World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

How the Mediterranean Anti-Capitalist Conference defended French imperialism

மத்தியதரைக்கடல் பகுதி முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிகள் மாநாடு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைப் எப்படி பாதுகாத்தது

By our reporters
10 May 2011
Back to screen version

மத்திய தரைக்கடல் பகுதி முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைப் பாதுகாத்த விதம், மார்செயில் மே 7-8 தேதிகளில் பிரான்சின் முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) அழைப்பு விடுத்திருந்த மத்தியதரைக்கடல் பகுதி முதலாளித்துவ எதிர்ப்பு மாநாடு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பேரில் நடந்த முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகளின் ஒரு சங்கமம் ஆகும். ”பல்வேறு அமைப்புகளும் ஒன்றையொன்று நன்கு அறிந்து கொள்வதற்கும், அவற்றிடையேயான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும், அத்துடன் பொதுவான சர்வதேச பிரச்சாரங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கும்” இந்த மாநாடு ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று கூறி விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த மாநாடு லிபியாவில் நடந்து வரும் பிரெஞ்சு-நேட்டோ போர் குறித்து ஏறக்குறைய எந்த சத்தமும் காட்டாமல் கடந்து சென்று விட்டது, துனிசியாவிலும் எகிப்திலும் தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்குக் குரோதமான கட்சிகளை வரவேற்றது, அத்துடன் மத்தியதரைக்கடல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியின் பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களை ஆதரித்தது (இது பெருமளவில் துருக்கியை நோக்கமாகக் கொண்டு செலுத்தப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது வெளிப்படை).

மாநாட்டில் பல பத்துப் பிரதிநிதிகள் சனியன்று மாலையும் ஞாயிறன்றும் மூடிய அறைகளுக்குள்ளான அமர்வுகளில் பங்கேற்றனர். சனியன்று மாலை நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் சில நூறு பேர் கூடினர். இவர்கள் NPA செய்தித் தொடர்பாளரான ஒலிவியே பெசன்ஸெனோ மற்றும் பிற முன்னணி NPA தலைவர்களின் உரைகளுக்கு செவிமடுத்தனர்.

NPA தலைவரான அலன் கிறிவின் பிரெஞ்சு அரசுடன், அதாவது அவரது நண்பரும் முன்னாள் தோழரும் அத்துடன் இப்போது பெரு-வணிக சோசலிசக் கட்சியின் (PS) உயர் நிலை உறுப்பினருமான ஹென்ரி வெபெர் போன்ற பெரும்புள்ளிகளுடன், நடத்திய விவாதங்களை இந்த மாநாடு பிரதிபலித்ததா என்பது ஏறக்குறைய அவசியமில்லாத விடயம். அதன் ஏகாதிபத்திய ஆதரவு நோக்குநிலை என்பது, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஏகாதிபத்தியத்துடன் கட்டிப் போடுவதற்கு வலியுறுத்தும் NPA மற்றும் அதன் சகோதரக் கட்சிகளின் அரசியலில் இருந்து நேரடியாய் எழுவதாகும். 

NPAஇன் internationalists13.org வலைத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்ற கட்சிகளின் பட்டியல், இப்போது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு தடைபோட முயலும் நடுத்தர வர்க்க முன்னாள்-”இடது” கட்சிகளின் போக்கிரிகள் வரிசையைத் தான் பெருமளவு வாசிக்கிறது. NPA தவிர, இத்தாலியின் Sinistra Critica (விமர்சன இடது), ஸ்பெயினின் Izquierda Anticapitalista (IA, முதலாளித்துவ-எதிர்ப்பு இடது) மற்றும் En Lucha (போராட்டத்தில்) கட்சிகள், மற்றும் கிரீஸின் OKDE ஆகியவை இதில் பங்குபெற்ற பிற ஐரோப்பியக் கட்சிகளாகும்.

