World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No prospect of global “economic recovery”

உலகளாவிய பொருளாதார மீட்சிக்கான வாய்ப்பு எதுவும் தென்படவில்லை

Nick Beams
7 May 2011
Back to screen version

உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்தான ஒரு மீட்சியை உலகப் பொருளாதாரம் பெறும் என்பதான எந்தக் கருத்தும் பிரிட்டனில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் தகவல்களால் நொருங்கிப் போயுள்ளன. 2010ன் இறுதிக் காலாண்டில் 0.5 சதவீதம் சுருக்கம் கண்டிருந்த பிரிட்டிஷ் பொருளாதாரம் இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களின் சலனமின்மை பிரிட்டன் அடுத்துமொரு மந்தநிலையின் விளிம்பில் நிற்பதான எச்சரிக்கைகளை தூண்டியிருக்கின்றன.

அமெரிக்காவில், முதலாம் காலாண்டுக்கான வருடாந்திர வளர்ச்சி விகிதம் சென்ற காலாண்டில் பதிவான 3.1 சதவீதத்தில் இருந்து சரிந்து 1.8 சதவீதமாக சரிவு கண்டிருக்கிறது. கடந்த ஆண்டுக் காலத்தில், அமெரிக்க பொருளாதாரம் வெறும் 2.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இது தொழிலாளர் பிரிவின் அதிகரிப்பு வீதத்திற்கு ஈடுகொடுக்க அவசியமான 2.5 சதவீதத்திற்கும் குறைவானதாய் இருக்கிறது.

ஐரோப்பிய பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஜூன் மாதத்தில் வட்டி வீதம் அதிகரிப்பதற்கு சாத்தியம் குறைவு என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் ஜோன்-குளோட் திரிஷே சுட்டிக்காட்டியிருந்த நிலையில் உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சங்கள் இந்த வாரத்தில் பங்குச் சந்தை மற்றும் பண்டச் சந்தைகளில் விற்று விடும் போக்கைத் தூண்டின.

அமெரிக்கத் தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் வேலைவாய்ப்பு சூழ்நிலை ஒரு சமூகப் பேரழிவு நிலை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தொழிலாளி சராசரியாய் வேலையின்றி இருக்கும் நேரம் 39 வாரங்களாக அதிகரித்திருக்கிறது. இது வரலாற்றில் மிக நீளமான காலமாகும். குறிப்பாக இளைஞர்கள் தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 வயது முதல் 24 வயது வரையான இளைஞர்களில் வேலையிமையின் அளவு சென்ற ஆண்டில் 18.4 சதவீதமாக இருந்தது. இதுவும் ஒரு முன்கண்டிராத அளவே.

பிரிட்டனிலும் சரி அமெரிக்காவிலும் சரி பொருளாதாரச் சூழ்நிலையானது போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் கண்டிராத நிகழ்முறைகளால் குறிக்கப்படுவனவாய் இருக்கிறது. பிரிட்டனில் உண்மை வருவாய்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக சுருங்கி வந்திருக்கிறது, 1870களுக்குப் பின்னர் இப்போது தான் இது முதன்முறையாக நேர்கிறது. ஒவ்வொரு வீட்டின் வரிக்குப் பிந்தைய வருவாயும் இந்த வருடத்தில் 2 சதவீதம் சரியும் என்று மதிப்பிடப்படுகிறது. இயல்புக்குத் திரும்புவது என்பதே கண்ணுக்குப் புலப்படாத நிலையில் இருக்கையில், நிதி நிலைமையானது எளிதில் நொருங்கும் தன்மையுடன் தான் இருக்கிறது. நீண்டகால வட்டி விகிதங்களில் அதிகரிப்பு இருந்தால் அது கடுமையான பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று இந்த வாரத்தில் இங்கிலாந்து வங்கியின் ஆளுநரான மேர்வின் கிங் எச்சரித்தார்.

அமெரிக்காவில், கடந்த வருடத்தில் இலாபங்கள் அதிகரித்திருந்த போதிலும், அங்கு எந்தப் பொருளாதார மீட்சியும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த அதிகரித்த இலாபங்கள் சந்தைகள் விரிந்ததால் கிட்டியவையல்ல மாறாக செலவினக் குறைப்புகளால், குறிப்பாக சம்பள வெட்டுக்களால் விளைந்ததாகும். இதன்விளைவாக, இந்த இலாபங்கள் புதிய முதலீடுகளாக மீண்டும் வணிகத்துக்குள்ளேயே திரும்ப இடப்படவில்லை - இந்த முறையில் தான் இயல்பு நிலைமைகளில் வணிகச் சுழற்சி நடக்கும் - ஏனென்றால் சந்தைகளில் தேக்க நிலையே தொடரும் அல்லது இன்னும் கூட சுருங்கலாம் என்று அமெரிக்க நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

