World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Karl Marx and Frederick Engels

Address of the Central Committee to the Communist League

London, March 1850

காரல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கல்ஸ்

கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய குழுவிற்கான உரை

இலண்டன், மார்ச் 1850

சகோதரர்களே!

Back to screen version

1848-1849 ஆகிய இரண்டு புரட்சிகர ஆண்டுகளில் கழகம் தன்னை இருவழிகளில் நிரூபணம் செய்தது. முதலாவதாய், அதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு இடத்திலும் இயக்கத்தில் தங்களை செயலூக்கத்துடன் ஈடுபடுத்திக் கொண்டதோடு ஊடகங்களில், மறியல்களில் மற்றும் போர்க்களங்களில் தீர்மானமிக்க ஒரே புரட்சிகர வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னிலைகளில் நின்றனர். இயக்கத்தை பற்றிய அதன் விளங்கிக்கொள்ளல் 1847ன் காங்கிரசுகள் மற்றும் மத்திய குழுவினால் விநியோகப்பட்ட சுற்றறிக்கைகளிலும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையிலும் வெளிப்பட்டவாறு ஒரே சரியான ஒன்று என்பது காட்டப்பட்டிருப்பதோடு இந்த ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள் முழுமையாகப் பூர்த்தியாகி இருப்பதிலும் கழகம் தன்னை இன்னும் கூடுதலாய் நிரூபணம் செய்தது. முன்னதாக கழகத்தால் இரகசியமாக பரப்பப்பட்டு வந்த இது இப்போது ஒவ்வொருவரின் உதட்டிலும் வார்த்தைகளாகி நிற்பதோடு பகிரங்கமாக சந்தை வெளியிலும் உபதேசிக்கப்படுகிறது. ஆயினும் அதே சமயத்தில் முன்பு வலிமையான ஒழுங்கமைப்புடன் இருந்த கழகம் கணிசமாய் பலவீனமடைந்துள்ளது. இயக்கத்தில் நேரடியாக ஈடுபட்டிருந்த ஏராளமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் இரகசிய சமூகங்களுக்கான காலம் முடிந்து விட்டது என்றும் பகிரங்கமான நடவடிக்கை மட்டுமே போதுமானது என்றும் நினைத்தனர். தனித்தனி மாவட்டங்களும் கம்யூன்களும் மத்திய குழுவுடனான தங்களது தொடர்புகள் பலவீனமடைந்து கொஞ்சமாய் கொஞ்சமாய் செயலற்ற நிலைக்குச் செல்வதற்கு அனுமதித்தன. எனவே, குட்டி முதலாளிகளின் கட்சியான ஜனநாயகக் கட்சி ஜேர்மனியில் மேலும் மேலும் ஒழுங்கமைப்புற்றதாக ஆகியிருந்த அதே சமயத்தில், தொழிலாளர் கட்சி அது உறுதியாய் கால்பதித்த ஒரே இடத்தையும் தொலைத்து அதிகப்பட்சமாய் தனித்தனியான இடங்களில் உள்ளூர் நோக்கங்களுக்காக ஒழுங்கமைப்பைத் தொடரும் நிலையில் இருக்கிறது; இதன்விளைவாய் பொதுவான இயக்கத்திற்குள்ளாக இது குட்டிமுதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினரின் முழுமையான ஆதிக்கம் மற்றும் தலைமையின் கீழ் வந்திருக்கிறது. இந்த நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது; தொழிலாளர்களின் சுதந்திரம் மீட்சி செய்யப்பட வேண்டும். மத்தியக் குழு இந்த அவசியத்தை உணர்ந்து கழகத்தை ஒருங்கிணைக்க ஜோசப் மோல் என்கின்ற தூதரை ஜேர்மனிக்கு 1848-9 குளிர்காலத்தில் அனுப்பியது. அந்த நேரத்தில் ஜேர்மன் தொழிலாளர்களுக்கு போதுமான அனுபவம் இருக்கவில்லை என்கிற காரணத்தாலும் அதேபோல் சென்ற மே மாதக் கிளர்ச்சி குறுக்கிட்டதன் காரணத்தாலும் மோலின் இலக்கு எந்த நீடித்த விளைவையும் ஏற்படுத்த முடியாமல் போனது. மோலும் ஆயுதம் தரித்து பாடேன்-பலாடினேட் (தற்போது பாடன்-வூட்டம்பேர்க்) படையில் சேர்ந்து முர்க் நதி யுத்தத்தில் ஜூன் 29 அன்று வீழ்ந்தார். அவரை இழந்ததன் மூலம் மிக மூத்த, மிக செயலூக்கமிக்க மற்றும் மிக நம்பகமான உறுப்பினர்களில் ஒருவரைக் கழகம் இழந்திருந்தது. இவர் அனைத்து காங்கிரசுகளிலும் மத்தியக் குழுக்களிலும் பங்கு பெற்றிருந்தார் என்பதோடு முன்னதாக தொடர்ச்சியான பல நடவடிக்கைகளை பெரும் வெற்றியுடன் நடத்தியிருக்கிறார். 1849 ஜூலையில் ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு புரட்சிகரக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், மத்திய குழுவின் ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களுமே இலண்டனில் மீண்டும் ஒன்றுகூடியுள்ளனர்: புதிய புரட்சிகர சக்திகளைக் கொண்டு தங்களது எண்ணிக்கைகளை அவர்கள் மறுநிரப்பல் செய்து கொண்டிருப்பதோடு கழகத்தை புத்துணர்வுடன் மறுஒழுங்கு செய்யவும் புறப்பட்டுள்ளனர்.

இந்த மறுஒழுங்கமைப்பு ஒரு தூதரின் வழியே மட்டுமே செய்யப்பட முடியும். ஒரு புதிய புரட்சி நிச்சயமாகியுள்ள இந்தத் தருணத்தில், அதாவது தொழிலாளர்களின் கட்சியானது 1848ல் நடந்தது போல முதலாளித்துவத்தால் அழைத்துச் சென்று தனக்கு சாதகமாக பயன்படுத்தப்படாத வகையில் அதிகப்பட்சமான ஒழுங்கமைப்பு, ஐக்கியம், மற்றும் சுயாதீனத்துடன் யுத்தத்திற்குள் செல்ல வேண்டிய இந்த சரியான தருணத்தில் தூதரை அனுப்புவது மிக முக்கியமானதாக மத்திய குழு கருதுகிறது.

