World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greek parliament discusses new austerity in face of mass opposition

கிரேக்கப் பாராளுமன்றம் வெகுஜன எதிர்ப்பிற்கு இடையே புதிய சிக்கன நடவடிக்கைகளை பற்றி விவாதிக்கிறது

By Stefan Steinberg 
29 June 2011

Back to screen version
 

ஐரோப்பிய அரசியல்வாதிகள், வங்கியாளர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து கிரேக்க அரசாங்கம் இந்த வாரம் பெரும் பரபரப்புடன் செயல்பட்டு பாராளுமன்றத்தில் கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தினால் பெரிதும் எதிர்க்கப்படும் பெரும் சிக்கன நடவடிக்கைகளை இயற்ற விரும்புகிறது.

இந்த அதிர்ச்சி வைத்தியம் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பல தலைமுறைகள் பின்னோக்கி இட்டுச் செல்லும் நோக்கத்தைத்தான் உந்துதலாகக் கொண்டுள்ளது. இதில் அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்குப் பரந்த ஊதிய வெட்டுக்கள், வரி உயர்வுகள், பெரும் பணி நீக்கத்திற்கு வகை செய்யும் வகையில்அரசாங்கச் சொத்துக்களைத் தனியார்மயம் ஆக்குவதின்மூலம் 50 பில்லியன் யூரோக்களைப் பெறுதல், ஆகியவை அடங்கும். ஒரு வர்ணனையாளரான வில் ஹட்டன், கார்டியனில் எழுதுகையில்கிரேக்கம் 1920 களில் ஜேர்மனி சுமந்த பொருளாதார வேதனையைவிட அதிகம் அதன் தோள்களில் சுமக்குமாறு கோரப்படுகிறதுஎனக் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கன வரவு-செலவுத் திட்டத்தின் முதல் பகுதி மீதான வாக்களிப்பு புதன் அன்று நடைபெற உள்ளது. மற்றொரு வாக்களிப்பு, சட்டவரைவின் பரந்த தனியார்மய திட்டம் வியாழனன்று எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாயன்று ஏதென்ஸில் பாராளுமன்றத்தை சுற்றி 20,000க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டிடத்தில் நுழைவதைத் தடுக்க முயன்றனர். கிட்டத்தட்ட 3,000 கலகப்பிரிவுப் பொலிசார் இதை எதிர்கொள்ளும் வகையில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி பல முறையும் எதிர்ப்பாளர்களைக் கலைக்கும் வகையில் தடியடிகளும் நடத்தினர்.

கிரேக்கத்தின் பொதுத்துறை தொழிற்சங்கங்கள் செவ்வாயன்று பாராளுமன்ற விவாதம் நடக்கும் அதே நேரத்தில் வரும்படி ஒரு 48 மணிநேரப் பொது வேலைநிறுத்தத்தையும் தொடக்கியது. இந்த வேலைநிறுத்தம் பொதுப் போக்குவரத்தின் பல பிரிவுகள் மற்றும் பள்ளிகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் எனப் பொதுப் பணிகள் பலவற்றையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தங்கள் பயணங்கள் இரத்து செய்யப்பட வகை செய்தன. மின்சாரத் தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மின் வெட்டுக்களுக்கு வழிவகுத்தன.

பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கம் கடந்தகாலம் போலவே வெகுஜன எதிர்ப்பைக் கட்டுப்படுத்த தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது. தொழிற்சங்கங்கள் சமீபத்திய வெகுசன சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றவர்களிடம் இருந்து கணிசமான குறைகூறல்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியான 15 உபயோகமற்ற ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்குப் பின், அதிகாரத்துவம் இப்பொழுது ஒரு இரு-நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுவும் அரசாங்கம் மற்றும் முதலாளிகளால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஐரோப்பிய நிதிய உயரடுக்கு வெட்டுக்கள் எப்படியும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளன. அதுதான் கிரேக்கக் கடன் பத்திரங்களின் மதிப்பை உறுதி செய்யும், மற்றும் கண்டம் முழுவதும் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடியாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியமும் IMF ம் சமீபத்தில் கிரேக்கம் புதிய வரவு-செலவுத் திட்டத்தைச் சுமத்தாவிட்டால் அதற்கு கொடுக்கப்பட ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் நிறுத்திவைக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளன.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பாப்பாண்ட்ரூமுக்கூட்டில் இருந்து” (ஐரோப்பிய ஒன்றியம், IMF மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) அழுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய எதிர்க் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியுடன் ஒரு தேசிய கூட்டு அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முன்வைத்தார். கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி பெரும் குறைப்புக்களுக்கான தேவை பற்றி உடன்படுகிறது. ஆனால் வணிகத்தின் மீதான வரி அதிகரிப்பு என்னும் அரசாங்கத்தின் திட்டத்தை நிராகரிக்கிறது. இதில் சிறு வணிகமும் அடங்கும் என அரசாங்கம் கூறுகிறது. எதிர்க்கட்சியோ அதன் தேர்தல் தளத்தை அது பேரழிவிற்கு உட்படுத்தும் என்று கருதுகிறது.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான Antonis Samaras பாப்பாண்ட்ரூவின் கோரிக்கையை நிராகரித்து தன் கட்சி வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார்.