NPAவின் வலைத் தளத்திற்குப் பங்களிப்பு செய்கின்ற பல வட ஆப்பிரிக்கக் கட்சிகள் பங்கேற்றன. துனிசியாவில் இருந்து துனிசிய மாவோயிசக் கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சி (PCOT), துனிசிய தேசபக்த தொழிலாளர்கள் கட்சி (PTPD), மற்றும் புதிதாய் மறுகட்டுமானம் செய்யப்பட்டிருக்கும் இடது தொழிலாளர் கழகம் (LGO) ஆகியவை பங்குபெற்றன.

LGOவில் 1970களில் NPAவின் முன்னோடியான புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கழகத்துடன் முன்னாளில் தொடர்புபட்டிருந்த கட்சிகளும் இருந்தன. அத்துடன் அல்ஜீரிய சோசலிசத் தொழிலாளர் கட்சி (PST), மொராக்கோவிலிருந்து ஜனநாயகப் பாதை மற்றும் அல்-மொனாதில் ஆகியவை, மற்றும் எகிப்தில் இருந்து சோசலிச மறுமலர்ச்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகியவையும் இருந்தன.

அண்மைக் கிழக்குப் பகுதியில் இருந்து பாலஸ்தீன விடுதலை மக்கள் முன்னணி (PFLP), லெபனிய கம்யூனிஸ்டுக் கட்சி (PCL) மற்றும் ஜனநாயக லெபனிய இளைஞர் அமைப்பு (OFDL) ஆகியவை பங்குபெற்றன. ஐரோப்பாவில் இருந்தான சிப்ரியாட், கோர்சிகன், சார்டினியன், பாஸ்க் மற்றும் கட்டலோன் ஆகிய தேசியவாதக் குழுக்கள் உட்பட பல பிரிவினைவாத மற்றும் தேசியவாதக் குழுக்களும் மற்றும் குர்திஷ் மற்றும் ஈராக்கிய ஸ்ராலினிசக் கட்சிகளும் பங்குபெற்றன.

இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் ஒரு அரசியல் மோசடி ஆகும். பங்குபெற்ற கட்சிகளின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத குட்டி-முதலாளித்துவ-தேசியவாத மற்றும் சமூக-ஜனநாயக வாய்ஜாலத்தைக் கொண்டு தனக்கு ஒரு “இடது” சாயம் பூசிக் கொள்வதற்கு இது முயற்சி செய்கிறது. அது இவ்வாறு ஆரம்பிக்கிறது: “அமைப்புமுறையைச் சரி செய்ய முயற்சி செய்து கொண்டிராமல் அதில் இருந்து தீவிரமாய் உடைத்துக் கொண்டு, சோசலிசத்திற்கான பாதையையும் சமூக மற்றும் ஜனநாயக விடுதலைக்கான திட்டத்தையும் திறந்து, தேசிய எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர் ஐக்கியத்தை மறுகட்டுமானம் செய்வது தான் இன்றைய பற்றியெரியும் தேவையாக இருக்கிறது.”

அது மேலும் தொடர்கிறது: “மத்திய தரைக்கடலுக்கு வடக்கே, சமூக எதிர்ப்பின் ஒரு அலை, பொது வேலைநிறுத்தத்தின் ஒரு அலை, மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் நெருக்கடியின் நாசங்களுக்கு கொதித்தெழுந்து மறுப்பது இவற்றின் ஒரு அலை இருந்து வருகிறது. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் அதே வரிசையில் தான் வட ஆப்பிரிக்காவிலும் இதே கவலைகள் தான் எழுந்துள்ளன: நிச்சயமில்லாத நிலைமைகளின் கீழ் வேலை செய்கிற இளம் பெண்கள் மற்றும் ஆண்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள். எங்குமே மக்கள் விட்டுவிடுகிற மனோநிலையில் இல்லை.”

