World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political issues in the fight against Wall Street

வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான போராட்டத்தில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

Bill Van Auken
5 October 2011

Back to screen version

தற்போது மூன்றாவது வாரத்தில் இருக்கும் வோல் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம், போஸ்டன், சிகாகோ, லோஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அந்நாட்டின் ஏனைய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களிலும் அதேபோன்ற முற்றுகை போராட்டங்களோடு, அமெரிக்கா முழுவதும் ஒரு சக்திவாய்ந்த ஆதரவை உருவாக்கியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களும், சமூக சமத்துவத்திற்கான அவர்களின் கோரிக்கையும் முதலாளித்துவம், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின்மீது மில்லியன் கணக்கானவர்களிடையே அதிகரித்துவரும் கோபத்தினையும் மற்றும் வேலைகள், நாகரீகமான வாழ்க்கை நிலைமைகளின் அவசர தேவைக்கும் மற்றும் மருத்துவ கவனிப்பு, கல்வி மற்றும் ஏனைய அடிப்படை சமூக தேவைகளுக்கும் ஓர் உத்திரவாதத்தைக் கோரும் ஒரு வெளிப்பாட்டையும் உருவாக்கியுள்ளது.

இந்த போராட்டத்தின் வளர்ச்சி அமெரிக்க ஆளும் வட்டங்களுக்குள் பெரும் கவலையை உருவாக்கி வருகிறது. இது செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸில் நிதியியல்துறை கட்டுரையாளர் ஆண்ட்ரூ ரோஸ் சோர்கின் எழுதிய ஒரு கட்டுரையில் வெளிப்பட்டது. ஒரு வோல் ஸ்ட்ரீட் தலைமை செயலதிகாரி அவரின் "சொந்த பாதுகாப்பு" குறித்து கவலை கொண்டதை மேற்கோளிட்டிருந்த அவர், "நம்முடைய பொருளாதாரம் தொடர்ந்து பிரச்சனைக்குள்ளாகிக் கொண்டிருந்தால், சில ஐரோப்பிய நாடுகளில் நாம் பார்த்ததைப் போல, ஒருவிதமான மக்கள் கிளர்ச்சி வெடிப்பதற்கான முன்னெச்சரிக்கையை" அது வெளிக்காட்டுகிறது என எச்சரித்தார்.

தங்களின் சொந்த பாதுகாப்பிற்காக பயப்பட வேண்டியவர்கள் வங்கியாளர்கள் அல்ல, மாறாக மீண்டும்மீண்டும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கும் மற்றும் தங்களின் பேச்சுரிமைகளுக்காக பாரிய கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாகிவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தான் பயப்பட வேண்டியதாக உள்ளது.

எவ்வாறிருந்தபோதினும், மக்கள் கிளர்ச்சி குறித்த சோர்கினின் எச்சரிக்கை முற்றிலும் நியாயமானதே. இவை 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் எழுந்துள்ள முதலும் முக்கியமுமான சமூக போராட்டங்களில் ஒன்றாக உள்ளன. முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், அவர்களின் வாழ்நாளில் சமூக மாற்றத்தைக் கோரும் இதுபோன்ற முக்கிய போராட்டங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த பெப்ரவரியில் விஸ்கான்சின் நிகழ்ந்த பாரிய ஆர்ப்பாட்டங்களுடன் சேர்ந்து இவை உலக முதலாளித்துவத்தின் மையமாக விளங்கும் அமெரிக்காவில் பகிரங்கமான வர்க்க போராட்டத்தின் மறு-எழுச்சிக்கு அறிகுறியாக விளங்குகின்றன.

