World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government to hang men convicted over Rajiv Gandhi’s assassination

ராஜிவ் காந்தி படுகொலையில் தண்டனைக்குட்பட்டவர்களை இந்திய அரசாங்கம் தூக்கிலிடவுள்ளது

By Deepal Jayasekera
16 September 2011

Back to screen version

மே 21, 1991ல் இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு இரு தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் கொலைச் சதி செய்து தண்டனைக்குட்பட்ட மூவரைமுருகன், சின்ன சாந்தன் மற்றும் ஜி.பேரறிவாளன்ஆகியோரைத் தூக்கிலிடவுள்ளது.

ஆகஸ்ட் 31ம் திகதி இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டில், உள்துறை அமைச்சரகத்தின் பரிந்துரையில், கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனை நிறைவேற்ற வழிவகுத்தார். செப்டம்பர் 9 அன்று தூக்குப் போடப்படும் என்றும் அதிகாரிகள் தேதியை நிர்ணயித்தனர்; ஆனால் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் எட்டு வாரங்களுக்கு இதை நிறுத்தி வைத்தது; தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற மனுவை ஒட்டி இத்தடை வந்துள்ளது. குற்றவாளிகளின் வக்கீல்கள் ஜனாதிபதி ஏற்கனவே தேவையில்லாமல் கருணை முறையீடுகள் மீது முடிவெடுப்பதில் தாமதப்படுத்திவிட்டார் என்று வாதிட்டுள்ளனர்.

இம்மூவரும், முருகனின் மனைவி எஸ். நளினியும் ஜனவரி 1988ல் ராஜிவ் காந்தியைக் கொலைசெய்யச் சதி செய்த குற்றத்திற்காக இழிவான Terrorism and Disruptive Activities (Prevention)TADA சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டதுடன், மற்றும் 22 பேருடன் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். இவர்களுள் மூவரின் தண்டனை சிறைவாசம் எனக் குறைக்கப்பட்டு 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 2000 ஆண்டில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் கவர்னர் நிராகரித்தார்; ஆனால் நளினியின் மரண தண்டனை ஆயுட்தண்டனையாகக் குறைத்தார். மூன்று ஆண்களும் இறுதி முறையீட்டை இந்திய ஜனாதிபதிக்குச் செய்தனர்; ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அவர் இது பற்றிய முடிவெடுப்பதைத் தாமதப்படுத்தியுள்ளார்.

 

இந்த நீடித்த தாமதம் அரசியல் கணக்கீடுகளுடன் பிணைப்புக் கொண்டது; தமிழ்நாட்டிலுள்ள பிராந்தியத் தளமுடைய கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்து மத்திய அரசுகள் நம்பியிருந்தன; இங்கு அண்டைய இலங்கைத் தமிழ்ச் சிறுபான்மையினரின் நிலைக்குப் பரந்த பரிவுணர்வு உள்ளது; அதேபோல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) குறிப்பிடத்தக்க ஆதரவு இருந்தது.

தமிழ்நாட்டில் ஒரு காங்கிரஸ் தேர்தல் அணிவகுப்பு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றபோது ராஜிவ் காந்தி ஒரு தற்கொலைப் படைப் பெண்ணினால் கொலை செய்யப்பட்டார். பிரிவினைப் போராட்டத்தைக் காந்தி காட்டிக்கொடுத்துவிட்டார் என்று கருதியதை அடுத்து LTTE படுகொலையை ஒரு பழிவாங்கும் முயற்சியாக மேற்கொண்டது. 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, இந்திய அரசாங்கம் ஒருஅமைதி காக்கும் படையை இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது; அது விரைவில் LTTE உடன் மோதியது.

காந்தியை LTTE கொன்றது அதன் முதலாளித்துவத் தேசியவாத அரசியலின் முட்டுச் சந்தைத்தான் அம்பலப்படுத்தியது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அது ஆதரவு கொடுத்ததானது, காந்தி ஒரு தனி ஈழ அரசு நிறுவ உதவுவார் என்று நம்பியது. ஆனால் இந்திய அரசாங்கம்அமைதி காக்கும் படையினரை இலங்கையில் நடக்கும் பிரிவினைப் போரை அடக்கவும், அதேபோன்ற போராட்டங்கள் இந்தியாவில் வரக்கூடாது என்பதை உத்தரவாதம் செய்யவும்தான் அனுப்பியிருந்தது. இந்தியாவிலோ இலங்கையிலோ தொழிலாளர் வர்க்கத்திற்கு எந்த முறையீட்டையும் செய்ய இயலாத நிலையில், LTTE காந்தியைக் கடுமையாகச் சாடியது.

