World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Renewed uprising signals turning point in Egyptian revolution

புதிய மீள்-எழுச்சி எகிப்தியப் புரட்சியில் திருப்புமுனைக்கு அறிகுறி காட்டுகின்றது

Bill Van Auken
22 November 2011
Back to screen version

கடந்த மூன்று நாட்களில் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையை எதிர்த்தும், அமெரிக்க ஆதரவுடனான இராணுவ ஆட்சிக்குழுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், நூறாயிரக்கணக்கான எகிப்தியத் தொழிலாளர்களும், இளைஞர்களும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்திலும் மற்றும் அலெக்சாண்டிரியாவிலிருந்து சூயஸ் வரையில், கீழ் எகிப்திலிருந்து நைல் டெல்டா வரையில் என நகரங்கள் மற்றும் சிற்றூர்களின் வீதிகளிலும் குவிந்துள்ளனர்.

பலர் கொல்லப்பட்டுள்ளனர், 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தஹ்ரீர் சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் செவ்வாயன்று அதிகாலை வரை மூர்க்கமான தெருமுனை மோதல்கள் தொடர்ந்தன. இந்த நசுக்கும் நடவடிக்கையில் பலியான 35 பேரது உடல்கள் திங்களன்று பிரதான கெய்ரோ பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டதாக அங்கிருந்த ஓர் அதிகாரி அசோசியேடெட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார்.

நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டு பெட்டிகளாலும், இரப்பர் தோட்டாக்கள், மற்றும் அவர்களை நோக்கி சுடப்பட்ட அசல் மற்றும் போலி தோட்டாக்களாலும் காயப்பட்டவர்களில் சிலர் கண்களை இழந்துள்ளனர்; சிலர் தலையில் கடுமையாக காயப்பட்டுள்ளனர். தலைக்கு குறிவைக்குமாறு சிப்பாய்களுக்கும், பொலிஸிற்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஏனைய அப்பாவி மக்களும் லத்தியால் இரக்கமின்றி அடிக்கப்பட்டனர், ஒருசிலர் வெளிப்படையாகவே சாகும்வரையில் அடிக்கப்பட்டனர்.

எகிப்தியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கொல்ல, காயப்படுத்த மற்றும் அடித்து நொறுக்க பயன்படுத்தப்பட்ட தளவாடங்கள், “அமெரிக்கத் தயாரிப்பு" என்று முத்திரையிடப்படாத குறை மட்டுமே. எகிப்திய இராணுவத்தின் தலைமை ஆயுதப்படை பிரிவுகளில் (Supreme Command of the Armed Forces - SCAF) உள்ள அதன் தலையாட்டிகளையும், கைக்கூலிகளையும் ஆதரிப்பதைத் தொடர்ந்து கொண்டே, வாஷிங்டன் மிகவும் கவனமாக எழுச்சியைக் கண்காணித்து வருகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளில் ஏற்பட்ட துயரகரமான உயிரிழப்புகளுக்கு இட்டுச்சென்ற எகிப்திய வன்முறை குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா ஆழ்ந்த வருந்தத்தைத் தெரிவிப்பதாக" குறிப்பிட்டு திங்களன்று வெள்ளைமாளிகை ஒரு விசன அறிக்கையொன்றை வெளியிட்டது. “ஒரு ஒன்றுபட்ட மற்றும் வலிமையான எகிப்தை உருவாக்க எகிப்தியர்கள் ஒன்றுசேர்ந்து முன்னோக்கி நகரும் விதத்தில் அனைத்து தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கு இதுவே சரியான நேரமென்று" அது அறிவுறுத்தியது. அனைத்திற்கும் மேலாக, “இத்தகைய துன்பியலான நிகழ்வுகள் தேர்தல் பாதையின் குறுக்கே நிற்கக் கூடாதென" அந்த அறிக்கை வலியுறுத்தியது.

நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும், அவர்களைச் சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு படைகள் மீதும் சமமாகப் பழிபோடும் அதேவேளையில், எகிப்திய மக்களுக்கு எதிராக கோரப்பற்களைக் காட்டுவதற்கு வசதியாய் அந்த படைகள் ஆயுதமேந்தி நிற்பதை உறுதிப்படுத்த, அமெரிக்க காங்கிரஸ் மூலமாக எகிப்திற்கு $1.3 பில்லியன் இராணுவ உதவித்தொகையை அளித்து, அந்த நிர்வாகம் அதன் "ஆழ்ந்த கவலை"யை வெளிப்படுத்தி உள்ளது.

நவம்பர் 28 ஞாயிறன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்கள் முன்னோக்கி நகரவேண்டுமென்ற மிதமிஞ்சிய அக்கறை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எவ்வித ஜனநாயக பொறுப்புணர்விலிருந்தும் எழவில்லை. லிபியா, சிரியா, யேமன், பஹ்ரெயின் மற்றும் ஏனைய இடங்களில் என்ன செய்ததோ அதேபோன்றே எகிப்திய நிகழ்வுகளையும் அது அணுகுகிறது. சில இடங்களில் ஆட்சி-மாற்றத்தைப் பின்பற்றுகிறது இன்னும் சில இடங்களில் ஆட்சி ஒடுக்குமுறையை ஆதரிக்கிறது. எல்லாமே மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் மீதும் மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்கள் மீதும் மேலாதிக்கத்தைக் கொண்டிருப்பதற்கான வாஷிங்டனின் போராட்டத்தை முன்னெடுக்க அப்பிராந்தியங்களில் ஏற்படும் எழுச்சிகளை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கோடு தான் செய்யப்படுகின்றன.

கடந்த 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை கடந்த பெப்ரவரியில் விரட்டியடிக்க யார் வேலைநிறுத்தங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனரோ அந்த எகிப்திய உழைக்கும் மக்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களை முன்னெடுப்பதற்கும், இந்த தேர்தல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேலைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகளுக்கான ஒரு போராட்டத்திலும், மற்றும் ஒடுக்குமுறை, சுரண்டல் மற்றும் எகிப்திய செல்வந்த தட்டுக்களால் மற்றும் சர்வதேச மூலதனத்தால் திணிக்கப்பட்ட சமூக சமத்துவமின்மையின் ஆத்திரமூட்டும் அளவுகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்திலும் (உலக முதலாளித்துவ நெருக்கடி வெடித்ததிலிருந்து இந்த நிலைமைகள் மிகமிக மோசமாக மோசமடைந்துள்ளன) இந்தவொரு வரலாற்றுரீதியிலான போராட்டத்தில் தொழிலாளர்கள் நுழைந்தனர்.

மத்தியகிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலுள்ள அவர்களின் வர்க்க சகோதர-சகோதரிகளைப் போலவே, எகிப்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் கோரிக்கைகளும், சமூகத்தை சோசலிசரீதியாக உருமாற்றுவதற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தால் மட்டுமே பூர்த்தி செய்யப்பட முடியும்.

உள்நாட்டின் அதிகாரத்தில் இருக்கும் சிலர் மற்றும் அவர்களது இராணுவக் கூலிப்படை, அத்தோடு சேர்ந்து நாடுகடந்த வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியோர் எகிப்தின் மீது தொடர்ந்து செலுத்தும் ஆதிக்கத்திற்கு ஒரு போலியான "ஜனநாயக" அங்கீகாரத்தை அளிப்பதே, அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்படவிருக்கும் தேர்தல்களின் நோக்கமாக உள்ளது. ஒரு சட்டமன்ற அவையில் ஐந்தில்-நான்கு பங்கு பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரத்தையும், அத்தோடு இறுதியாக வரையப்படும் அரசியலமைப்பின் எந்த பாகத்தின் மீதும் தடையாணை வழங்கும் அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, ஆளும் SCAF எகிப்தின் அரசியல் வாழ்வில் தனக்கு ஒரு கழுத்துப்பிடி கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல முபாரக்கின்கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட முழு ஒடுக்குமுறை மற்றும் சித்திரவதை இயந்திரங்களையும், அது தேவையான இடத்தில் நிலைநிறுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்தி வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் நசுக்கப்பட்டு கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 12,000 பேர் கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டனர்.