இதுபோன்ற போராட்டங்கள் தற்செயலாக எழுவதல்ல. இவை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் சக்திவாய்ந்த முரண்பாடுகளால் உந்தப்படுகின்றன. லெஹ்மென் பிரதர்ஸ் பொறிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ அமைப்புமுறை அழிவுகரமான வேலைவாய்ப்பின்மை மட்டங்களை உருவாக்கியுள்ளதோடு, மில்லியன் கணக்கானவர்களை ஆழமடைந்துவரும் வறுமையிலும் தள்ளியுள்ளது. அதேவேளை சமூகத்தின் மேல் மட்டத்திலே இருப்பவர்களோ வெறுப்பூட்டும் அளவிற்கு செல்வவளத்தைத் தொடர்ந்து குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் இதுவரையில் இவ்வாறான போராட்டங்களை தடுத்து வைத்திருந்தது எது? 1970களின் பிற்பகுதியிலிருந்து, சமூக செல்வவளத்தை பெருந்திரளான உழைக்கும் மக்களிடமிருந்து மேலேயுள்ள 1 சதவீத நிதியியல் செல்வந்ததட்டுக்கு மாற்றுவதென்பது தொடர்ந்து கொண்டும், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வேகமாகவும் நடந்து வந்துள்ளது. 1981 PATCO வேலை நிறுத்தத்திலிருந்து, இந்த செயல்பாட்டிற்கு தொழிலாள வர்க்கம் காட்டிய எதிர்ப்பு, தொழிற்சங்கங்களால் திட்டமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில் தங்களைத்தாங்களே பெருநிறுவனங்களுக்குள்ளும், அரசங்கத்திற்குள்ளும் மற்றும் ஜனநாயக கட்சிக்குள்ளும் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன.

இதன் விளைவுகள் பார்வைக்கு மிகவும் வெளிப்படையாக உள்ளன, நியூயோர்க் நகரத்தை விட இந்தளவிற்கு வேறெங்கும் தெளிவாக  இருந்ததில்லை. அங்கே மொத்த வருமானத்தில் 50 சதவீதத்தை  சராசரி ஆண்டு வருமானம் $3.7 மில்லியன் உள்ள சுமார் 34,500  குடும்பங்களை சேர்ந்த மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினருக்கு போகிறது. அந்நகரில் உள்ள மில்லியன் கணக்கான ஏழை மக்கள் ஓர் ஒட்டுமொத்த ஆண்டில் சம்பாதிப்பதைவிட அதிகமாக, இந்த பொன்மூலாம் பூசிய அடுக்கு ஒரேநாளில் திரட்டுகிறது.

சமூக சமத்துவமன்மைக்கும், அது வேரூன்றியுள்ள முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான போராட்டமென்பது அனைத்திற்கும் மேலாக ஓர் அரசியல் போராட்டமாகும். செல்வத்தை பங்கிடலும் மற்றும் சமூகத்தின் அதிகாரமும் பணயத்தில் இருக்கும்போது, அது அவ்வாறில்லாமல் வேறு எவ்விதத்தில் இருக்க முடியும்? வோல் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு அதை முன்னெடுத்து செல்ல விரும்புபவர்கள், கூர்மையான அரசியல் சவால்களையும்,  முடிவுகளையும் முகங்கொடுக்கின்றனர்.

இந்த போராட்டம் அபிவிருத்தி அடைந்து வருகையில், அமெரிக்க போராட்டங்களின் எந்தவொரு வடிவத்திற்கும் பெரும்பாலும் நடப்பதைப் போன்றே, இந்த போராட்டமும் ஜனநாயக கட்சிக்குள் திருப்பிவிடப்படும் அபாயத்தை முகங்கொடுக்கிறது. புஷ் நிர்வாகத்தின்கீழ் எழுந்த யுத்த-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இதுவே நடந்தது. அவை தேர்தல் காலக்கட்டத்திற்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்டு, வெள்ளை மாளிகையில் ஒபாமா நுழைந்ததும் இறுதியாக சுருட்டிப் போடப்பட்டன. அங்கே ஒபாமா புஷ்ஷின் யுத்தங்களை விரிவாக்கி தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