ஜேர்மன் தாராளவாத முதலாளித்துவம் வெகு விரைவில் ஆட்சிக்கு வரும், வந்தவுடன் உடனடியாய் புதிதாய் வென்ற அதிகாரத்தை தொழிலாளர்களுக்கு எதிராய் திருப்பும் என்று நாங்கள் ஏற்கனவே 1848லியே உங்களிடம் கூறியிருந்தோம். இந்த கணிப்பு எவ்வளவு சரியாய் அமைந்தது என்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். 1848 மார்ச் இயக்கத்தை ஒட்டி அரசு அதிகாரத்தை உண்மையில் கையிலெடுத்தது தான் முதலாளித்துவம் தான், பின் இந்த அதிகாரத்தை போராட்டத்தில் கூட்டாளிகளாய் இருந்த தொழிலாளர்களை மீண்டும் அவர்களது ஒடுக்கப்பட்ட நிலைமைக்கு விரட்டுவதற்குப் பயன்படுத்தியது. முதலாளித்துவம் மார்ச்சில் தோல்வி காணச் செய்யப்பட்டிருந்த நிலப்பிரபுத்துவக் கட்சியுடன் ஒரு கூட்டணிக்குள் நுழைவதன் மூலம் தான் இதனைச் சாதிக்க முடிந்தது, அத்துடன் அந்த நிலப்பிரபுத்துவ சர்வாதிபத்திய கட்சியிடம் மீண்டுமொரு முறை அதிகாரத்தை சரணடையச் செய்ய நேர்ந்தது என்ற போதிலும் அது தனக்கான சாதகமான நிலைமைகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் நிதிச் சிக்கல்களைக் கருதிப் பார்த்தால், புரட்சிகர இயக்கமானது இப்போதிருந்து அபிவிருத்தியின் அமைதியானதொரு பாதையை எடுக்கும் என்பது சாத்தியமானால், காலப் போக்கில் அதிகாரம் மீண்டும் முதலாளித்துவத்தின் கைகளில் வீழ்வதையும் அதன் அத்தனை நலன்களும் பாதுகாக்கப்படுவதையும் இந்த நிலைமைகள் உறுதிசெய்யும். முதலாளித்துவம் தனது அதிகாரத்தை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு மக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வஞ்சத்தை தூண்டிவிடுகின்ற அவசியம் கூட இருக்காது, ஏனென்றால் இந்த வன்முறை நடவடிக்கைகள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புரட்சியால் ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டன. ஆனால் நிகழ்வுகள் இந்த அமைதியான பாதையை எடுக்கப் போவதில்லை. மாறாக நிகழ்வுகளின் வேகத்தை துரிதப்படுத்தக் கூடிய புரட்சியானது பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான எழுச்சியால் தூண்டுவிக்கப்பட்டாலும் சரி அல்லது புனிதக் கூட்டணியாலான புரட்சிகர பேபெலின் தலையீட்டினால் நிகழ்ந்தாலும் சரி உடனடி நிகழக்கூடியதாக உள்ளது. 

1848ல் மக்களுக்கு எதிராக ஜேர்மன் தாராளவாத முதலாளித்துவம் ஆற்றிய அதே துரோகப் பாத்திரம் வரும் புரட்சியில் ஜனநாயகவாத குட்டி முதலாளித்துவத்தால் ஆற்றப்படும். எதிர்க்கட்சி வரிசையில் 1848ல் தாராளவாத முதலளித்துவத்துவம் இருந்த அதே இடத்தில் தான் தற்போது இது அமர்ந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு முந்தைய தாராளவாதிகளைக் காட்டிலும் மிகவும் அபாயகரமானதான இந்த ஜனநாயகக் கட்சி மூன்று கூறுகளால் ஆனது:

1) பெரு முதலாளித்துவத்தின் மிகவும் முற்போக்கான கூறுகள், இவர்கள் நிலப்பிரபுத்துவம் மற்றும் சர்வாதிபத்தியத்தினை உடனடியாகவும் முழுமையாகவும் தூக்கியெறியும் இலக்கினைப் பின்பற்றுகின்றனர். இந்தப் பிரிவு முன்னாள் Berlin Vereinbarer, வரி மறுப்பாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது;

2) அரசியல் சட்ட-ஜனநாயகவாத குட்டி முதலாளித்துவத்தினர். சற்றேறக்குறைய ஒரு ஜனநாயக கூட்டாட்சி அரசை உருவாக்குவது தான் முந்தைய இயக்கத்தின்போது இவர்களின் பிரதான நோக்கமாய் இருந்தது; இதற்குத் தான் பிராங்பேர்ட் சட்ட அவையிலும் பின்னர் ஸ்ருட்கார்ட் நாடாளுமன்றத்திலும் இருந்த இடதுகள் என்னும் அவர்களது பிரதிநிதியினர் வேலை செய்தனர், தாங்கள் குடியரசின் அரசியல்சட்ட பிரச்சாரத்தில் செய்ததைப் போல;

3) குடியரசுவாத குட்டி முதலாளித்துவத்தினர். இவர்களது இலட்சிய இலக்கு சுவிட்சர்லாந்தை ஒத்த ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு. பெரு மூலதனம் சிறு மூலதனத்தின் மீதும் பெரு முதலாளித்துவம் குட்டி முதலாளித்துவத்தின் மீதும் செலுத்துகின்ற அழுத்தத்தைத் தடை செய்கின்ற தயாள விருப்பத்தை மனதில் ஏந்தி மகிழும் காரணத்தால் இவர்கள் இப்போது தங்களை 'சிவப்பு' மற்றும் 'சமூக-ஜனநாயக'  என அழைத்துக் கொள்கின்றனர். இந்தப் பிரிவின் பிரதிநிதிகள் ஜனநாயகக் காங்கிரசுகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களாகவும், ஜனநாயக கூட்டமைப்புகளின் தலைவர்களாகவும் மற்றும் ஜனநாயக செய்தித்தாள்களின் ஆசிரியர்களாகவும் இருந்தனர்

தோல்விக்குப் பின்னர் இந்த பிரிவுகள் எல்லாம் 'குடியரசுவாதிகளாவோ' அல்லது 'சிவப்புக்களாகவோ' கூறிக் கொள்கின்றனர், எப்படி இப்போது பிரான்சில் குடியரசுவாத குட்டி முதலாளித்துவத்தினர் தங்களை 'சோசலிஸ்டுகள்' என்று அழைத்துக் கொள்கிறார்களோ அதைப் போல. வூட்டம்பேர்க், பவேரியா, இன்ன பிற இடங்களில் போல, அரசியல்சட்ட வழிகள் மூலம் தங்கள் இலக்கினைப் பின்பற்றுவதற்கு அவர்கள் இன்னும் ஒரு வாய்ப்பைக் காண முடிகின்ற இடங்களில், தங்களது பழைய வாசகங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு அந்த வாய்ப்பை பிடித்துக் கொள்கின்றனர் என்பதோடு தாங்கள் கொஞ்சமும் மாறவில்லை என்பதைத் தங்கள் நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கின்றனர். மேலும் இந்தக் கட்சியின் பெயர் மாற்றம் தொழிலாளர்களுடனான உறவை கொஞ்சமும் மாற்றவில்லை, மாறாக சர்வாதிபத்தியத்துடன் ஒன்றுசேர்ந்திருக்கின்ற முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு முன்னணியை உருவாக்கவும், பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவை எதிர்நோக்கவும் அது இப்போது கடன்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே நிரூபணம் செய்கிறது என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

ஜேர்மனியில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகக் கட்சி மிகச் சக்திவாய்ந்ததாய் உள்ளது. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், சிறு தொழிற்துறை வியாபாரிகள் மற்றும் நிபுணத்துவ கைவினைஞர்களின் மிகப் பெரும்பான்மையினரை கொண்டிருப்பதோடு மட்டுமல்ல, விவசாயிகளையும் சுதந்திரமான நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்திடம் இருந்து ஆதரவை இன்னும் பெற்றிராத காலத்திற்கு கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தினரையும் கூட தன்னைப் பின்பற்றுவோரில் கொண்டிருக்கிறது.

