World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party presidential contenders embrace right-wing policies

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதிப் பதவி வேட்பாளர்கள் வலதுசாரிக் கொள்கைகளை பின்பற்றுகின்றனர்

By Antoine Lerougetel and Alex Lantier
15 October 2011

 Back to screen version

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) அடுத்து ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் அதன் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபர் 9ம் திகதி முதல் சுற்றுத் துவக்கத் தேர்தல்களை நடத்தியது. மிக அதிக வாக்குகளைப் பெற்ற இரு போட்டியாளர்கள், François Hollande மற்றும் Martine Aubry ஆகியோர் அடுத்த ஞாயிறன்று நடைபெறவுள்ள அடுத்த தேர்தலுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆரம்ப தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் ஒரு யூரோ பணம் கொடுக்க வேண்டும்; கடந்த ஞாயிறன்று 2.6 மில்லியன் மக்கள் முதல் சுற்றில் வாக்களித்தனர். ஹோலண்ட் 39.2 சதவிகித மொத்த வாக்குகளையும் ஆப்ரி 30.4 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். பாதுகாப்புவாதம் என்ற தளத்தில் தேர்தலில் நின்றவரும் தன்னைஇடது எனக்காட்டிக் கொண்ட வேட்பாளருமான Arnaud Montebourg வியப்புத் தரும் வகையில் 17.2 சதவிகித வாக்குகளைப் பெற்றார்.

இது 2007 ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியுற்ற சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான செகோலீன் ரோயாலை நான்காவது இடத்திற்கு 7 சதவிகித வாக்குகள் என்ற நிலைக்குத் தள்ளியது. சோசலிஸ்ட் கட்சியின் வெளிப்படையான தடையற்ற சந்தைப் பிரிவைச் சேர்ந்த Manuel Valls 5.6 சதவிகித வாக்குகளைப் பெற்றார். வால்ஸ் மற்றும் ரோயால் இருவரும் தங்கள் ஆதரவாளர்களை அடுத்த தேர்தலில் ஹோலண்டிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

புதன்கிழமை ஒரு தொலைக்காட்சி விவாதத்திற்குப்பின் நடத்தப்பட்ட சோசலிஸ்ட் கட்சியின் ஆரம்ப தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பில் ஹோலண்ட் 54 சதவிகிதம், ஆப்ரி 46 சதவிகிதம் என்று  வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றனர்.

ஹோலண்டிற்கும் ஆப்ரிக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை. இருவரும் அதிக வனப்பற்ற அதிகாரத்துவத்தினர்; பிரான்ஸின் நிதியப் பிரபுத்துவத்திற்கான சேவையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டவர்கள். ஹோலண்ட் சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலராக 11 ஆண்டு காலம் பதவியில்  இருந்தார்; அவரைத் தொடர்ந்து 2008 ல் அப்பதவியில் ஆப்ரி உள்ளார். இருவருமே தொழிலார்களின் சமூக உரிமைகள் மீதான தாக்குதல், ஏகாதிபத்தியப் போர் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கின்றனர்; இருவரும் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா மித்திரோனுக்கு 1980 களில் முன்னாள் உதவியாளர்களாக இருந்தவர்கள்.

1997-2002 ஆண்டுகளில் சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான லியோனல் ஜோஸ்பன் அரசாங்கத்தில் ஆப்ரி இரண்டாவது உயரிடத்தில் இருந்தார்; அந்த ஆட்சிதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் வேறு எந்த அரசாங்கத்தையும் விட பொது நிறுவனங்களை அதிகமாகத் தனியார்மயம் ஆக்கியது. மேலும் ஆப்கானிஸ்தான் போரில் பிரெஞ்சுப் பங்கு இருப்பதையும் ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஹோலண்ட் முதன்மைச் செயலராகவும் ஜோஸ்பனுடைய நெருக்கமான நண்பராகவும் இருந்தார். கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் தொடக்கப்பட்ட லிபியாவிற்கு எதிரான பிரெஞ்சுப் போரை இவர்கள் இருவருமே ஆதரிக்கின்றனர்.