கடந்த ஆண்டின் இறுதியில் நிலையான வணிக முதலீடுகளின் அளவு நிதி நெருக்கடி தோன்றியதற்கு முன்பிருந்ததை விட சுமார் 15 சதவீதம் குறைவாய் இருந்தது. ஏனென்றால் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் இலாபங்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் முடிவிலிருந்தன. இதன் விளைவாக, அவர்களின் கையிலிருந்த பணம் மற்றும் உடனடி ரொக்கமாக்கக் கூடிய சொத்துக்களின் அளவு 2010 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.93 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாய் அதிகரித்தது. இது ஒரு வருட காலத்தில் 14 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பாகும்.

அமெரிக்க டாலர் உலக நாணய மதிப்பின் பாத்திரத்தை வகிப்பதால் ஆழமடையும் அமெரிக்கப் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவின் கிளைகள் சர்வதேசரீதியாகவும் விரிந்துபரவிக் கொண்டிருக்கின்றன.

2008 ஆம் ஆண்டின் பொருளாதாரப் பொறிவுக்குப் பின் அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிலையைக் காப்பாற்றும் பொருட்டு, அமெரிக்க மத்திய வங்கி அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஏறக்குறைய பூச்சிய வட்டி விகிதங்களில் கிடைக்கும்படி செய்தது. இந்த அதிக பணத்தை புளக்கத்தில்விடும்கொள்கை ஜூனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வட்டி விகிதங்களை இதே மிகக் குறைந்த அளவுகளில் தான் மத்திய வங்கி வைத்திருக்கும். இதன் விளைவாக சர்வதேச நிதிச் சந்தைகளில் முன்கண்டிராத குழப்பங்கள் விளையும்.

அமெரிக்க நாணய மதிப்பில் நம்பிக்கையின்மை பெருகி வருவதன் ஒரு தெளிவான அடையாளமாக, மெக்சிகோவின் மத்திய வங்கி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் சுமார் 100 டன் தங்கத்தை வாங்கியிருந்தது. வீழ்ச்சியுறும் அமெரிக்க டாலரிலான சொத்துகளில் இருந்து தனது கையிருப்புகளை மாற்றுவதற்காக இத்தகையதொரு நடவடிக்கையை அது செய்தது. நடப்பு மதிப்பில் இந்தக் கொள்முதலின் மதிப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சமீபத்திய வருடங்களில் சீனா இந்தியா மற்றும் ரஷ்யாவும் இதேபோன்றதொரு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெருமளவு தங்கத்தைக் கொள்முதல் செய்திருந்தன.

டாலரின் வீழ்ச்சி என்பது பணவீக்கத்திற்கும் மந்தநிலைப் போக்குகளுக்கும் இரண்டுக்குமே இட்டுச் செல்கிறது. உணவுப் பொருள் விலைகள் கடந்த வருட காலத்தில் சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்து, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வறுமையில் இருக்கும் பிராந்தியங்களில் வாழ்க்கைத் தரங்களின் மீது நெருக்குதலை கூட்டியது.

அதேசமயத்தில், நெகிழ்ந்து கொடுக்கும் நாணயப் பரிவர்த்தனை விகிதங்களை கொண்டிருக்கும் நாடுகள் அதிகமான சந்தை அழுத்தங்களை சந்திக்கின்றன. ஏனென்றால் அவர்களது நாணயமதிப்புகள் அதிகரிப்பது அந்நாடுகளை குறிப்பாக உற்பத்தித் துறைகளில் கடுமையான சர்வதேச போட்டிக்குள் தள்ளுகின்றன.  

பிரேசிலின் நிதி அமைச்சரான கைடோ மண்டேகா டாலரின் வீழ்ச்சி சர்வதேச நாணய மதிப்புப் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதாய் சென்ற வருடத்திலேயே எச்சரித்திருந்தார். அது இப்போது தொழிற்துறைமயநிலை அகலும் அபாயத்திற்கு முகம் கொடுக்கிறது. காரணம் பிரேசிலிய ரீயெல் நாணயத்தின் பண மதிப்பு டாலருக்கு நிகராக உயர்வு கண்டிருக்கிறது.