புரட்சிகர தொழிலாளர்களின் கட்சிக்கு, குட்டி முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினருடன் உள்ள உறவு இதுதான்: தாங்கள் தூக்கி வீச எண்ணும் கட்சிக்கு எதிராக அவர்களுடன் ஒத்துழைப்பது; அவர்கள் தங்கள் சொந்த நிலையைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புமிடங்களில் அவர்களை எதிர்ப்பது.

ஜனநாயகவாத குட்டி முதலாளித்துவத்தினர், ஒட்டுமொத்த சமூகத்தையும்  புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களில் பேரில் உருமாற்ற விரும்புவதற்கு வெகு அப்பால், தற்போதுள்ள சமூகத்தின் சமூக நிலைமையை சாத்தியமான அளவில் தங்களுக்கு சகிக்கத்தக்கதாகவும் வசதியானதாகவும் ஆக்குகிற  மாற்றங்களை மட்டுமே இலட்சியம் கொண்டிருக்கின்றனர். எனவே தான் அவர்கள் எல்லாவற்றுக்கும் முதலாய் அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாக அரசாங்க செலவினத்தைக் குறைப்பதற்கும் பெரும் நிலமுதலாளிகள் மற்றும் முதலாளித்துவத்தினருக்கு பெரும் வரிச்சுமையை மாற்றி விடுவதற்கும் கோருகின்றனர். மேலும் பொதுக் கடன்வழங்கும் ஸ்தாபனங்களை அமைப்பதன் மூலமும் கந்துவட்டிக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமும் சிறு மூலதனத்தின் மீது பெரு மூலதனம் செலுத்துகின்ற அழுத்தத்தை நீக்குவதற்கும் அவர்கள் கோருகின்றனர், இதன்மூலம் அவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முதலாளிகளிடம் இருந்து அல்லாமல் அரசிடம் இருந்து சாதகமான நிபந்தனைகளில் முன்பணங்களைப் பெறுவது சாத்தியமாகும்; அத்துடன், நிலப்பிரபுத்துவத்தை முழுமையாகத் தடைசெய்வதன் மூலமாக நிலத்திலும் முதலாளித்துவ சொத்துறவுகளை அறிமுகப்படுத்தக் கோருகின்றனர். இவை அனைத்தையும் சாதிப்பதற்கு அவர்களுக்கும் அவர்களது விவசாய கூட்டாளிகளுக்கும் பெரும்பான்மையை அளிக்கக் கூடிய ஒரு ஜனநாயக வடிவ அரசாங்கம், அது அரசியல்சட்ட வகையானதாயினும் சரி அல்லது குடியரசுவகையாயினும் சரி, அவர்களுக்கு அவசியமாகிறது; அத்துடன் நகரசபை சொத்துகள் மீதும் மற்றும் இப்போது அதிகாரத்துவவாதிகளின் கரங்களில் இருக்கக் கூடிய தொடர்ச்சியான அரசியல் அலுவலகங்களின் மீதும் அவர்களுக்கு நேரடியான கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் உள்ளாட்சி அரசாங்கத்தின் ஒரு ஜனநாயக அமைப்பும் அவசியமாய் இருக்கிறது.

வாரிசுரிமையைக் குறைப்பதன் மூலமாகக் கொஞ்சமும் சாத்தியமான அதிகப்பட்ச வேலைவாய்ப்பினை அரசுக்கு மாற்றுவதன் மூலமாக கொஞ்சமுமாய் மூலதனத்தின் ஆட்சியும் அதன் துரிதமான பெருக்கமும் முன்நோக்கி எதிர்கொள்ளப்பட வேண்டியதாய் உள்ளது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் மேல் ஒரு விடயம் திட்டவட்டமானதாய் இருக்கிறது: அவர்கள் முன்பு போலவே கூலித் தொழிலாளர்களாய் தான் தொடர இருக்கிறார்கள். எப்படியிருப்பினும், ஜனநாயகக் கட்சி குட்டி முதலாளித்துவத்தினர் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட ஊதியமும் பாதுகாப்பும் கிட்ட விரும்புகின்றனர்; அரசு வேலைவாய்ப்பின் நீட்சியாலும் நல உதவி நடவடிக்கைகளாலும் இதனைச் சாதிக்க அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; சுருக்கமாகச் சொல்வதானால் ஏறக்குறைய பிச்சையின் வடிவத்திலான ஒன்றைக் கொண்டு தொழிலாளர்களுக்குக் கையூட்டு அளிக்கவும் அவர்களின் நிலைமையை தற்காலிகமாய் சகிக்கத்தக்கதாய் ஆக்குவதன் மூலமாக அவர்களது புரட்சிகர வலிமையை நொருக்கவும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இங்கே சுருக்கமாய் கூறப்பட்டுள்ள குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரிக்கைகள் அதன் எல்லா பிரிவுகளாலும் உடனடியாய் வெளிப்படுத்தப்படுகின்றனவை அல்ல, அவற்றின் மொத்தத்தில் அவை அதனைப் பின்பற்றுவோரின் ஒரு வெகு சிலரது வெளிப்படையான இலக்காக மட்டுமே உள்ளன. குட்டி முதலாளித்துவத்தின் இன்னுமான குறிப்பிட்ட தனிநபர்கள் அல்லது பிரிவுகள் இந்தக் கோரிக்கைகளில் அவர்கள் வெளிப்படையாய் தழுவிக் கொள்ளும் அதிகமானவற்றை முன்னெடுக்கிறார்கள், மேலே கூறப்பட்டுள்ளவற்றில் தங்களது சொந்த வேலைத்திட்டத்தை காண்கின்ற வெகு சிலர் புரட்சியில் இருந்து கோரப்படத்தக்க மிக அதிகபட்சமானதை அவர்கள் முனவைத்திருப்பதாக நம்பக் கூடும். ஆனால் இந்தக் கோரிக்கைகள் எந்த வகையிலும் பாட்டாளி வர்க்க கட்சியை திருப்திப்படுத்த முடியாது. ஜனநாயகவாத குட்டி முதலாளித்துவம் அதிகப்பட்சமாய் ஏற்கனவே குறிப்பிட்ட நோக்கங்களை சாதித்து புரட்சியை சாத்தியமான அளவு துரிதமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்ற அதே சமயத்தில், கூடிய மற்றும்  குறைந்த சொத்துடைமை கொண்ட வர்க்கங்கள் அனைத்தும் அவற்றின் ஆளும் நிலைகளில் இருந்து விரட்டப்படும் வரையிலும், பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை வென்றெடுத்திருக்கும் வரையிலும் ஒரு நாட்டில் மட்டுமன்றி உலகின் அத்தனை முன்னணி நாடுகளிலும் அந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தினருக்கு இடையிலான போட்டி மறைந்து குறைந்தபட்சம் உற்பத்தியின் தீர்மானகரமான சக்திகளேனும் தொழிலாளர்களின் கைகளில் குவியும் அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தினரின் கூட்டமைப்பு போதுமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கும் வரையிலும் புரட்சியை நிரந்தரமாக்குவதே நமது நலனும் கடமையும் ஆகும். நமது கவலை வெறுமனே தனியார் சொத்துகளை திருத்தியமைப்பதாக மட்டும் இருக்க முடியாது, மாறாக அதனைத் தடை செய்வதாக, வர்க்க குரோதங்களை பூசிமறைப்பதுவாய் இல்லாமல் வர்க்கங்களை ஒழிப்பதாக, நடப்பு சமூகத்தை மேம்படுத்துவதாய் இல்லாமல் ஒரு புதிய சமூகத்தை நிறுவுவதாக இருக்க வேண்டும். ஜேர்மனியில் புரட்சியின் அடுத்த முன்னேற்றப் பாதையில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினர் அந்தத் தருணத்திற்கு ஒரு மேலாதிக்கமான செல்வாக்கைப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அவர்களை நோக்கிய பாட்டாளி வர்க்கத்தின் பார்வை என்ன, குறிப்பாக கழகத்தின் பார்வை என்ன என்பதுதான் கேள்வி:

