள்

பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்களில் இருந்து, இரண்டு அச்சாணியான தீர்மானங்கள் எழுகின்றன:

முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுமே பாகிஸ்தானின் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிரானதாகதாகவும் மற்றும் இயல்பாகவே திறனற்றவையாகவும் உள்ளன.

பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கம் ஒரு வலிமை வாய்ந்த சமூக சக்தியாகத் திகழ்வதோடு பெரும் போர்க்குணத்தையும் சுய-தியாக சாத்தியத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் தொழிற்சங்கங்களாலும் கட்சிகளாலும் (ஸ்ராலினிச பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) மற்றும் மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட அதன் வாரிசுகள், அத்துடன் மிகச் சமீபமாய் பல்வேறு போலி-ட்ரொட்ஸ்கிசக் குழுக்களும்) பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளுடனும் அரசியலுடனும் கட்டப்பட்டு இது திரும்பத் திரும்ப அரசியல்ரீதியாக தடம்புரளச் செய்யப்பட்டிருக்கிறது. 

பாகிஸ்தான் இருப்பின் முதல் தசாப்தம் (1958ல் முற்றுமுதலான இராணுவ ஆட்சிக்குத் திரும்பும் முன்னதாக) பாகிஸ்தான் கோரியான பரப்புரையில் முன்நின்ற வடக்கு மற்றும் வடமேற்கு தெற்காசியாவின் முஸ்லீம் முதலாளிகள், ஜமீன்தார்கள் மற்றும் அரசியல்வாதிகள் புதிய அரசில் தங்களுக்கு ஒரு சிறப்புரிமை பெற்ற அரசியல் நிலையை உறுதிசெய்யக் கூடிய அத்துடன் மக்களில் பெரும்பான்மையோரின் விருப்பத்தை முறியடிக்கக் கூடிய ஒரு அரசியல்-சட்ட அமைப்புமுறையைக் கட்ட முயன்ற செயல்முறை மேலோங்கியதாக இருந்தது. மக்களில் பத்து சதவீதத்திற்கும் குறைவானோர் பேசக் கூடிய உருது, நாட்டின் ஒரே தேசிய மொழியாகத் திணிக்கப்பட்டது, அதே சமயத்தில் பாகிஸ்தானில் பெரும்பான்மை மக்களாலும் கிழக்கு பாகிஸ்தானின் ஏறக்குறைய ஒட்டுமொத்த மக்களாலும் பேசப்பட்ட பெங்காளி மொழிக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து மறுக்கப்பட்டது. இதேபோல் கிழக்கு பாகிஸ்தானுக்கு அரசாங்க செலவினம் மற்றும் அபிவிருத்தி நிதிகளில் அதன் பங்கை நெருங்கும் எதுவும் மறுக்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் மாணவர்கள் இதனை எதிர்த்தபோது, அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. போராட்டங்கள் பெருகுவதும் அரசு ஒடுக்குமுறை அதிகரிப்பதுமான ஒரு சுழற்சிக்கு இது துவக்கமளித்து இறுதியில் 1971ல் ஒரு மிருகத்தனமான இராணுவத் தாக்குதலில் முடிந்தது. நூறாயிரக்கணக்கான பெங்காளிகள் இதில் கொல்லப்பட்டதோடு பங்களாதேஷ் வெற்றிகரமாக உடைத்துக் கொண்டு போனது. 

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதானது ஏகாதிபத்தியத்துக்கு கீழ்ப்படிந்து ஒத்துழைப்புக்கு செல்வதற்கு பாகிஸ்தானிய முதலாளித்துவம் வக்காலத்து வாங்கியதுடன் கைகோர்த்து வந்தது. பாகிஸ்தான் ஸ்தாபிக்கப்பட்ட அடுத்த கணமே அதன் ஆட்சியாளர்கள் அதனை ஏகாதிபத்தியத்தின் ஒரு பாதுகாப்பு அரணாக ஊக்குவிப்பதற்குத் தொடங்கினர். ஆசியாவில் பிரிட்டனுக்கான பிரதிநிதித்துவ அரண் அரசாகத் தொடங்கி அந்த பாத்திரத்தை ஏற்பதற்கு பிரிட்டன் மிகப் பலவீனமாய் இருந்ததைக் கண்ட சமயத்தில் அமெரிக்காவுக்கு அந்த பாத்திரத்தை ஆற்றியது.  

1954 அமெரிக்க-பாகிஸ்தான் பரஸ்பர பாதுகாப்பு உதவி ஒப்பந்தம், மற்றும் SEATO மற்றும் CENTO ஆகியவற்றில் புனிதப்படுத்தப்பட்டதான அமெரிக்க பாகிஸ்தான் கூட்டணியானது இந்தியாவுடனான பாகிஸ்தான் உயரடுக்கின் பிற்போக்குத்தனமான புவி அரசியல் போட்டியை ஊக்குவித்ததோடு இராணுவம் மிகச் சக்திவாய்ந்த அரசு ஸ்தாபனமாகவும் அரசியல் ஆசைகள் பெருகிய ஒன்றாகவும் எழுவதற்கும் வழிவகை செய்தது. ஆளும் உயரடுக்கிற்குள்ளாக கன்னை மோதல்கள் ஆழமுற்று அதே சமயத்தில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் போராட்ட அலை பெருகிய நிலைமைகளின் கீழ், இராணுவமானது முதன்முதலில் அயூப் கானின் கீழ் 1958ல் அதிகாரத்தைப் பிடித்தது.