காந்தி படுகொலை செய்யப்பட்டதானது LTTE இந்திய அரசியல் ஸ்தாபனத்துடன் கொண்டிருந்த உறவுகளை, குறிப்பாக காங்கிரசுடன், சீர்குலைத்தது. முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தூக்கிலிடப்படுவதற்கான தயாரிப்புக்கள் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகின்றன என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.

மிகவும் காலம் கடந்துதான் LTTE தான் படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டது. 2006ல் முக்கிய LTTE நபரான ஆன்டன் பாலசிங்கம் இச்செயலைமாபெரும் வரலாற்றுச் சோகம்”, “நாங்கள் ஆழ்ந்து வருந்துகிறோம் என்று விவரித்தார். காங்கிரஸ் தலைமையிலான புது டெல்லியிலுள்ள அரசாங்கத்துடன் உறவுகளை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற பெரும் திகைப்பில் அவர், “எச்சூழ்நிலையிலும் LTTE இந்திய அரசாங்கத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்படாது என்றும் உறுதியளித்தார்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முடிவும் அரசியல் நலன்களை ஒட்டி அமைந்தது. இந்திய அரசாங்கமானது இலங்கையுடனான தன் ராஜதந்திர உறவில் சமச்சீர் முயற்சியில்தான் எப்பொழுதும் ஈடுபட்டிருந்தது; தன் செல்வாக்கிற்குட்பட்ட பகுதி என்றுதான் அந்நாட்டைக் கருதியதுடன், தமிழ்நாட்டு மக்களின் பொதுக்கருத்தையும் விரோதிக்காமல் இருக்க முயன்றது.

2009ல் LTTE இராணுவரீதியாகத் தோற்றமையாது அந்த இயக்கமுறையை மாற்றிவிட்டது. இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கிறது என்று காட்டிக் கொண்டாலும், புது டெல்லி கொழும்பில் தன் செல்வாக்கை உயர்த்த முற்படுகிறது; குறிப்பாக அதன் போட்டி நாடான சீனாவின் பெருகும் ஈடுபாட்டிற்கு எதிராக. முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் தூக்கிலிடப்படுவது கொழும்பு அரசாங்கத்தால் இந்தியாவானது இலங்கையின் தமிழ்ப் பிரிவினைவாத ஆதரவாளர்களுக்கு எதிராகக் கடினப் போக்கை எடுக்க முயலும் என்பதற்கான அடையாளமாக, சந்தேகத்திற்கு இடமின்றி, வரவேற்கப்படும்.

இந்த வழிவகையில் இம்மூவரும் பகடைக்காய்கள்தான். TADA சட்டத்தின்படி அவர்கள் தண்டனை பெற்றது நீதி முறைக்கு அவலமாகும். சட்ட நவடிக்கைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னே நடைபெற்றன; பொலிஸ் சதி பற்றி சாட்சியம் அளிக்க ஒரு சான்றைக்கூட அளிக்கமுடியவில்லை. குற்றச்சாட்டு இழிந்த முறையில் தெளிவற்று இருந்தது. இதன் விளைவாக கடுமையான பாதிப்பிற்குட்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு தண்டிக்கப்பட்டனர்; அத்தகைய வழிவகை TADA சட்டத்தில் இசைவு கொடுக்கப்பட்டிருந்தது. நீதிபதிக்கு முன்பு மூவரும் தங்கள் ஒப்புதல் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றனர்.

