World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

After pay deal with unions Sri Lankan plantation companies increase productivity

இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகள் சம்பள உடன்படிக்கையின் பின்னர் உற்பத்தித் திறனை அதிகரிக்கின்றன

M. Vasanthan
3 September 2011

Back to screen version

இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகள் ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முதுகை வளைக்கும் கடுமையான வேலைப் பளுவை தொழிலாளர்கள் மீது சுமத்துகின்றனர். ஒரு நாளைக்கு பறிக்கும் தேயிலைக் கொழுந்தின் அளவை அதிகரித்தல், கொழுந்தை நிறுக்கும்போது 3 கிலோ கொழுந்தை கழிவுகள் என்ற அடிப்படையில் வெட்டுதல், ஒரு நாளுக்கு தேயிலை நாற்று நடும் பிரதேசத்தை அதிகரித்தல் மற்றும் ஒரு நாளைக்கு இறப்பர் பால் எடுக்கும் அளவை அதிகரித்தல் ஆகியவை இந்த சுமைகளில் அடங்கும். 

கூட்டு ஒப்பந்தமானது முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தோட்ட தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டிக்கும் (JCTUC) இடையில்  கைசாத்திடப்பட்டது. அரசாங்கம் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்பே ஒப்பந்தத்தை கைச்சாத்திட விரும்பியது.

தோட்டங்களின் திறன் மற்றும் உற்பத்தியை மேம்படுத்த ஒத்துழைக்கவும் மற்றும் அதற்காக தம்மை அர்ப்பணித்துக்கொள்ளவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள உடன்படிக்கையின் ஒரு தெளிவற்ற பிரிவை தோட்டக் கம்பனிகள் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்த பிரிவு கம்பனிகள் வேலைப் பளுவை அதிகரிப்பதற்குரிய நிலைமைகளை ஏற்படுத்துகிறது.

தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் இந்த உடன்படிக்கையின் கீழ், நாள் சம்பளம் 285 ரூபாயிலிருந்து 380 ரூபா வரையும், கொடுப்பனவுகள் 90 ரூபாயிலிருந்து 105 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பானது கடந்த இரண்டு வருடங்களுக்குள் வானளாவ உயர்ந்த விலைவாசியை சமாளிக்க எந்த விதத்திலும் போதுமானதல்ல.

பொகவந்தலாவை பெருந்தோட்டக் கம்பனியின் கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள், ஒரு நாளுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 13 கிலோவிலிருந்து 18 கிலோவாக அதிகரிப்பதற்கு எதிராக யூலை ஆரம்பத்தில்  மூன்று  நாள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். கொட்டியாகலை தோட்ட முகாமையாளர், அட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கு அனுப்பிய கடித்தில், கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கொழுந்தின் அளவு கூட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

சில தோட்டங்களில் நாளொன்றுக்கு பறிக்கப்படும் கொழுந்தின் அளவு 16 கிலோவிலிருந்து 18 அல்லது 19 கிலோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இறப்பர் தோட்டங்களில் நாளொன்றுக்கு சேகரிக்க வேண்டிய பாலின் அளவு, 5 கிலோவிலிருந்து 10 கிலோ வரை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் தோட்டக் கம்பனிகள் ஒன்றரை நாள் சம்பளம் வழங்கி வந்தன. ஆனால் இப்பொழுது சில கம்பனிகள் அதை கூலி முறைக்கு மாற்றியுள்ளன. அதன்படி வேலையின் அளவைப் பொறுத்தே சம்பளம் வழங்கப்படும்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய அட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளி தெரிவித்ததாவது: கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், கம்பனிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்தால் ஒன்றரை நாள் சம்பளம் என்ற நிலையை மாற்றி, கூலி முறையை கொண்டுவந்து, ஒரு கிலோ கொழுந்துக்கு 25 ரூபாய் என்ற அடிப்படையில் கொடுக்கத் தொடங்கிவிட்டன. இந்த முறையில் 15 கிலோ கொழுந்து பறித்தால் 375 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும். இவ்வளவுதான் ஒரு தொழிலாளியால் சராசரியாக பறிக்க முடியும். இந்த தொகை ஒரு நாள் சம்பளத்தையும் விட குறைவாகும்.  எமது தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருக்கின்றன ஆனால் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.’’

