World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan worker dies of police-inflicted wounds

பொலிஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களினால் இலங்கைத் தொழிலாளி மரணம்

By our correspondents
3 June 2011
Back to screen version

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணி புரிந்த தொழிலாளியான, 21 வயது ரொசான் சானக ரட்ணசேகர, பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக புதன்கிழமை மரணமடைந்து விட்டார். திங்கட் கிழமை சு.வ.வ. தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது  நீர்பீச்சு இயந்திரம், கண்ணீர் புகை மற்றும் பொல்லுகள் கொண்டு பொலிசார் தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

எந்தவிதமான எதிர்ப்பினையும் அடக்குவதற்காக 2,000 பொலிசாரை நிலை நிறுத்தியிருந்த அரசாங்கத்தின் மீதே ரட்ணசேகரவின் மரணத்துக்கான பொறுப்பு வெளிப்படையாக சுமத்தப்படுகின்றது. அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தங்களின் தொழிற்சாலைக்கு வெளியில் ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பொலிசார் வன்முறைத் தாக்குதலை நடத்தினர். செய்திகள் வேகமாகப் பரவியமை, 40,000 தொழிலாளர்கள் வேலை செய்யும் கட்டுநாயக்க சு.வ.வ. முழுவதும் வேலை நிறுத்தத்துக்கு காரணமாகியது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் அடிப்படையில் அரசாங்கம் கொண்டு வந்த ஓய்வூதிய சட்டத்தினை இரத்துச் செய்யுமாறு சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள். இந்தப் புதிய சட்டம், தனியார் துறை தொழிலாளர்கள் ஒய்வூதியத் திட்டத்துக்கு தங்களின் பங்களிப்பினை வழங்க நெருக்கும். இதனால் அவர்களுக்கு, குறிப்பாக சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

ரட்ணசேகர, கொழும்பில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மினுவாங்கொடயில் உள்ள கல்லொலுவ கிராமத்தில் ஒரு வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவர் ஒரு உருக்கு உற்பத்தி தொழிற்சாலையில் இயந்திர இயக்குனராக வேலை பார்த்து வந்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிசாரின் துப்பாக்கி ரவைகளால் ரட்ணசேகரவின் கால்களில் காயங்கள் ஏற்பட்டன. உறவினர்களின் தகவல்களின் படி, பெருமளவு இரத்தம் இடைவிடாமல் வெளியேறிய போதும், அவர் இரண்டு மணிநேரமாக எந்தவிதமான சிகிச்சைகளும் வழங்கப்படாமல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் பின்னர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார்.

மரணத்துக்கான காரணம் இன்னமும் வெளியிடப்படவில்லை. சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. வைத்தியசாலை ஆணையாளர் டாக்டர் ரோய் பெரேரா, ஊடகங்களுக்கு எந்தவிதமான தகவல்களும் வழங்கக் கூடாது என்று தனக்கு கட்டளையிடப்பட்டிருப்பதாகக் கூறி அவர் மறுத்துவிட்டார்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்தும் அயல் பிரதேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ரட்ணசேகராவின் வீட்டில் குவிந்தனர். மரணச் சடங்கு பொதுமக்களின் சீற்றத்தின் குவிமையமாகும் என உணர்ந்த அரசாங்கம், வீட்டைச் சூழ நூற்றுக்கணக்கான சிப்பாய்களை நிலை நிறுத்தியது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் அங்கு பணியில் இருந்தனர்.

சனிக்கிழமை நடைபெறவிருந்த மரணச் சடங்குக்கு கட்டுப்பாடுகளை திணிக்க "வேண்டுகோள் விடுத்து'' பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு நீதி மன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. தேவாலயத்தில் நடத்தப்படும் மரண நிகழ்வுக்காக அன்றி வேறெந்த இடத்துக்கும் உடலை எடுத்துச் செல்லக் கூடாது என்று மினுவான்கொட நீதவான் கே.கே.ஏ.வி. சுவர்ணாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இறுதிச் சடங்கு மற்றும் வழக்கமான புகழார உரைக்கும் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளியின் தாயார், காந்தி ரட்ணசேகர உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசும் போது: "இப்பொழுது எனது மகன் போய்விட்டார். இந்தக் கொலைக்கு யார் பொறுப்பு என்பது எனக்குத் தெரியாது. எனது மகனைக் கொன்றது பொலிசாரே என்பது எனக்கு தெரியும். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை நாங்கள் பெற்றுக் கொள்ளாததால், எனது மகனின் மரணத்துக்கான உண்மைக் காரணங்களை தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்," என்றார்.