ஆரம்பந்தொட்டே ஸ்ராலினிஸ்டுகள், பிரிவினையால் திணிக்கப்பட்ட முதலாளித்துவ தேசிய-அரசுக் கட்டமைப்பின் அங்கீகாரத்தை ஒப்புக் கொண்டனர். அடிப்படை மனித உரிமைகளைத் தாங்கிப் பிடிப்பதற்கும், நிலச் சீர்திருத்தத்தை நிறுவுவதற்கும் அல்லது வெகுஜனங்களின் மற்ற ஜனநாயக மற்றும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் முடியாமல் பாகிஸ்தானின் நெருக்கடி-மிகுந்த அரசாங்கம் தோற்றதானது, ஸ்ராலினிஸ்டுகளை பொறுத்தவரை, முற்போக்கான முதலாளித்துவம் என்று அழைக்கப்படுகின்ற ஒன்றுடன் கூட்டணி வைப்பதற்கான அவசியத்தை நியாயப்படுத்தும் ஒரு புதிய வாதமாக ஆனது. பிற்போக்குத்தனமான ஒரே-அலகு மேற்குப் பாகிஸ்தான் திட்டத்தை எதிர்க்கின்றதான பேரில், ஸ்ராலினிஸ்டுகள் தேசிய அவாமி கட்சி (NAP) போன்ற உருவாக்கங்களின் ஊடாக பிராந்திய முதலாளித்துவ உயரடுக்குகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த வர்க்க-ஒத்துழைப்புக் கூட்டணிகளை மேம்பட்ட வகையில் பின்பற்றுவதற்கு வசதியாக, 1968ல் CPP தன்னை மேற்கு பாகிஸ்தானுக்கான ஒன்றாகவும் கிழக்குப் பாகிஸ்தானுக்கான ஒன்றாகவும் இரண்டாய் பிரித்துக் கொண்டது. பொருளாதார வளர்ச்சியின் (இதன் நன்மைகள் ஏறக்குறைய முழுக்க முழுக்க ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கிற்கும் மற்றும் அயூப் கானின் கூட்டத்திற்கும் மட்டுமே பாய்ந்திருந்தது) ஒரு காலகட்டத்திற்குப் பிந்தைய 1968-69ல், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தாக்குதல் பெருகி வந்த நிலைமைகளின் கீழ், பாகிஸ்தான் தொழிலாளர்கள் அரங்கிற்கு வந்தனர். மாணவர்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான மோதல் தொழிலாள வர்க்கத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலைநிறுத்தங்களுக்குமான வினையூக்கியாக அமைந்தது. ஆயினும் தொழிலாள வர்க்கத்தின் அதிகாரமும் போர்க்குணமும் பெருகுவதன் மீதான அச்சம் தான் இறுதியாக இராணுவமே வெறுப்பைச் சம்பாதித்திருந்த அயூப் கானை நீக்குவதற்கும் இராணுவச் சட்டத்தை திணிப்பதற்கும் இட்டுச் சென்றது, அப்போது நாட்டின் முதன்முதல் தேசியத் தேர்தலை நடத்துவதற்கும் வாக்குறுதியளிக்கப்பட்டது.

சுல்பிகர் அலி பூட்டோவும் (இவர் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். அயூப் கான் அமைச்சரவையில் அதிருப்தியுடன் இருந்த மந்திரிசபை அமைச்சர்) புதிதாக நிறுவப்பட்ட அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியும் மேற்கு பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கான எதிர்ப்பு அணியின் தலைமையாக எழ முடிந்தது என்றால் அதன் காரணம், இடதின் பக்கம் உருவாகியிருந்த அரசியல் வெற்றிடத்தை அவர்களால் சுரண்ட முடிந்ததே ஆகும். பல்வேறு ஸ்ராலினியக் கட்சிகளும் ஒரு வடிவத்தில் அல்லது வேறொரு வடிவத்தில் ஆட்சியின் மோசடியான அரசியல் கட்டமைப்புகளுக்குள் மூழ்கியிருந்தன. மாவோயிஸ்டுகளைப் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தான் கோழைத்தனம் மிகுந்தவர்களாய் இருந்தனர். தலைவர் மாவோவின் கீழிருந்த சீன ஸ்ராலினிச ஆட்சியிடம் இருந்து தங்கள் குறிப்பைப் பெற்றுக் கொண்டு. இவர்கள் அயூப்கானை, பாகிஸ்தானின் முதலாளித்துவ தொழிற்மயமாக்கத்தை அவர் முன்மொழிந்ததையும் பெய்ஜிங்கின் ஒரு இராஜதந்திரக் கூட்டாளியாக இருந்ததையும் காரணமாய்க் கொண்டு, ஒரு முற்போக்கான எதேச்சாதிகாரியாகப் பிரகடனம் செய்தனர்.  