எமது வலைத் தளத்துடன் பேசிய கிளனியுஜ் தோட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி, அடிப்படை சம்பளம் 380 ரூபாயாக இருக்க ஒரு நாளுக்கான செலவு 1000 ரூபாய் என்றார். எங்களது சம்பளம் மூன்று வேளை சாப்பாட்டுக்கே போதாது. நாம் பிள்ளைகளின் படிப்பு செலவு, மருத்துவச் செலவுகளை ஈடுசெய்ய வேண்டும். தோட்டங்களில் நல்ல மருத்துவ வசதி கிடையாது. பாடசாலையில் எல்லாவற்றுக்கும் காசு கேட்கிறார்கள். எமது தோட்டத்தில் போதிய வீட்டு வசத்திகளும் கிடையாது.’’

பல தோட்டங்களில் வீட்டு வசதி  பெரும்  பிரச்சனையாக உள்ளது. 50 வருடங்களுக்கு மேல் பழமை வாயந்த லயன் அறைகளை அல்லது தற்காலிக குடிசைகளை பராமரிப்பதற்காக தொழிலாளர்கள் தமது சம்பளத்திலேயே  செலவு செய்ய வேண்டியுள்து. மழை காலங்களில் தற்காலிக குடிசைகளில் வாழ்வது மிகவும் சிரமம். சில தோட்டங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒரு லயன் அறையில் அல்லது கூடாரத்தில் வாழ்கிறார்கள்.

தோட்ட உரிமையாளர் சங்க தலைவர் லலித் ஒபயசேகர, சம்பள உயர்வு வழங்கியதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக புலம்பினார். உற்பத்தி திறனை அதிகரிக்கும் பிரிவில், வேலை வழங்கப்படும் நாட்களில் 75 வீதம் வேலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது கடைப்பிடிக்கக் கூடியதல்ல.

‘’வேலைக்கு சமூகமளிப்பது குறைவாக இருப்பதாலும், குறைவான உற்பத்தி உள்ளதாலும் தோட்டங்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது’’ என ஒபயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார். தோட்டங்களில் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதால் தொழிலாளர்கள் வெளியில் வேலைக்கு செல்வதே வருகை குறைவதற்கான காரணமாகும்.

மத்திய கிழக்கு நெருக்கடியினால் எமது தேயிலையின் விலை 70 ரூபாவிலிருந்து 80 ரூபாவரை வீழ்ச்சியடைந்துள்ளது. மிகவும் உயர்ந்த உற்பத்தி செலவினால் நாங்களும் விலையை கூட்டியுள்ளோம். எமது உற்பத்தி செலவில் 50 லிருந்து 55 வீதம்வரை சம்பளத்துக்கு செலவிடப்படுகின்றது. இது தென்னிந்தியாவின் உற்பத்தி செலவுடன் ஒப்பிடும் போது இரட்டிப்பாகும். கென்யாவுடன் ஒப்பிடும்போது 35 வீதம் அதிகமாகும் என ஒபயசேகர மேலும்  குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்காக, உலகில் மிகவும் வறிய மட்டத்திலான சம்பளங்கள் உள்ள நாடுகளுடன் பொருந்தக்கூடிய முறையில் சம்பளத்தை குறைப்பது உட்பட செலவை குறைப்பதையே ஒபயசேகர சமிக்ஞை செய்துள்ளார்.

இலங்கை தேயிலை சபை, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் கொந்தளிப்புகள் இருந்த போதிலும் தேயிலையின் இந்த வருட வருமானம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டும்  என நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வருட வருமானம்  1.4 பில்லின்  அமெரிக்க டொலர் ஆகும்.

இலங்கை தேயிலை சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த வருட உற்பத்தியில் 0.6 வீத சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு பறிக்கப்பட்ட169.4  கிலோவிலிருந்து170.4  மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 23 தோட்டக் கம்பனிகள் 935 வீதம் இலாபத்தை பெற்றுள்ள போதிலும் தொழிலாளர்கள் வறிய சம்பளத்தில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. தேயிலை ஏற்றுமதி சபை தகவல்களின் படி உயர்ந்த லாபம் பெறுவது தொடரும். இதற்கான அடிப்படை காரணம் குறைந்த சம்பளமே. உற்பத்தியை அதிகரிப்பதும் செலவை குறைப்பதும் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் உக்கிரமாக்கப்படும் என்பதற்கான அறிகுறியே ஆகும்.