மத்திய தரைக்கடலின் அனைத்துக் கரைகளிலும் ஐரோப்பிய மற்றும் உலக ஏகாதிபத்தியத்தால் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது சந்தேகத்திற்கிடமற்ற உண்மை என்கிற அதேசமயத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை இங்கு விட்டுப் போகிறது: தொழிலாளர்களின்’ போராட்டங்களை நோக்கிய NPA மற்றும் அதன் சகோதரக் கட்சிகளின் மனோபாவம் என்ன? இத்தகைய போராட்டங்களுக்குத் தலைமை கொடுக்க நோக்கம் கொண்டிருக்கும் கட்சிகள் மட்டுமே இத்தகைய வகையில் எழுத முடியும் என்று அறிக்கையைப் படிப்பவர் கருதிக் கொள்வார் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனாலும் அதுவல்ல உண்மை...இந்தக் கட்சிகள் எல்லாம் தொழிலாள வர்க்கத்திற்குக் கடுமையான குரோதம் கொண்டவை ஆகும்.

இந்தக் கட்சிகள் எல்லாம் சோசலிசத்திற்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்வதன் மோசடியான தன்மை வட ஆபிரிக்காவில் தெளிவாக விளங்கப்படுத்தப் பெறுகிறது. புரட்சிகரப் போராட்டங்கள் தோன்றியுள்ள நாடுகளில், ஆட்சியானது மக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு செய்யக் கூடிய அலங்கார மற்றும் போலி-ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்குள் அவர்கள் மிகவும் வெளிப்படையாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கட்சிகளில் எதுவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தொழிலாள வர்க்கத்தை தலைமை நடத்திச் செல்ல முயற்சித்திருக்கவில்லை, சோசலிசக் கோரிக்கைகளை வைத்திருக்கவில்லை, அல்லது அமெரிக்கா அல்லது பிரான்சுக்கு ஏற்புடைய புதிய தேர்தல் மற்றும் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அழைப்புகளைக் கடந்த சுலோகங்களைக் கூட அவை முன்மொழிந்திருக்கவில்லை.

NPA மாநாட்டில் கலந்து கொண்ட துனிசியக் கட்சிகளின் நிலையும் மிகத் தெளிவாக இதே தான். PTPD துனிசிய ஆட்சியின் சீர்திருத்தக் குழுவில் பங்கேற்கிறது. வெகுஜனப் போராட்டங்களின் இலக்காக மாறியிருக்கும் துனிசிய சமூக மற்றும் பொருளாதாரக் கவுன்சிலின் உள்ளாக மறியல் செய்த இது துனிசிய அரசு எந்திரத்தை எப்படி “சீர்திருத்தலாம்” என்பது குறித்தும் ஒரு சட்ட அவைக்கான தேர்தலுக்கு எப்படி தயாரிப்பு செய்யலாம் என்பது குறித்தும் தொழிற்சங்கங்களுடனும், UTICA தொழிலதிபர்களின் கூட்டமைப்புடனும் மற்றும் தொழில்முறைக் குழுக்களுடனும் கலந்துரையாடி வருகிறது. PCOTம் தன் பங்கிற்கு NPAவின் நிலையை எதிரொலித்து, சீர்திருத்த ஆணையத்திற்கான ஒரு நட்புரீதியான விமர்சகர் என்பதாய் காட்டிக் கொள்கிறது; துனிசியாவில் ஒரு “ஜனநாயக” முதலாளித்துவ ஆட்சியைக் கட்டும் NPAவின் முயற்சிக்கு இது அனுதாப நிலை கொண்டிருக்கிறது.  

ஐரோப்பாவில், NPA மற்றும் அதன் சகோதரக் கட்சிகள் தொழிலாளர் போராட்டங்களை முதலாளித்துவ அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதான ஒரு முன்னோக்குடன் அவற்றைக் கட்டிப் போடுவதன் மூலமாக வரம்புபடுத்துவதற்கும் அடக்குவதற்கும் முனைகின்றன. கடந்த வருடத்தில் கடன் நெருக்கடியின் போது ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்பட்ட சமூக வெட்டுகளுக்கு இடையே தொழிற்சங்கங்களால் அழைப்பு விடப்பட பல்லில்லாத ஒருநாள் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகள் முழுமையான விமர்சனமற்ற ஆதரவை வழங்கியிருக்கின்றன. வெட்டுகளைத் திணிக்கும் அரசாங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம் உதாசீனப்படுத்தின என்பதோடு மக்களின் கருத்தை முற்றுமுதலாய் அலட்சியப்படுத்தி விட்டு அவை சமூக வெட்டுகளைத் திணித்தன.