1) குட்டி முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினரும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதான நடப்பு நிலைமைகள் தொடர்கிற சமயத்தில்;

2) வருகின்ற புரட்சிகரப் போராட்டத்தில், அவர்கள் ஒரு மேலாதிக்கமான நிலையில் அமர்த்தப்படுகின்றபோது;

3) போராட்டத்திற்குப் பின்னர், குட்டி முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டிருக்கின்ற வர்க்கங்களின் மீதும் பாட்டாளி வர்க்கத்தின் மீதும் மேலாதிக்கம் செலுத்துகிறதான காலத்தில்.

1) ஜனநாயகவாத குட்டி முதலாளித்துவத்தினரும் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்படுகின்ற தருணத்தில், அவர்கள் பாட்டாளி வர்க்கப் பொது ஐக்கியத்துக்கும்  மறுசமரசத்திற்கும் உபதேசிக்கின்றனர்;  அவர்கள் நட்புக் கரம் நீட்டுவதோடு, ஜனநாயகக் கருத்தின் அத்தனை வண்ணங்களையும் தாங்கிய ஒரு மாபெரும் எதிர்க்கட்சியை நிறுவ முனைகின்றனர்; அதாவது பொதுவான சமூக-ஜனநாயக வாசகங்கள் உலாவுகிற அதே சமயத்தில் அவர்களின் குறிப்பான நலன்கள் ஒளிந்து வரக் கூடிய, அமைதியைப் பாதுகாப்பதான பேரில் பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான கோரிக்கைகள் வழங்கப்படாமல் போகக் கூடிய ஒரு கட்சி  அமைப்பில் தொழிலாளர்களைச் சிக்கவைப்பதற்கு அவர்கள் முனைகின்றனர்.  இத்தகையதொரு ஐக்கியம் அவர்களின் அனுகூலமாக மட்டுமே இருக்குமே  அன்றி பாட்டாளி வர்க்கத்திற்கு முழுமையான பின்னடைவையே தரும். பாட்டாளி வர்க்கம் தான் போராடிப் பெற்ற சுயாதீனமான நிலையை இழப்பதோடு  மீண்டுமொரு முறை உத்தியோகபூர்வ முதலாளித்துவ ஜனநாயகத்தின் வெறும் தொங்குதசையாக குறைக்கப்பட்டு விடும். எனவே இந்த ஐக்கியமானது மிகத்  தீர்மானமான வகையில் எதிர்க்கப்பட வேண்டும். தொழிலாளர்களும், அனைத்திற்கும் மேலாய் கழகமும், தங்களை கைதட்டும் பின்பாட்டுக் கூட்டமாக குறைத்துக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு சுயாதீனமான தொழிலாளர் அமைப்பினை உருவாக்குவதற்கு உழைக்க வேண்டும், அத்துடன் உத்தியோகபூர்வ ஜனநாயகக் கட்சியினர், மற்றும் கழகம் ஆகியவற்றுக்கு இணையாய் தனது கம்யூன்களில் ஒவ்வொன்றையும் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடும் நலன்களும் முதலாளித்துவ செல்வாக்கில் இருந்து விடுபட்டு விவாதிக்கப்படக் கூடிய தொழிலாளர் கூட்டமைப்புகளின் ஒரு மையமாகவும் உட்கருவாகவும் ஆக்குவதற்கு நோக்கம் கொண்டிருக்க வேண்டும். பாட்டாளி வர்க்கத்திற்கு சம அதிகாரமும் சம உரிமைகளும் இருக்கக் கூடிய ஒரு கூட்டணியில் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினர் எத்தகைய தீவிரம் காட்டுகிறார்கள் என்பதை பிரெஸ்லவ் (Breslau) ஜனநாயகக் கட்சியினர் விளங்கப்படுத்துகிறார்கள். இவர்கள் தமது அங்கமான Neue Oder Zeitung இல் தாங்கள் சோசலிஸ்டுகள் என்று அழைக்கின்ற சுயாதீனமான ஒழுங்கமைப்பு கொண்ட தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு ஆவேசமான பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொது எதிரிக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு என ஒரு சிறப்புக் கூட்டணி அவசியமில்லாதது. அத்தகையதொரு எதிரி நேரடியாக போரிடப்படுகின்ற உடனேயே, இரண்டு கட்சிகளின் நலன்களும் அத்தருணத்திற்கு ஒன்றாய் இருப்பதால் அத்தருணத்திற்கான அவசரநிலைக் கூட்டணி தன்னியல்பாக வருங்காலத்தில் எழும், கடந்த காலத்தில் எழுந்ததைப் போல. வரவிருக்கும் இரத்தம்பாயும் மோதல்களில், மற்ற அனைத்தில் போலவே, தொழிலாளர்கள் தான் தங்களது தீரம், தீர்மானம் மற்றும் சுய-தியாகத்துடன் வெற்றியைச் சாதிப்பதற்கு பிரதான பொறுப்பாளிகளாய் இருப்பார்கள். கடந்த காலத்தில் போல, வரவிருக்கும் போராட்டத்திலும், குட்டி முதலாளித்துவ வர்க்கம், ஒரு மனிதனுக்கு, சாத்தியமான கால நீளத்திற்கு தயங்கி நிற்பதோடு அச்சத்துடன், தீர்மானமில்லாமலும் செயல்பாடில்லாமலும் தான் தொடரும்; ஆனால் வெற்றி நிச்சயமென்றாகி விட்டால் அது வெற்றியைத் தனதெனக் கூறி தொழிலாளர்களை ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதற்கும், வேலைக்குத் திரும்புவதற்கும் அத்துமீறல்கள் என்பதானவற்றைத் தடுப்பதற்கும் அழைப்பு