வேலை பளுவை அதிகரிக்கும் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்களும் பங்காளியாக இருப்பதனால் அது சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் மெளனம் சாதிக்கின்றன. தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளபட்ட துரோக கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக, சோசலிச சமத்துவ கட்சியும் (சோ.ச.க.) உலக சோசலிச வலைத் தளமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன் தோட்டத் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்ட அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. (பார்க்க: http://www.wsws.org/tamil/articles/2011/july/110705_sep.shtml).  

இ.தொ.கா. ஆளும் கூட்டரசாங்கத்தின் பங்காளியாக இருப்பதுடன் அதன் தலைவரான ஆறுமுகம் தொண்டமான் அமைச்சராகவும் இருக்கின்ற அதே வேளை, ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவ வாதிகள் பிரதி அமைச்சர்களாக உள்ளனர், அல்லது அரசாங்க பதவிகளில் இருக்கின்றனர். உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டது பற்றி இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கத்திடம் எமது நிருபர்கள் கேட்ட போது, கேள்வியைத் தட்டிக்கழித்த அவர், அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என தொழிற்சங்கம் அறிவுறுத்தியுள்ளது என மட்டுமே கூறினார்.

இதேபோல் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி சார்பு தொழிற் சங்கமான LJEWU  தலைவர்களில்  ஒருவரான ஆர். யோகராஐனுக்கு தொழிலாளர் மேல் சுமத்தப்படுகின்ற வேலைப் பழு சம்பந்தமாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அவர், நாங்கள் உற்பத்தித் திறனை அதிகரிப்பதை எதிர்கின்றோம்’’ என்று மட்டுமே கூறினார், ஆனால் எவ்வாறு என கூறவில்லை.

தொழிலாளர் தேசிய சங்கத் (NUW) தலைவர் பி.திகாம்பரம், பாராளுமன்ற தேர்தலில் யூ.என்.பீ. சார்பில் போட்டியிட்டு வென்ற பின்பு அரசாங்கத்துடன் அரசியல் உறவை ஏற்படுத்திக் கொண்டவர். இவர் தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் பற்றி கல்வியூட்டவில்லை என குற்றம் சாட்டுகின்றார். அவர் கூட்டு ஒப்பந்தத்தை அல்லது உற்பத்தி அதிகரிப்பை எதிர்க்கவில்லை.

மனோ கணேசன் தலமையிலான ஐனநாயக மக்கள் முன்னணி சார்பு ஐனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) தலைவரான முரளி ரகுநாதன் எமது வலைத் தளத்துடன் பேசும் போது, தாம் உற்பத்தியை அதிகரிப்பதை எதிர்த்த போதும், தனியாக ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்யும் நிலையில் இல்லை என தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் ஜ.தொ.கா. இந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. தனது சங்கம் குறைந்த மட்டத்திலான சம்பள உயர்வை எதிர்த்த போதும் அதற்கு எதிராக ‘’தனிமையாக போராட முடியாது’’ என கணேசன் கூறினார். இத்தகைய வாய் வீச்சின் மூலம், வறிய மட்டத்திலான வாழ்க்கை நிலை, வேலை நிலைமைகள் சீரழிவு மற்றும் ஜ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு சம்பந்தமாக தொழிலாளர் மத்தியில் வளர்ச்சியடையும் எதிர்ப்பை ஆவியாக்கிவிடவே ஜ.தொ.கா. முயற்சிக்கின்றது.

தோட்டப்புறத்தில் உள்ள தொழிலாளர்களையும் ஏனைய பகுதி தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பதற்கு தொழிலாளர்கள் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். மற்றும் சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர்கள்விவசாயிகள் அரசாங்கத்துக்காகவும் போராட ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்ப வேண்டும். அந்தக் கட்சியே சோசலிச சமத்துவக் கட்சி ஆகும்.