World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Maruti Suzuki India lockout: After talks fail, union leaders arrested

மாருதி சுஷூகி இந்தியா கதவடைப்பு: பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னர், தொழிற்சங்க தலைவர்கள் கைது

By Arun Kumar
20 September 2011

Back to screen version

மாருதி சுஷூகி இந்தியா (MSI) லிமிடெட் நிர்வாகிகள் மற்றும் ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதைத் செய்ததைத் தொடர்ந்து, ஞாயிறன்று மாலை மாருதி சுஷூகி தொழிலாளர்கள் சங்கத்தின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு சர்வாதிகார வேலையிட ஆட்சிமுறையை உட்கொண்டிருக்கும் மற்றும் சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட MSEU ஆலையைவிட அதன் தலையாட்டி தொழிற்சங்கத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு "நன்னடத்தை பத்திரத்தில்" தொழிலாளர்கள் கையெழுத்திட மறுத்ததற்காக, ஆகஸ்ட் 29இல் இருந்து, MSI ஹரியானாவிலுள்ள அதன் மானேசர் கார் அசெம்பிளி ஆலையில் 3,000 தொழிலாளர்களுக்கு கதவடைப்பை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான MSI கடந்த மூன்று வாரங்களில் போர்குணமிக்க தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கும் அதன் பிரச்சாரத்தை அதிகரித்திருப்பதுடன், அப்பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பவர்களுக்கு பிரதியீடாக தற்காலிக கூலியாட்களை நியமிக்கவும் தொடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட 62 தொழிலாளர்களில் ஒருவரையும் மீண்டும் நியமிப்பதற்கு MSI நிர்வாகம் காட்டிய பிடிவாதமான எதிர்ப்பால் ஞாயிறன்று பேச்சுவார்த்தை முறிந்தது.

அந்த கார் உற்பத்தியாளருக்கும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கும் இடையில் நிலவும் தெளிவான ஒருமித்த ஒரு நகர்வில், MSEU தலைவர் சோனு குஜ்ஜார், பொதுச்செயலாளர் ஷிவ்குமார், மற்றும் செயல் உறுப்பினர் ரவீந்தர் குமார் ஆகிய மூவரும் செப்டம்பர் 18 அன்று மாலை நடந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து எழுந்து வந்த பின்னர், பொலிஸால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், சில MSI மேற்பார்வையாளர்களோடு ரவீந்தர் குமார் கைகலப்பில் ஈடுபட்டார் என்று பொய்க்குற்றத்தின்மீது அவருக்கு எதிராக பொலிஸ் முதன்மை குற்ற அறிக்கை பதிவு செய்தது. கைது நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மனித உரிமைகள் அமைப்புகள், தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

திங்களன்று, அம்மூவருக்கும் பிணை மறுக்கப்பட்டு, 14 நாட்களுக்கு பொன்ட்சி சிறையில் அடைத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கதவடைப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, ஹரியானா காங்கிரஸ் கட்சி அரசாங்கம் MSIக்கு இணக்கமாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களால் வெறுத்தொதுக்கப்படும் நிறுவன தொழிற்சங்கமே தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துமென்று கூறி, ஆகஸ்ட் மாத மத்தியில், அதன் தொழிலாளர் நலத்துறை MSEU- அங்கீகரிக்க மறுத்தது. MSI மானேசர் அசெம்பிளி ஆலை தொழிலாளர்களுக்கு கதவடைப்பை அறிவித்த சூழலில், கடந்த ஜூனில் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட எழுச்சிமிகுந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைப் போன்றே மீண்டும் தொழிலாளர்களிடையே உருவாகிவிடாமல் தடுக்க, அம்மாநில அரசாங்கம் நூற்றுக்கணக்கான பொலிஸை ஆலையின் கட்டுப்பாட்டிற்காக குவித்திருந்தது.

பிரச்சினைக்கு தொழிலாளர்களைக் குறைகூறி கொண்டே, இந்தியாவின் மிக பிரபல கார்களில் ஒன்றான "ஸ்விப்ட்" மாடலின் MSI உற்பத்தியை தொந்தரவிற்குள்ளாக்கியதன் விளைவாக, மாநிலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்நலத்துறை மந்திரி ஷிவ் சரண் லால் சர்மா அவருடைய மனவருத்தத்தைத் தெரிவித்தார்.