விடுக்கும், அத்துடன் பாட்டாளி வர்க்கத்தை வெற்றியின் கனிகளைச் சுவைப்பதில் இருந்து அது விலக்கி வைக்கும். குட்டி முதலாளித்துவம் இதனைச் செய்ய விடாமல் தடுக்கும் சக்தி தொழிலாளர்களின் கரங்களில் இல்லை; ஆனால் குட்டி முதலாளித்துவம் தனது அதிகாரத்தை ஆயுதபாணியான பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக பயன்படுத்துவதை ஆகக் கடினமானதாய் ஆக்குவதும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினரின் ஆட்சி தனது வெகு ஆரம்பத்தில் இருந்தே தனது சொந்த அழிவுக்கான விதைகளைத் தனக்குள் கொண்டிருக்கும் நிலையில் அதனையடுத்து அது பாட்டாளி வர்க்கத்தால் இடம்பெயர்க்கப்படுவது கணிசமான அளவில் எளிதாக இருக்கும் வண்ணமான நிபந்தனைகளை அவர்களுக்கு உத்தரவிடுவதற்குமான சக்தி தொழிலாளர்களின் கரங்களில் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாய் போராட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் தொழிலாளர்கள் எவ்வளவு சாத்தியமோ அந்த மட்டத்திற்கு  சாந்தப்படுத்துவதற்கான முதலாளித்துவ முயற்சிகளை எதிர்ப்பதோடு ஜனநாயகக் கட்சியினரை அவர்களின் தீவிரவாத  வாசகங்களை மேற்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கவும் வேண்டும். உடனடியான புரட்சிகர உத்வேகம் வெற்றிக்குப் பின் திடீரென அடக்கிவிடப்படாமல் பார்த்துக் கொள்வதற்கு அவர்கள் உழைக்க வேண்டும். மாறாக அது சாத்தியமான காலத்திற்கு தாக்குப் பிடிக்கச் செய்யப்பட வேண்டும். அத்துமீறல்களாய் கூறப்படும் இத்தகையவற்றில் - வெறுப்புக்குள்ளான தனிநபர்களுக்கு எதிராகவோ அல்லது வெறுப்பான நினைவுகள் தொடர்பான கட்டிடங்கள் மீதோ நடத்தப்படும் மக்கள் வன்முறையின் நிகழ்வுகள் - தொழிலாளர்களின் கட்சியானது இந்த செயல்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு அவற்றுக்கு வழிகாட்டலும் கூட வழங்க வேண்டும். போராட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் தொழிலாளர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினருக்கு நிகராக தங்களது சொந்தக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஜனநாயக முதலாளித்துவம்  அரசாங்கத்தினை கையிலெடுக்கச் சென்ற உடனேயே தொழிலாளர்களுக்கான உத்திரவாதங்களுக்கு அவர்கள் கோர வேண்டும். அவசியப்பட்டால் அவர்கள் இந்த உத்தரவாதங்களை பலவந்தமாக சாதிக்க வேண்டும், அத்துடன் பொதுவாக புதிய  ஆட்சியாளர்கள் சாத்தியமான அனைத்து சலுகைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் - சமரசப்படுவதற்கான நிச்சயமான வழி - தங்களை பொறுப்பாக்கிக் கொள்வதை உறுதி செய்யவேண்டும். ஒவ்வொரு வெற்றிகரமான வீதி மோதலையும் தொடர்ந்து உருவாகும் வெற்றிக் களிப்பையும் புதிய சூழ்நிலைக்கான ஆர்வத்தையும், நிலைமை குறித்த ஒரு சிறந்த மனத் திடமான ஆய்வுடனும் புதிய அரசாங்கத்தின் மீது எந்த வேடமுமற்ற அவநம்பிக்கையுடனும் ஒவ்வொரு வழியிலும் சாத்தியமான தூரத்திற்கு அவர்கள் சோதிக்க வேண்டும். புதிய உத்தியோகபூர்வ அரசாங்கங்களுக்கு இணையாக அவர்கள் அதேசமயத்தில் தங்களது சொந்த புரட்சிகர தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவ வேண்டும், உள்ளூர் நிர்வாகக் குழுக்கள் அல்லது கவுன்சில்களின் வடிவிலோ அல்லது தொழிலாளர்களின் மன்றங்கள் அல்லது குழுக்கள் வடிவிலோ. அப்போது தான் முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கங்கள் உடனடியாகத் தொழிலாளர்களது ஆதரவை இழப்பது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே தாங்கள்  ஒட்டுமொத்த தொழிலாளர்களை பின்னே கொண்டிருக்கக் கூடிய அதிகாரங்களால் கண்காணிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வரும் நிலையில் காண்பார்கள். ஒரே வார்த்தையில் சொல்வதானால், வெற்றி பெற்ற தருணத்தில் இருந்து, தொழிலாளர்களின் சந்தேகமானது தோல்வியடைந்த பிற்போக்குவாதக் கட்சிக்கு எதிராக இனியும் செலுத்தப்பட்டுக் கொண்டிராமல் மாறாக தங்களது முன்னாள் கூட்டாளிக் கட்சி, அதாவது பொது வெற்றியை தனக்காகச் சுரண்டிக் கொள்ளும் நோக்கம் கொண்டிருக்கக் கூடிய கட்சிக்கு எதிராக செலுத்தப்பட வேண்டும்.