புதிய மக்கள் எழுச்சிக்கு முகங்கொடுத்திருக்கின்ற நிலையில், ஆளும் இராணுவக் குழுவால் நிறுவப்பட்ட மற்றும் முன்னாள் முபாரக் மந்திரி எஸ்ஸாம் ஷராப்பின் தலைமையிலிருக்கும் அந்நாட்டின் உள்நாட்டு ஆட்சிமன்றம் (civilian cabinet) திங்கட்கிழமைக்குப் பின்னர் அதன் இராஜினாமாவை அளித்தது. அசாதாரணமான வகையில் அரசுத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட அந்த இராஜினாமா மக்கள் போராட்டங்களை அமைதிப்படுத்தும் ஒரு முயற்சியாக சிலரால் பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், இராணுவத் தலைமையின் கரங்களில் அதிகாரம் முழுமையாக ஒளிவுமறைவின்றி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது மற்றொரு அரசியல் சூழ்ச்சிக்கு பாதையை சீர் செய்து தரக் கூடும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி ஆய்வு ஆணையத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய எகிப்திய ஜனாதிபதி வேட்பாளருமான மொஹமத் எல்பராதி உட்பட, எகிப்தில் அதிகரித்துச் செல்லும் பல முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ பிரபலங்கள் மற்றும் அமைப்புகள், ஒரு "தேசிய இடர்காப்பு அரசாங்கத்திற்கான" (national salvation government) கோரிக்கையை எழுப்பியுள்ளனர். “தாராளவாத, இஸ்லாமிய மற்றும் இடது கட்சிகள்" உட்பட 37 அரசியல் குழுக்கள் அந்த கோரிக்கையை வழிமொழிந்திருப்பதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் செவ்வாயன்று தஹ்ரீர் சதுக்கத்தில் "ஒரு மில்லியன் மக்கள்" கலந்து கொள்ளும் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை நடத்தியுள்ள எகிப்திய இராணுவத் தலைமையால் நிறுவப்படுகிற இதுபோன்றவொரு அரசாங்கம், தேசிய நலனையும் "புரட்சியின்" ஒற்றுமையையும் பாதுகாப்பதான பேரில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டங்களின் கழுத்தை நெரிப்பதையே அதன் மைய வேலையாகக் கொண்டிருக்கும்.

எகிப்தில் தங்களை "சோசலிஸ்டுகள்" என்றும், “புரட்சியாளர்கள்" என்றும் அழைத்துக் கொண்டு, இதுபோன்ற ஒரு போக்கிற்கு உதவி செய்து வரும் போலி-இடது கட்சிகளின் ஒரு கூட்டணி, “ஜனநாயக" மாற்றம் என்ற இராணுவ ஆட்சிக்குழுவின் அழைப்பிற்கும் மற்றும் அதன் மோசடித் தேர்தல் சூழ்ச்சிக்கும் எகிப்திய தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை அடிபணியச் செய்விப்பதில் தீர்மானத்துடன் உள்ளன. தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை அல்லாமல், மாறாக எகிப்திய குட்டி-முதலாளித்துவத்தின் மிகவும் செல்வாக்கு படைத்த பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தகைய குழுக்கள், ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தொழிலாளர்களது சுயாதீனமான அரசியல் போராட்டம் எதனையும் எதிர்க்கின்றன.

