World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை குண்டர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்திடு!

சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்களின் அறிக்கை
04 நவம்பர் 2011
Back to screen version

சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ISSE) அமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக உக்கிரமாக்கப்பட்டுள்ள குண்டர் தாக்குதல்களை கடுமையாக கண்டனம் செய்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்கியுள்ள நிலையில் இடம்பெறும் இந்த தாக்குதல், பாதுகாப்பு படைகளதும் மற்றும் அவற்றுடன் செயற்படுகின்ற துணைப்படைக் குழுக்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டுள்ளது.

*செப்டெம்பர் 3 அன்று, மர்ம நபர்கள் சிலர் பல்கலைக்கழக மாணவிகளின் தங்குமிடத்துக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து, அவர்களைப் பாதுகாப்பதற்காக அங்கு சென்றுகொண்டிருந்த ஆறு மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். தங்குமிடத்துக்குள் நுழைந்த மர்ம நபர்களும் இராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கேவலமான முறையில்கிரிஸ் பூதங்கள் என்ற பெயரில் நடந்த இந்த ஆத்திரமூட்டல் சம்பவங்கள், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலேயே பெருமளவில் நடந்துள்ளன. இந்த சம்பவங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் சம்பந்தப்பட்டுள்ளதாக மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளதன் மூலம், தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கவே அவர்கள் இந்த குண்டர் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

*யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அக்டோபர் 16 அன்று குண்டர்களின் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த தாக்குதல் நடந்த இடம் இராணுவக் காவலரன் ஒன்றில் இருந்து 300 மீட்டர் தூரத்திலேயே அமைந்துள்ளது. முகங்களை மூடிக்கொண்டு இரும்புக் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்கள், தவபாலசிங்கத்தை படுகொலை செய்யும் நோக்குடன் அவரது தலையிலிம் உடலிலும் அடித்தனர். அயலவர்கள் வீதிக்கு வந்ததால் இந்தக் குறிக்கோள் நிறைவேறவில்லை. இந்தக் குண்டர்கள் இராணுவத்தினர் அல்லது துணைப்படைக் குழுவினர் என சந்தேகிக்கப்படுகிறது.

*அக்டோபர் 23 அன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலுனரும் இறுதி ஆண்டு மாணவனுமான இராஜவரோதயன் கவிராஜன் மீது குண்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்ப விழா ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது, கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பிரதேசத்துக்கு அருகில் இரவு 9 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்து அவரது மோட்டார் சைக்கிளை மறித்த குண்டர்கள், அவரது தலையிலும் முகத்திலும் அடித்துள்ளனர். அவர் உயிர் தப்பினாலும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சப் பெற நேர்ந்தது. யாழ்ப்பாண நகர விட அதிகமாக காவலரன்கள் இறுக்கமாக்கப்பட்டுள்ள இந்த பிரதேசத்தில், படையினரால் மட்டுமே தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டு சுதந்திரமாக செல்ல முடியும் என மாணவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தம்மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, அக்டோபர் 17 முதல் இரு வாரங்களாக சுமார் ஆறாயிரம் மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்து எதிர்ப்பைக் காட்டினர். மாணவர்களின் சுதந்திரமான செயற்பாட்டை தடை செய்வதை நிறுத்து! பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் உள்ள இராணுவ காவலரன்களை அகற்று! தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடு! போன்ற மிகவும் நியாயமான கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்.

அரசாங்கமும் பொலிசும் இந்த குண்டர் நடவடிக்கைகள் பற்றி எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருப்பதன் மூலம், அவர்கள் அதனை அனுமதிப்பது தெரியவருகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புப் பகிஷ்கரிப்பு அக்டோபர் 28 அன்று முடிவுக்கு வந்தது. ஆயினும், மாணவர்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறையை கண்டனம் செய்து, அவர்களைப் பாதுகாக்கவும், மேற்குறிப்பிடப்பட்ட அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கவும் தொழிலாளர்கள் முன்வர வேண்டும் என ஐ.எஸ்.எஸ்.ஈ. வேண்டுகோள் விடுக்கின்றது.

ஏனைய தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களைப் போலவே, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவினால் உக்கிரமாக்கப்பட்ட 30 ஆண்டுகால யுத்தத்தில் உயிரிழப்புக்கள், தடுத்து வைப்புக்கள் போன்ற பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு பலியாகியுள்ளனர். 2009 மே மாதம், புலிகளைத் தோற்கடித்து, இலட்சக்கணக்கான மக்கள் மீது எண்ணிலடங்கா சேதங்களை சுமத்தி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், ஒடுக்குமுறையை தொடர்ந்தும் முன்னெடுக்கின்ற இராஜபக்ஷ அரசாங்கமும் இராணுவமும், பல்கலைக்கழக மாணவர்களை அதன் ஒரு இலக்காக்கிக் கொண்டுள்ளன.

இதற்கு இரு காரணங்கள் உண்டு.

முதலாவது, ஜனநாயக உரிமைகளை நசுக்கி முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் எதிர்ப்பு.

