World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greek prime minister proposes government of national unity as protests spread

ஆர்ப்பாட்டங்கள் பரவும் நிலையில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிரேக்கப் பிரதமர் முன்மொழிகிறார்

By Stefan Steinberg
16 June 2011

Back to screen version

தனது அமைச்சரவையை மாற்றியமைக்கவிருப்பதாகவும் தனது சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டம் அமலாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு தனது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோரவிருப்பதாகவும் நேற்று கிரேக்க பிரதமர் ஜோர்ஜ் போப்பான்ட்ரூ கூறினார்.

முன்னதாக, ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க நாட்டின் கன்சர்வேட்டிவ் எதிர்க் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி (ND) உடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு நாளின் தொடக்கத்தில் அவர் முன்மொழிந்திருந்தார். அத்தகையதொரு அரசாங்கம் இன்னும் கூடுதலான கடன்களைப் பெற்றுக் கொண்டு பிரதிபலனாய் வங்கிகளாலும் “மூவரணி” என்று அழைக்கப்படுகிற ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றாலும் கோரப்படுகின்ற மிகப் பெரும் வெட்டுக்களையும் தனியார்மயமாக்கங்களையும் தொடர்ந்து திணிக்கும்.

ஒரு தேசியக் கூட்டணியில் பாப்போன்ட்ரூவின் சமூக-ஜனநாயகக் கட்சியுடன் ND சேரும் பட்சத்தில் அரசாங்கத்தின் பிரதம பதவியில் இருந்து விலகவும் தான் தயாராய் இருப்பதாக பாப்போன்ரூ ND தலைவரான அண்டோனிஸ் சமராஸிடம் கூறியிருந்தார்.

இது சம்பந்தமாக, நேற்று மாலை கிரேக்கத் தொலைக்காட்சியில் பாப்போன்ரூ தோன்றி திட்டமிடப்பட்ட கூட்டணியின் விவரங்களை எதிர்க்கட்சிகள் கசிய விட்டதாகவும், தான் தனது முடிவைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார். சமராஸும் தன் பங்கிற்கு PASOK உடன் தனது கட்சி ஒத்துழைக்க முடியாது என்றும் ஏனென்றால் “கிரேக்க குடிமக்கள் மற்றும் சந்தைகள் இருதரப்பு நம்பிக்கையையுமே அவர்கள் இழந்து விட்டனர்” என்றும் அறிவித்தார்.

நாட்டின் பிரதான தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து அக்னாக்டிஸ்மேனி (”சீற்றம் கொண்டோர்”) ஆர்ப்பாட்ட இயக்கத்தினால் ஆதரிக்கப் பெற்ற ஒரு நாள் நடவடிக்கை தினத்தை ஒட்டி பத்தாயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்த சமயத்தில் பாப்போன்ரூவின் இந்த யோசனை வந்தது. ஒரு மனிதச் சங்கிலியை உருவாக்கி நாடாளுமன்றத்தை இழுத்து மூடுவது தான் இந்த ஆர்ப்பாட்டத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கம்.

வங்கிகளாலும் மற்றும் போப்போன்ரூவின் அரசாங்கத்தாலும் திணிக்கப்படுகின்ற மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கிரேக்க நாடாளுமன்றத்தின் முன் மறியல் செய்வதற்காகக் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச் செய்யும் பொருட்டு போலிசார் முரட்டுத்தனமாய் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பிரயோகித்து தலையீடு செய்தனர்.

கட்டிடத்துக்கு உள்ளே நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பாப்போன்ரூ அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சமீபத்திய நிதித் திட்டத்தை விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒரு புதிய சுற்று செலவின வெட்டுகள், வரி அதிகரிப்புகள் மற்றும் பல முக்கியமான அரசு நிறுவனங்கள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்கல் ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.

