World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP calls plantation workers’ congress

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
27 March 2012

Back to screen version

சோசலிச சமத்துவ கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள்  (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை காக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்தினைப் பற்றி கலந்துரையாடி ஏற்றுக்கொள்வதற்காக, மே 20 அன்று நடைபெறவுள்ள தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டுக்கு பிரதிநிதிகளை அனுப்புமாறு தீவு முழுவதும் உள்ள தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

இலங்கை அரசாங்கம், அதன் சர்வதேச சமதரப்பினரைப் போல, வாழ்க்கை தரத்தின் மீது முன்னெப்போதுமில்லாதளவு தாக்குதல் தொடுத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ரூபாயை மதிப்பிறக்கம் செய்ததோடு எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர பொருட்களுக்கான விலை மானியங்களை வெட்டித்தள்ளிய அதே அளவில், அத்தியாவசிய சமூக சேவைகளுக்கான செலவுகளை மேலும் வெட்டிக் குறைத்துள்ளார்.

தொழிலாள வர்க்கத்தின் மிக குறைந்த ஊதியம் பெறும் மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரில் அடங்கும் தோட்டத் தொழிலாளர்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாள் கூலிகள் என்ற வகையில் நிர்வாகத்தின் சொற்படி செயற்பட வேண்டிய அவர்களின் நிலை, மற்றும் தோட்டங்களில் கொடுக்கப்படும் சிறிய தங்குமிடம் மற்றும் சேவைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலையினால் குறிப்பாக அவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கங்கள் மோசமடைந்து வரும் பூகோள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தங்கள் முதுகின் மீது சுமத்த முயற்சிக்கின்ற நிலையில், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உழைக்கும் மக்களும் இளைஞர்களும், தமது அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் அனைத்தையும் அழிப்பதை இலக்காகக் கொண்ட ஒரு சமூக எதிர்ப் புரட்சியை எதிர்கொள்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் ஏற்கனவே கடந்த ஆண்டு மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்க மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் இவற்றை எதிர்க்கத் தொடங்கி, வெகுஜன போராட்டங்களை வழிநடத்தியுள்ளது. இது எகிப்தில் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியான ஹொஸ்னி முபாரக்கின் வெளியேற்றத்துக்கு வழிவகுத்தது. இருப்பினும், இந்த ஆரம்ப போராட்டங்களில், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் போன்ற பழைய அமைப்புக்கள், பல்வேறு முன்னாள் இடதுகளின் ஆதரவுடன், இந்த எதிர்ப்புக்களும் வேலைநிறுத்தங்களும் முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யாமல் இருப்பதை உறுதி செய்தன.

சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ., இலங்கை தொழிலாளர்கள் தமது தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதுகாக்கும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதன் பேரில், தீர்த்துக்கொள்ள வேண்டிய இன்றியமையாத அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதற்காகவே இந்த மாநாட்டுக்கு அழைப்புவிட்டுள்ளன. தோட்ட தொழிலாளர்களைப் பொறுத்தளவில், அவர்கள் தங்கள் போராட்டங்களை இப்போதும் மற்றும் மீண்டும்  விற்றுத் தள்ளுகின்ற தொழிற்சங்கங்களில் இருந்து முழுமையாகப் பிரிய வேண்டியது தீர்க்கமான விடயமாகும்.

கடந்த ஏப்ரலில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தினது விருப்பத்தின் பேரில், அவசர அவசரமாக, ஒரு சிறிய ஊதிய அதிகரிப்புக்குப் பிரதியுபகாரமாக இரண்டு வருடங்களுக்கு வேலைநிறுத்தம் செய்யாமல் தொழிலாளர்களைக் கட்டிப்போடும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கைச்சாத்திட்டன. டிசம்பர் அளவில், கம்பனிகள் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 2 கிலோகிராமால் எதேச்சதிகாரமாக அதிகரித்து ஒப்பந்தத்தை மீறின -தொழிலாளர்கள் பறிக்கத் தவறினால் சம்பளம் பாதியாக வெட்டப்படும். உற்பத்தித்திறனை அதிகரிப்பதானது தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு மாதமும் வேலை நாட்கள் குறைவதை விளைவாக்கும்.

அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் முதலாளிகளின் இந்த சட்டவிரோத நடவடிக்கை பொறுத்துக்கொள்கின்றன. எனினும், தோட்டத் தொழிலாளர்கள், முன்னணியில் இருந்த கொட்டியாகலை தொழிலாளர்களுடன் சேர்ந்து, தங்கள் உரிமைகளை காக்க போராடத் தொடங்கினர். வெலி ஒயா தோட்டத் தொழிலாளர்களும் இணைந்துகொண்ட போது, நிர்வாகம் இழிபுகழ்பெற்ற பொலிஸ் விசேட அதிரடிப் படைப் பிரிவுகளை அழைத்தமை உடனடி வேலை நிறுத்தங்களுக்கு வழிவகுத்தது.

பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக நிர்வாகத்துடனும் பொலிசுடனும் ஒத்துழைத்து. வெலி ஓயா வேலைநிறுத்தம் விரிவடையும் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, அரசாங்கம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். இராதாகிருஷ்ணனையும் தொழிலாளர்களை சந்திக்க அனுப்பியது. இராதாகிருஷ்ணன் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிற்சங்கமான மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு.) தலைவராவார்.

வெளி ஓயா தொழிலாளர்களிடம் பொய் பேசிய அலுத்கமகேயும் இராதாகிருஷ்ணனும், நிறுவனம் பணிச்சுமையை அதிகரிக்காமல் இருக்க ஒப்புக்கொண்டது எனக் கூறி, வேலைநிறுத்தை முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அரசாங்கம் மற்றும் எதிர் கட்சிகளைச் சார்ந்த அனைத்து பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் உடனடியாக வழிக்கு வந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு முடிவுகட்டின.

வெலி ஓயா தோட்ட முகாமையாளர் உடனடியாக உதவி தொழில் ஆணையாளரையும் தொழிற்சங்க அதிகாரிகளையும் சந்தித்தார். ஏப்ரல் முதல் ஏற்பட்ட இழப்புக்களை ஈடு செய்ய அத்தகைய வேலை அதிகரிப்பு தேவை என வாதிட்ட அவர், வேலை இலக்கை குறைக்க உடன்படவில்லை என்று அறிவித்தார். ஆணையாளர் அந்த இலக்கை அங்கீகரித்ததோடு அதற்கு இணங்கிய தொழிற்சங்கங்கள், வேலைச் சுமை அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கு முன்னர் நிர்வாகம் அதைப் பற்றி ஆலோசிக்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டன.

இந்த காட்டிக்கொடுப்பு, தொழிலாளர்களின் இழப்பில் இலாபங்களையும் உற்பத்தியையும் அதிகரிக்க இடைவிடாது கூட்டு தாக்குதலை முன்னெடுத்து வரும் அரசாங்கம், நிர்வாகம், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒரு முக்கூட்டை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகின்றது.

தொழிற்சங்கங்கள் சம்பளம் மற்றும் நிலைமைகள் சம்பந்தமாக கடந்த காலத்தில் நடந்த போராட்டங்களிலும் இதே துரோக பாத்திரத்தை ஆற்றின. 2006ல், பெரும் வேலை நிறுத்த இயக்கத்தின் மத்தியில், ஜனாதிபதி இராஜபக்ஷ பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போர் முயற்சிகளைக் கீழறுப்பதாக குற்றம் சாட்டிய போது, தொழிற்சங்கங்கள் அவரது வழியில் விழுந்தன. 2009ல், இ.தொ.கா. முதலாளிமாருடன் ஒரு விற்றுத் தீர்க்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதே வேளை, ம.ம.மு. மற்றும் ஏனைய எதிர் தொழிற்சங்கங்கள், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் முன்னெடுத்த ஒத்துழையாமை பிரச்சாரத்தை தொடர்ந்து ஆதரிப்பதாக கூறிக்கொண்டன. ஆனால் அது தொழிலாளர்களின் எதிர்ப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதற்கு முடிவுகட்டுவதற்கு மட்டுமேயாகும்.

பெருந்தோட்டங்களில் 37,000 ஹெக்டயர்களை பிரித்து சிறு உரிமையாளர்களுக்கு விநியோகிப்பதாக நவம்பர் வரவு செலவுத் திட்ட உரையில் இராஜபக்ஷ அறிவித்த திட்டமானது, தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலின் இன்னொரு அங்கமாகும். இந்த நடவடிக்கை தொழில்களை அழிப்பதோடு  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வெளியேற்றுவதற்கான திட்டமாகும். இதன் முதல் இலக்கு நட்டத்தில் இயங்குவதாக கூறப்படும் அரசுக்குச் சொந்தமான ஜனவசம தோட்டங்களாக இருக்கும்.

தொழிற்சங்கங்கள், எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) மற்றும் முன்னாள் இடதுகளான நவசமசமாஜ கட்சியினதும் ஆதரவுடன், அரசாங்கம், இது தொழிலாளர்களுக்கும் கிராமப்புற வறியவர்களுக்கும் உதவியாக இருக்கும், அவர்கள் சிறு தேயிலை நிலத்தில் இலாபம் அடைவர் என கூறிக்கொள்கின்றது. உண்மையில், அது தமிழ் தோட்ட தொழிலாளர்களை பிரித்து வைக்கவும் மற்றும் நிலத்துண்டைப் பெறுவதற்கான முயற்சியில் சிங்கள கிராமப்புற வறியவர்களை தமிழ் தொழிலாளர்களுக்கு எதிராக இருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் பெரும் பகுதி சுற்றுலா விடுதிகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு ஒப்படைக்கப்படும் 

தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டிய எதிர்த் தாக்குதலைப் பற்றியும், அது முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் முன்னோக்கு பற்றியும் கலந்துரையாடுவதன் பேரிலேயே சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. இந்த மாநாட்டுக்கு அழைப்புவிடுத்துள்ளன.