மானேசர் தொழிலாளர்கள் அதன் "நன்னடத்தை பத்திரத்தில்" கையொப்பமிட வேண்டுமென்ற MSI நிர்வாகத்தின் முறையீட்டிற்கு சர்மா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். அவர் கூறியது: “தொழிலாளர்கள் மீண்டும் நாசவேலைகளில் இறங்க போவதில்லை என்பதை நிறுவனம் எழுத்துப்பூர்வமாக கேட்கிறதென்றால், அதில் என்ன பிரச்சினை உள்ளது? தொழிலாளர்களிடமிருந்து அதை கோருவதற்கு நிறுவனத்திற்கு உரிமை உண்டு.” MSEU அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸில் (ஏஐடியுசி) பதிவு செய்துள்ளதால், அதை சட்டப்பூர்வமாக ஏற்க முடியாதென்ற MSIஇன் முறையீட்டையே அரசாங்கமும் கிளிப்பிள்ளைப் போல திரும்ப திரும்ப கூறிவருகிறது. இந்தியாவின் பழமைவாய்ந்த ஏஐடியுசி, இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) ஒரு மிக நெருக்கமான கூட்டாளியாகும்.

MSI பிரதிநிதிகள், ஞாயிறன்று MSEU தலைவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். ஆகவே நிறுவனத்திற்கு ஆதரவிலான ஹரியானா தொழிலாளர்நலத்துறையின் அதிகாரிகளும், அந்நிறுவனத்தின் தலையாட்டி தொழிற்சங்கத்தின் அதிகாரிகளும் மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர்.

கதவடைப்பினால் MSI கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளது. ஆனால் தொழிலாளர்கள் மீது ஒரு தீர்க்கமான தோல்வியை சுமத்த இன்னும் அதிகமாக கூட இழப்பை வருவித்துக்கொள்ள அது தயாராக இருப்பதாக அறைகூவியது. “ஆலையினுள்ளே நடத்தைமீறிய தொழிலாளர்கள் இருப்பது மேலும் அதிகமான இழப்பை ஏற்படுத்தும். அவர்கள் உறுதிமொழியில் (நன்னடத்தை பத்திரத்தில்) கையொப்பமிட வேண்டும்,” என்று மாருதி சுஷூகி சேர்மேன் R.C. பார்கவா அறிவித்தார்.

இரட்டை இலக்க பணவீக்கம், உயர்ந்துவரும் வட்டிவிகிதங்கள் மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் வெளிநாட்டு முதலீடு உட்பட அதிகரித்துவரும் பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் சூழப்பட்டிருக்கும் நிலைமைகளின்கீழ், MSI அதன் தொழிலாளர்கள்-சக்தியை பிழிந்தெடுப்பதைத் தொடர்வதிலும், தீவிரப்படுத்துவதிலும் தீர்க்கமாய் உள்ளது.

கார்கள் விற்பனையில் 2010இன் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களை ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூலையில் 23 சதவீதமும் ஆகஸ்டில் 13 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ள இந்நிறுவனம், பத்திரங்களில் கையொப்பமிட மறுக்கும் தொழிலாளர்களுக்கு பிரதியீடாக புதிய வேலையாட்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், மேற்கிந்திய மாநிலமான குஜராத்திற்கு உற்பத்தி மாற்றப்படும் என்றும் அச்சுறுத்தி உள்ளது.

மானேசர் ஆலை தொழிலாளர்கள் சகித்துக் கொண்டிருக்கும் மலைக்கவைக்கும் நிலைமைகளை விவரித்து, அவர்களின் நேர்காணலின் அடிப்படையில் தெஹல்கா வாரயிதழின் வலைத் தளம் ஓர் அறிக்கையை பிரசுரித்துள்ளது: “நீங்கள் ஆலைக்கு வருவதற்காக காலை ஐந்து மணிக்கு பேருந்தைப் பிடிக்கிறீர்கள். உங்கள் கார்டில் பதிவுசெய்ய ஒரேயொரு நொடி தாமதமானாலும், உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். ஆனால் நீங்கள் உள்ளே நுழைந்துவிட்டால், அவ்விடத்திலிருந்து வெளியே போக முடியாது. காலை 6.30 மணிக்கு, நீங்கள் ஒன்றுகூடுகிறீர்கள், அங்கே மேற்பார்வையாளர்கள் உங்களுடைய முந்தைய வேலைத்திறனைக் குறித்த குறிப்புகளை அளிக்கிறார்கள். துல்லியமாக காலை 7.00 மணிக்கு வேலையை தொடங்குகிறீர்கள். ஒவ்வொருவரும் அவரவரின் ஒரே வேலையை, அதாவது அசெம்பிளிங், வெல்டிங், பிக்சிங் போன்ற வேலைகளைக் குறைந்தபட்சம் 8 மணிநேரம் தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஒவ்வொரு 38 நொடிகளுக்கும் ஒரு கார் வெளியேறுகிறது, இது நீங்கள் உங்கள் இடத்திலிருந்து ஒருபோதும் நகர முடியாது என்பதையே குறிக்கிறது.”

