World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The police assault at University of California, Davis

டேவிஸ் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் பொலிஸார் தாக்குதல்

Jerry White
23 November 2011
Back to screen version

டேவஸில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்கள்மீது நவம்பர் 18 அன்று பொலிசார் நடத்திய தாக்குதல் அமெரிக்காவிற்குள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறவுகளில் இருக்கும் பிற்போக்குத்தன மற்றும் மிருகத்தனத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்திற்கு முடிவில்லாமல் தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளும் நிலைமையில் இருக்கும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பாசாங்குத்தனமும், நேர்மையற்ற தன்மையும் பெரும் செல்வம் உடையவர்கள், அவர்களுடைய  அரசாங்கத்தில் உள்ள எடுபிடிகளும் அமெரிக்காவைக் கட்டுப்படுத்தும் பெருநிறுவன, நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்கு அச்சுறுத்தல் என்று உணரும் கணத்தில் அனைவரும் பார்க்கும்படி அவர்கள் முகமூடி கிழிகிறது.

ஒரு போர்க்களத்தில் நுழைவது போன்ற தயாரிப்பில் பல்கலைக்கழகப் பொலிசார் இருந்தனர். மாணவர்களை மனிதப் பிறவிகளாக அவர்கள் கருதவில்லை சடப்பொருள் போலவே கருதினர் என்பதுதான் அவர்ளுடைய நடவடிக்கைகளில் இருந்து தெளிவாயிற்றுகட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும், மிருகத்தனமாக நடத்துவதற்கு உட்பட வேண்டும், ஏன், உத்தரவுகள் வந்தால் சுடக்கூடத் தயாராக இருக்க வேண்டும் என. இழிந்த இரசாயனப் பொருட்களை ஒரு பொலிஸ்காரர் மாணவர்கள்மீது தூவி, வீசியபோது, தன்னுடைய பணியை நிதானத்துடனும் முறையாகவும் அவர் செய்த வழிவகை அவரால் பாதிக்கப்படுபவர்கள் ஏதோ பூச்சிகள் அல்லது வீட்டின் பின்புலத் தோட்டத்தில் களைகள் என்பது போல் இருந்தது. அவருடைய சக அதிரடிப்படையினர்களும் அவருடைய செயலைக் கண்டு சிறிதும் மன உளைச்சலைக் காட்டியது போல் குறிப்பு ஏதும் இல்லை.

தன் புவி-அரசியல் நலன்களுக்கு எதிராக நடப்பதாகத் தான் கருதும் எந்த ஆட்சியின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்த அமெரிக்க அரசாங்கம் மனித உரிமைகள் பிரச்சினையை பயன்படுத்தியுள்ளது. டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்வுகள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் நடந்திருந்தால் எத்தகைய பெருங்கூச்சல் செய்தி ஊடகத்தில் வந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடியும்; அடக்கு முறை மற்றும் வன்முறை என வரும்போது, உலகில் எந்த ஆளும் வர்க்கமும் அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கிற்கு புதிதாகக் கற்றுத்தர ஏதும் இல்லை.

டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல், எகிப்தில் அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சி மிருகத்தனமாக தஹ்ரிர் சதுக்கத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் அதே நேரத்தில் நடந்துள்ளது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. தாக்குதல்களின் அளவு மாறுபட்டிருக்கலாம், ஆனால் இரண்டிலும் உள்ளடக்கம் ஒன்றுதான்.

உலகம் முழுவதும் தொழிலாளர்களும் இளைஞர்களும் சிக்கன நடவடிக்கைகள்,  வேலையின்மை பெருகியுள்ள நிலை ஆகியவற்றிற்கு எதிரான ஒரு வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு அரசாங்கமும் அரச ஒடுக்குமுறையை நிதியப் பிரபுத்துவத்தின் ஆணையின் பேரில் சுமத்துவதுதான் இதற்கு விடையிறுப்பாக உள்ளது.