மேலும், தொழிலாளர்கள் தொழிற்துறை நடவடிக்கையை முன்வைத்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் போராட்டங்களுக்கான தொழிற்சங்கங்களின் குரோதத்தை எதிரொலித்தன. 2010 அக்டோபரில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பிரான்ஸ் எண்ணெய்த் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது, தொழிலாளர்கள் போலிசின் வேலைநிறுத்த உடைப்பு வேலைக்கு எதிராக தங்களை “அடையாள” அல்லது “விளையாட்டான” எதிர்ப்பு நடவடிக்கையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) சங்கத்தின் கோரிக்கையை NPA ஏற்றுக் கொண்டது. அதன்பின் அந்த வேலைநிறுத்தம் உடைக்கப்பட்டு சார்க்கோசியின் வெட்டுக்கள் பாரிய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நிறைவேறின.

ஸ்பானிய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் 2010 டிசம்பரில் நடத்திய வேலைநிறுத்தத்தின் போதும், IA (முதலாளித்துவ-எதிர்ப்பு இடது)  இதே அளவுக்கு குரோதத்துடன் இருந்தது. இந்த வேலைநிறுத்தம் இறுதியாக ஸ்பானிய இராணுவத்தின் தலையீட்டினால் உடைக்கப்பட்டது. முதலாளித்துவ ஊடகங்களின் கருத்தை எதிரொலித்து ஸ்ராலினிச ஐக்கிய இடது (IU) மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தைக் கண்டித்ததால், IA விடுத்த அறிக்கையில் IU பற்றிய விமர்சனம் இல்லையென்பதோடு அது, வேலைநிறுத்தம் செய்ததன் மூலமாக வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தியது. “நுகர்வோர் மற்றும் (ஸ்பானிய விமானநிலையங்களின்) மற்ற ஊழியர்கள்” ஆகிய இந்த சமன்பாட்டின் இரண்டு மாறிகளை வான் கட்டுப்பாட்டு ஊழியர்கள் மறந்து விட்டிருந்ததாய் அது எழுதியது. “இது தான் அவர்களைத் தனிமைப்படுத்தியதோடு தொழிலாளர் மீதான அடக்குமுறைக்கும் ஊடகங்களின் தாக்குதலுக்குமான எளிதான இலக்காய் ஆக்கியது.”

மார்செய் மாநாடு தனது அறிக்கையில் ஏகாதிபத்தியத்தின் எதிரியாக காட்டிக் கொள்ளச் செய்திருக்கும் முயற்சி தொழிலாள வர்க்கத்தின் பாதுகாவலனாக அது காட்டிக் கொள்ள முயற்சிக்கும் அதே அளவுக்கு சிடுமூஞ்சித்தனமானதும் மோசடியானதும் ஆகும். ”பிராந்தியத்தில் அனைத்து ஏகாதிபத்தியத் தலையீட்டையும் மறுப்பதற்கு ஆதரவாகவும், லிபியாவின் தலையீட்டுப் படைகளையும், மற்றும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள ஆக்கிரமிப்புப் படைகளையும் உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கு ஆதரவாகவும்” தான் இருப்பதாக அதுவாகவே அறிவித்துள்ளது. “பிராந்தியத்தில் எந்த இராணுவத் தலையீடும் இன்றி பலமுக ஒத்துழைப்பின் முன்னோக்கைக் கொண்டு மத்தியத்தரைக்கடல் பகுதி மற்றும் ஐரோப்பாவின் அரசுகள் நேட்டோவுடனான தங்களது உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும்.”

லிபியா மீது குண்டுவீசுவது என்னும் மத்தியத்தரைக்கடல் பகுதியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதானத் தலையீட்டு விடயத்தில் இத்தகையதொரு அறிக்கை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடுகளுடனான சரணாகதி ஆகும். ”லிபியாவில் தலையீட்டுப் படைகளை”த் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் குறைத்துக் கொள்ளும் இந்த அறிக்கை குண்டுவீச்சை வெளிப்படையாகக் கண்டிக்கவும் கூட இல்லை. ஆனால், அநேக பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைகள் வான்வழித் தாக்குதல்களாகவே இருக்கும் என்பதால், குண்டுவீச்சை ஆதரித்து அதேசமயத்தில் தரை வழியான தாக்குதலுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கின்ற வெளியுறவு அமைச்சர் அலன் ஜுப்பே போன்ற ஏகாதிபத்திய அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகளை இது எதிரொலிக்கிறதே தவிர அதற்கு மேல் செல்லவில்லை.

