World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The shutdown of Occupy Wall Stree

வோல் ஸ்ட்ரீட் முற்றுகை அகற்றப்படுதல்

Joseph Kishore
17 November 2011

Back to screen version

நியூ யோர்க்கின் பல பில்லியன் சொத்துக்களை உடைய மேயரான மைக்கேல் ப்ளூம்பெர்க் செவ்வாய் அதிகாலையில் மன்ஹட்டனில் சுக்கோட்டிப் பூங்கா முற்றுகையை வன்முறையில் அகற்றிய நடவடிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது.

பொலிஸ் நடத்திய அதிரடிச் செயல் தடையற்ற பேச்சுரிமை, கூடும் உரிமை ஆகியவை உட்பட பல அடிப்படை ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறிய செயல் ஆகும். ப்ளும்பெர்க் எதிர்ப்பாளர்களை அகற்றியதற்கு கூறிய காரணங்களும், செய்தி ஊடகமும் முழு அரசியல் நடைமுறையும் அவற்றைக் கிளிப்பிள்ளை போல் மீண்டும் உரைத்ததும், மிக அற்பமான போலிக் காரணங்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

அமெரிக்க ஆளும் வர்க்கம் மீண்டும் தன் நலன்களுக்கு எதிர்ப்பு எதையும் அது பொறுத்துக் கொள்ளாது என்பதைத்தான் நிரூபித்துள்ளது. முற்றுகை எதிரப்பாளர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது முற்றுகை இயக்கத்தை தூண்டிவிட்ட பெரும் சமூக சமத்துவமின்மை ஒப்பீடுகளுடன் பொருந்தாது என்பதைத் தெளிவாக்குகிறது.

நூற்றுக்கணக்கான அதிகாரிகளையும் ஈடுபடுத்திய, இராணுவ வகையிலான பொலிஸ் நடவடிக்கை, மிகவும் கவனமாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட இதேபோன்ற செயல்களுடன் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் அமெரிக்க முக்கிய நகரங்களின் மேயர்கள் எதிர்ப்புக்களை நெரிப்பதற்கு சிறந்த வழியை செயல்படுத்த கூட்டங்களையும் தொலைபேசி அழைப்பு உரையாடல்களையும் நடத்தியிருந்தனர்.

கடந்த வாரத்தில் மட்டும் பொலிஸ் தாக்குதல்கள் ஒரேகானில் போர்ட்லாந்து, கலிபோர்னியாவில் ஓக்லாந்து மற்றும் பெர்க்லி, கொலோரடோவில் டென்வர், மிசௌரியில் செயின்ட் லூயி, இன்னும் பல மற்ற நகரங்களிலும் நடத்தப்பட்டன. திரைக்குப்பின்னால், உள்ளூராட்சிகள், FBI மற்றும் ஒபாமாவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினால் ஆலோசனை கொடுக்கப்பட்டன.

இத்தாக்குதல்களில், கலகப் பிரிவுடைய அணிகலன்கள், கண்ணீர்புகைக்குண்டையும் தடிகளையும் பயன்படுத்துதல் இன்னும் மோசமாக ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்கார்களை தாக்குவதற்கு மிகப் பெரிய அளவில் பொலிஸ் படை திரட்டப்பட்டிருந்தது. இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் மன்ஹட்டனில் இயக்கம் தொடங்கியதில் இருந்து, கிட்டத்தட்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய் காலை கைது செய்யப்பட்டவர்களில் பலர் இன்னும் காவலில் உள்ளனர், அவர்கள் மீது இன்னமும் குற்றச்சாட்டு ஏதும் முன்வைக்கப்படவில்லை.

 

தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் ஆளும் வர்க்கமானது அரசு ஒரு நடுநிலையான அமைப்பு இல்லை என்பதை மில்லியன் கணக்கான மக்களுக்கு நிரூபித்துள்ளது. இது அவர்களுடைய அரசு, அவர்களுடைய அரசியல் பிரதிநிதிகளை அதிகாரிகள் என்று கொண்ட அரசு. பெரும்பாலான மக்களின் நலன்கள் மற்றும் தேவைகள் அரசாங்கக் கொள்கையின் போக்கில் சிறிதும் இடம் பெற்றிருக்காது.

இத்தகைய நிலைமை அமெரிக்காவில் மட்டும் பிரத்தியேகமாக இருந்துவிடவில்லை. பெரும்பாலான மக்கள் எதிர்ப்பிற்கு இடையே பெரும் சிக்கன நடவடிக்கைகளை விரைவாகச் செயல்படுத்தும் முயற்சியில் ஐரோப்பா இரு அராசங்கங்களையே மாற்றி அமைத்த அதே வாரத்தில்தான் வோல் ஸ்ட்ரீட் முற்றுகையை அகற்றும் நடவடிக்கையும் வந்துள்ளது. கோல்ட்மன் சாஷ்ஸில் முன்னாள் நிர்வாகியாக இருந்த மரியோ மோன்டி இத்தாலியில் பிரதமராக இருத்தப்பட்டுள்ளார்; அதே நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவரான லூகாஸ் பாப்படெமோஸ் கிரேக்கத்தில் பிரதமராக இருத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில் பிரிட்டனின் ஆளும் வர்க்கம் ஒரு புதியமுழுப் பொலிஸ் முறை வழிவகைகளை தொடங்கியுள்ளதுஅதன்படி பயிற்சிக் கட்டண உயர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள் நசுக்கப்படுவர், மிரட்டப்படுவர்.