கலிபோர்னிய மாணவர்களை மிருகத்தனமாக நடத்தியிருப்பது, பெருநிறுவன மற்றும் அரசியல் நடைமுறையில் இருக்கும் அச்சம், கவலை ஆகியவற்றின் அளவைக் குறிக்கிறது. சமூக எதிர்ப்பின் முதல் கட்டங்களுக்கு, ஒப்புமையில் குறைவான மாணவர்கள், இளைஞர்கள் பங்கு கொண்டிருக்கும் நிலையில், இதுதான் எதிர்கொள்ளும் முறை என்றால், அமெரிக்க ஆளும் உயரடுக்கு வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் பரந்த தொழிலாள வர்க்கப் பிரிவுகளால் மேற்கொள்ளப்படும்போது எத்தகைய வன்முறையை கட்டவிழ்த்துவிடும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆக்கிரமிப்பு இயக்கம் ஆரம்பத்தில் இருந்து வன்முறையை எதிர்கொண்டுள்ளது என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் சரிவையும் வெடிப்புத் தன்மையுடைய சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு அடையாளம் ஆகும். அக்டோபர் 1ம் திகதி ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் ப்ரூக்ளின் பாலத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் வன்முறை மூலம் கட்டுப்படுத்துவது விரிவாக்கம் அடைந்துள்ளது. இதில் கண்ணீர்ப்புகைக் குண்டு, பிளாஸ்டிக் தோட்டாக்கள் ஆகியவை ஒக்லாந்தில் பயன்படுத்தப்பட்டதும் அடங்கும்; இது ஒரு ஈராக்கில் போர்புரிந்த மூத்த இராணுவதினரையும் தீவிர காயத்திற்கு உட்படுத்தியது; அதே வகையில்தான் மன்ஹட்டனின் Zuccotti Park ல் வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கவும் என்போரின் முகாமை அழிக்க இராணுவ முறையிலான தாக்குதலும் நடந்தது. கடந்த வாரம், சியாட்டலில் மூன்று மாத கர்ப்பிணியான ஒரு இளம் எதிர்ப்பாளர், பொலிஸ் மிளகைத் தூவுவதற்கு முன் நடத்திய தாக்குதலில் இரு முறை வயிற்றில் உதைபட்டவுடன் கருச்சிதைவிற்கு உட்பட்டார்.

நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்களில் ஈடுபட்ட 4,000க்கும் மேற்பட்டவர்கள், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூராட்சிகள், FBI மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஆலோசனைக்கு உட்பட்டு, இயக்கத்தை நசுக்குவதற்கு தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளன.

இந்த அடக்குமுறை இரு அடிப்படை உண்மைகளைப் புலப்படுத்துகிறது. முதலாவது ஜனநாயக உரிமைகள், சமூகத்தின் சொத்து மிக்க செல்வக் கொழிப்பு உடைய 1 சதவிகித உயர்மட்டத்தினரின் ஏகபோக உரிமையாக இருப்பதுடன் இயைந்து இரா. நிதியப் பிரபுத்துவத்தின் கோரிக்கைகள்சிக்கன நடவடிக்கைகளுக்கு, சமூகநலத் திட்டங்கள் அழிக்கப்படுவதற்கு மற்றும் போர்கள் நடத்தப்படுவதற்குஆகியவை ஜனநாயக வழிவகைகளில் அடையப்பட முடியாதவை ஆகும். பெரும்பாலான மக்களின் எதிர்ப்பு இன்னும் கூடுதலான வகையில் சர்வாதிகார வழிகளைக் கையாள்வதின் மூலம்தான் கடக்கப்பட முடியும்.

இரண்டாவது அரசு அரசியல்வாதிகள், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் ஒன்றும் ஒரு நடுநிலை அமைப்பு அல்ல. இது ஒரு முதலாளித்துவ அரசு, சொத்துக்களையும், பெருநிறுவன, நிதியத் தன்னலக்குழுவின் அரசியல் ஆட்சியையும் பாதுகாக்கும் அமைப்பு ஆகும்.

கலிபோர்னியாவில் பொலிஸ் வன்முறை என்பதற்கு லிபரல் சின்னமும் ஜனநாயகக் கட்சியின் கவர்னருமான Jerry Brown தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டேவிஸ் கலிபோர்னியப் பல்கலைக்கழக பொலிஸ் தலைவர் ஒரு பெண், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் (தலைவர்) ஒரு பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசாங்கத்தின் உயரிடத்தில் ஓர் ஆபிரிக்க அமெரிக்கர் உள்ளார். அடையாள அரசியலுக்கான ஆதரவிற்கு இவையே போதும்; இவர்கள்தான் மகளிரையும், சிறுபான்மையினரையும் அதிகார உயர்நிலையில் வைப்பதின்மூலம் அரசியல் அமைப்புமுறை மாற்றப்படலாம் என்று முடிவில்லாமல் கூறுபவர்கள்!