தன்னை ஒருதீவிர இடது என்று காட்டிக் கொள்ள ஆப்ரி முயல்கிறார்; ஹோலண்ட்நிதானமான இடது எனவும் பெருநிறுவன நிதிய நலன்களுக்கு ஆதரவு கொடுப்பவர் என்றும் முற்படுகிறார். ஆனால், புதன்கிழமை அவர்களுக்கு இடையே நடந்த விவாதம் உண்மையில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே அதிக வேறுபாடு உண்மையில் இல்லை என்பதை தெளிவாக்கியுள்ளது; இருவருமே நிதியக் கொள்கையின் நுட்பமான கருத்துக்களைப் பற்றித்தான் பெரும்பாலும் விவாதித்தனர். இகழ்விற்குட்பட்டுள்ள லிபிய, ஆப்கானியப் போர்கள் பற்றி விவாதிக்கப்படக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு வேட்பாளர்களுமே வங்கிகள் தேசியமயம் ஆக்கப்படமாட்டாது எனக் கூறிவிட்டனர்; உலகப் பொருளாதார நெருக்கடியின் வெடிப்பிற்குப் பின் பிரெஞ்சு வங்கிகள் அரசக் கடன்கள் உத்தரவாதங்களை பில்லியன் கணக்கில் வாங்கியும் இந்த நிலைதான் ஏற்கப்பட்டுள்ளது. இருவருமே பிரான்ஸ் அதனுடைய வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மிகைபடாமல் இருக்க வேண்டும் என்று கோரினர்; இது Maastricht  உடன்பாட்டின் விதிகளுடன் இணைந்தது ஆகும்; அதன்படி சமுகநலச் செலவுகளில் பல பில்லியன் யூரோக்கள் வெட்டப்பட்டுவிடும்.

இவர்கள் இருவரும் கிரேக்கம் ஒரு பகுதியான திவால்நிலைக்கு ஆதரவு கொடுத்தனர்; அந்நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளைப் பற்றி மிகச் சிறிய தொழில்நுட்பத் தவறாக குறைகூறினர்; நிலைமையோ கிரேக்கத் தொழிலாள வர்க்கத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.

இவர்கள் இருவருமே சார்க்கோசியின் முக்கிய சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்முழு ஓய்வூதியம் பெறுவதற்கு 41 ஆண்டுக்கால வேலை என உயர்த்தப்பட்டது; அதே நேரத்தில் ஓய்வூதிய வயதை மீண்டும் தற்பொழுதைய 62.5 என்பதில் இருந்து 60க்குக் கொண்டுவருவதாக இழிந்த முறையில் மறைப்புக் காட்டிப் பேசுகின்றனர். அத்தகைய உறுதிமொழியை ஒரு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி செயல்படுத்தினாலும், தொழிலாளர்களின் ஓய்வூதியங்களில் அது பேரழிவை ஏற்படுத்தும்: ஏனெனில் அந்த வயதில் பெரும்பாலான ஓய்வு பெறுவோர் 41 ஆண்டுக்கால வேலையில் இருந்திருக்க மாட்டார்கள், அதையொட்டி தங்கள் ஓய்வூதியங்களில் (décote) கணிசமான அபராதக் குறைப்புக்களுக்கு முகங்கொடுப்பார்கள்.

சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சார்க்கோசியை விட சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு சிறந்த உத்தரவாதம் கொடுக்க இருப்பதாகக் காட்டிக் கொண்டனர்; அவரையும் விட வலதுசாரித் தன்மை உடையவர்களாகவும் காட்டிக் கொள்ள முற்பட்டனர். வேட்பாளர்களின் நிலை பற்றி Nouvel Observateur-Terra Nova கருத்துக் கணிப்பு ஆப்ரி, ஹோலண்ட் இருவருமே 10,000 புதிய கூடுதலான பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறியதைக் குறிப்பிட்டுள்ளது.