ஒருநாளில் உங்களுக்கு இரண்டு சிறிய இடைவெளிகள் அளிக்கப்படுகின்றன. காலை 9மணிக்கு, தேநீர் குடிக்கவோ அல்லது கழிவறைக்குச் செல்லவோ அல்லது இரண்டிற்குமோ 7 நிமிட இடைவெளி அளிக்கப்படுகிறது. உங்களுடைய பல நண்பர்களோடு இங்கே இருப்பதைப் போல, சில நிமிடங்கள் நீங்கள் இருக்க வேண்டுமானால், உங்களுடைய சூடான தேநீரையும், கசோரியையும் உங்களோடு கழிவறைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் ஒரு 30 நிமிட மதியவுணவு இடைவெளி அளிக்கப்படுகிறது, இதில் நீங்கள் அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள கேன்டீனுக்கு நடந்து சென்று, அனைவரோடும் சேர்ந்து வரிசையில் உணவருந்தி விட்டு, மீண்டும் நடந்து வர வேண்டும். எந்தவொரு இடைவெளியிலும் ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலோ அல்லது எந்த காரணத்திற்காகவாவது அசெம்பிளி சரகத்தை ஒரு நிமிடம் விட்டுவிலகினாலும், அரைநாள் சம்பளம் பிடிக்கப்படும். பழைய முறைகளில் தொழிலாளர்களின் ஒவ்வொரு சிறிய குழுக்களுக்கும் ஒரு கண்காணிப்பாளர் பயன்படுத்தப்படுவார்; யாருக்காவது இடைவெளி எடுக்க அவசியப்பட்டால் அவர் அவ்விடத்தில் பணியை ஏற்பார். ஆனால் உற்பத்தி செலவு தர்க்கம் தொழிலாளர்களின் உரிமைகளோடு நிரந்தரமாக கூடுதலாகும்.”

தெஹல்கா அறிக்கையின்படி, பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ரூ. 8,000 (167 அமெரிக்க டாலர்) சம்பள உத்தரவாதமுண்டு என்கிறபோதினும், அவர்கள் வழக்கமாக ரூ. 1,500 (31 டாலர்) அபராதமாகவும், தண்டனைத்தொகையாகவும் செலுத்துகின்றனர்: “நியாயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய தற்காலிக விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பை நீங்கள் ஏதாவதொரு காரணத்திற்காக எடுத்தீர்களேயானாலும் கூட, ரூ. 1,500 இழப்பீர்கள். இரண்டு நாட்கள் எடுத்தால் ரூ. 3,000 இழப்பீர்கள். இவ்வாறு உங்களின் சம்பளம் பாதியாக குறையும் வரையில் நடக்கும்.” நிறுவனத்தின் இடைவேளை நேரங்கள் மற்றும் சம்பள வெட்டுக்கள் போன்ற நிலைமைகள் குறித்து மாருதி சுஷூகிக்கு தெஹல்கா கேள்வி எழுப்பி மின்னஞ்சல் செய்த போது, அவர்களுடைய உத்தியோகப்பூர்வ செய்திதொடர்பாளர் கூறியது: “வருகை பதிவு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கீழே இருந்தால், வேலை ஊக்கத்தொகை அதே அளவிற்கு குறைவாக இருக்கும். இடைவேளை நேரங்கள் உட்பட, அனைத்து தொழிலாளர்களுக்குமான நிலைமைகளும், விதிமுறைகளும் குர்காவ் மற்றும் மானேசரில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரேமாதிரியாகவே உள்ளது.”

MSI அம்மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தின் முழு ஆதரவை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை பொலிஸூம் நீதிமன்றமும் மேலெடுத்து நடத்திக் கொண்டிருக்கின்றன. ஸ்ராலினிச தலைமையிலான ஏஐடியுசி குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகத்திலுள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதற்கும், கதவடைப்பிற்கு உள்ளான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பின்னால் நிற்பதற்கும் எதிராக உள்ளது.

மாறாக, மானேசர் தொழிலாளர்கள் அவர்களின் உரிமைகளைத் தாங்கிப்பிடிக்க காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க முறையிடுமாறு திருப்பிவிட்டு வருகிறது.