ஹிர்டர்மனி கம்பனியில் தொழில் புரியும் ஒரு தொழிலாளி, அரசாங்கம் பொலிசார் மீது மட்டும் இந்தக் குற்றசாட்டை சுமத்த முயற்சித்தது என்றார். "நாங்கள் அதை நிராகரிக்கின்றோம். இந்த மரணத்தின் பிரதான குற்றவாளி (ஜனாதிபதி) மகிந்த இராஜபக்ஷவே. இந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்களை (எதிர்க்கட்சியான) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) தான் ஒழுங்குபடுத்தியது என்று அரசாங்கம் கூறி வருகின்றது. இல்லை, எந்தவொரு அரசியல் கட்சியினதோ அல்லது தொழிற்சங்கங்களினதோ தலமைத்துவம் இல்லாமல், நாங்களே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை ஓழுங்கு செய்தோம். இந்த வலயத்தில் தொழில் புரியும் சகல தொழிலாளர்களும், இந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு மோசடியானது என்பதை அறிந்து கொண்டுள்ளார்கள்," என்றார்.

"ரொசான் எமது போராட்டத்துக்காக தனது உயிரையே கொடுத்துள்ளார். நாங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். இன்று அது ரொசான், நாளை நானாகவும் இருக்கலாம்," என அவர் மேலும் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு சுதந்திர வர்த்தக வலயத்தினை மூடிய பின்னர், அரசாங்கம் நேற்று அதைத் திறந்த போதிலும், முதலீட்டுச் சபையின் படி 85 வீதமான தொழிலாளர்களே வேலைக்குத் திரும்பியிருந்தார்கள். இந்தப் பிரதேசம் ஒரு யுத்த வலயம் போல் மாற்றப்பட்டிருந்தது. தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக, நூற்றுக்கணக்கான படையினரும் விசேட பொலிஸ் கமாண்டோக்களும் வலயத்தை சூழவும், அத போல் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் வீதிகளிலும் நிலை நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

ரட்ணசேகரவின் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான பிரண்டிக்ஸ் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரண்டிக்ஸ், முதிலீட்டுச் சபையின் திட்டத்திற்கமைய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) "சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடு" என்ற அதன் துண்டுப் பிரசுரத்தினை ஆயிரக்கணக்கில் அந்த ஆர்ப்பாட்டத்தில் விநியோகித்தது.

ஆலோசனைச் சபை பிரதிநிதிகள், தொழிலாளிகளுக்கு கொள்கைகள் தேவையில்லை என்று துண்டுப் பிரசுரத்தினை எதிர்க்க முயற்சித்தனர். ஆனாலும் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் அதை வாங்கி வாசித்தார்கள். சுதந்திர வர்த்தக வலய ஆலோசனை சபைகள் முதலீட்டுச் சபை விதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைத்துவம் நடத்தும் தேர்தல் மூலம் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் மீதான எதிப்பு நடவடிக்கைகளை விரும்பாத தொழிற்சங்கங்களுடனும் நெருக்கமாக உறவுகொண்டுள்ளனர்.

இந்த நிலமைகளை தணிப்பதற்கு இப்போது அரசாங்கம் அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றது. ஓய்வூதியத் திட்டம் தற்போது மீளப் பெறப்பட்டுள்ளது, ஆனாலும் எதிர்வரும் நாட்களில் அது திருத்திய வடிவத்தில் மீண்டும் முன்வைக்கப்படும் என பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புதன்கிழமை, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை ஏற்று, தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். ரட்ணசேகரவின் மரணம் சம்பந்தமான பொதுமக்களின் கோபத்தினை திசை திருப்பும் நடவடிக்கையாக, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை அரசாங்கம் ஒரு அரசியல் எதிர்த் தாக்குதலுக்கு சென்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அரசாங்க பராளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திர வர்த்தக வலயத்தில் நடந்த "வன்முறைக்காக" எதிர்கட்சியான ஜே.வி.பீ. மீது குற்றஞ்சாட்டி, கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். "தொந்தரவு ஏற்படுத்தும் சக்திகள்" அரசாங்கத்தை "ஆட்டங்காணச் செய்வதற்கு" முயற்சிக்கின்றன, என தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது.