ஹோலண்ட் மற்றும் ஆப்ரிக்கும் இடையே அரசியல் வேறுபாடுகள் இல்லாத நிலை சோசலிஸ்ட் கட்சியின் ஆரம்ப தேர்தல்களிலுள்ள மோசடித்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இத்தகைய முறை 2009 ல் சோசலிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்குச் செய்தி ஊடக விளம்பரைத்தை அடைவதற்காக முன்வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் Terra Nova அறக்கட்டளை திட்டமிடப்பட்ட சோசலிஸ்ட் கட்சியின் ஆரம்ப தேர்தலை இத்தாலிய ஆரம்ப தேர்தலுடன் ஒப்பிட்டு ஒரு குறிப்பை வெளியிட்டது; அது 2008 தேர்தல்களில் இத்தாலிய முதலாளித்துவத்தின்இடது வேட்பாளர்களைத் தேர்ந்து எடுத்தது. “ஒரு ஜனநாயக இயக்கமுறை இதில் உள்ளது: இத்தகைய ஆரம்ப தேர்தல் குடிமக்கள் அரசியலில் பங்கு பெறும் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளது. இத்தாலியில் வால்டர் வெல்ட்ரோனியின் ஆரம்ப தேர்தல் ஓர் உதாரணம் ஆகும்அதில் 3.5 மில்லியன் வாக்காளர்கள் உண்மையான போட்டியாக இல்லாத ஒரு தேர்தலில் பங்கு பெற்றனர்இது பங்கு பெறும் களிப்பிற்கு சான்றாக உள்ளது என அது குறிப்பிட்டது.

இப்பொழுது பிரான்ஸிலுள்ள வாக்காளர்கள்எந்த உண்மையான போட்டியும் இல்லாத மற்றொரு தேர்தலில் வாக்களிக்கும் பெருமைக்காக ஒரு யூரோ பணம் கொடுக்குமாறு கூறப்படுகின்றனர்; அதுவும் ஹோலண்ட், ஆப்ரி இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க. ஜனநாயகக் கட்சியின் வால்டர் வெல்ட்ரோனி அக்டோபர் 2007 ஆரம்ப தேர்தலில் வெற்றிபெற்றாலும், அவருடைய கட்சி தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கதுமுக்கியமாக அது பெரும் வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்களைச் செயல்படுத்தியதுடன் லெபனான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மக்கள் ஆதரவு இல்லாத இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால். அதேபோல் சோசலிஸ்ட் கட்சியும் இப்பொழுது பொதுமக்கள் கருத்தை மீறி பிற்போக்குத்தனக் கொள்கைகளை செயல்படுத்த தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது.

இந்தவகையில் Motebourg ற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது: சோசலிஸ்ட் கட்சியின் வலதுசாரி வேலைத்திட்டத்திற்கான அரசியல் எதிர்ப்பு முட்டுச்சந்தை பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) அல்லது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிக்கு (NPA) திசை திருப்பி, பின்னர் இறுதியில் அவற்றை சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு செய்வதற்கு உதவுவதை உத்தரவாதப்படுத்துதல் என்பதே அது. அவருடைய கொள்கைத் திட்டங்கள் ஹோலண்ட் அல்லது ஆப்ரி போன்ற சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் திட்டங்கள் மீது உண்மையான செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை. அவர்களைத்தான் முதலாளித்துவம் பதவியில் இருத்தப் பரிசீலிக்கும். ஆனால் அவர் PCF, NPA வில் உள்ள சில திட்டங்களை எதிரொலித்து, PCF அல்லது NPA விற்கு வாக்கு என்பது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளைச் செல்வாக்கிற்கு உட்படுத்தும் என்னும் போலித்தோற்றங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்.

செகோலீன் ரோயாலின் வலதுசாரித்தன 2007 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்த Montebourg பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்காக தேசியவெறிக் கோரிக்கைகளை துவக்கி நிதியக் கட்டுப்பாட்டிற்கான வெற்று அழைப்புக்களையும் விடுத்துள்ளார்; இவை PCF ஜனாதிபதி வேட்பாளர் Jean-Luc Mélenchon உடைய வனப்புரைகளைத்தான் எதிரொலிக்கின்றன.

