World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US imperialism and the South China Sea crisis

அமெரிக்க ஏகாதிபத்தியமும் தென்சீனக் கடல் நெருக்கடியும்

Patrick O’Connor
26 July 2011

Back to screen version

கிழக்கு ஆசியாவில் சீனாவின் பெருகிவரும் மூலோபாய, இராணுவச் செல்வாக்கை எதிர்கொள்ளும் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான உந்துதலினால் தென் சீனக் கடல் பகுதி உலகின் மிக ஆபத்தான வெடிப்புத் தன்மை உடைய இடங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது.

பூசலுக்குட்பட்ட நீர்நிலைகள் குறித்து வாஷிங்டன் தொடர்ச்சியான தூண்டுதல்கள் தரும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இவற்றில் சமீபத்தியது சனிக்கிழமையன்று ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) பிராந்திய அரங்குக் கூட்டத்தில் இந்தோனேசியாவில் வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் பேசியதாகும். அமெரிக்காஒரு பசிபிக் தேசம் மற்றும் வசிக்கும் சக்தி மற்றும்ஆசியாவின் திறந்த கடல் போக்குவரத்து செய்வதற்கு ஒரு தேசிய அக்கறையைக் கொண்டுள்ளது என்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு ஆசியான் பிராந்திய அரங்கு வியட்நாமில் நடந்தபோது கிளின்டன் கூறிய கருத்துக்களைத்தான் எதிரொலிக்கிறது; அங்கு அவர் அமெரிக்கா தென் சீனக் கடலில் ஒருதேசிய நலனைக் கொண்டுள்ளது, “இங்கு தங்குவதற்குத்தான் ஆசியாவிற்கு வந்துள்ளது என்றார். சீன வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சி கிளின்டனின் கருத்துக்களைகிட்டத்தட்ட சீனா மீதான தாக்குதல் போல் என்று குறிப்பிட்டார்.

கிளின்டனின் சமீபத்திய கருத்து அமெரிக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் அறிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்க செனட் மன்றம் ஒருமனதாகதென் சீனக் கடல் பகுதியில் சர்வதேச நீர்நிலைகளில் கடற்போக்குவரத்து உரிமைகள் மற்றும் வான் பகுதியில் செல்லுதல் தடையற்ற சுதந்திரத்தை கொள்வதற்கு அமெரிக்க இராணுவப் படைகளின் ஆதரவு நிறைந்த செயற்பாடுகள் தொடரலாம் என்ற தீர்மானத்தை இயற்றினர். ஜூலை 14ம் திகதி செனட்டர்கள் மெக்கெய்ன் மற்றும் ஜோன் கெர்ரி ஆகியோர் சீனாவின் உயர்மட்ட வெளியுறவு அதிகாரியான டை பிங்குவோவிற்கு பெய்ஜிங்கின் நடத்தைஅமெரிக்காவின் முக்கிய தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கலாம் என்று எச்சரித்தனர்.

இந்த ஆண்டு தென் சீனக் கடலில் நடந்த தொடர் நிகழ்வுகள்சீனா மற்றும் பிலிப்பினோ கடற்படைக் கப்பல்களுக்கு இடையே மோதல் உட்பட—“மீண்டும் ஆசியாவிற்கு செல்லுதல் என்னும் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோச நடவடிக்கைகளின் நேரடி விளைவாகும். சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிற்கு இடையே நீண்டகாலமாகவுள்ள, முன்னாள் உள்ளூர் எல்லை மோதல்களுக்கு வாஷிங்டன் எரியூட்டி வருகிறது. இது தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயுதங்களைப் பெறும் போட்டிக்கான உந்துதலை வளர்க்கிறது; அதையொட்டி இப்பிராந்தியத்திலும் அமெரிக்காவிலும்கூட உழைக்கும் மக்களிகளின் வாழ்க்கைத் தரங்கள் இன்னும் குறைமதிப்பிற்கு உட்படும் என்ற தவிர்க்க முடியாத நிலை ஏற்படும்; ஏனெனில் அவர்கள்தான் இதற்கு விலைகொடுப்பார்கள்.

தென் கிழக்கு சீனக் கடற்பகுதியில் செழிப்பான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இருப்பதுடன் உலகின் மிக முக்கியமான புவியியல் மூலோபாயத்தை கொண்ட கடற்பாதைகளும் உள்ளன.