நியூ யோர்க் டைம்ஸ் அதன் வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு போராட்டங்களைக் குறித்த அதன் செய்தி தொகுப்பில், ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் காஜினை மேற்கோளிடுகிறது. அவர் குறிப்பிடுகிறார், “அதிருப்தியின் அடிப்படையில் எழுந்த ஆத்திரங்கள் தான் எந்தவொரு போராட்டத்திலும் முதல் கட்டமாகும்.” அந்த போராட்டம் ஒரு "நீடித்த போராட்டமாக" திரும்ப வேண்டுமானால், “புதிதாக கட்டவிழும் உத்வேகங்கள் அமைப்புகளுக்குள் ஒன்றிணைக்கப்பட்டு, அரசியல் நோக்கங்களாக வடிவமைக்கப்பட வேண்டும்,” என்று காஜின் கூறியதை அந்த கட்டுரை மேற்கோளிட்டு செல்கிறது.

அவர் மனதில் இருக்கும் "அமைப்புகள்" என்பவை ஜனநாயக கட்சியோடும், அரசியல் அமைப்புமுறையோடும் இணைந்தவை என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை.

வோல் ஸ்ட்ரீட் போராட்டத்தின் பக்கம், உலக வங்கியின் முன்னாள் துணை தலைவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஜ் உட்பட, அதற்கு பொருந்தாத ஆதரவாளர்களின் ஒரு யாத்ரீகர்கள் குழுவும் அதிகரித்து வருகிறது. அவர் (ஜோசப் ஸ்டிக்லிட்ஜ்) கூறுகையில், பிரச்சினை முதலாளித்துவம் அல்ல, மாறாக ஒரு "குழம்பிநிற்கும் பொருளாதாரமே" ஆகுமென்று போராட்டக்காரர்களுக்கு உத்தரவாதமளித்தார். வோல் ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டங்களுக்கு நிதித்துறை பில்லினியரான ஜோர்ஜ் ஸோரோஸ் அவருடைய அனுதாபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அது, பிரெஞ்ச் மகாராணி மேரி ஆண்டொனெட்(மதிப்பிளந்த "  அவர்கள் கேக்கை உண்ணட்டும்”) என்று பாஸ்டெல்லிற்கு வெளியில் கூடியிருக்கும் போராட்டக்காரர்களுக்கு ஓர் அழைப்பு விட்டு, ரொட்டிக்கடையை சென்றுபார்க்கவும் என்று கூறியதுபோல் உள்ளது.

முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியால் உருவான நிலைமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் இந்த போராட்டம், முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைதிட்டத்தோடு ஆயுதபாணியாகி ஓர் இயக்கமாக வடிவெடுத்துவிடுமோ என்பது தான் அவர்களின் பிரதான அச்சமாக உள்ளது.

இந்த அச்சம், இன்று சிட்டி ஹாலில் இருந்து போராட்டம் நடக்கவிருக்கும் ஜூகோட்டி பூங்கா வரையில் பங்கெடுக்கவிருக்கும் தொழிற்சங்க குழுக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான எந்தவொரு அவர்களின் சொந்த போராட்டத்தை முன்னெடுப்பதிலிருந்தும் அவர்கள் வெகுதூரத்தில் உள்ளனர் என்ற, மற்றும் அவர்களின் சொந்த உறுப்பினர்களுக்கு எதிராகவும், ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் நிதியியல் மூலதனத்தால் கோரப்பட்ட சமூகநல வெட்டு முறைமைகளை திணிப்பதில் ஆர்வத்தோடு இணைந்துள்ளனர் என்ற உண்மையை அவர்கள் மூடி மறைக்கின்றனர்.