2. வெற்றி பெற்ற முதன்முதல் மணி நேரத்திலேயே தொழிலாளர்கள் மீதான காட்டிக் கொடுப்பை தொடங்கக் கூடிய இந்தக் கட்சியை பலவந்தமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் எதிர்க்க முடிய வேண்டுமென்றால், தொழிலாளர்கள் ஆயுதபாணியாக்கப்படவும் ஒழுங்கமைக்கப்படவும் வேண்டும். ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கமும் உடனடியாக குழல் துப்பாக்கிகள், ரைபிள்கள், பீரங்கிகள் மற்றும் வெடிமருந்துகளால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும், அத்துடன் தொழிலாளர்களுக்கு எதிராய் செலுத்தப்பட்ட பழைய பாணி குடிமக்கட் படைக்கு மீண்டும் உயிரளிப்பதை எதிர்க்க வேண்டும். இந்தப் படை உருவாக்கத்தை தடுக்க முடியாத இடங்களில், தொழிலாளர்கள் தங்களை சுயாதீனமாக ஒரு பாட்டாளி வர்க்க காவற்படையாக ஒழுங்கமைத்துக் கொள்ள முயல வேண்டும், அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாய் இருப்பார்கள் அத்துடன் அதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பொது அலுவலர்களும் இருப்பார்கள்; அவர்கள் தங்களை அரசு அதிகாரத்தின் உத்தரவுகளின் கீழ் நிறுத்திக் கொள்வதற்கு முயலாமல் தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட புரட்சிகர உள்ளாட்சிக் கவுன்சில்களின் கீழ் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் அரசால் நியமிக்கப்படுகிற இடங்களில், அவர்கள் தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடனான ஒரு சிறப்புப் படையணியாகவோ அல்லது பாட்டாளி வர்க்கப் படையின் ஒரு பகுதியாகவோ ஆயுதபாணியாக்கி ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். எந்த சாக்குப்போக்கின் கீழும் ஆயுதங்களையோ வெடிமருந்தையோ சரணடையச் செய்யக் கூடாது; தொழிலாளர்களை நிராயுதபாணியாக்குவதற்கான எந்த முயற்சியும் ஏமாற வேண்டும், அவசியப்பட்டால் பலவந்தமாக. தொழிலாளர்கள் மீது முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினர் செலுத்தும் செல்வாக்கை அழிப்பது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆட்சிக்கு சமரசமாய் அமையக் கூடிய நிபந்தனைகளைத் திணிப்பது (இத்தருணத்தில் அதனைத் தவிர்க்க முடியாது) மற்றும் அந்த ஆட்சியை சாத்தியமான அளவுக்கு சிரமமானதாக ஆக்குவது - இவை தான் வரவிருக்கும் எழுச்சியின் சமயத்திலும் அதற்குப் பின்னரும் பாட்டாளி வர்க்கமும் எனவே கழகமும் மனதில் கொள்ள வேண்டிய பிரதான அம்சங்கள் ஆகும்.

3. புதிய அரசாங்கங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட உடனேயே தொழிலாளர்களுக்கு எதிரான அவர்களது போராட்டம் ஆரம்பமாகும். ஜனநாயகவாதக் குட்டி முதலாளித்துவத்தை பலவந்தமாக தொழிலாளர்களால் எதிர்க்க முடிய வேண்டுமென்றால் எல்லாவற்றுக்கும் முதலாய் அவர்கள் மன்றங்களில் சுயாதீனமாக ஒழுங்கமைந்தும் மையப்படுத்தபட்டும் இருப்பது மிக அவசியமானது. நடப்பு அரசாங்கங்கள் தூக்கியெறியப்பட்ட பின் சாத்தியமான வெகுதுரிதமான கணத்தில் மத்தியக் கமிட்டி ஜேர்மனிக்கு வரும், உடனடியாக காங்கிரசைக் கூட்டும். அதில் இயக்கத்தின் செயல்பாடுகளின் மையத்தில் நிறுவப்படுகின்ற ஒரு ஆணையத்தின் கீழ் தொழிலாளர் மன்றங்களை மத்தியப்படுத்த அவசியமான ஆலோசனைகள் முன்வைக்கப்படும். தொழிலாளர் மன்றங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் இடைக்காலத் தொடர்புகளையேனும் துரிதமாய் ஒழுங்கமைப்பது தொழிலாளர்கள் கட்சியின் வலிமைப்படுத்தலுக்கும் அபிவிருத்திக்கும் முதல் அவசியங்களாய் இருப்பவற்றுள் ஒன்றாகும்; நடப்பு அரசாங்கங்களைத் தூக்கியெறிவதின் உடனடி விளைவாக ஒரு தேசிய பிரதிநிதித்துவ அங்கத்தை தேர்ந்தெடுப்பது அமையும். இங்கே பாட்டாளி வர்க்கம் பார்த்துக் கொள்ள வேண்டியவை:

1) உள்ளாட்சி அதிகாரிகளும் அரசாங்க ஆணையர்களும் கூர்மையான நடைமுறைகளின் மூலமாக எந்த ஒரு சாக்குப்போக்கின் கீழும் தொழிலாளர்களின் எந்தப் பிரிவையும் விலக்கி விடாமல் இருக்க வேண்டும்

2) எல்லா இடங்களிலும் முதலாளித்துவ-ஜனநாயக வேட்பாளர்களுக்கு எதிராக தொழிலாளர்களின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும். சாத்தியமான மட்டத்திற்கு அவர்கள் கழக உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அத்துடன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதென்பது சாத்தியமான அனைத்து வழிகளின் மூலமாகவும் பின்பற்றப்பட வேண்டும். தாங்கள் தேர்வாகும் சாத்தியம் குறைவாக உள்ள இடங்களிலும் கூட தொழிலாளர்கள் தங்கள் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தங்களது சொந்த வலிமையை அளவிடும் பொருட்டும், அத்துடன் தங்களது புரட்சிகர நிலைப்பாட்டையும் கட்சிப் பார்வையையும் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்ற வகையிலும் தங்களது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். தொழிலாளர்கள் வேட்பாளர்களை நிறுத்துவது ஜனநாயகக் கட்சியை பிளவுபடுத்தி விடும் என்றும் பிற்போக்குவாத சக்திகளுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கி விடும் என்றும் ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து கூறுவார்கள், அவர்களின் வெற்று வாசகங்களால் தொழிலாளர்கள் சிதறிப் போய்விடக் கூடாது. இந்த பேச்சுகள் எல்லாம் இறுதி ஆய்வில் பாட்டாளி வர்க்கத்திடம் சுருட்டுவதற்கு என்றே அர்த்தம் அளிக்கின்றன. இந்த வகையில் சுயாதீனமாகச் செயல்படுவதன் மூலமாக பாட்டாளி வர்க்கக் கட்சி செய்யக் கூடிய முன்னேற்றம் என்பது இப்பிரதிநிதித்துவ அமைப்பில் ஒரு சில பிற்போக்குவாதிகள் இருப்பதால் விளையக் கூடிய அனுகூலக் குறைச்சல்களைக் காட்டிலும் வரம்பற்ற கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாகும். ஜனநாயக சக்திகள் வெகு ஆரம்பத்தில் இருந்தே பிற்போக்குவாதத்திற்கு எதிரான தீர்மானமான, தீவிரமான நடவடிக்கையை எடுக்குமானால், தேர்தலில் பிற்போக்குவாதத்தின் செல்வாக்கானது ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டதாய் ஆகியிருக்கும்.