அமெரிக்காவில் இச்செயலில் அனைத்து மட்ட அரசாங்கங்களும் இரு அரசியல் கட்சிகளும் தொடர்பு கொண்டிருந்தன. மிருகத்தனமான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு உத்தரவு இட்ட மேயர்களில் பெரும்பாலானவர்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அது கிட்டத்தட்ட மௌனமாகத்தான் உள்ளது. செவ்வாயன்று, ஒபாமா, ஆசியாவில் இருக்கையில், வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் ஜே கார்னி நியூ யோர்க் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு வினாவிற்கு விடையளிக்கையில் அதை நியாயப்படுத்தினார். “கூடும் உரிமை, பேச்சுரிமைச் சுதந்திரம் ஆகியவை சீராக இருக்க வேண்டும், அதில் முக்கியமான தேவை சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படவேண்டும், சுகாதார, பாதுகாப்புத் தரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்தாகவும்; இந்த ஆக்கிரமிப்பைப் பொறுத்தவரை இவைகள் கவலையைத்தான் அளித்தன.”

அரசாங்கத்தின் துணைக்கருவி போல் செயல்படும் செய்தி ஊடகம் தனக்கிடப்பட்டுள்ள பங்கைச் செய்கிறது. நியூ யோர்க் போஸ்ட் மற்றும் பிற வலதுசாரி வெளியீடுகளின் பகுதிப் பாசிசக் குமுறல்கள் தாராளவாதச் செய்தி ஊடகங்களில் கவனத்துடன் வெளியிடப்பட்ட கட்டுரைகளுடன் இணைந்து அடக்குமுறையை நியாயப்படுத்துகின்றன. புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் ப்ளூம்பெர்க்கின் செயல்கள்நெறியான கவலைகளினால் உந்துதல் பெற்றவை, “சட்டபூர்வமாக நியாயமானவைதான் என்று தலையங்கத்தில் எழுதியுள்ளது.

முற்றுகை ஆர்ப்பாட்டங்கள் பெரும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான மக்கள் சீற்றத்தின் ஆரம்ப வெளிப்பாடுதான். 2008ல் தொடங்கிய பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கிட்டத்தட்ட ஒபாமா நிர்வாகம் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் பெருகிய முறையில் பொறுத்துக் கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளன. நிதியப் பிரபுத்துவம் நாட்டின் கொள்கைகளை ஆணையிடுகிறது, நாட்டை கொள்ளை அடித்துள்ளது, தன் சொத்துக்களை இன்னும் உயர்ந்த அளவிற்கு மீட்டுள்ளது. இப்பொழுது அது சமூகநல திட்டங்களில் முன்னோடியில்லாத வெட்டுக்களைக் கோருகிறது.

இந்த நிலைமைகள் குறித்த வெறுப்பு பரவலாக உணரப்படுகிறது; ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்களானது தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. செய்தி ஊடகம் மற்றும் அரசியல் ஸ்தாபனமானது பொதுமக்கள் கருத்தை மாசுபடுத்த எந்த முயற்சிகளைக் கொண்டாலும்கூட, வெகுஜன உணர்வு உள்ளுணர்வுத் தன்மையில் முதலாளித்துவ-விரோதத்தை கொண்டுள்ளது, மாபெரும் வங்கிகள், பெருநிறுவனங்களுக்கு விரோதப் போக்கைக் கொண்டுள்ளது.

ஆனால், இந்நிலைமைகள் குறித்த வெற்றிகரமான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வைத்தான் நம்பியுள்ளது. வேறு எந்த சமூக சக்தியும் அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அத்துடன் இணைந்துள்ள அனைத்து தீமைகளுடனும் கணக்கை தீர்த்துவிட முடியாதுஅதாவது சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படல் மற்றும் போர் இவற்றிற்கு எதிராக.

தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை நலன்கள் முதலாளித்துவ அமைப்புமுறையுடன் பொருந்தியிராதவை ஆகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரச்சினை மட்டும் அல்ல இது; தனியார் இலாப நலன்களுக்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளுக்காக பொருளாதார வாழ்வை மறு சீரமைத்தல் மற்றும் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுதல் ஆகும். இதன் பொருள் முதலாளித்துவ இரு கட்சி முறையுடன் முறித்துக் கொண்டு, எதிர்ப்புக்கள் அனைத்தையும் ஜனநாயகக் கட்சிக்கு பின் ஆதரவாக திசை திருப்பும் முயற்சியுடனும் முறித்துக் கொள்ளுவது ஆகும்.

இதற்கு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்படல் தேவை; அவைகள் பொதுமக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். வோல்ஸ்ட்ரீட் முற்றுகை செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்; நிதிய உயரடுக்கு குவித்துள்ள மிகப்பெரும் தொகைகள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலுமுள்ள உடனடியான சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.

வேலைகளுக்கும் கௌரவமான வாழ்க்கைத் தரங்களுக்குமான போராட்டங்களும், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டமும் மற்றும் போருக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து போராட்டங்களையும் ஐக்கியப்படுத்த ஒரு புதிய அரசியல் தலைமையை கட்டமைப்பதே அடிப்படைப் பணி ஆகும். இப்போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி தலைமை தாங்குகிறது. வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிராக போராட விழையும் அனைத்துத் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நம் திட்டத்தைப் படிக்குமாறும் இன்றே SEP யில் சேருமாறும் வலியுறுத்துகிறோம்.