லிபியப் போரில் NPAவின் விரிந்த நிலைப்பாடு பின்வருமாறு எதிரொலிக்கிறது: போருக்கான ஏகாதிபத்திய நியாயப்படுத்தல்களை எதிரொலிப்பதற்கும், இந்த விடயத்தில் கட்சிக்கு உள்ளேயே பிளவுபட்டு இருப்பதாக அறிவித்திருப்பதற்கும் இடையில் அது ஊசலாடி வந்திருக்கிறது. ஆனாலும் NPAவின் நிலைப்பாடு மீதான மிகத் தெளிவுபட்ட அறிக்கையை NPA வலைத் தளத்தில் ஜில்பேர்ட் அஷ்கார் கொடுத்திருந்தார். லிபியா மீதான நேட்டோவின் தாக்குதல் ஒரு முக்கியமான “மனிதாபிமான”த் தலையீடு என்று அவர் அதில் வாதிட்டிருந்தார். ”இங்கே ஒரு மக்கள் திரள் உண்மையான அபாயத்தில் நிற்கிறது. அதனைப் பாதுகாக்க எந்த மாற்றுவழியும் இல்லாத நிலை இருக்கிறது. இப்போது ஏகாதிபத்திய-எதிர்ப்புக் கோட்பாடுகள் என்கின்ற பேரில் மக்களைப் படுகொலை செய்வதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை நீங்கள் எதிர்க்க முடியாது.”  

நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் போரை எதிர்ப்பதாக மாநாடு கூறுவதும் அதேஅளவுக்கு ஏமாற்றுவேலையாகும். இதனைப் படிக்கும் யாருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளும் குழுக்களின் வரலாறு தெரிந்திருக்காது என்று இந்த அறிக்கையை வரைந்தவர்கள் வெளிப்படையாக நம்பியுள்ளனர்.

இந்தக் கட்சிகளில் எதுவுமே நேட்டோவுக்கோ அல்லது ஆப்கானிஸ்தானிலான ஏகாதிபத்திய போருக்கோ எதிரிகளல்ல, அதிலும் இத்தாலியக் குழுவான சினிஸ்ட்ரா க்ரிட்டிகா ஆற்றிய பாத்திரம் குறிப்பாக ஈனப்பெயர் ஈட்டியதாகும். 2007 ஆம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரோமானோ பிராடியின் அரசாங்கத்தை ஆதரிக்கையில், சினிஸ்ட்ரா கிரிட்டிகாவின் செனட்டரான பிராங்கோ துரிக்ளியோட்டோ ஒரு 12 அம்ச கெடுவின் பேரில் வாக்களித்தார். இதில் ஆப்கானிஸ்தானில் இத்தாலி இராணுவத் தலையீடு செய்வது மற்றும் இத்தாலிய ஓய்வூதியத் திட்டத்திலான வெட்டு ஆகியவற்றுக்கான ஆதரவும் இடம்பெற்றிருந்தன.

மத்தியதரைக்கடல் பகுதியில் நேட்டோவுக்கான மாற்றுக்கு அழைப்பு விடுப்பதைப் பொறுத்தவரை, ஐரோப்பிய முன்னாள் “இடது” கட்சிகளிடம் இருந்தான இத்தகைய கோரிக்கைகளின் தவறாக வழிநடத்தும் தன்மை ஜேர்மனியின் இடது கட்சி தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட கசிவில் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டிருந்தது.