பாகிஸ்தான் மக்கள் கட்சி தனது பிறப்பிலேயே ஒரு முதலாளித்துவக் கட்சி ஆகும். தேசிய முதலாளித்துவ அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் ஒன்றிற்கு வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கும் அதே அளவு முக்கியமாய் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து விடாமல் தடுப்பதற்கும் சோசலிசப்பட்டதாய் ஒலித்த ஜனரஞ்சகமான வாய் ஜாலத்தை அது பயன்படுத்தியது. தீவிரப்பட்ட பாகிஸ்தானிய-தேசியவாதத் தன்மை கொண்டிருந்த இது இஸ்லாமிய சோசலிசத்தை பரிந்துரைத்தது. மதரீதியான-வகுப்புவாதரீதியான தேசியவாதப்பட்ட இந்த சித்தாந்தம் தொழிற்துறைப் பிரிவுகளின் தேசியமயமாக்கம் உள்ளிட்ட தொடர்ச்சியான சில சீர்திருத்தங்களுடன் சேர்ந்து முதலாளித்துவ அபிவிருத்திக்கான அரசு தலைமையிலான வேலைத்திட்டம் ஒன்றிற்கு (இந்தியாவில் காங்கிரஸ் கட்சியினாலும் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் பல பிற புதிய சுயாதீனமான முதலாளித்துவ ஆட்சிகளாலும் பின்பற்றப்பட்டதை ஒத்த ஒன்று) முட்டுக் கொடுப்பதாய் இருந்தது. உடனடியாக பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் தகவமைத்துக் கொண்ட ஸ்ராலினிஸ்டுகள், சமூக முன்னேற்றத்திற்கான ஒரு உகந்த சாதனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது கூறிக் கொள்வதை ஊக்குவித்தனர். பெரிய பிரிவுகள் (குறிப்பாக தேசிய மாணவர் கூட்டமைப்பு போன்ற பெய்ஜிங் ஆதரவுக் குழுக்கள்) பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணைவதற்கும் அதனைக் கட்டுவதற்கும் தொழிலாளர்களுக்கும் மற்ற சோசலிச-சிந்தனையுள்ள கூறுகளுக்கும் பகிரங்கமாய் அழைப்பு விடுத்தன.

பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கம் செலுத்தும் கன்னைக்கு தனது எதிர்ப்பின் வரம்புகளை பூட்டோ ஏறக்குறைய உதயமான காலத்தில் இருந்தே தெளிவாக்கி விட்டார். ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான வங்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ எதிர்ப்பை எதிர்ப்பதில் பாகிஸ்தான் இராணுவத்துடனும் அரசு அதிகாரத்துவத்துடனும் அவர் ஒத்துழைத்தார். வங்க மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுபயங்கர இராணுவ அடக்குமுறைக்கு ஆதரவளித்ததும் இதில் அடங்கும். 1971 இந்திய பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் ஒரு பெரும் அவமானகரமான தோல்வியைச் சந்தித்து கிழக்கு பாகிஸ்தான்/பங்களாதேஷை இழந்ததற்குப் பின், 1971 டிசம்பரில் பூட்டோ ஜனாதிபதி பதவிக்குள் திணிக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அரசாங்கம் குறிப்பாக கராச்சி உட்பட தொழிலாள வர்க்கத்துடன் ஆவேசமான மோதலுக்குள் வந்திருந்தது.    

இராணுவ ஆட்சிக்கான தங்கள் எதிர்ப்பிற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிற்சங்கவாதிகள் எல்லாம் வெகுவிரைவில் பூட்டோவின் கீழ் தாங்கள் சிறையிலடைக்கப்படுவதைக் கண்டனர். நிலச் சீர்திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது, ஆனால் ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுவதைப் போல, வாய் ஜாலத்திற்குப் பின்னால், முன் கண்ட நிலை பெருமளவில் அசைக்கப்படாததாகவே இருந்தது....1959ல் போல ஒரு குறிப்பிட்ட அளவு வரம்புக்குள்ளான நிலம் மட்டுமே இறுதியாய் மறுபங்கீட்டுக்கென இருந்தது (தல்போட், பாகிஸ்தான்: ஒரு நவீன வரலாறு).

1977ல் சுல்பிகர் அலி பூட்டோவைக் கவிழ்த்து பின் அவரது சட்டரீதியான மரணத்திற்கும் ஏற்பாடு செய்த ஜெனரல் ஜியா உல் ஹக்கின் சர்வாதிகாரம், பாகிஸ்தானின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அங்கீகரிக்கப்படுவது சரியே.

நிஜாம்--முஸ்தபாவை (இறைதூதரின் ஆட்சி) அறிவித்த ஜியா, இஸ்லாமிய அடிப்படைவாத ஜமாத்--இஸ்லாமியுடன் நெருக்கமாய் வேலை செய்து, பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்ததோடு பல்வேறு குற்றங்களுக்கு மத்தியகாலத்தின் தண்டனைகளையும் திணித்தார். ஜியாவைப் பொருத்தவரை, இஸ்லாமியமயமாக்கம் என்பது, அவரது சர்வாதிகார ஆட்சியை அங்கீகரிக்கச் செய்வதற்கும், அதிகமாய் மதிப்பிழந்து போன பாகிஸ்தான் தேசியவாதத் திட்டத்திற்கு புத்துயிர் ஊட்டுவதற்கும், அத்துடன் தொழிலாள வர்க்கம் மற்றும் இடதிற்கு எதிராக ஒரு பிற்போக்குவாத அரணாக சேவை செய்யத்தக்க அடிப்படைவாத அமைப்புகள் மற்றும் கட்சிகளின் ஒரு வலைப்பின்னலை ஊக்குவிப்பதற்குமான ஒரு வழி ஆகும்.

1979 டிசம்பரில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஊடுருவலை அடுத்து (முஜாகிதீனுக்கான அமெரிக்க ஆதரவின் மூலம் இந்த ஊடுருவல் அமெரிக்காவால் திட்டமிட்டுத் தூண்டப்பட்ட ஒன்று என்பதை அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஸ்பிக்னு பிரெசின்ஸ்கி இப்போது ஒப்புக் கொள்கிறார்) ஜியாவின் இராணுவ ஆட்சியானது ரஷ்யாவிற்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ-இராஜதந்திரத் தாக்குதலில் ஒரு அச்சாணியாக எழுந்தது. சவுதி முடியாட்சியும் ஜியாவின் ஆட்சி, ஆப்கானிஸ்தானில் சிஐஏ-ஐஎஸ்ஐ தலையீடு, மற்றும் ஜியாவின் பிற்போக்குத்தனமான இஸ்லாமியமயமாக்கப் பரப்புரை (அதனுடன் தனது சொந்த புரியாத வஹாபி சித்தாந்தத்தையும் கலந்து) ஆகியவற்றின் ஒரு முக்கிய ஆதரவாளராய் எழுந்தது.