வெளிநாடுகளிலிருந்து எரிசக்தி இருப்புக்களுக்கு பெய்ஜிங்கின் தங்கியிருப்புத்தன்மை அதிகம் விரிவாகிக் கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு இது 239 மில்லியன் டன்கள் எண்ணெயை இறக்குமதி செய்தது—2009ம் ஆண்டை விட இது 17.5 சதவிகிதம் அதிகம் ஆகும்; மேலும் பெய்ஜிங் தென் சீனக் கடலை உள்நாட்டு உற்பத்திக்குப் புதிய திறன் உடையதாகவும் காண்கிறது. சீன அரசு நடத்தும் டெய்லி டைம்ஸ் ல் வந்துள்ள ஒரு சமீபத்தியக் கட்டுரை தென்சீனக் கடலைஒரு இரண்டாவது பேர்சிய வளைகுடா என்று விவரித்துள்ளது.

தென் சீனக் கடல் சீனாவின் எரிசக்தி இறக்குமதிகளுக்கும் முக்கிய பாதை ஆகும். மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து இந்தியப் பெருங்கடலைக் கடந்து சீனாவிற்குள் கொண்டுவரப்படும் அனைத்து எண்ணெயிலும் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் மலாக்கா ஜலசந்தி வழியே வருகின்றன. மற்ற ஆசிய பொருளாதாரங்கள், ஜப்பான், தென் கொரியா உட்பட, இதேபோல் எண்ணெய் கப்பல்கள் தென் சீனக் கடல் வழியே அன்றாடம் வருவதை நம்பியுள்ளன; இதையொட்டி இக்கடற்பாதை ஒரு முக்கிய மூலோபாய கண்காணிப்பு பகுதி ஆகிறது.

1945ம் ஆண்டிலிருந்து இந்திய பெருங்கடல், மலாக்கா ஜலசந்தி உட்பட உலகின் முக்கிய கடற்பாதைகளில் வாஷிங்டன்தான் மேலாதிக்கம் செலுத்து வந்துள்ளது. இத்தகைய நிலைப்பாடு பெய்ஜிங்கிற்கு இனி ஏற்கத்தக்கதாக இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டங்களில் இந்திய பெருங்கடலில் எரிசக்தியை முற்றுகை செய்வதின் மூலம் சீனாவை அச்சுறுத்தும் திறன் பற்றிய விவாதங்கள் இருப்பது பற்றி சீன ஆளும் வட்டங்கள் நனவாக உள்ளன.

தென் சீனக் கடலின் எண்ணெய் இருப்புக்கள் —இவை சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ளவை, அவற்றைப் பாதுகாப்பது சீனாவிற்கு எளிது— இவைகள் பெய்ஜிங்கிற்கு இன்னும் கூடுதல் பெறுமதியுடையதாகவுள்ளன. தன் வணிகப் பாதைகள் மற்றும் சர்வதேச முதலீடுகளைப் பாதுகாக்கும் திறனுடையதாக ஒரு ஆழ் கடல் கடற்படையை கட்டும் நோக்கத்தில் சீனா செயற்படுகிறது. அதன் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று சீனக் கடலோரத்திலிருந்து சீன மூலோபாயவாதிகள் குறிக்கும் சீனாவின் “முதல் தீவுச் சங்கிலி” என்பது வரை கடலில் தடையின்றி இயங்க வேண்டும் என்பதாகும். இப்பகுதியில் மஞ்சள் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் வடக்கேயும், தைவான் ஜலசந்தி கிழக்கேயும், தென் சீனக் கடல் தெற்கேயும் அமைந்துள்ளன.