இடது கட்சியும் இதேபோன்றதொரு நிலையையே முன்னெடுக்கிறது. உத்தியோகபூர்வமாக நேட்டோவைக் கலைப்பதற்கும் அதனை ஒரு பாதுகாப்புக் கூட்டணியைக் கொண்டு (ஜேர்மனியின் விடயத்தில், ரஷ்யாவும் பங்குபெறுகிறதான) இடம்பெயர்ப்பதற்கும் அழைப்பு விடுக்கிறது. அதே சமயத்தில், இந்தக் கோரிக்கை உண்மையில் நேட்டோவுக்கு உதவக் கூடியதே என்பதை அமெரிக்க இராஜதந்திரிகளுடனான தனிநபர் கலந்துரையாடலில், இடது கட்சியின் தலைவர் கிரிகோர் கீசி விளக்கினார். நேட்டோவில் ரஷ்யாவின் அங்கத்துவத்துக்கு ஜேர்மனிக்கு ஒருபோதும் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஆதரவு கிட்டப் போவதில்லை. அத்துடன் இடது கட்சியின் நிலைப்பாடு ஜேர்மனி நேட்டோவை விட்டு விலகுவதற்கான கோரிக்கைகளை தடுத்து விட்டது. ஐரோப்பாவிற்குள் பதட்டங்கள் அதிகரிக்கும் நிலையில், இது மிகவும் அபாயகரமானதொரு கோரிக்கை என கீசி தெரிவித்தார். 

ஒரு முதலாளித்துவ அடிப்படையில் மத்தியத்தரைக்கடல் பகுதி ஒத்துழைப்புக்கான NPAவின் திட்டங்கள் எதுவும் இருக்குமானால், அது நேட்டோவுக்குள் ரஷ்யாவைக் கொண்டுவருவதை விடவும் கொஞ்சமும் யதார்த்தமற்ற முன்மொழிவாக இருக்கும். இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் மற்ற பிற அரபு அரசுகளுக்கும் இடையில், சைப்ரஸ் தொடர்பாக துருக்கிக்கும் கிரீஸுக்கும் இடையில், அல்லது மேற்கு சகாராப் பகுதிகள் தொடர்பாக அல்ஜீரியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் என பல நீண்ட காலமாய் தீர்க்கப்படாதிருக்கும் மோதல்கள் இந்தப் பிராந்தியத்து நாடுகளைப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றன. நேட்டோவை, தொழிலாள வர்க்கத்துக்கான ஒரு புரட்சிகர சர்வதேசிய நோக்குநிலையும் மற்றும் சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டமும் இல்லாமல், மத்தியத் தரைக்கடல் பகுதியில் ஒரு அமைதியான ஒத்துழைப்பின் மூலம் அகற்றப் போவதாகக் கூறுவதென்பது வெறும் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது தான்.

ஆயினும் இதற்கிடையில் NPA, மத்தியத் தரைக்கடல் பகுதியின் முதலாளித்துவ ஆட்சிகள் அனைத்தும் தங்களது பிணக்குகளை மகிழ்ச்சிகரமாகத் தீர்த்துக் கொள்ளும் வரைக்கும் கையாலாகா நிலையில் காத்திருப்பதற்கு உறுதியளித்து விட்டு, ஏகாதிபத்திய நேட்டோவின் ஒரு “எதிரியாக”க் காட்சி தரலாம். அதே சமயத்தில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமான நிலைப்பாடுகளை NPA முன்னெடுக்கிறது.

மேலும், அறிக்கையைப் படிக்கும் ஒருவர், லிபியாவில் போர் மற்றும் ஐவரி கோஸ்டில் தரை வழித் தலையீடு இவற்றில் ஈடுபட்டு வரும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நடைபெற்று வரும் குற்றங்களை மறைத்துக் கொண்டு அதே சமயத்தில் துருக்கி ஆட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்கு NPA செய்திருக்கும் முடிவினால் திகைத்துப் போவார். இந்த முடிவு NPAவின் அறிக்கையை பிரெஞ்சு ஏகாதிபத்திய இராஜதந்திரத்தின் ஒரு கருவியாக மாற்றுகிறது.