ஜியா ஆட்சியின் கொள்கைகள் பாகிஸ்தானிய மக்களின் மீது ஒரு நீடித்த மற்றும் பேரழிவான தாக்கத்தைக் கொண்டிருந்திருக்கின்றன. ஆனால், ஜனரஞ்சக முதலாளித்துவ வீரமுழக்கங்களுக்குச் சொந்தக்காரரான சுல்பிகர் அலி பூட்டோ தான் ஜியாவுக்கு பாதையைக் காட்டினார், இராணுவத் தலைவரின் பதவிக்கு இவர் மிக மூத்த ஜெனரல்களின் தலைக்கு மேலாக அவரை மேல்தூக்கி நிறுத்தியதால் மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது. பூட்டோ அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் கூட்டணியைப் பராமரித்து வந்ததோடு பலூசிஸ்தானில் ஒரு தேசியவாதக் கிளர்ச்சியை இரத்தம்பாய ஒடுக்குவதில் இராணுவத்தின் பாத்திரத்தைப் பாராட்டியதன் மூலம் இராணுவத்திற்கு அரசியல்ரீதியாக மறுவாழ்வளிக்கவும் உதவினார். மதவாத வலதினை ஊக்குவித்த அவர், அகமதியாக்கள் முஸ்லீம்கள் அல்ல என்று தீர்ப்பளிப்பது, முஸ்லீம் சபாத்தை (ஓய்வுக்கான தினம்) ஒரு விடுமுறை நாளாக்கியது, மற்றும் மதுவைச் சட்டவிரோதமாக்கியது ஆகியவை உள்ளிட்ட அதன் ஏராளமான பிற்போக்குத்தனமான கோரிக்கைகளுக்கு இணங்கினார். பாகிஸ்தானில் இஸ்லாமுக்கென ஒரு சிறப்புரிமை பெற்ற இடத்தை உறுதி செய்வதில் அயூப் கானால் உருவாக்கப்பட்டதற்கும் வெகு கடந்து 1973 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் சென்றது. அத்துடன் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா அரசுகளைச் சேர்ந்த பிற்போக்குத்தனமான ஷேக்குகளின் ஆதரவைப் பெறுவதில் பாகிஸ்தானின் இஸ்லாமியத் தன்மை குறித்து பூட்டோ வலியுறுத்தினார். பூட்டோவின் ஆசியுடன், முகமது தாவூத்தின் கீழான ஆப்கானிய அரசாங்கத்தை எதிர்த்த குல்புதீன் ஹெக்மத்தியாயர் மற்றும் பிற இஸ்லாமியவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் புகலிடமும் தடவாள உதவியும் வழங்கியது.

சமகாலத்தில் பாகிஸ்தானில் பூட்டோவும், இந்தியாவில் இந்திரா காந்தியும், இலங்கையில் திருமதி பண்டாரநாயகேயும் ஆற்றிய பாத்திரங்களுக்கு இடையே மலைக்க வைக்கும் ஒற்றுமைகள் உண்டு. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ எழுச்சியின் முடிவுடன் தொடர்புபட்ட வர்க்கப் போராட்டம் துரிதமாய் தீவிரமுற்றதொரு நிலைமைகளின் கீழ், இவர்கள் அனைவருமே தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களையும் போலி-சோசலிச வாய்ஜாலத்தின் மூலமாகவும் ஜனரஞ்சக தேசியவாதத்தின் மூலமாகவும் முதலாளித்துவ வர்க்கத்துடன் பிணைத்து வைக்க முனைந்தனர்; ஆரம்பத்தில் மிகக் குறைந்துபட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்தினர்; பின் தொழிலாள வர்க்கத்துடன் முட்டுமோதலுக்கு வந்ததோடு அதிருப்தியை ஒடுக்குவதற்கு அவசரநிலைகளையும் மற்ற எதேச்சாதிகார வழிமுறைகளையும் பிரயோகப்படுத்தினர்.

ஜனரஞ்சகவாதத்தின் மூலமும் ஒடுக்குமுறையின் மூலமும் இடதுகளிடம் இருந்தான சவாலை மழுங்கடிக்க சேவை செய்த இவர்கள் 1977ல் ஐந்து மாத கால இடைவெளிக்குள்ளாக அதிகாரத்தில் இருந்து வீழ்ந்தனர். பின் முதலாளித்துவ அரசியல் கூர்மையாய் வலதின் பக்கம் திரும்பியது, இந்திரா காந்தி விடயத்தில் 1980ல் மீண்டும் பதவியைப் பிடித்தபோது அவரே இந்த நகர்வின் வடிவமாகத் திகழ்ந்தார். இவர்களது அரசாங்கங்கள் நீடித்த பிற்போக்கானதொரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. அவர்களது இடது ஜனரஞ்சகவாதமானது, பேரினவாதத்தையும் தேசிய மற்றும் மதரீதி-வகுப்புரீதி அடையாளங்களுக்கான விண்ணப்பங்களையும் சுமந்து கொண்டு, 1980களில் தெற்காசியாவெங்கும் இனவாத-வகுப்புவாத அரசியல் பண்புரீதியாய் அதிகரிப்பு காணுவதற்கு விதைகளை விதைத்தது.