அத்தகைய ஒரு வேலைத் திட்டம் தெற்காசியா மற்றும் அனைத்துலகிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளுடன் இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கங்களது ஆதரவுடன், இலங்கையின் தேயிலை உற்பத்தி செலவு இந்தியா, சீனா மற்றும் கென்யாவுடன் போட்டியிடக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறியவாறே, வறிய மட்டத்திலான சம்பளம் மற்றும் அட்டூழியங்கள் நிறைந்த நிலைமைகளை நியாயப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் இதுவே சொல்லப்படுகின்றது.

வாழ்க்கைத் தரங்கள் மற்றும் நிலைமைகள் இவ்வாறு இடைவிடாது சரிக்கப்படுவதை எதிர்ப்பதற்கான ஒரே வழி, இலாப முறைமையை தூக்கி வீசுவதை இலக்காகக் கொண்ட ஒரு பொது சோசலிச வேலைத் திட்டத்தை சூழ தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே ஆகும். தொழிலாளர்கள் ஒருமுகப்படுத்தி உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதற்காக ஆளும் வர்க்கங்கள் ஊக்குவிக்கும் அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்துக்கும் எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இது முதலாளித்துவத்தின் ஒவ்வொரு அங்கங்களில் இருந்தும், அதாவது, இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் இ.தொ.கா., ம.ம.மு. மற்றும் பிற தோட்ட தொழிற்சங்கங்கள் உட்பட சகல எதிர்க் கட்சிகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காகப் போராட வேண்டியது அவசியமாகும். இந்த கட்சிகள் எதுவும், சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சார்பு நிகழ்ச்சி திட்டத்தை எதிர்க்கவில்லை. இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துகின்ற அரசாங்கத்தின் பங்காளிகளாகும். ஏனைய தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளை கடுமையாக நாசம் செய்த வலதுசாரி எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு வைத்துள்ளன.

சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ.யும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை காக்கும் போராட்டத்துக்கான வேலைத் திட்டத்தை மேம்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு அழைப்பு விடுக்கின்றன. தொழிற்சங்க குண்டர்களின் ஆதரவுடன் பொலிஸ் மற்றும் இராணுவ படைகளின் வன்முறைத் தலையீட்டுக்கு எதிராக, இந்த நடவடிக்கைக் குழுக்கள் தமது சொந்த பாதுகாப்பு காவலர்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோசலிச சமத்துவ கட்சி மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ., தோட்ட தொழிலாளர்களின் அரசியல் போராட்டத்துக்கான அடிப்படையாக பின்வரும் உடனடி கோரிக்கைகளை முன்மொழிகின்றன:

* சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் பிரஜா உரிமை வேண்டும்!

* வாழ்க்கை செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ற ரூ 30,000 ஒரு மாத ஊதியம் வேண்டும்!

* வேலைச் சுமையை அதிகரிக்காதே! வேலையற்ற இளைஞர்களுக்கு சம சம்பளத்துடன் வேலை வேண்டும்!

* சகலருக்கும் பொருத்தமான வீடுகள், சுகாதார மற்றும் கல்வி வசதிகள் வேண்டும்!

தோட்டங்கள் முதலாளிகளின் உரிமை கீழ், தனியார் இலாபத்துக்காக இயங்கும் வரை இந்த இன்றியமையாத கோரிக்கைகளை உண்மையாக்குவது சாத்தியமற்றதாகும். சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ., தோட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கபட வேண்டும் என பரிந்துரைக்கின்றன.

தோட்ட தொழிலாளர்கள் சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்தில், தமது வாழ்க்கைத் தரமும் சீரழிக்கப்படுவதை எதிர்கொண்டுள்ள ஏனைய தொழிலாள வர்க்க தட்டினரதும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வெகுஜனங்களது பக்கமும் திரும்ப வேண்டும். சமுதாயம் ஒரு சிறிய செல்வந்த தட்டின் இலாபங்களுக்காக அன்றி, உழைக்கும் மக்களின் அடிப்படை சமூக தேவைகளை இட்டு நிரப்புவதன் பேரில் மேலிருந்து கீழ் மறு ஒழுங்கு செய்யப்பட வேண்டும். தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிச குடியரசுகளை ஸ்தாபிப்பதன் பாகமாக சோசலிச சமத்துவ கட்சியும் ஐ.எஸ்.எஸ்.ஈ.யும் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகின்றன.

தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டில், இந்த அடிப்படை அரசியல் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல், தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தேவையான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் இன்றியமையாததாக இருக்கும். சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. உடன் தொடர்பு கொண்டு மாநாட்டை கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் பங்குபற்றுமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்