சிறந்த தொழிலாளர் உறவுகளைக்" கட்டிக்காப்பதில் தொழிற்சங்கங்களும் அவர்களின் கூட்டாளிகளே என்று ஹரியானா அதிகாரிகளையும், MSI மற்றும் ஏனைய தொழில்வழங்குனர்களையும் சமாதானப்படுத்துவதே ஏஐடியுசி-இன் நோக்கமாக உள்ளது. ஸ்ராலினிஸ்டுகளின் வாதங்களின்படி, நிறுவனங்களின் நலன்களோடு தங்களின் நலன்களைப் பொருந்திப் பார்க்குமாறு MSEU தலைவர் சோனு குஜ்ஜார் தொழிலாளர்களை வலியுறுத்தி உள்ளார். Economic Timesஇல் வெளியான ஓர் அறிக்கையின்படி, “சிறந்த தரமான கார்களை உருவாக்கவும், உலகளவிலுள்ள அனைத்து சுஷூகி ஆலைகளையும்விட மானேசர் ஆலையை சிறந்தவொன்றாக ஆக்க உதவும்படியும், அவர் [சோனு குஜ்ஜார்] தொடர்ந்து கூட்டியதாக அவருடைய சக-தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர். 'ஆசியாவிலேயே சிறந்த கார்களை நாம் தயாரிக்க முடியுமானால், மாருதியை நம்மால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியுமென்றும், அதை உலக போட்டியில் முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்த முடியுமென்றும் அவர் எப்போதும் எங்களிடம் கூறுவதுண்டு. நம்முடைய முழுதிறமையையும் செலவிட அவர் எப்போதும் வலியுறுத்துவார்,' என்று அந்நிறுவனத்தின் பொருட்கிடங்கு துறையில் தொழில்பயிற்சி பெறுநராக உள்ள பிரதீப் குமார் தெரிவிக்கிறார்.”

கடந்த ஜூனில், MSI தொழிலாளர்களின் போராட்டம் குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகத்தில் பத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடும் ஒரு பரந்த போராட்டமாக மாறக்கூடிய அச்சுறுத்தல் இருந்த முக்கிய தருணத்தில், அவர்களின் 13 நாட்கள் முற்றுகை போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு MSI தொழிலாளர்களுக்கு ஏஐடியுசி உத்தரவிட்டது.

அதேபோன்று கடந்த வாரம், அதே குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகத்தில் அமைந்துள்ள வெவ்வேறு சுஷூகி துணைநிறுவனங்களுக்குச் சொந்தமான மூன்று ஆலைகளிலிருந்து (சுஷூகி பவர் ட்ரைன் இந்தியா லிமிடெட், சுஷூகி காஸ்டிங்க்ஸ், மற்றும் சுஷூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட்) 7,000 தொழிலாளர்களால் நடத்தப்பட்ட அனுதாப வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் ஸ்ராலினிஸ்டுகள் மறைமுகமாக உடந்தையாய் இருந்தனர்.

வெறுமனே MSI சிலரின் பணிநீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டு, பத்திரத்தின் வார்த்தைகளில் வெகுசில மாற்றங்களைச் செய்துகொள்ள உடன்பட்டால், மானேசர் ஆலையிலுள்ள தொழிலாளர்களை "நன்னடத்தை உடன்படிக்கை" பத்திரத்தில் கைசாத்திட அறிவுறுத்த ஸ்ராலினிஸ்டுகள் தயாராக உள்ளனர் என்பதை, நிறுவனத்துடன் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஏஐடியுசி அதிகாரிகளின் மற்றும் ஏனையவர்களின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான மாருதி சுஷூகி காம்கார் சங்கத்தின் தலைவரும், மற்றும் ஞாயிறன்று பேச்சுவார்த்தைகளில் ஒரு மத்தியஸ்தராக இருந்தவர் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தது: “நிறுவனம் 29 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது; 18 பயிற்சி தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளது மற்றும் 15 நிரந்தர தொழிலாளர்களையும் வேலையிலிருந்து வெளியேற்றி உள்ளது. பயிற்சி தொழிலாளர்கள் மிகவும் இள வயதினர் என்பதால், அவர்களை வேலையை விட்டு தூக்க வேண்டாமென்று நாங்கள் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம். ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமானால், இருதரப்பினரும் கீழறங்கி வரவேண்டும்.”

MSI தொழிலாளர்களின் எழுச்சிமிகு போராட்டத்தை விலைகொடுக்க தெளிவாக களம் அமைக்கும் விதத்தில், பணிநீக்கங்களை நிர்வாகம் திரும்ப பெற்றுக்கொண்டால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்று D.L. சச்தேவா தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வீதிகளில் நிறுத்துவது தான் இதன் ஒரே விளைவாக இருக்கும். சச்தேவா கூறியது: “பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மாருதி மீண்டும் எடுத்துக்கொண்டால், பிரச்சினை தீர்ந்துவிடும். சில குறிப்பிட்ட நிபந்தனைகள் பத்திரத்திலிருந்து நீக்கப்பட்டால், தொழிலாளர்கள் நன்னடத்தை உடன்படிக்கையில் கையெழுத்திடுவார்கள்.”