இடது வெளித்தோற்றம் கொண்ட இந்த ஆட்சிகளை சவால் செய்வதில் இருந்து தொழிலாள வர்க்கத்தைத் தடுப்பதில் ஸ்ராலினிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஆற்றினர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சிக்கும் மற்றும் 1977ல் உருவாக்கப்பட்ட வலதுசாரி ஆதிக்கமுடைய பூட்டோ-விரோத எதிர்ப்பு அணியான பாகிஸ்தான் தேசியக் கூட்டணிக்கும் (PNA) எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்காய் போராடுவதற்கு அவர்கள் தவறினர். ஸ்ராலினிஸ்டுகளின் நீண்ட காலக் கூட்டாளியான NAP (சட்டரீதியான காரணங்களுக்காக தேசிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வலதுசாரி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளுடன் இணைத்த இந்த PNA கூட்டணி 1977 தேர்தலில் இணைந்து போட்டியிட்டது, பின் தேர்தலுக்குப் பிறகு அரசாங்க-விரோத ஆர்ப்பாட்டங்களின் ஒரு அலையை முன்வைத்தது. அது ஜியாவின் இராணுவக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பாதை அமைக்க உதவியது.

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியானது இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒரு கூட்டணிக் கட்சியாய் இருந்தது (1975-77 அவசரநிலைக் காலம் உட்பட). இதனிடையே இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி காங்கிரஸ் கட்சிக்கான முதலாளித்துவ எதிர்ப்புக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்தது. இந்து மேலாதிக்கவாத அமைப்பான ஜனசங்கத்தின் தொண்டர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியின் எதிரிகளின் ஒரு ஒட்டவைத்த கூட்டணியாக இருந்த ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கே அது இறுதியாய் உதவியது. தொழிலாள வர்க்கத்தின் மீது ஸ்ராலினிய நாடாளுமன்றக் கட்சிகள் அரசியல்ரீதியாய் ஆதிக்கம் செய்வதை சவால் செய்ய நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) மறுத்தனர். விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட கெரில்லாவாதம் தான் (நீடித்த மக்கள் போர்) புரட்சிகரப் போராட்டத்தின் மையமே தவிர, தொழிலாள வர்க்கத்தின் சோசலிச நனவினை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் அதன் அரசியல் சுயாதீனத்திற்கும் மற்றும் மேலாதிக்கத்திற்குமான போராட்டம் அல்ல என்று அவர்கள் பிரகடனம் செய்தனர்.  CPI மற்றும் CPM கட்சிகளைப் போலவே, நக்சலைட்டுகளும் சோசலிசப் புரட்சியை பகிரங்கமாய் எதிர்த்தனர். அவர்கள் தேசிய ஜனநாயகப் புரட்சி, அதாவது முதலாளித்துவ புரட்சியை பூர்த்தி செய்வதற்கு விவசாயிகளின் தலைமையில் நான்கு வர்க்கங்களின் கூட்டிற்கு (முதலாளித்துவ வர்க்கத்தின்தேசப்பற்று மிகுந்த கூறுகளும் இதில் உண்டு) முன்மொழிந்தனர்.

தெற்காசியாவில் ஸ்ராலினிய தேசியவாத அரசியலில் இருந்து விளைந்திருக்கக் கூடிய அரசியல் பேரழிவுகளுக்கான இன்னுமொரு துயரகரமான உதாரணமாய் ஆப்கானிஸ்தான் திகழ்கிறது. 1978 ஆப்கான் புரட்சி அல்லது சவுர் புரட்சி என்று கூறப்படுவது அவ்வகையான எதுவும் இல்லை. ஆப்கான் ஸ்ராலினிஸ்டுகள், அவர்களின் நீண்ட காலக் கூட்டாளியான, ஆப்கன் இளவரசரும் அரசியல்வாதியுமான தாவூத், அவர்களின் பக்கம் திரும்பி ஒரு அடக்குமுறைப் பரப்புரையைத் துவக்கியபோது, ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியில் (PDPA) ஒழுங்குபட்டிருந்த இவர்கள், ஒரு அரண்மனைப் புரட்சியாக அமைந்த ஒன்றின் மூலம் பதிலிறுப்பு செய்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான விரோதம் எல்லாம் இருந்தபோதிலும், மேலிருந்தான சீர்திருத்தங்களின் மூலமும் சோவியத் ஸ்ராலினிய அதிகாரத்துவத்தின் ஆதரவைக் கொண்டும் ஒரு முற்போக்கான முதலாளித்துவ ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்குத் தான் PDPAவின் அனைத்துக் கன்னைகளும் நம்பிக்கை கொண்டிருந்தன. நிலப் பண்ணையார்கள் மற்றும் பழங்குடித் தலைவர்களிடம் இருந்தும், ஆப்கான் உயரடுக்கின் பிற பகுதிகளில் இருந்தும், மற்றும், மிக முக்கியமானதாய், பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திடம் இருந்தும் தாங்கள் எதிர்கொள்ளக் கூடிய எதிர்ப்பை அவர்கள் முற்றுமுதலாய் குறைமதிப்பீடு செய்தனர். ஆப்கனிய தேசியவாதத்தில் தோய்க்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் பாகிஸ்தான், இந்தியா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு அழைப்புவிடும் திறனற்று இருந்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூது வேலைகளுக்கு அரசியல் பின்வாங்கல்களின் மூலமும் கடுமையான அடக்குமுறையின் மூலமும் இவர்கள் பதிலிறுப்பு அளித்தனர்.