பாப்பாண்ட்ரூ தன் பாராளுமன்றப் பிரிவின் ஒரு சிறு அடுக்கில் இருந்தும் எதிர்ப்புத் திறனைச் சந்திக்கிறார். அது இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கை கிரேக்க மக்களின் மீது கட்டவிழ்க்கப்பட்டால் புதிய தேர்தல்களில் கட்சியின் பேரழிவிற்கு வழிசெய்யும் என்று வாதிடுகிறது. கடந்த வாரம் ஒரு சிறு எண்ணிக்கையிலான PASOK பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுக்கவில்லை. இதையொட்டி பாப்பாண்ட்ரூ தன்னுடைய காபினெட்டில் மாறுதல்கள் செய்து உட்கட்சிப் பூசல்களைச் சமாதானப்படுத்தினார்.

கிரேக்கத் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமான பிணைப்புக்களையுடைய எவான்ஜிலோஸ் வெனிஜிலோசை நிதி மந்திரியாக நியமித்தபின், பாப்பாண்ட்ரூ ஒரு பெரும்பான்மையைப் பெற்றதுடன், ஒரு வாரம் முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஒன்றிலும் வெற்றி பெற்றார்.

கிரேக்கப் பாராளுமன்றத்தில் PASOK இன் பெரும்பான்மை 5 என்று மிகக் குறைவாக உள்ளது. வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் பாப்பாண்ட்ரூ சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும். புதிய ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினர் தான் சிக்கன நடவடிக்கைகளுக்கு வாக்களிப்பது பற்றிப் பரிசீலிக்க இருப்பதாகக் குறிப்புக் காட்டினார். வலதுசாரி Democratic Alliance ன் பாராளுமன்றப் பிரிவில் இருந்து ஐந்து உறுப்பினர்களின் ஆதரவையும் பாப்பாண்ட்ரூ நம்ப முடியும்.

PASOK இந்த வாரம் அதன் வரவு-செலவுத் திட்டத்திற்கு பெரும்பான்மை பெறத் தவறினால், அரசாங்கம் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டுப் புதிய தேர்த்லகளை நடத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் உடன்பட்டுள்ளனர். கிரேக்கத்தில் இந்த நெருக்கடியான காலத்தில் அரசாங்கம் இல்லாமற் போனால், அது ஐரோப்பிய, சர்வதேச நிதியச் சந்தைகளில் கொந்தளிப்பில் ஆழ்த்தும். யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டையே அச்சறுத்தும்.

ஆனால் அரசாங்கம்  தப்பிப் பிழைத்தால், சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் சுற்று கிரேக்கத்திற்குள் இருக்கும் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தத்தான் உதவும். பெருகிய முறையில் ஆளும் வட்டங்களுள் விவாதம் கிரேக்கம் திவாலை அறிவிக்குமா என்பது பற்றி என்று இல்லாமல் எப்பொழுது, எந்தச் சூழ்நிலையில் என்றுதான் உள்ளது. முக்கூட்டு அணியின் மார்ச் 2010 கிரேக்கத்திற்கான 110 பில்லியன் கடனுக்குப்பின் ஐரோப்பிய தலைவர்கள் தொடர்ந்து யூரோவிற்குத் தங்கள் உறுதிப்பாட்டைக் கூறிவருகின்றனர். ஆனால் இப்பொழுது ஓராண்டிற்கு முன் நினைத்தும் பார்க்க முடியாதொரு நிலைமைக்குத்தான் தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

ஞாயிறன்று ஜேர்மனிய நிதிய மந்திரி வுல்ப்காங் ஷோபில் Bild am Sonntag இடம் ஜேர்மனிய அரசாங்கம் நெருக்கடி நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு வருவதாகக் கூறினார். கிரேக்க கடன் திருப்பித் செலுத்தத் தவறுதல் ஒருவேளை ஏற்பட்டால், “நிதிய முறையில் இந்தத் தொற்றின் அபாயம், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவக்கூடிய நிலை என்ற ஆபத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்பதை நாம் அறிய வேண்டும்என்றார் ஷௌபில்; ஆனால் பரிசீலிக்கும் நடவடிக்கைகள் என்ன என்று விளக்கவில்லை. இரண்டு வாரங்கள் முன்பு ஜேர்மனிய மத்திய வங்கியின் தலைவர் அவருடைய நிறுவனமும் கிரேக்கக் கடன் திருப்பி செலுத்துதல் பற்றிய திட்டங்களை எதிர்கொள்ளத் தயாரிப்புக்களை இயற்றி வருகிறது என்று குறிப்புக் காட்டினார். .

எத்தகைய குறிப்பான விளைவுகள் வந்தாலும், கிரேக்க நெருக்கடி ஒரு பெரும் தீவிரத்தை வர்க்க அழுத்தங்களில் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. அது இப்பொழுது தொழிற்சங்கங்களை எதிர்ப்பைச் சமாளிக்கவும் நசுக்கவும் நம்பியிருக்கும்போது, கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் ஆளும் வர்க்கங்கள் மற்ற நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருகின்றன

துணைப் பிரதம மந்திரியான தியோடோரஸ் பான்கலோஸ் கிரேக்கம் அடுத்த சுற்றுக் கடன்களைப் பெறவில்லை என்றால், “நாம் ஒரு கொடூரமான நிலையில் இருப்போம்… drachma(கிரேக்க நாணயம்) விற்கு மீண்டும் திரும்ப நேரிடும், தங்கள் சேமிப்புக்களைத் திரும்பப் பெறப் பீதியில் இருக்கும் கூட்டத்தினால் வங்கிகள் முற்றுகையிடப்படும். டாங்குகள்தான் வங்கிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க முடியும், ஏனெனில் போதுமான பொலிசார் அதற்கு இல்லைஎன்று எச்சரித்தார்.