வெளியே, நாடாளுமன்றக் கட்டிடத்தை சுற்றியிருந்த வீதிகள் ஒரு இராணுவ முகாமை ஒத்திருந்தன. நகரின் மத்தியிலிருக்கும் ஏதேன்ஸ் சிண்டாக்மா சதுக்கம் மற்றும் அண்டையிலுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலகத் தடுப்புப் போலிசாரின் ஒரு பெரும் படையணி எதிர்கொண்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன, அத்துடன் நாடாளுமன்றத்துக்குள் செல்கின்ற பிரதான வாசல் உயர்ந்த உலோக வேலி மற்றும் போலிஸ் வேன்கள் மற்றும் பேருந்துகளால் மறிக்கப்பட்டிருந்தன.

இந்த வேலிகளுக்குப் பின்னால் இளைஞர்கள், வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்த சில குடும்பங்கள் எனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கூடியிருந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகளை இராஜினாமா செய்யக் கோரி “இராஜினாமா செய், இராஜினாமா செய்” என முழங்கியது.கூட்டத்தில் முன்னால் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பாய் இருந்த தடுப்புக் கட்டைகளை உலுக்கினர். கூட்டத்தில் இருந்த சிலர் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது சில பொருட்களை வீசிய போது, போலிஸ் கண்ணீர் புகையைக் கொண்டு பதிலடி தந்தது.

25,000க்கும் அதிகமான எண்ணிக்கையிலான மக்களுடன் முன்னர் அமைதியாய்ச் சென்று கொண்டிருந்த பேரணி கலகத் தடுப்புப் போலிசார் பல சுற்று கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்த போது சிதறி ஓடியது. சிண்டாக்மா சதுக்கம் முழுவதும் மூச்சுமுட்டச் செய்யும் புகையால் நிரம்பியது...இது சதுக்கம் முழுமையையும் துரிதமாய் ஆக்கிரமித்தது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் அக்னாக்டிஸ்மேனி இயக்கத்தின் ஆதரவாளர்களையும் ஒரே பக்கத்திற்குக் கொண்டுவந்திருந்தது. இந்த இயக்கம் கடந்த மூன்று வாரங்களாக நாட்டின் பிரதான தொழிற்சங்க அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் சிண்டாக்மா சதுக்கத்தில் அன்றாட ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.

தொழிற்சங்கங்கள் தங்களது ஒரு நாள் பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து நாடு முழுவதிலுமான பொதுப் போக்குவரத்தை முடங்கச் செய்திருந்தன. ஏராளமான மற்ற நகரங்களிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறின. வடக்கு நகரமான தெசலோனிகியில், 20,000 பேர் கலந்து கொண்டதாய் மதிப்பிடப்படுகிறது.

ஏதேன்ஸில் பிரதமர் ஜோர்ஜ் பாப்போன்ட்ரூ மற்றும் கிரேக்க ஜனாதிபதியான கரோலோஸ் பபோலியாஸ் ஆகியோரைத் தாங்கிய கார்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் வழியே கடந்து சென்ற போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. மதிய வேளையில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக ஜனாதிபதி இருப்பிடத்துக்கான குறுகிய தூரத்தைக் காரில் கடந்து செல்கையில் சுமார் நூறு பேர் ஊளையிட்டு கேலி செய்தனர்.

இந்த பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் தேசிய ஒற்றுமைக்கான ஒரு அரசாங்கத்திற்கு அழைப்பு விடும் தனது சிந்தனை குறித்து பாப்போன்ரூ தெரிவித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நாடாளுமன்றத்தின் இரண்டு PASOK பிரதிநிதிகள் தாங்கள் அரசாங்கத்தின் நிதித் திட்டத்திற்கு எதிராய் வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்த நிலையில் பாப்போன்ரூவின் பெரும்பான்மை சுருங்கி வருகிறது. இதுகட்சியின் பெரும்பான்மையை வெறும் நான்கு பிரதிநிதிகள் அளவுக்குக் குறைத்து விடும்.

PASOK நிதித் திட்டத்திற்கு உடன்படுவதென்பது கிரேக்கப் பொருளாதாரத்துக்கு மூவரணி கூடுதலாய் கடனுதவி வழங்குவதற்கான முன்நிபந்தனையாக இருக்கிறது.

ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதற்கும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கும் பாப்போன்ரூ யோசனை கூறியது குறித்து சில ஊடக வருணனையாளர்கள் கருத்துக் கூறுகையில் பாப்போன்ரூ வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் சொந்தக் கட்சிக்குள்ளான அதிருப்தியில் இருந்தும் உருவான நெருக்குதலுக்குப் பதிலிறுப்பு செய்வதாகக் கூறினர். ஆனாலும் மிக முக்கியமாக பாப்போன்ரூவின் கோணத்தில் இருந்து பார்த்தால், இத்தகையதொரு தேசியக் கூட்டணிக்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக கிரேக்க மற்றும் சர்வதேச நிதிப் பிரபுத்துவம் என்கிற அவருடைய உண்மையான பகுதியில் இருந்து வந்துள்ளன.

போர்த்துகலில் சமீபத்தில் நடந்த தேர்தலின் போது சிக்கன நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சி ஒப்புதல் இருக்க வேண்டும் என்பது மூவரணி மற்றும் வங்கிகளின் நிபந்தனையாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பாகத் தான், யூரோ குரூப் தலைவரான ஜோன் குளோட் யுங்கர் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நிதிக் கூட்டம் ஒன்றில் அறிவித்தார்: :சிக்கலில் இருக்கும் நாடுகளில், பின்பற்ற வேண்டியிருக்கும் பாதை குறித்து அந்த நாடுகளின் பிரதான அரசியல் சக்திகள் உடன்பாடு காண்பதே புத்திசாலித்தனமானதாய் இருக்கும். இதைத் தான் நாங்கள் போர்த்துக்கலில் செய்தோம். அது தான் அயர்லாந்திலும் நடந்தது, அது தான் கிரீஸிலும் அரசியல் கட்சிகளுக்கு இடையே நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."

அச்சுறுத்தல்கள், அறிவுரை மற்றும் ஒரு வருங்கால கிரேக்க அரசாங்கத்துக்கான ஆலோசனைகள் இவற்றுடன் சேர்த்து கிரேக்க பொருளாதாரத்தை இன்னும் கொஞ்சம் நெருக்கி முறுக்குவதும் நடந்தது. திங்களிரவு, ஸ்டாண்டர்டு & பூவர்' தரமதிப்பீட்டு முகமை கிரீஸின் கடன் மதிப்பீட்டை B என்பதில் இருந்து CCC என்கிற அளவுக்குக் குறைத்து விட்டது. ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர்'ஸ் கடன் மதிப்பீட்டு வரிசையளிக்கும் 131 அரசுகள் அனைத்திலும் இதுவே மிகக் குறைந்த மதிப்பீட்டு அளவு ஆகும்.

ஒரு நாள் கழித்து, அதே முகமை நான்கு கிரேக்க வங்கிகளுக்கான மதிப்பீட்டையும் Bயில் இருந்து CCC ஆகக் குறைத்து விட்டது. இப்போது பாப்போன்ரூ ஜங்கர் மற்றும் வங்கிகளின் ஆலோசனையை நடைமுறைப்படுத்த முனைகிறார். அதே சமயத்தில், தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் என்று சொல்லப்படுகிற அத்தகைய ஒன்று ஏற்கனவே PASOK அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டதை விடவும் அரக்கத்தனமான சிக்கன நடவடிக்கைகளையே மேற்கொள்ளும் என்பதை சில ஊடகச் செய்திகள் தெளிவாக்கியிருக்கின்றன.

தினசரியான கதிமேரினி (Kathimerini) தனது திங்கள் பதிப்பில், தனது வர்த்தகப் பகுதியில் பின்வருமாறு அறிவித்தது: "எனவே அரசாங்கம், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான அன்டோனிஸ் சமராஸ் கூறும் ஆலோசனைக்கு செவிமடுத்து, கிரீஸின் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டாளிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆலோசனை செய்து இடைக்காலப் பொருளாதார வேலைத்திட்டத்தின் இலக்குகளை எட்டுவதற்கான வழிகளை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் பல்வேறு சக்திகளுடன் கைகோர்க்க வேண்டும்."