ஜியா உல் ஹக்கின் சர்வாதிகாரம் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டியது. குறிப்பாக 1983ல் சிந்து மாகாணத்தில். இங்கு ஒரு விவசாயக் கிளர்ச்சியை நசுக்குவதற்கு இராணுவத்திற்கு மூன்று இராணுவப் பிரிவுகளும் மற்றும் ஹெலிகாப்டர் துப்பாக்கிப் படையும் அவசியப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜியா படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இந்த சர்வாதிகாரம் திடுதிப்பென முடிவுக்கு வந்தது. ஆனால், அவரும் அவரது ஆட்சியும் தங்களின் மூக்கணாங்கயிற்று எல்லையைத் துரிதமாய் தொட்டு விட்டிருந்தனர் என்பதற்கான அறிகுறிகள் அங்கு இருந்தன. சோவியத் ஸ்ராலினிய அதிகாரத்துவம் ஆப்கானிஸ்தானில் இருந்தான தனது துருப்புகளை வாக்குறுதியளித்தபடி முழுமையாக திரும்பப் பெறத் துவங்கியது. இது அமெரிக்க தேசியப் பாதுகாப்பு எந்திரத்திற்கு ஜியாவை ஒரு துரிதமாய் மறைந்து கொண்டிருக்கும் சொத்தாக ஆக்கியது. பாகிஸ்தான் முதலாளித்துவத்தின் பரந்த பிரிவுகளும் அத்துடன் இராணுவமும் கூட சர்வாதிகாரத்தை, குறிப்பாக அதன் பிளவுபடுத்துகிறதாயும் ஸ்திரம்குலைக்கிறதாயும் இருக்கிற இஸ்லாமியமயமாக்க பரப்புரையை, ஒரு கடன்சுமை போல் காணும் நிலைக்கு வந்தன. இஸ்லாமியமயமாக்க பரப்புரை பிரிவினைவாதச் சண்டைக்கு எண்ணெய் வார்த்தது மட்டுமன்றி, அதுவும் மற்றும் தொடர்புபட்ட வலிமையான மத்திய அரசாங்க கொள்கையும் சேர்ந்து பாகிஸ்தானிய அரசுக்குள் மையத்தை விட்டு விலகிச் செல்லும் போக்குகளுக்கு தீனி போட்டு, இராணுவத்தை மக்கள் கோபத்திற்கான இலக்காக ஆக்கின.

ஜியா சர்வாதிகாரத்திற்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பினை பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் அதன் ஜனநாயக மீட்சி இயக்கத்திற்கும் (MRD) அரசியல்ரீதியாக அடிபணியச் செய்வதற்கு ஸ்ராலினிஸ்டுகள் முனைந்தனர். ஒரு காலத்தில் பப்லோவாதத் தலைவராய் இருந்தவரும் இப்போது பாகிஸ்தான் தொழிற் கட்சியின் ஊக்குவிப்பாளராகவும் இருக்கிற தாரிக் அலி அவர்களின் முன்னோக்கைப் பகிர்ந்து கொண்டார். 1980களின் பெரும்பகுதியில் அலி பெனாசிர் பூட்டோவுக்கான உத்தியோகப்பூர்வமற்ற ஒரு ஆலோசகராக சேவை செய்தார். பெனாசிரின் தந்தையைக் கொன்ற இராணுவ ஆட்சி அவரை முதன்முதலில் ஒரு பெரும் மக்கள்திரளிடையே பேச அனுமதித்த சமயத்தில் 1986ல் லாகூரில் அவர் வழங்கிய உரையை எழுதித் தந்ததும் இதில் அடங்கும்.  

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மீது வெகுஜனப் நப்பாசைகளை பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ இடது கட்சி ஊக்குவித்தது; 1989 தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது, தனியார்மயமாக்கத்திலும் மற்ற வலதுசாரி சந்தை-ஆதரவு சீர்திருத்தங்களிலும் முன்னணியில் நின்றதில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பாத்திரத்தால் நிகழ்ந்த அரசியல் குழப்பம் மற்றும் நோக்குநிலை பிறழ்வுக்கும் இதுவே அரசியல்ரீதியான பொறுப்பானதாகும்.

1990களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் நவாஸ் செரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் அவை பதவியில் இருந்த அவ்வப்போதான குறுகிய காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அக்கட்சிகளின் அடிப்படையான வர்க்க ஒற்றுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டுமே சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்த மறுசீரமைப்பை திணித்தன, பாகிஸ்தானின் அணுஆயுதமயமாக்கத்தை பின்பற்றின, அத்துடன் தலிபானுக்கும் ஆப்கானிஸ்தானில் அது அதிகாரத்திற்கு வருவதற்கும் பாகிஸ்தானின் இராணுவ உளவுத்துறை ஸ்தாபனம் உதவுவதையும் இவை ஆதரித்தன. இன்று பாகிஸ்தானின் அணு ஆயுத வேலைத்திட்டத்தின் வெற்றிக்கான உண்மையான பெருமை யாருக்குச் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பாகிஸ்தான் முஸ்லீக் லீக் (நவாஸ்) கட்சியும் சண்டை போடுகின்றன.

1999 அக்டோபரில் முஷாரபின் இராணுவக் கவிழ்ப்பு நடவடிக்கையானது பனிப் போரின் முடிவைத் தொடர்ந்து உலக புவி-அரசியலில் ஏற்பட்டிருந்த முக்கிய மாற்றங்களில் வேர் கொண்டிருந்தது. இந்தியாவின் பிடியிலுள்ள காஷ்மீரில் கார்கிலுக்குள் பாகிஸ்தானிய இராணுவம் ஊடுருவுவதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவிடம் இருந்து வந்த நெருக்குதலுக்கு நவாஸ் ஷெரிப் பணிந்து விட்டதாக இராணுவம் கோபமுற்றிருந்தது. அமெரிக்காவின் நிலைப்பாடோ, இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் கொண்டிருந்த பனிப்போர் கால உறவில் இருந்து இப்போது விடுபட்ட நிலை தோன்றியிருந்ததால் அதனுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபிக்க அமெரிக்கா கொண்டிருந்த ஆர்வத்தில் இருந்து பிறந்திருந்தது.