முதலாம் பிரெஞ்சுப் புரட்சியில் கண்டது போல நிலப்பிரபுத்துவத்தை தடைசெய்வது குறித்த விடயம் தான் முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினர் தொழிலாளர்களுடன் மோதலுக்கு வருகின்ற முதலாவது அம்சமாக இருக்கும், நிலப்பிரபுத்துவ நிலங்களை விவசாயிகளுக்கு இலவச உடைமையாய் வழங்குவதற்கு குட்டி முதலாளித்துவ வர்க்கம் விரும்பும்; அதாவது அவர்கள் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தை அப்படியே வைத்திருப்பதற்கும் அத்துடன் பிரெஞ்சு விவசாயியை இன்றுவரை பாதித்து வரும் வறுமை மற்றுக் கடனின் அதே சுழற்சிக்கு ஆட்படத்தக்க ஒரு குட்டி முதலாளித்துவ விவசாயிகளை உருவாக்கவும் முயலுவர். தொழிலாளர்கள் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தின் நலனிலும் சரி மற்றும் தங்களது சொந்த நலனிலும் சரி இந்த வேலைத்திட்டத்தை எதிர்த்தாக வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட நிலவுடைமைச் சொத்துக்கள் அரசு சொத்தாகவே இருப்பதையும் அவற்றில் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தால் பெருநிலை விவசாயத்தின் அனைத்து அனுகூலங்களையும் கொண்டு கூட்டு விளைச்சல் உருவாக்கப்படுவதையும் தொழிலாளர்கள் கோர வேண்டும். முதலாளித்துவ சொத்து உறவுகளின் நடுக்கமான அமைப்புமுறைக்கு இடையில் பொதுச் சொத்துக் கோட்பாடு உடனடியாக ஒரு வலிமையான அடிப்படையை உருவாக்கும். எப்படி ஜனநாயகக் கட்சியினர் விவசாயிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றனரோ அதேவகையில் தொழிலாளர்கள் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்துடன் தங்களை கூட்டணி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகக் கட்சியினர், ஒன்றில் ஒரு கூட்டமைப்புக் குடியரசை நோக்கி வேலை செய்வார்கள், அல்லது குறைந்தபட்சம், அவர்களால் ஒரே பிரிக்கவியலாத குடியரசைத் தவிர்க்கமுடியாதென்றால் நகராட்சிகளுக்கும் மாகாணங்களுக்கும் சாத்தியமான மிக அதிக தன்னாட்சியையும் சுதந்திரத்தையும் அளிப்பதன் மூலம் மத்திய அரசாங்கத்தை முடக்குவதற்கு முயலுவார்கள். இந்தத் திட்டத்திற்கு எதிரான வகையில், தொழிலாளர்கள் பிரிக்கமுடியாத ஒரே ஜேர்மன் குடியரசுக்காக மட்டும் பாடுபட்டால் போதாது, குடியரசுக்குள்ளாக அதிகாரம் அரசு அதிகாரத்தின் கரங்களில் மிகத் தீர்மானகரமான வகையில் மத்தியப்படுத்தப்படுவதற்கும் பாடுபட்டாக வேண்டும். நகராட்சிகளின் சுதந்திரம், சுய-அரசாங்கம் போன்ற வெற்று ஜனநாயகப் பேச்சுகளால் தங்கள் கவனத்தைச் சிதறடிக்க அவர்கள் விடக் கூடாது. மத்திய காலங்களின் எச்ச சொச்சங்கள் இன்னும் தடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கின்ற, ஏராளமான உள்ளாட்சி மற்றும் மாகாணப் பிடிவாதம் நொருக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறதான ஜேர்மனி போன்றதொரு நாட்டில், ஒரு மத்தியப்பட்ட புள்ளியில் இருந்து மட்டுமே முழுத் திறனுடன் அபிவிருத்தி செய்யப்படத்தக்க ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் மற்றும் ஒவ்வொரு மாகாணத்திலும் புரட்சிகர செயல்பாட்டின் வழியில் புதிய தடைக்கற்களை வைப்பதை எந்த சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது. ஒரே அளவிலான முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு நகரத்திலும் மாகாணத்திலும் ஜேர்மன்கள் ஒரு தனித்தனியான போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் நடப்பு சூழ்நிலையை புதுப்பிப்பதையும் சகித்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றிலும் குறைந்ததாய் உள்ளாட்சி அரசாங்கத்தின் சுதந்திர அமைப்புமுறை என்று அழைக்கப்படுவதான ஒன்று நவீன தனியார் சொத்தினைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய, எல்லா இடங்களிலும் தவிர்க்கவியலாமல் தனியார் சொத்தாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற சொத்து வடிவத்தினை காலவரம்பின்றி தொடரச் செய்வதற்கு அனுமதிக்கப்பட முடியாது; சமுதாயச் சொத்து (Communal property) என்ற பெயரில் ஏழை மற்றும் பணக்கார சமுதாயங்களுக்கு (Rich communities) இடையே இது பின்விளைவான மோதல்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல் உள்ளாட்சி அரசாங்கத்தின் சுதந்திர அமைப்புமுறை என்று அழைக்கப்படுவதான இந்த ஒன்று தொழிலாளர்களுக்கு  எதிராகச் செலுத்தப்படும் கூர்மையான நடைமுறைகளைக் கொண்ட தனது சமுதாய சிவில் சட்டத்தை அரசு சிவில் சட்டத்திற்கு இணையாகச் செயல்படும் வகையில் தொடர்ந்து தக்க வைப்பதற்கும் அனுமதிக்கப்பட முடியாது. 1793ல் பிரான்சில் நடந்ததைப் போல, கடுமையான மத்தியப்படுத்தலை முன்னெடுப்பது ஜேர்மனியில் உண்மையான புரட்சிகரக் கட்சியின் கடமையாகும்.