சான்றாக, பிரிட்டனின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியுடனும் (SWP) மற்றும் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் அமெரிக்காவிலுள்ள சர்வதேச சோசலிஸ்ட் அமைப்போடும் (ISO) இணைந்துள்ள புரட்சிகர சோசலிஸ்டுகளின் விஷயம் இவ்விதத்தில் தான் உள்ளது. இராணுவ ஆட்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல்களில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ள இந்த குழு, ஒடுக்குமுறையைக் கண்டித்தும், “நம்முடைய புரட்சி முடிந்துவிடவில்லை" என்று வலியறுத்தியும், ஒரு வீராவேச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறிருந்த போதினும், மக்கள் "ஜனவரி 25 புரட்சியின் படிப்பினைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்" அத்துடன் "நம்முடைய 'விடுதலை சதுக்கங்களின்' அனைத்து சக்திகளும் ஒரே முன்னணியாக ஐக்கியப்பட வேண்டும், அத்தகையவொரு அணிக்கு மட்டுமே புரட்சி குறித்துப் பேசுவதற்கான உரிமை உள்ளது,” என்று வலியுறுத்தியது மட்டுமே அது முன்னெடுத்த திடமான கொள்கையாக இருந்தது.

இந்த அதி-வீர வாய்ஜம்பம் நடைமுறையில் எதைக் குறிக்கிறதென்றால், எல்பராதி மற்றும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் வலதுசாரி இஸ்லாமியவாதிகளைத் தலைமையில் கொண்டிருக்கும் அந்த ஒரே முன்னணியின்" (single front) அனைத்துப் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டால் ஒழிய, எந்த கோரிக்கைகளும், கொள்கைகளும் முன்னெடுக்கப்படக்கூடாது என்பதையே.

புரட்சிகர சோசலிஸ்டுகள் மற்றும் எகிப்தின் நடுத்தர-வர்க்க போலி இடதுகளின் ஏனைய உட்கூறுகளால் ஆலோசனையளிக்கப்படும் இந்த "ஒரே முன்னணி" (single front), சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவச் சுரண்டல்களுக்கு எதிரான எகிப்தியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தை, தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நசுக்கத் தீர்மானத்துடன் உள்ள எகிப்திய முதலாளித்துவத்தின் போலித்தனமான ஜனநாயக நாடகங்களுக்கு அடிபணியச் செய்யவே உதவுகின்றது.

தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் சுயாதீனத்திற்கு அடித்தளமிடுவதன் மூலமும், இராணுவ ஆட்சிக்குழுவைப் புரட்சிகரமான முறையில் தூக்கியெறிந்து அதனிடத்தில் தொழிலாளர்களின் ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வருவதற்காக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டுவதன் மூலமாகவும் மட்டுமே அதன் சமூக மற்றும் அரசியல் நோக்கங்களை எட்டமுடியும் என்பதே ஜனவரி 25 இயக்கத்தின் நிஜமான படிப்பினைகளாக உள்ளது. எகிப்தை சோசலிசரீதியாக உருமாற்றுவதற்கான போராட்டமென்பது சோசலிசத்துக்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் பாகமாக, மத்தியகிழக்கு முழுவதிலும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான ஒரு போராட்டம் மூலமாக மட்டுமே வெல்லப்பட முடியும்.

ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே எகிப்திய தொழிலாளர்கள் முகங்கொடுத்துவரும் தீர்மானகரமான பிரச்சினையாகும். இந்த முன்னோக்கின் அடித்தளத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் எகிப்திய முதலாளித்துவம் மற்றும் அதன் குட்டி-முதலாளித்துவ போலி-இடது கூட்டுக்களின் எதிர்புரட்சிகரத் தாக்குதலைத் தோற்கடிக்க முடியும், ஏகாதிபத்தியத்தின் இரும்புப்பிடியை அது உடைக்க முடியும்; அத்துடன் ஓர் உண்மையான ஜனநாயக மற்றும் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க முடியும். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஓர் எகிப்திய பிரிவைக் கட்டியெழுப்புவதைக் குறிக்கிறது.