அதன்பின் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்குள்ளாக, முஷாரபும் அமெரிக்க நெருக்குதலின் கீழ் (பாகிஸ்தானை மீண்டும் கற்காலத்திற்கு திரும்பச் செய்யும் வகையில் குண்டுவீச்சுக்கு ஆளாக்கும் மிரட்டல்கள் உட்பட) ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பாகிஸ்தானின் ஆதரவை பின்னிழுத்துக் கொள்வது மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு தளவாட உதவி வழங்குவது போன்ற ஒரு மிகக் குறிப்பிடத்தக்க மூலோபாய மாற்றத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்

கடந்த காலத்தில் போலவே பாகிஸ்தானிய உயரடுக்கு, குறிப்பாக இராணுவப் பிரிவானது, அமெரிக்க ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்திற்கு உள்ளூர் சேவகனாக செயல்பட்டதின் மூலமாக பொருளாதார மற்றும் புவி-அரசியல் அனுகூலங்களை பெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஆப்கான் போரானது நாட்டின் கணிசமான பகுதிகளை உள்நாட்டுப் போருக்குள் மூழ்கடித்து பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கத்தின் நெருக்கடியை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. இன்னும் அடிப்படையாகக் கூறினால், ஆசியாவில் தனது மேலாதிக்கத்தைச் செலுத்த அமெரிக்கா செய்யும் வேலையானது ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் இடையூறுகளை விளைவித்துக் கொண்டிருப்பதோடு, பல நீண்ட-கால புவி-அரசியல் மோதல்களுக்கு (இந்திய-பாகிஸ்தான் சண்டை என்பது இதில் முக்கியத்துவம் குறையாத ஒன்று)  ஒரு முன்கணிக்கமுடியாத வெடிப்புமிகுந்த பரிமாணத்தைச் சேர்த்து விடுகிறது. ஆப்கானிஸ்தானில் அதிகாரம் மற்றும் செல்வாக்கு என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போட்டிச்சண்டைக்கான ஒரு முக்கியப் பொருளாக ஆகியிருக்கிறது. அத்துடன் இந்தியாவுடன் ஒரு உலகளாவிய மூலோபாயக் கூட்டை ஏற்படுத்திக் கொள்வதின் மூலம் சீனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா செய்யும் வேலையானது பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கத்தின் நீண்ட-கால மூலோபாய நலன்களை அச்சுறுத்துகிறது.

முஷாரபின் கவிழ்ப்பை பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆரம்பத்தில் வரவேற்றது. எப்படி முந்தைய தசாப்தத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசாங்கங்களைப் பதவியிறக்குவதற்கு இராணுவமும் அரசு அதிகாரத்துவமும் மீண்டும் மீண்டும் செய்த ஜனநாயக விரோத சூழ்ச்சிகளை நவாஸ் ஷெரிப் வரவேற்றிருந்தாரோ அதைப் போலவே. பாகிஸ்தானிய மக்கள் கட்சியை அதிகாரத்தின் அத்தனை நிலைகளில் இருந்தும் விலக்கி வைப்பதில் தான் தீர்மானமாய் இருப்பதை ஜெனரல் முஷாரப் தெளிவாக்கி விட்ட பிறகே பாகிஸ்தானிய மக்கள் கட்சி சர்வாதிகாரத்திற்கு எதிராக வந்தது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் (PML-Qக்குள்ளாக மறுஒழுங்கமைக்கப் பெற்றது) தலைமையில் பெரும்பகுதி முஷாரப் ஆட்சி நோக்கி அணிவகுத்தது.

இதனையடுத்து PML (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எதிர்ப்பு என்பது சோர்ந்து போனது. சர்வாதிகாரத்திற்கு எதிரானதொரு வெகுஜன இயக்கத்திற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமை வகிக்கவோ அல்லது ஆதரிக்கவோ செய்யாது என்பதை பெனாசிர் பூட்டோ மீண்டும் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்து விட்டார். அத்தகையதொரு இயக்கம் முதலாளித்துவக் கட்சிகளின் கட்டுப்பாட்டிற்குத் தப்பி ஒரு தீவிரவாதத் திசையில் போய் விடும் என்கிற அவரது அச்சமே இதன் காரணம். அதற்குப் பதிலாக, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான ஒரு அரசாங்கம் இராணுவ அரசாங்கத்தை விடவும் மிக மூர்க்கத்துடன் ஆப்கானியப் போரைத் தொடரும் என்று வாக்குறுதியளித்து புஷ் நிர்வாகத்தை அவர் தாஜா செய்தார். இறுதியாக, போரும் பெருகிய சமூகப்பொருளாதார நெருக்கடியும் சமூக எழுச்சிகளைத் தூண்டி விடக் கூடும் என்கிற கவலை அமெரிக்காவுக்கு அதிகரித்து விட்ட நிலையில், புஷ் நிர்வாகம் மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தம் ஒன்றில் பெனாசிரும் அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியும் முஷாரப் உடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர்.   