இப்பொழுது தூக்குத் தண்டனையைச் செயல்படுத்துவது என்பது தொழிலாளர் வர்க்கத்திற்குப் பரந்த உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ அரசாங்கப் புள்ளிவிவரங்கள்படி, 1947ல் இருந்து மரண தண்டனைகள் 52 முறைகள்தான் நடத்தப்பட்டுள்ளனஇந்த எண்ணிக்கையை குடிமை உரிமைகள்வாதிகள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர். 1983ல் நாட்டின் தலைமை நீதிமன்றம் மிக அபூர்வமான வழக்குகளில் மட்டுமேதான் மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்புக் கூறியது. அரசியல் காரணக் குற்றங்களுக்காக அது பயன்படுத்தப்படுவது இன்னும் அபூர்வம் ஆகும். தலைமை நீதிமன்ற முடிவையடுத்து ஒரு கஷ்மீர்ப் பிரிவினைவாதி மக்பூல் பட், 1968ல் இந்தியப் பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றதற்காகத்  தண்டனை பெற்றவர் ஒருவர்தான் 1984ல் தூக்கிலிடப்பட்டார்.

ஆனால், அரசியல் தூக்குத் தண்டனைகள் கடந்த இரு தசாப்தங்களாக அபூர்வம் என்றாலும், இந்தியப் பாதுகாப்புப் படைகள் நீதித்துறைக்கு அப்பால் கொலை செய்வதில் இழிவுற்றவை; அதேபோல் ஒருதலைப்பட்ச கைதுகள், சித்திரவதை ஆகியவை, குறிப்பாக இந்தியக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கஷ்மீரில் மிகவும் அதிகம் ஆகும்.

முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் தூக்கு என்பது காத்திருக்கும் மற்ற அரசியல் வழக்குகளின் தூக்குப்போடுதலைச் செயல்படுத்த முக்கிய முன்னோடியாகிவிடும். இதில் காலிஸ்தான் விடுதலைப் படை (ஒரு ஆயுதமேந்திய சீக்கிய தனிநாடு கோரும் குழு) உறுப்பினரான தேவிந்தர் சிங் உள்ளார்; இவர் கொலைக்காக இத்தண்டனையைப் பெற்றுள்ளார்; 2001ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய கஷ்மீர் பிரிவினைவாதிகளின் சதியை ஒட்டித் தண்டனை பெற்ற மகம்மத் அப்சலும் உள்ளார்.

இந்தியாவில் இருதசாப்தங்களாக சந்தை ஆதரவு மறுகட்டமைப்பின் விளைவால் ஏற்பட்டுள்ள சமூக அழுத்தங்களின் பெருக்கப் பின்னணியில் இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுதல் நடக்கவுள்ளது; ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே சந்தைச் சார்புடைய கட்டுமானங்கள் இடைவெளியை அதிகரித்து விட்டன. இது அரசாங்கக் கருவியை வலுப்படுத்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்; இது பயங்கரவாதத்திற்கு எதிரான என்ற மறைப்பில் நடத்தப்படுகிறது; தவிர்க்க முடியாமல் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் போராட்டங்கள், எதிர்ப்புக்கள் வெடிக்கையில் பயன்படுத்தப்படும்.

நவம்பர் 2008ல் மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்ததை அடுத்து காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் Unlawful Activities (Prevention) Amendments Act 2008 ஐ இயற்றியது; இது குற்றச்சாட்டு இல்லாமல் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் காவலில் வைத்திருக்கும் நேரத்தை இரு மடங்காக்கிவிட்டது; குற்றம் சாட்டப்பட்டவர்தான் சில விஷயங்களில் நிரபராதித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. அதே ஆண்டு அரசாங்கம் NIA எனப்படும் தேசிய விசாரணை அமைப்பை பயங்கரவாத வழக்குகள் எனக் கூறப்படுவதற்காக நிறுவி, மாநில அரசாங்கங்களை மீறி செயல்படுவதற்கும், சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதற்கும் அதற்கு அதிகாரத்தைக் கொடுத்தது.

இன்றைய முக்கிய எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. BJP யின் செய்தித் தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் கூறினார்: “நாட்டில் ஒரு சட்டம் உள்ளது; அது அவர்களைத் தண்டித்துள்ளது. அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.” சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கிலிடப்படுவது மகம்மத் அப்சல் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என்னும் முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்திற்குத் தூண்டுதலைக் கொடுக்க BJP  பயன்படுத்தும்.

மரண தண்டனை பரந்த அளவில் பயன்படுத்தப்படுவது, குறிப்பாக அரசியல் வழக்குகளில், என்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை ஆகும்; இது வரவிருக்கும் காலத்தில் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு பயன்படுத்தப்படும் வழிவகைகள் பற்றித்தான் கூறுகிறது.