துருக்கிய அரசாங்கத்தைத் தாக்குவது பிரெஞ்சு அயலுறவுக் கொள்கையின் ஒரு நீண்ட கால மற்றும் முக்கியமான நலனாகும். துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் அளிப்பதை பிரான்சு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. சமீபத்தில் லிபியாப் போர் மீதான துருக்கிய பிரதமர் ரீசெப் டயிப் எர்டோகனின் ஆரம்ப விமர்சனங்களில் இந்த எதிர்ப்பு கொதித்தெழுந்தது. லிபியாவின் மீது குண்டுவீசுவதை உத்தியோகபூர்வமாக நேட்டோ எடுத்துக் கொண்ட பின்னர் தான் எர்டோகன் இதைக் கைவிட்டார்.

மார்செய் மாநாட்டு அறிக்கை துருக்கி ஆட்சியின் மூலோபாயப் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட காணக்கிடக்கிறது. இது குர்திஸ்தானின் “சுய-நிர்ணய உரிமைக்கு”, அதாவது மத்திய கிழக்கின் குர்துப் பெரும்பான்மைப் பகுதிகளுக்கு அரசியல் சுதந்திரம் அளிப்பதற்குக் கோருகிறது. இதில் கிழக்குத் துருக்கியின் பெரும் பகுதிகளும் வருகின்றன. துருக்கி ஆட்சி எப்போதும் அதிகப்பட்ச கூருணர்வு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் பகுதிகளாகும் இவை. இந்த அறிக்கை சைப்ரஸில் “துருக்கியின் ஆக்கிரமிப்புப் படைகளையும்” கண்டனம் செய்கிறது.  

இந்த நோக்குநிலை மார்செய் மாநாட்டில் கலந்து கொள்கின்ற கட்சிகளின் தொகுப்பிலும் எதிரொலித்தது. ஒரு சைப்ரஸ் கட்சி இருந்தது அத்துடன் துருக்கி மற்றும் ஈராக்கில் இருந்து பல குர்திஷ ஸ்ராலினிச அமைப்புகளும் கலந்து கொண்டன, ஆனால் வேறு எந்த துருக்கியக் கட்சிகளும் அழைக்கப்படவில்லை.

சனியன்று இரவு ஒலிவியே பெசன்ஸெனோ அளித்த அரசியல்ரீதியாக விரக்தியூட்டும் ஒரு உரை இந்த மாநாட்டின் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது. பிரான்சில் நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) செல்வாக்கு அதிகரித்து வருவதையும் வட ஆபிரிக்க வன்முறையில் தப்பி வரும் துனிசியர்கள் தஞ்சம் புகுவார்கள் என அஞ்சி இத்தாலியுடனான தனது எல்லையை சார்க்கோசி அரசாங்கம் மூடியதையும் அவர் குறிப்பிட்டார். பிரெஞ்சு அரசாங்கத்தின் எதிர்வினை FNக்கு ஒரு “உண்மையான அரசியல் வெற்றி” என்று அவர் அழைத்தார்.

இந்த நிகழ்வுகளையும் புரட்சிகரப் போராட்டங்கள் இன்னும் வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்குப் பரவியிருக்கவில்லை என்கிற உண்மையையும் பரிசீலனை செய்து, பிரான்சு மற்றும் ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கத்தை அவர் குறைகூறினார். அவர்கள் “விழித்துக் கொள்ள வேண்டும்” என்றும் “வெளிப்படையாகச் சொல்வதென்றால் அவர்கள் இன்னும் சூழ்நிலைக்கேற்ற தயாரிப்புடன் இல்லை” என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைப்பாடு பிற்போக்குத்தனமானதும் அபத்தமானதும் ஆகும். ஐரோப்பியத் தொழிலாளர்கள் ஆழமாக அவப்பெயர் பெற்ற, மதிப்பிழந்து போன வலதுசாரி அரசாங்கங்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வந்துள்ளதோடு வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டிருந்தனர். தொழிலாள வர்க்கத்தின் புறப் பலவீனமல்ல முக்கியப் பிரச்சினை, மாறாக தொழிற்சங்கவாதிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ, முன்னாள் இடது கட்சிகளின் (இக்கட்சிகளில் அரசியல்ரீதியாக மிகவும் நோக்குநிலை விலகச் செய்வதில் NPAவும் ஒன்று) ஒரு வலதுசாரிக் காரியாளர் கூட்டத்தால் அது அரசியல் ஆதிக்கம் செலுத்தப் பெறுவது தான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. FN பிரான்சில் பெற்றிருக்கும் அரசியல் ஆதாயங்கள் பெருமளவில் அதற்குத் தானாகவே கிட்டுகிறது, ஏனென்றால் சார்க்கோசி அரசாங்கம் தொடர்ந்து தொழிலாள வர்க்க எதிர்ப்பின் கழுத்தை நெரிப்பதென்பது அரசியல் எதிர்ப்பின் மொழியில் FNக்கு ஒரு ஏகபோகத்தை விட்டுச் செல்கிறது.