[இந்தப் பத்தி ஒரு தவறான விளக்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பது இன்று நினைவுகூரப்பட வேண்டும். அந்த சமயத்தில், போனபார்டிச மற்றும் தாராளவாதத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பொய்ப்புரட்டாளர்களின் கைங்கர்யத்தால், பிரெஞ்சு நிர்வாகத்தின் மத்தியப்படுத்தப்பட்ட எந்திரம் மகா புரட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது என்றும் குறிப்பாக வெளி எதிரியின் முடியாட்சி மற்றும் குடியரசுவாத பிற்போக்கினைத் தோற்கடிப்பதற்கு திருச்சபையால் அது விலக்க முடியாத தீர்மானமான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது என்றும் நிறுவப்பட்டிருந்ததாக கருதப்பட்டது. ஆயினும், புரட்சிக் காலம் முழுவதிலும் பதினெட்டாவது புருமேர் வரையிலும் துறைகள், நிர்வாகங்கள் மற்றும் கம்யூன்களின் ஒட்டுமொத்த நிர்வாகமும் அந்தந்த தொகுதியினராலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளையே கொண்டிருந்தன என்பதும், இந்த அதிகாரிகள் பொதுவான அரசுச் சட்டங்களுக்குள்ளாக முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டனர் என்பதும்; அமெரிக்க வகையை ஒத்திருந்த இந்த மாகாண மற்றும் உள்ளூர் தன்னாட்சி அரசாங்கங்கள் துல்லியமாக புரட்சியின் மிகச் சக்திவாய்ந்த நெம்புகோலாய் இருந்தன. உண்மையில் எந்த மட்டத்திற்கு என்றால், பதினெட்டாம் புரூமேரைக் கவிழ்த்த நெப்போலியன் உடனடியாக அதனை அரசுப் பிரதிநிதிகளின் நடப்பு நிர்வாகத்தைக் கொண்டு இடம்பெயர்க்க அவசரம் காட்டினார், எனவே அது ஆரம்பத்தில் இருந்தே ஒரு தூய்மையான பிற்போக்குச் சாதனமாக இருந்தது என்பதும் இப்போது ஒரு நன்கறிந்த உண்மையாக இருக்கிறது. ஆனால் உள்ளாட்சி மற்றும் மாகாண சுயாட்சி என்பதற்கு அதிகமாய் அரசியல், தேசிய மத்தியப்படுத்தலுக்கு பேதம் கொண்டிருப்பது எதுவுமில்லை, அது குறுகிய மனப்பான்மையுடனான கன்டோன் அல்லது கம்யூன் சுய-தேடலுடன் பிணைந்திருக்கிறது, இது சுவிட்சர்லாந்தில் மிக எதிர்த்து நிற்பதோடு, 1849ல் இதனையே தெற்கு ஜேர்மன் கூட்டாட்சி குடியரசுவாதிகள் விதியாக மாற்ற விரும்பினார்கள் - 1885 பதிப்பிற்கான ஏங்கல்ஸ் குறிப்பு.]

அடுத்த எழுச்சி எவ்வாறு ஜனநாயகக் கட்சியினரை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் என்பதையும் அவர்கள் எவ்வாறு ஏறக்குறைய சோசலிச வகைப்பட்ட நடவடிக்கைகளை முன்வைக்க தள்ளப்படுவார்கள் என்பதையும் பார்த்திருக்கிறோம். பதிலுக்கு தொழிலாளர்கள் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது கேட்கப்படும். தொழிலாளர்கள் ஆரம்பத்தில் நேரடியான கம்யூனிச நடவடிக்கைகளை முன்வைக்க முடியாது என்பது உண்மையே. ஆனால் பின்வரும் பாதைகள் சாத்தியமானவை:

1. நிலவும் சமூக ஒழுங்கின் பல துறைகளில் உள்ளே பாதையமைக்கும்படி ஜனநாயகக் கட்சியினரை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியும், இதன் மூலம் அதன் வழமையான செயல்பாடு நெருக்குதலுக்குள்ளாகும், எனவே குட்டி முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியினர் தங்களை சமரசப்படுத்திக் கொள்வார்கள்; மேலும் சாத்தியமான எண்ணிக்கையில் பல உற்பத்தி சக்திகளை - போக்குவரத்து சாதனங்கள், தொழிற்சாலைகள், இரயில்வே போன்றவை - அரசின் கைகளில் குவிப்பதற்கு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்க முடியும்.

2. ஜனநாயகக் கட்சியினரின் முன்மொழிவுகளை அவற்றின் தர்க்கரீதியான உச்சத்திற்கு தொழிலாளர்கள் தள்ளி (எப்படியென்றாலும் ஜனநாயகக் கட்சியினர் ஒரு சீர்திருத்தவாத வகையில் தான் செயல்படுவார்களே அன்றி ஒரு புரட்சிகர வகையில் அல்ல) இந்த முன்மொழிவுகளை தனியார் சொத்தின் மீதான நேரடித் தாக்குதல்களாய் மாற்ற வேண்டும். உதாரணமாக இரயில் பாதைகளையும் தொழிற்சாலைகளையும் வாங்குவதற்கு குட்டி முதலாளிகள் முன்மொழிந்தால், தொழிலாளர்கள் இந்த இரயில் பாதைகளையும் தொழிற்சாலைகளையும் வெறுமனே பிற்போக்குவாதிகளின் சொத்தாகக் கருதி இழப்பீடில்லாமல் அரசினால் பறிமுதல் செய்யப்பட வேண்டுமெனக் கோர வேண்டும். ஜனநாயகக் கட்சியினர் ஒரு விகிதாசார வரிமுறையைக் கோரினால், தொழிலாளர்கள் ஒரு முற்போக்கு வரிமுறையைக் கோர வேண்டும்; ஜனநாயகக் கட்சியினரே ஒரு கண்ணியமான முற்போக்குவரியை முன்மொழிவார்களேயானால், அப்போது பெரு மூலதனமே அழியக் கூடிய வகையில் பெரும் விகிதத்தில் மேலே செல்லக் கூடிய ஒரு வரியமைப்பை தொழிலாளர்கள் வற்புறுத்த வேண்டும். அரசுக் கடனை ஒழுங்குபடுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினர் கோரினால் தொழிலாளர்கள் அரசுத் திவால்நிலையைக் கோர வேண்டும். இவ்வாறு ஜனநாயகக் கட்சியினரின் நடவடிக்கைகள் மற்றும் சலுகைகளுக்கு தக்கவாறு தொழிலாளர்களின் கோரிக்கைகளும் சரிசெய்துகொள்ளப்பட வேண்டும்.

ஒரு நெடிய புரட்சிகர அபிவிருத்தியின் வழியே கடந்து வராமல் ஜேர்மன் தொழிலாளர்கள் அதிகாரத்துக்கு வர முடியாது, அத்துடன் தங்களது வர்க்க நலன்களையும் அடைய முடியாது. என்றபோதிலும், இந்தமுறை, வரவிருக்கும் புரட்சிகர நாடகத்தின் முதல் காட்சி பிரான்சில் தமது சொந்த வர்க்கத்தின் நேரடியான வெற்றியின் சமகாலத்தில் நடக்கும், எனவே துரிதப்படும் என்பதிலேனும் அவர்கள் நிச்சயமாய் இருக்கலாம். ஆனால், தங்களது சொந்த வர்க்க நலன்களைத் தங்களுக்கே சொல்லிக் கொள்வதன் மூலமும், முடிந்த அளவு துரிதமாக தங்களது சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமும், ஜனநாயகவாதக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரின் கபடவேட வாசகங்களால் தவறாக வழிநடத்தப்பட்டு ஒரு நிமிடமேனும் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிக்கான அவசியத்தின் மீது சந்தேகம் கொள்ள தங்களை அனுமதிக்காமல் இருப்பதன் மூலமும் தங்களது சொந்த இறுதி வெற்றிக்கு அவர்கள் தான் அதிகமான பங்களிப்பு செய்து கொண்டாக வேண்டும். நிரந்தரப் புரட்சி என்பதே அவர்களது போர் முழக்கமாய் இருக்க வேண்டும்.