பிரேசிலில் பெரும் முதலீடுகள் செய்திருக்கும் ஜேர்மன் தொழிற்துறைக் கூட்டு நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் இதழிடம் கூறுகையில் ரீயெலின் எழுச்சியை நிறுத்தும் வண்ணம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் நிறுவனத்தின் ஏற்றுமதி வணிகம் நசுக்கப்பட்டு விடும் என்று கூறினார். இது அடிப்படையான விடயம்; தொழிற்துறைமயநிலை அகலும் அபாயம் இருக்கிறது என்றார் அவர்.

அமெரிக்க டாலரின் வீழ்ச்சியால் உயர்ந்த ரீயெலின் மதிப்பு உற்பத்தியின் எல்லாத் தரப்புகளையும் பாதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரும் உருக்கு உற்பத்தியாளரான ஆர்சலர்மிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி சென்ற வருடம் ஒரு பேரழிவாய், ஏறக்குறைய ஒரு முழுப் பேரழிவாய் இருந்ததாக பைனான்சியல் டைம்ஸிடம் தெரிவித்தார்.

அமெரிக்க நாணய மதிப்புக்கு எதிராக, விலை அதிகரித்துள்ள இன்னொரு நாணய மதிப்பு ஆஸ்திரேலிய டாலர் ஆகும். 2009ல் 60 செண்டு டாலர் என்கின்ற பரிவர்த்தனை அளவில் இருந்தது இப்போது 1983ல் அது உருவாக்கப்பட்டதில் இருந்து எட்டியிராத மிக உயர்ந்த இடத்திற்குச் சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் 1.10 டாலர் என்கிற விகிதம் வரைக்கும் கூடச் சென்றது. இது தாதுக்கள் மற்றும் பிற இயற்கை வளங்கள் தவிர்த்து பொருளாதாரத்தின் பிற அனைத்து துறைகளிலும் ஏறக்குறைய மந்த நிலையை ஒட்டிய ஒரு நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

பரந்த அடிப்படையில் பார்த்தால், உலக நிதிச் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இப்போது நடந்துவரும் குழப்பமான நிலையுடன் சேர்ந்து, ’இனி நெருக்கடிக்கு முந்தைய நிலைமைகள் திரும்புவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை' என்கின்ற சர்வதேச நிதி மூலதனத்தின் செய்தித் தொடர்பாளர்களிடம் இருந்தான எச்சரிக்கைகளும் கூட வந்து கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக செலுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கே அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த வாரத்தில் 38 சதவீத இலாப அதிகரிப்பை அறிவித்த ஆஸ்திரேலியாவின் ANZ வங்கிக் குழுவின் தலைவரான மைக் ஸ்மித் பின்வருமாறு எச்சரித்தார்: ஆஸ்திரேலிய வணிகங்கள் ஒரு பங்குச்சந்தைக்கும் தொடர்ச்சியான  வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டவை. என்ன நடந்திருக்கிறது என்றால், நெருக்கடிக்குப் பின்னர் நாம் செய்திருக்கக் கூடிய சில திருத்தங்களால் பொருளாதாரத்தின் சில பிரிவுகள் திடீரென்று உலகளவில் போட்டித்தன்மை குன்றி விட்டிருக்கின்றன. அவை இயங்கி வந்த மாதிரிகள் இனியும் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்குச் சென்று விட்டிருக்கின்றன.” “நெருக்கடிக்கு முந்தைய நிலைமைகளுக்குத் திரும்ப எதிர்பார்ப்பது யதார்த்தமில்லாதது என்றார் அவர். 

ஒரு கள மாற்றம்குறித்த இந்த எச்சரிக்கைகள் எல்லாம் 2008-2009 ஆம் ஆண்டில் விளைந்த பொருளாதார நெருக்கடி என்பது ஒரு சுழற்சியில் நேர்ந்த சரிவு அல்ல மாறாக உலகளாவிய அளவில், பெருமந்தநிலைக்குப் பின் கண்டிராத மட்டங்களுக்குத் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையை கொண்டுசெல்வதற்கான நோக்கத்துடன், பொருளாதார மற்றும் சமூக உறவுகள் பாரிய அளவில் மறுகட்டமைப்பு செய்யப்படுவதன் தொடக்கம் என்கின்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உலகளாவிய பெருநிறுவன மற்றும் நிதித்துறை மேற்தட்டுகள் இந்தத் திட்டத்தை அமலாக்க நெருக்குதலளித்து வருகின்றன. இலாப அமைப்புமுறையை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் சர்வதேச அளவில் ஒரு சோசலிச பொருளாதார வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது ஆகியவற்றை நோக்கிய அவசியமான முதல் படியாக அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தை ஆரம்பிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கம் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.