உதாரணமாக, அதிக தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் 1119-SEIU, ஆளுநர் கோமோவின் மருத்துவத்துறை சீரமைப்பு குழுவில் (Medical Redesign Team) இணைந்து, மருத்துவ-கவனிப்பு நிதிஒதுக்கீடுகளில் பெரும் வெட்டுக்களைச் செய்ய இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் பரிந்துரைகளை ஆதரித்தது. அந்நடவடிக்கை பணியாளர்கள் குறைப்பையும், மெடிக்கேரில் (Medicare) ஒரு தாக்குதலையும் விளைவித்தது. ஏனையவர்களும் இதேபோன்ற காட்டிக்கொடுப்புகளை நடத்தியுள்ளனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் வோல் ஸ்ட்ரீட் போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர் என்றால், அது எந்தவித போராட்டத்திலும் சேர வேண்டியதில்லை, மாறாக ஜனநாயக கட்சிக்கும், ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சாரத்திற்கும் ஒரு வாகனமாக அந்த போராட்டத்தை திருப்பாமல் இருந்தாலே போதுமானது.

வோல் ஸ்ட்ரீட் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை முன்நிறுத்துகிறது.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் திரும்புவதும், ஒட்டுமொத்த சமூகத்தையும் கொள்ளையடித்துள்ள நிதியியல் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை ஒன்றுதிரட்டுவதும், இதற்கு அவசியமாகும்.

பெருவியாபார கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியிலிருந்து உடைத்துக் கொள்வதே இந்த போராட்டத்தின் அரசியல் தொடக்கப்புள்ளி ஆகும். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய பெருந்திரளான அரசியல் கட்சியைக் கட்டுவதில், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர், முதியோர் என ஒடுக்கப்பட்ட அனைவரையும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுதிரட்ட வேண்டும்.

இது பாடசாலைகள், மருத்துவமனைகள், வீட்டுவசதித்துறை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற தேவையான அத்தியாவசிய வேலைகள் அனைத்திற்காகவும், மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதிலும் வேலைவாய்ப்புகளை வழங்கும் ஓர் அவசரகால பொதுப்பணி வேலைத்திட்டத்திற்கான முறையீட்டை உள்ளிணைக்க வேண்டும்.

வாழ்வதற்கு தேவையான வருமானம், தரமான மருத்துவ-கவனிப்பு மற்றும் கல்வி, நாகரீகமான மற்றும் தாங்கக்கூடிய அளவிற்கான வீட்டுவசதி மற்றும் ஏனைய சமூகதேவைகள் ஆகியவற்றிற்கான உரிமையானது, சமூகத்தின் ஓர் அடிப்படை மறுகட்டமைப்பு மற்றும் செல்வவளத்தை மறுபகிர்வு செய்தல் என்பதன் மூலமாக உத்தரவாதமளிக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் முதலாளித்துவ அமைப்புமுறை தோற்றுவிட்டது. அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தை ஆக்கிரமித்திருக்கும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை பொதுத்துறையின் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து, தனியார் இலாபத்திற்கு அல்லாமல் மாறாக சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சமூகத்தை சோசலிச மறுகட்டமைப்பு செய்வதொன்றே ஒரேயொரு சாத்தியமான மாற்றீடாக உள்ளது.

எகிப்து, கிரீஸ் மற்றும் ஏனைய இடங்களைப் போலவே, அமெரிக்காவிலுள்ள உழைக்கும் மக்களும் இலாபகர அமைப்புமுறையின் நெருக்கடியால் புதிய போராட்டங்களுக்குள் தூக்கியெறியப்பட்டுள்ளனர். வோல் ஸ்ட்ரீட் போராட்டக்காரர்களைப் போலவே, தொழிலாள வர்க்கமும் வெற்றிபெறுவதற்கு தேவையான அரசியல் வேலைதிட்டம், அமைப்புகள் மற்றும் தலைமை இல்லாமல் இத்தகைய போராட்டங்களில் இறங்குகிறது. ஒரு சர்வதேச அடிப்படையில் தேவைப்படும் புரட்சிகர மாற்றீட்டைக் கட்டியெழுப்ப, சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே இயங்குகின்றன.