NPA மற்றும் Jean-Luc Mélenchon உடைய இடது கட்சி மற்றும் ஸ்ராலினிச ஆதிக்கம் நிறைந்த CGT தொழிற்சங்கத்துடன் பாதுகாப்புவாதத்திற்கு வலுவான ஆதரவைக் கொடுக்கும் PCF உடனும் நெருக்கமான உறவுகளை Montebourg கொண்டுள்ளார். NPA தலைவரான ஒலிவியே பெஸன்செனோ, Mélenchon மற்றும் PCF தலைமை அனைவரும் Montebourg ன் ஆண்டு நிகழ்வான Fête de la Rose  அணிவகுப்பில் கடந்த ஆண்டு கலந்து கொண்டனர். இத்தகைகைய சக்திகள் ஜனாதிபதித் தேர்தல்களில் இரண்டாவது சுற்றிற்குத் தன் வேட்பாளருக்கு ஒப்புதல் கொடுக்கும் என நம்பலாம் என்பதை சோசலிஸ்ட் கட்சி அறிந்துள்ளது.

வங்கிகள்கண்காணிப்பின் கீழ் இருத்தப்பட வேண்டும், “இலாபத்தை ஈட்டும் வங்கிகள் அவற்றை வங்கிகளுக்கு இடையேயான ஒற்றுமை என்னும் முறையில் இடருக்கு உட்படும் மற்ற வங்கிகளைப் பிணை எடுக்கப் பயன்படுத்த வேண்டும் என்று Montebourg கருத்துத் தெரிவித்துள்ளார்.

முதல் சுற்று ஆரம்ப தேர்தல்களுக்குப் பின் அவர் ஹோலண்டிற்கும் ஆப்ரிக்கும் ஒரு கடிதம் எழுதி, தன் பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்கு அவர்கள் மறு தேர்தலில் ஆதரவு வேண்டும் என்றால் ஒப்புதல் தரவேண்டும் என்று கோரினார். “ஐரோப்பிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஐரோப்பிய, தேசிய அளவில் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று குரல் கொடுத்துள்ளார். ஏயர் பிரான்ஸ் ஏயர்பஸ் விமானங்களைத்தான் வாங்க வேண்டும் (அவைதான் பிரான்ஸ், ஜேர்மனியில் பெரிதும் தயாரிக்கப்படுகின்றன) என்ற கருத்தை அவர் முன்வைத்து அமெரிக்க போயிங் விமானங்கள் வாங்குவது கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஆப்ரியும் ஹோலண்டும் போட்டிபோட்டுக் கொண்டு இவர் கருத்தை ஏற்க முன்வந்துள்ளனர். “உலகமயமாக்குதல் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்…..நவீனமயம், பாதுகாத்தல் ஆகியவற்றைக் கொண்ட ஐரோப்பா நமக்குத் தேவை என்று ஆப்ரி அழைப்பு விடுத்தார்.

நாம் ஒரு திறந்த பொருளாதாரத்திற்கு ஆதரவு கொடுக்கலாம், ஆனால் எவரும் பறித்துக் கொள்ளக்கூடிய பொருளாதாரத்திற்குக் கூடாது என்று ஹோலண்ட் சேர்த்துக் கொண்டார். அவர் வெளிப்படையாக சீனாவைத் தாக்கினார். “முதலாவது கொள்கை இருதிறத்தாருக்கும் இடையே பகிர்வு வேண்டும்…. சீனாவானது..சீனாசுற்றுச் சூழல் நெறிகளை மதிக்கவில்லை என நாம் ஏற்கமுடியுமா? முடியாது என்றார் அவர்.

இத்தகைய அச்சுறுத்தல்கள் வர்த்தக போர்களுக்கு ஆதரவான முற்றிலும் பொறுப்பற்ற செயற்பாடுகள் ஆகும்; ஐரோப்பாவிலோ, சீனாவிலோ தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை முன்னேற்றுவிக்க ஏதும் செய்யப்போவதில்லை. ஒரு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் 2012ல் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நிதிய மூலதனத்தின் ஒரு பிற்போக்குத்தன அமைப்பாகவே இருக்கும் --  1982-83 “சிக்கன வேலைத்திட்டத்திற்கு திரும்பிய மித்திரோன் அரசாங்கம் இருந்தது போல், பன்முக இடது அரசாங்கம் இருந்தது போல், அல்லது கிரேக்கத்தில் இப்பொழுது சமூக ஜனநாயகக் கட்சி சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவது போல்.