இந்தக் கட்டுரை "நாட்டிற்கு வலிமையான தலைமை அவசியம்" என்று குறிப்பிடுவதோடு மேலும் சொல்கிறது: "இரு தலைவர்களும் ஒரு எளிமையான திட்டத்தை வரைவதன் மூலமாக சீர்திருத்தங்களுக்கும் நிதி ஒழுக்கத்திற்கும் நாடு கொண்டிருக்கும் உறுதிப்பாட்டில் கிரீஸின் கூட்டாளி நாடுகளுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்."

பெரும் வேலை இழப்புகள் தனியார் துறையில் நடக்காமல் அரசுத் துறையில் மட்டுமே நடப்பதை உறுதி செய்வது, தொழிலாளர்களை நேரடியாகக் கடுமையாகத் தாக்கும் நுகர்வோர் வரிகளில் வெட்டுகள் செய்வதற்குப் பதிலாக வணிகங்களுக்கு சவுகரியம் ஏற்படுத்தும் வகையில் பெருநிறுவன வரிகளில் தான் வெட்டுகள் செய்யப்படும் என்பதான வாக்குறுதிகள் ஆகியவை இந்த திட்டத்தின் பிரதானக் கூறுகள் ஆகும்.

"ஒப்புக் கொள்ளப்பட்ட கால வரம்புக்குள்ளாக தனியார்மயமாக்கத் திட்டத்தை நடத்துவதற்கு உறுதி கொடுப்பதையும் இரண்டு தலைவர்களும் செய்ய வேண்டும்" என இந்தத் திட்டம் கோருகிறது.

கிரேக்கத் தொழிற் சங்கங்கள் மற்றும் நடுத்தர வர்க்க அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்ட முன்னோக்கான, 'கிரேக்க நாடாளுமன்றக் கட்சிகள் தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளச் செய்வதற்கு வெகுஜன நெருக்குதல்களும் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களுமே போதுமானவை' என்கிற சிந்தனையின் திவால்நிலையை பிரதமர் போப்போன்ரூவிடம் இருந்து தேசிய ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கு வந்திருக்கும் ஆலோசனை அம்பலப்படுத்துகிறது. உண்மையில், கிரேக்க அரசியல் உயரடுக்கு இந்தத் தொடர்ச்சியான ஒருநாள் வேலைநிறுத்தங்களுக்கும் (மொத்தம் பதினைந்து, இந்த ஆண்டில் இதுவரை மூன்று) மற்றும் எண்ணற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பதிலிறுப்பு செய்துள்ள விதம் என்னவென்றால், தங்களுக்குள் நெருக்கத்தை அதிகப்படுத்தியும் கூடுதலான வெட்டுக்களுக்கு நெருக்குதலளித்தும் வருகின்றன.

கிரீஸில் ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதென்பது ஜனநாயக நடைமுறையை ஒரு கேலிக்கூத்தாக்குகிறது. மார்ச்சில் போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் வீழ்ச்சியில் நடந்ததைப் போல, இந்த நடவடிக்கையானது வங்கிகளின் முன்முயற்சியின் பேரில், மக்களின் அறுதிப் பெரும்பான்மையினர் கடுமையாக எதிர்க்கும் செலவின வெட்டுகளை ஒரு புதிய அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வதற்கு வசதியான ஒரு அரசியல் அமைவை உருவாக்கித் தரும் பொருட்டு எடுக்கப்படுவதாகும்.

இத்தகையதொரு அரசாங்கம் அரசின் முழு அதிகாரத்திலும் தங்கியிருக்கும் என்பதால் மக்கள் எதிர்ப்பை அது நசுக்குவதற்கு வகைசெய்யும் வகையில் பாதி-சர்வாதிகார அதிகாரங்களையும் கையிலெடுத்துக் கொள்ளும்.