இது சீனாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மோதல் கொள்ள வைக்கிறது; ஏனெனில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து முழு பசிபிக் பெருங்கடல் பகுதி முழுவதையும் கட்டுப்படுத்த முயல்கிறது —சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதி உட்பட. புஷ் ஜனாதிபதிக் காலத்தின் கடைசி ஆண்டுகளில் வெளியுறவுக் கொள்கை அமைப்புமுறையின் முக்கிய பிரிவுகள் கூடுதலான கவனத்தை மத்திய கிழக்கிற்குக் கொடுக்கிறது, சீனா, கிழக்கு ஆசியாவிற்குப் போதுமான கவனத்தைக் கொடுப்பதில்லை என்ற தீவிரக் குறையைக் கொண்டிருந்தது. ஒபாமாவின் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இவ்வகையில் உள்ளது; அமெரிக்கா “மீண்டும் ஆசியாவிற்கு வந்துள்ளது” என்ற அறிக்கை பல முறை கூறப்பட்டுள்ளது; இது பசிபிக்கில் 1945க்குப் பிந்தைய நிலையை தொடர்ந்து தக்க வைக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடியின் வெடிப்பு ஆகியவை இப்பிராந்தியத்தின் பொருளாதார அஸ்திவாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, உலக வல்லமைச் சக்திகளின் சமநிலையை மாற்றும் அச்சுறுத்தலை கொடுத்துள்ளன. உலகப் பொருளாதார முறிவின் மையத்தானமாக அமெரிக்கா உள்ளது; நிதியச் சரிவினால் இது தூண்டுதல் பெற்றது; இந்த நெருக்கடி முந்தைய பொருளாதார வளர்ச்சிக் காலத்தின் அடித்தளத்தில் இருந்த முரண்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இவற்றில் சீனாவிடம் பெருகிய முறையில் வாங்கியுள்ள கடன்—கருவூலப் பத்திரங்கள் மூலம் அது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் மதிப்பை வாங்கியுள்ளது—மற்றும் பெரும் சுரண்டலுக்கு உட்பட்டுள்ள ஆசியத் தொழிலாள வர்க்கம் உற்பத்தி செய்யும் குறைவூதிய நுகர்பொருட்களை அமெரிக்க நுகர்வோர் வாங்குவதற்கு பணப்பற்றாக்குறை ஆகியவை அடங்கும்.

இச்சூழ்நிலையில் வாஷிங்டன் இன்னும் வெளிப்படையாக அதன் இராணுவ மேலாதிக்கத்தைத்தான் அதன் மூலோபாயப், பொருளாதார நலன்களை முன்னேற்றுவிப்பதற்கு நம்பியிருக்கிறது. தென் சீனக் கடல் பூசலில் தொடர்புடைய ஒவ்வொரு அரசாங்கமும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து ஏற்படும் பெருகிய வர்க்க விரோதங்களை பிற்போக்குத்தன தேசியவாத வழிகளில் திசைதிருப்புமாறு உந்துதல் கொடுக்கப்படுகின்றது, இவைகள் அனைத்தும் மிகவும் பொறுப்பற்றதாக இருக்கின்றன.

தென்சீனக் கடல் பகுதியில் இப்பொழுது நிலைமை ஆபத்து நிறைந்து உள்ளது. உலகின் மிகப் பரபரப்பான கடற்பாதைகளில் ஒன்றில், ஆழ்ந்த இராணுவப் போட்டிகள் ஏற்பட்டுள்ளன, போட்டியிடும் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் இல்லை. இப்பிராந்தியம் ஒரு நெருப்பைக் கொட்டும் கொப்பறை போல் உள்ளது, ஒரு எதிர்பாரா நிகழ்வு, தவறான உணர்வினால் ஏற்படக்கூடிய விபத்து ஆகியவை நடப்பதற்குக் கணக்கிலடங்கா வாய்ப்புக்கள் உள்ளன—ஏன் தூண்டுதல் கூட உள்ளது; இத்தகைய தூண்டுதலில் வரும் மோதல் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு முழு அளவிலான போராக விரிவடைய வாய்ப்பும் உண்டு.

சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிட்டு அதன் சொந்த சுயாதீனமான தீர்வை நெருக்கடிக்கு முன்வைக்க வேண்டும். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களுக்கு அவற்றின் அரசாங்கங்கள் வெளியிடும் நிலப்பரப்பு பற்றிய போட்டிக் கூற்றுக்களில் எந்தப் பங்கும் கிடையாது. இப்பொழுது செய்யவேண்டிய பணி அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றாக இணைந்து அமெரிக்கா மற்றும் உலக ஏகாதிபத்தியம், இலாபமுறை மற்றும் உலகை போட்டியிடும் தேசிய அரசுகளாக அழிவுதரும் வகையில் பிரித்து வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு எதிராகவும் ஒரு பகுத்தறிவு சார்ந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வகையில் உலகப் பொருளாதாரத்தை நிறுவுவதற்கான ஒரு கூட்டுப் போராட்டம் நடத்துவது ஆகும். இதற்கு சீனாவிலுள்ள மாவோவாத ஆளும் உயரடுக்கு, வியட்நாமிலுள்ள ஸ்ராலினிச உயரடுக்கு மற்றும் பிலிப்பைன்ஸிலுள்ள தேசிய முதலாளித்துவம் ஆகியவற்றிற்கு எதிரான, சமரசத்திற்கு இடமில்லாத போராட்டம் நடத்தப்பட வேண்டும்.