FN இன் அதிகரிக்கும் செல்வாக்கின் இன்னுமொரு முக்கியக் கூறு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்தால் ஊக்குவிக்கப்பட்ட முஸ்லீம் விரோத மற்றும் குடியேற்ற விரோத வெறித்தனம் ஆகும். “மதச்சார்பின்மையை” ஊக்குவிப்பதான ஒரு போலியான சாக்கில் பர்தா அணிவதைக் குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. PS, கம்யூனிஸ்ட் கட்சி, Lutte Ouvrière, அல்லது சுதந்திரத் தொழிலாளர் கட்சி (POI) உட்பட NPA சேர்ந்து வேலை செய்யும் அத்தனை முக்கிய முதலாளித்துவ “இடது” கட்சிகளும் இந்த ஆதிக்க வெறியூட்டும் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்குபெற்றன. 

NPA ஐப் பொறுத்தவரை, 2010 பிராந்தியத் தேர்தலில் இலாம் மவுசாத் என்கிற பர்தா அணியும் ஒரு வேட்பாளரை அது நிறுத்தியது. NPAவின் அரசியல் இஸ்லாமிய நம்பிக்கைக்குப் பொருத்தமாய் இருந்ததாக அந்தப் பெண்மணி கருதியதாலும் பிரெஞ்சுக் குடியரசின் ஸ்தாபனங்கள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையாலும் NPAவில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் தேர்தலுக்குப் பின்னரும் ஊடகங்களில் இருந்து பரவலான வலதுசாரி விமர்சனம் வந்ததை அடுத்தும் NPA இறுதியில் அவரை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டது.

ஆனாலும், மார்செய் மாநாடு தெளிவாய்க் காட்டியது போல, இஸ்லாமியவாதத்துடனான இந்தக் குறுகிய கால கொள்கையற்ற மையல் NPAவுக்கு அதன் வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளில் உதவியிருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து மார்செய் மாநாட்டில் பங்குபெற வந்திருந்த பலரும் உ.சோ.வ.த. செய்தியாளர்களிடம் பேசும்போது ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்லாமியவாதக் கட்சிகளுக்கு தங்களது அரசியல் அனுதாபத்தை வெளிப்படுத்தினர்.

மத்திய தரைக்கடல் பகுதி முதலாளித்துவ எதிர்ப்பு மாநாட்டின் வலதுசாரித் தன்மை ஐரோப்பாவில், வட ஆபிரிக்காவில் மற்றும் அண்மைக் கிழக்கில் என மத்தியதரைக்கடலின் அனைத்துக் கரைகளிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகும். தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைகையில், வட ஆபிரிக்காவில் புரட்சிகரப் போராட்டங்கள் தொடங்குகையில், சோசலிசத்திற்குக் குரோதமான நடுத்தர வர்க்க சக்திகளின் பிற்போக்குத்தனமான பாத்திரம் தான் தொழிலாள வர்க்கம் முகம் கொடுக்கும் முக்கியமான அரசியல் பிரச்சினை ஆகும். ஏகாதிபத்தியத்தின் முகாமுக்கு நகர்ந்து விட்ட NPA மற்றும் மத்தியத்தரைக் கடல் பகுதி முழுவதுமான அதன் சக சிந்தனையாளர்கள் இதில் பிரதானமாக இடம்பெறுகின்றனர்.