உத்தியோகபூர்வ அரசியல் எதிர்ப்பு என்பது முற்றிலும் அடிபணிந்துபோய் கிடந்த நிலைமைகளின் கீழ், நகர்ப்புற நடுத்தர வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தின் பரந்த பிரிவுகளும் முஷாரப் ஆட்சியில் கொண்டிருந்த பெருகிய அதிருப்தியானது தலைமை நீதிபதி சவுத்ரி பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகவும், நவம்பர் 3, 2007ல் முஷாரபின் இரண்டாவது கவிழ்ப்பைத் தொடர்ந்து, அனைத்து நீக்கப்பட்ட நீதிபதிகளையும் மீண்டும் பணியமர்த்துவதற்கும் கோரி நடந்த வழக்கறிஞர்களது இயக்கத்தில் வெளிப்பாடு கண்டது. எழுப்பப்பட வேண்டிய கேள்வி என்னவென்றால் ஏன் வழக்கறிஞர்களின் இயக்கம் அரசியல் அரங்கை ஏகபோக ஆதிக்கம் செய்தது? ஏன் தொழிலாள வர்க்கம் உழைக்கும் மக்கள் அனைவரையும் தன் பின்னால் அணிதிரட்டி சர்வாதிகாரத்தை சொந்தமாக சவால் செய்ய முடியவில்லை? இங்கேயும் வெளித்தோற்றத்தில் இடதாகக் காட்சியளிப்பதன் அரசியல் தான் மீண்டும் ஒரு மையமான பலவீனப்படுத்துகிற பாத்திரத்தை ஆற்றியது.

முஷாரப் ஆட்சி தனது தனியார்மயமாக்க, ஆட்குறைப்பு மற்றும் தாராளமயமாக்கக் கொள்கைகளுக்கான பதிலாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து கணிசமான எதிர்ப்புக்கு முகம் கொடுத்தது. மே-ஜுன் 2005ல் நடந்த பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை (PTCL) வேலைநிறுத்தம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்தப் போராட்டங்கள் எல்லாம் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்களின் வெகுஜன இயக்கத்திற்கு முன்னணிப் போராட்டங்களாக ஆக்கப்படாமல், வெறும் கூட்டுப் பேரங்களுக்காய் இடது ஆதரவுடனான தொழிற்சங்கங்களால் குறுக்கப்பட்டு, அதன்மூலம் காட்டிக் கொடுக்கப்பட்டன.  

வழக்கறிஞர்களின் இயக்கம் எழுந்தபோது, பாகிஸ்தான் தொழிற் கட்சி (LPP) மற்றும் சர்வதேச சோசலிஸ்டுகள் (பாகிஸ்தான்) [இது பிரிட்டிஷ் SWPஇன் ஒரு துணைக் கட்சி] போன்ற அமைப்புகள் எல்லாம் அதனை உற்சாகப்படுத்தும் கூட்டமாகின. தொழிலாள வர்க்கத்திற்கு அவர்கள் ஏதேனும் விண்ணப்பித்தார்கள் என்றால், அது வழக்கறிஞர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரித் தானே தவிர, சர்வாதிகாரத்திற்கும் அதற்கு அடித்தளத்தில் இருந்த பெருவணிக மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராக வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கு தனது சொந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்ற ஒரு சுயாதீனமான சக்தியாக அது தலையிடுவதற்கு அல்ல.

பாகிஸ்தான் உழைப்பாளர் கட்சியும் சோசலிஸ்டுகளும் முஷாரைபை சவால் செய்ததற்காக இராணுவ ஆட்சியால் வெகுகாலம் வெறுப்புடன் பார்க்கப்பட்டு வந்த நீதிபதி சவுத்ரியைப் போற்றியதோடு, ஒரு சுயாதீனமான நீதித்துறை க்கான போராட்டம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முன்னணி வகிக்கும் என்பதான வழக்கறிஞர்களின் கூற்றுகளைத் திரும்பத் திரும்பக் கூறினர். இதன்மூலம் பாகிஸ்தான் நீதித்துறையின் சமூக வேலையே அதன் ஒட்டுமொத்தமாய் ஏற்றத்தாழ்வான சமூக ஒழுங்கைத் தாங்கி நிற்கும் சட்டங்களை செயல்படுத்துவது தான் என்கிற அடிப்படையான வர்க்க உண்மையை அவர்கள் மறைத்தனர். அத்துடன் ஜனநாயகம் குறித்த வழக்கறிஞர்களின் கையாலாகா வரையறையை அவர்கள் ஊக்குவித்தனர். இந்த வரையறை ஒரு சில பொதுமக்கள் உரிமைகளைப் பெறுவதாக ஜனநாயகத்தை குறைத்து விடுவதுடன், அதனை ஒரு குறிப்பிட்ட வகையிலான பாகிஸ்தானின் முதலாளித்துவ ஒழுங்காகவும் அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்துடனான அடிமைப்பட்ட உறவாகவும் ஏற்றுக் கொள்கிறது.

வழக்கறிஞர்களின் இயக்கத்தில் பங்கேற்கும் சிலரின் தீரம் மற்றும் கடமையுணர்வு எல்லாம் இருந்தபோதிலும் கூட, இந்த இயக்கமானது எதிர்பார்க்கக் கூடிய வகையில், நடப்பு பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கத்தை ஸ்திரம்குலைப்பதற்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) மற்றும் இராணுவம் நடத்தி வரும் பிரச்சாரத்தின் ஒரு கருவியாக மாறி விட்டிருக்கிறது.

ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சியை உருவாக்குவதன் மூலம் தனது வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திறப்பதற்கான காலம் பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முன்பாக வந்து நின்று வெகுகாலமாகிறது. தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப்பிரிவினர், இன்று அனைத்துலகக் குழுவால் தலைமை நடத்தப்படும் நான்காம் அகிலத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதோடு அவர்களின் போராட்டங்களுக்கு ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை அடித்தளமாய் கொள்ள வேண்டும்.

தொடரும்......