இரண்டாவது, பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக, தென் பகுதியில் போலவே வடக்கு கிழக்கிலும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பாகும். இலவசக் கல்வியை வெட்டித்தள்ளுவதன் பாகமாக, பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்குவதை தொடங்கியுள்ள அரசாங்கம், மாலபே மருத்துவக் கல்லூரி உட்பட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் பலவற்றை இப்போதே ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் ஊடாக மட்டுமே, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள அரசாங்காத்தின் இராணுவ ஒடுக்குமுறை ஆட்சியை தோற்கடித்து, இலவச கல்வி உரிமையை பாதுகாக்க முடியும். வடக்கிலும் தெற்கிலும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள தொழிலாள வர்க்கத்துடன் சேர்ந்தே, மாணவர்களுக்கு அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என ஐ.எஸ்.எஸ்.இ. தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் போது ஸ்தாபிக்கப்பட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்ற பெயரிலான அமைப்புமாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்றும் வகுப்புப் பகிஷ்கரிப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறும் அறிவுறை கூறியுள்ளது. இந்த த் தலையீட்டினால் மாணவர்களின் பகிஷ்கரிப்பு நிறுத்தப்பட்டது. இந்த அமைப்பின் தலைமைத்துவத்துக்கு வந்துள்ளவர்கள், அரசாங்கத்தின் அரசியல் கொடுக்கல் வாங்கல்களுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். சிலர் முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சம்பந்தப்பட்டவர்கள்.

இந்த அமைப்பு, மாணவர்களின் மற்றும் ஏனைய மக்களின் ஜனநாயக உரிமைகளை வெற்றிகொள்ள எந்தவொரு வேலைத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. அவர்கள் மாணவர்களை கட்டுப்படுத்திவைக்க அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் உதவுவதற்கே முன்வந்துள்ளனர். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான வசதிகள் மற்றும் சூழலை தகர்த்தெறிந்துள்ள அரசாங்கமும் இராணுவமும், பல்கலைக்கழக கல்வியை தனியார்மயப்படுத்தும் அரசாங்கமுமே மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கில் ஒடுக்குமுறை இராணுவத்தை அகற்றி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலமே இந்த நிலைமைக்கு முடிவுகட்ட முடியும். தமிழ் மக்களுக்கு எதிரான இன பாகுபாட்டை முன்னெடுக்கும் சட்ட வரம்புகளை தகர்த்தெறிய வேண்டும். முதலாளித்துவ முறைமையை பாதுகாப்பதற்காக, தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி ஆட்சி செய்யும் இராஜபக்ஷ அரசாங்கம் உட்பட கொழும்பு முதலாளித்துவ ஆளும் வர்க்கமே, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பாரபட்சங்களை முன்னெடுக்கின்றது.

இந்த முதலாளித்துவ வர்க்க ஆட்சியை தூக்கிவீசி, சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகின்ற தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை, அதாவது ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும். இந்தப் போராட்டம் அனைத்துலக சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பாகமாகும்.

மறு பக்கம், கல்விக்காக பில்லியன் கணக்கான நிதியை ஒதுக்குவதன் மூலமே, இலவசக் கல்வியைப் பாதுகாத்து, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை கல்வியை சீரழிவுக்குள் இழுத்துத் தள்ளும் தற்போதைய நிலைமையில் இருந்து அவற்றைக் காப்பாற்ற முடியும். இலாபம் சுரண்டும் முதலாளித்துவ முறைமையை சோசலிச முறைமையின் மூலம் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே அந்தளவு பணத்தை ஒதுக்கீடு செய்ய முடியும்.

வடக்கிலும் மற்றும் தெற்கிலும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களும், தம்மை முதலாளித்துவ முறைமைக்குள் கட்டிவைத்திருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேலைத்திட்டங்களில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். இதன் போது புலிகளின் தோல்வியின் அரசியல் படிப்பினைகளை கற்றுக்கொள்வது அவசியமாகும். புலிகளின் தோல்வி வெறும் இராணுவத் தோல்வி அல்ல.

புலிகள், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் அமைப்பு என்ற முறையில், இந்தியாவின் அல்லது மேற்கத்தைய ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் ஒரு சிறிய முதலாளித்துவ ஆட்சிப் பகுதியை ஸ்தாபித்துக்கொள்வதையே தமது முன்னோக்காகக் கொண்டிருந்தனர். அதற்கு ஒத்துழைத்த தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்கள், இப்போது வேறு வழியில் தமது சிறப்புரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக சமரசத்துக்குச் செல்ல, அல்லது சமஷ்டி முறையை ஏற்படுத்திக்கொள்வதன் பேரில், பெரும் வல்லரசுகளின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர். அவர்களது வேலைத் திட்டம், உண்மையான ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு எதிரான, முதலாளித்துவ வர்க்கத்தின் வரப்பிரசாதங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான வேலைத் திட்டமாகும்.

கொழும்பில் உள்ள ஏகாதிபத்தியச் சார்பு இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக, தொழிலாளர்களின் இளைஞர்களின் மற்றும் மாணவர்களின் சோசலிச ஐக்கியமொன்றை கட்டியெழுப்புவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மற்றும் அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (.எஸ்.எஸ்..) அமைப்பின் பக்கம் திரும்புமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம். தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநயாக உரிமைகளைப் பாதுகாக்கவும் யுத்த்துக்கு எதிராகவும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நீண்ட போராட்டங்களை முன்னெடுத்த வரலாறு சோ...க்கும் மற்றும் ஐ.எஸ்.எஸ்..க்கும் உண்டு. இப்போதும் கூட சோ... மற்றும் ஐ.எஸ்.எஸ்.., யுத்தத்தின் போதும் மற்றும் அதன் முடிவின் போதும் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் பிரச்சாரம் ஒன்றில் ஈடுபட்டுள்ளன.

பல்கலைக் கழகங்களிலும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளின் உயர் வகுப்புகளிலும் மாணவர்கள் மத்தியில் இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் .எஸ்.எஸ்.. கிளைகளை ஸ்தாபிப்பதற்கு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.