இது, சக்திகள் இன்னும் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முறையிடும் பிரச்சினையும் இல்லை. பெருமந்த நிலைக்குப் பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு நடுவே, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அரசாங்கச் செலவுகளில் இருந்து டிரில்லியன்களை வெட்ட எது சிறந்த முறை என்பது பற்றிய கடுமையான பூசலில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாரம் முன்னதாக, ஜனாதிபதி ஒபாமா நிதியச் சந்தைகளுக்கு, மில்லியன் கணக்கான மக்கள் தங்கியுள்ள கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு இன்னும் பிற சமூகநலத் திட்டங்களின் செலவுகளில் மிகக் கடுமையான வெட்டுக்களைக் கொண்டுவருவதில் இருந்து தான் பின்வாங்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னணியில் உறுதியான பொருள்சார், வர்க்க நலன்கள் உள்ளன. நிதிய உயரடுக்கும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் முதலாளித்துவ முறையின் உலக நெருக்கடிக்கான விலையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முற்பட்டுள்ளன. இலாபமுறை தோல்வி அடைந்துள்ளது. அதனால் இளைஞர்களுக்கு கல்வி அளிக்க முடியவில்லை. அது வேலைகளைக் கொடுக்க முடியவில்லை. உயர்மட்டத்தில் உள்ள 1 வீதத்தினர் அவர்கள் தங்களை கொழிக்கச் செய்வதற்கு மட்டும்தான் அது உதவும்; அதேபோல் போர்கள் மற்றும் அரசாங்க அடக்குமுறையையும்தான் அதனால் செய்ய முடியும்.

சமூக நிலைமைகள் மோசமாவதின் பாதிப்பு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கூடுதான பிரிவுகளை போராட்டத்தில் ஈடுபட உந்துதல் கொடுத்துள்ளது. இந்த அரசியல் போராட்டம் சமரசத்திற்கு இடமில்லாத சமூக, வர்க்க நலன்களின் எதிர்ப்பைக் கொண்டுள்ளது என்பது உணரப்பட வேண்டும். வங்கிகள், பெருநிறுவன நலன்களின் இலாபங்களுக்கு எதிராக சமூகத் தேவைகள் முன்னுரிமை பெற வேண்டும் என்றால், ஓர் அடிப்படையிலான, புரட்சிகர மாற்றம் தேவைப்படுகிறது. மக்கள்தொகையில் பெரும்பான்மையில் இருக்கும் தொழிலாள வர்க்கம் தன் கைகளில் அதிகாரத்தின் மீதான கட்டுப்பாட்டை அடைய வேண்டும்.

செல்வம் மேலிருந்து கீழே மறுபகிர்வு செய்யப்பட வேண்டியது அவசரமாகத் தேவைப்படுகிறது. இதற்கு முதலாளித்துவம் சோசலிசத்தால் பதிலீடு செய்யப்பட வேண்டும்; அதையொட்டி சமூகத்தின் செல்வம் பெரும்பாலானவர்களின் உரிமையில் அமையும்அதாவது அச்சொத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களின் உரிமையின்கீழ்.

டேவஸில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொலிஸ் நடத்திய தாக்குதல் குறித்து தொழிலாளர்களிடையே பரந்த எதிர்ப்பும், ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள்பால் பரிவுணர்வும் உள்ளது. கட்டணப்பயிற்சி உயர்வுக்காகப் போராடுதல், கௌரவமான வருங்காலத்திற்கான உரிமை ஆகியவற்றிற்குப் பாடுபடும் இளைஞர்களிடையே, அதேபோல் தங்கள் வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் மீது இடையறாத்தாக்குதலை எதிர்கொண்டிருக்கும் தொழிலாளர்களிடையேயும் மிகச் சக்தி வாய்ந்த ஒற்றுமை உணர்வை இணப்பதற்கான நிலைமகள் உள்ளன.

டேவஸில் கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தங்கள் செயற்பாடுகளை வளாகங்கள், முகாம்களுடன் நிறுத்திக் கொள்ள முடியாது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.—இதில் வாழ்வதற்கு எஜமானன் அளிக்கும் காசோலைகளைப் பெறுவோர், அலுவலகங்களில் பணி புரிவோர், ஆலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் அடங்குவர்; பரிவுணர்வு சக்தி வாய்ந்த அரசியல் இயக்கமாக, பெருவணிகக் கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாக மாற்றப்பட வேண்டும்; அது எப்பொழுதும் சமூக சமத்துவமின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை ஆயுதமாகக் கொண்டிருக்கும்.