அரசாங்கத்தின் பிரதான இலக்கு தொழிலாளர் வர்க்கமே அன்றி, ஜே.வி.பீ. அல்ல. ஓய்வூதியத் திட்டத்தினை எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் அதே வேளை, அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தினையும் ஜே.வி.பீ. எதிர்த்தது. அதன் பிரதான குறிக்கோள் வர்த்தகர்களின் நலன்களைப் பாதுகாப்பதே. புதன் கிழமை ஜே.வி.பீ. தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க, பொலிஸ் தாக்குதலின் விளைவாக மில்லியன் ரூபாய்கள் உற்பத்தியில் நட்டம் ஏற்பட்டுள்ளது என டெயிலி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

26 பொது மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களின் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு (ஜே.டீ.யூ.ஏ.) புதன்கிழமை பொலிஸ் வன்முறைக்கு எதிராக கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கபடுத்தியிருந்தது. அதில் கிட்டத்தட்ட 1,500 பேர் கலந்து கொண்டு அரசாங்கத்துக்கும் பொலிசுக்கும் எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவைகள் தொழிற் சங்கத்தினை சேர்ந்த அன்டன் மார்க்கஸ், இந்தக் கூட்டணி "ஓய்வூதிய மசோதாவை சுருட்டிக்கொள்ள" அழுத்தம் கொடுக்கும் என்று தற்பெருமையுடன் பேசினார். தொழிற் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடன்படாவிட்டால், "நாங்கள் 500.000 சு.வ.வ. தொழிலாளர்களை வீதிக்கு இறக்குவோம்" என அவர் எச்சரித்தார்.

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினைச் சேர்ந்த சமன் ரட்ணப்பிரிய, "அரசாங்கம் தொழிலாளர்களை நசுக்குவதற்காக செயற்பட்டால், நாங்கள் ஒரு பொது வேலை நிறுத்ததினால் பதிலளிப்போம்" என்று அறிவித்தார்.

தொழிலாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்களின் இந்த வீண்பேச்சு-வியாபாரத்தினை கூர்ந்து கவணிக்க வேண்டும். ஜே.டீ.யூ.ஏ. கடந்த வாரமே சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளின் உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, ஓய்வூதிய மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பார்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ள அழைப்பு விடுத்தது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அலட்சியம் செய்து ஏதோவழியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்பொழுது இந்த தலைவர்கள், ஓய்வூதிய சட்டம் சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேச்சுவாத்தைகளுக்குக்கு தொழிற்சங்கங்கள் தயாராகின்ற நிலையில் கூட, தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.

***

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் அருகில் உள்ள நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பல தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களுடன் உரையாடினர். 

தாமலி இரேசாவின் கையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன. "நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது, பிரதான வாயிலை உடைத்துக் கொண்டு பொலிசார் உள்ளே நுழைந்து, எங்களைத் தாக்கியதோடு தொழிற்சாலையையும் சேதப்படுத்தினர். நாங்கள் தப்பியோடி மற்றய தொழிற்சாலைக்குள் ஒழிந்து கொண்டோம். என்னை இரும்புக் கம்பியினால் தாக்கினர். மற்றவர்களும் இதேபோல் தாக்கப்பட்டார்கள். என்னுடன் இருந்த ஒரு பெண்னை தலைக் கவசத்தால் தாக்கினர். அவள் தலையில் காயப்பட்டு மயங்கி விழுந்து விட்டாள். பின்னர் அவளை பொலிஸ் வானுக்குள் இழுத்துச் சென்றனர்," என்று அவர் தெரிவித்தார்.

மங்கள சம்பத், ஆர்ப்பாட்டத்தின் போது சுடப்பட்டார். அவரது கால் தொடையின் ஊடாக ஒரு ரவை பாய்ந்து சென்றதோடு அவரின் விதைகளில் ஒன்றை கடுமையாக சேதப்படுத்தியது. பின்னர் அது சத்திர சிகிச்சையில் அகற்றப்பட்டுள்ளது. சம்பத்தின் சக ஊழியர்கள் அவரை ஒரு சுவருக்கு மேலாகத் தூக்கி, கிராமவாசிகளின் உதவியுடன் நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். "நான் பொலிசாரிடம் பிடிபட்டிருந்தால், நான் சாகும் வரை இரத்தப் பெருக்கெடுக்க பொலிஸ் நிலையதில் தடுத்து வைத்திருந்திருப்பார்கள்" என்று அவர் WSWS இடம் தெரிவித்தார்.

ஒரு இதய நோயாளியான சுமேத சந்திமால், பொலிஸ் தாக்குதல் தொடங்கிய போது தொழிற்சாலை நோயாளர் அறையில் இருந்தார். அவர் ஒழிந்துகொள்ள முயற்சித்த போதும், பொலிசார் அவரை வெளியே இழுத்துச் சென்று கைது செய்தனர். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் முன்னர், இரண்டு மணிநேரத்துக்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்ட்டிருந்தார்.