World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan health unions abandon strike after court order

இலங்கை சுகாதார தொழிற்சங்கங்கள் நீதிமன்ற உத்தரவின் பின்னர் வேலைநிறுத்தத்தை கைவிட்டன

By Vilani Peiris
23 March 2012
Back to screen version

கொழும்பு மாவட்ட நீதிபதி, மார்ச் 30 வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுக்கும் ஒரு இடைக்கால ஆணையை வழங்கியதையடுத்து, இலங்கை சுகாதார அமைச்சின் துணை மருத்துவர்கள் ஒரு வாரமாக முன்னெடுத்த வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் புதன்கிழமை கைவிட்டன. துணை மருத்துவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறித் தொடங்கிய போதிலும், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்கி, உத்தரவை நடைமுறைப்படுத்தின.

மருத்துவமனைகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களில் 5,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எக்ஸ்ரே, ஆய்வக சோதனைகள் மற்றும் மருந்துகள் வழங்குவது உட்பட பல சேவைகளை இடை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டனர். அவசர கடமைக்கான கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் உத்தியோகபூர்வ தொலைபேசி பயன்பாட்டை அதிகரித்தல், சேவைக்கு துணை மருத்துவ பட்டதாரிகளை சேர்த்துக்கொள்வது மற்றும் பதவி உயர்வுக்கான வழிவகைகள் போன்றவை அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் அடங்கும். தற்போது 350 பயிற்சி பெற்ற துணை மருத்துவ பட்டதாரிகளுக்கு தொழில் கிடையாது.

வேலை நிறுத்தம் விற்றுத்தள்ளப்பட்ட உடனேயே, சுமார் 12,000 மருத்துவமனை சிற்றூழியர்கள் ஊதிய உயர்வு கோரி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அரசாங்கம் உடனடியாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை மிரட்டுவதற்காக பிரதான ஆஸ்பத்திரிகளில் இராணுவத்தை நிறுத்தி வேலை நிறுத்தத்தை தகர்க்க முயற்சித்தது.

மருத்துவ உதவியாளர்களின் வேலைநிறுத்தமானது, மேலதிக மருத்துவ ஊழியர்களின் கூட்டுத் தொழிற்சங்க சமாசத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் அரச மருந்தக அலுவலர்கள் சங்கம், அரச மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம், அரச தொழில்நுட்ப அலுவலர் சங்கம் மற்றும் போக்குவரத்து நிபுணத்துவ அலுவலர் சங்கம் போன்றவை அடங்கும்.

கொழும்பு மருத்துவமனையில் இருந்த ஒரு இதய நோயாளி, தான் இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு தடை ஆணை கேட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். கடந்த காலத்தில், வேலை நிறுத்தத்தை குழப்பும் அரசாங்கத்தின் முயற்சியின் பாகமாக சுகாதார அமைச்சினால் இத்தகைய வழக்குகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அபிவிருத்தி செய்து வரும் ஜனநாயக விரோத வழிமுறைகளின் பகுதியாக, அது வேலைநிறுத்தங்களை கலைக்க நீதித்துறையையும் பிற அரச நிறுவனங்களையும் பெருகிய முறையில் பயன்படுத்தி வருகின்றது.

வேலைநிறுத்தம் ஆரம்பித்ததில் இருந்தே, அரசாங்கம் மருத்துவ உதவியாளர்களின் கோரிக்கைகளை பிடிவாதமாக வழங்க மறுத்தது. இந்த வேலைநிறுத்தம் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிரான போராட்டங்கள் பெருகி வருகின்ற நிலைமையில், ஏனைய தொழிலாளர்களையும் ஊக்குவிக்கும் என அரசாங்கம் அஞ்சியது. கடந்த வாரம் தான், அரசாங்கம் இரண்டு மாத காலத்துக்குள் சம்பளத்தை அதிகரிப்பதாக போலி வாக்குறுதி கூறி போக்குவரத்து தொழிலாளர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் கவிழ்த்தது.

தாங்கள் "அரசியல் சாராதவர்கள்" என்று கூறிக்கொண்ட மருத்துவ உதவியாளர் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கோரிக்கைகளை வெல்லலாம் என்ற மாயையின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்திருந்தது. எனினும், வேலை நிறுத்தத்தின் போது, அது தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி தமது அடிப்படை உரிமைகள் மற்றும் நிலைமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்று தெளிவாகியது.

நீதிமன்ற உத்தரவின் பின்னரும், மருத்துவ உதவியாளர்கள் ஆரம்பத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீர்ப்பை மீறி மறியலில் பங்கேற்றனர். உலக சோசலிச வலை தளத்துடன் பேசிய ஒரு தொழிலாளி, "நாங்கள் நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் எங்கள் கோரிக்கைகளை வெல்வதில் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் வேலைநிறுத்தத்தை முடிப்பதை எதிர்க்கின்றோம். என்றார். எனினும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மாலை வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டனர்.

உலக சோசலிச வலைத் தளத்திலிருந்து தொடர்பு கொண்ட போது, கூட்டு  தொழிற்சங்க சமாசத்தின் செயலாளர் சமன் ஜெயசேகர, "மற்ற சுகாதார தொழிற்சங்கங்களுடன் ஒரு முன்னணியை உருவாக்கிய பின்னர்" அந்த கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் ஒழுங்கு செய்யப்படும் என்றார். தொழிற்சங்கம் இழிவான முறையில் வளைந்து கொடுப்பதை மூடி மறைப்பதற்கான இந்த முயற்சியும், ஒரு பரந்த தொழிற்சங்க முன்னணி அரசாங்கத்தை சலுகை கொடுக்க கட்டாயப்படுத்தும் என்ற மாயையை விதைப்பதற்காகவே எடுக்கப்படுகின்றது.

உண்மையில், இந்த சர்ச்சையின் தொடக்கத்தில் இருந்தே தொழிற்சங்கங்கள் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து கொண்டுள்ளன. வேலைநிறுத்தம் மார்ச் 13 அன்று தொடங்கிய போதிலும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், அரசாங்கத்துடன் ஒரு சமரசத்தை எதிர்பார்த்து அடுத்த நாள் அதை நிறுத்தினர். ஆனால் திறைசேரி அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்தது. தொழிற்சங்கங்களின் 2,500 ரூபா (23 அமெரிக்க டொலர்) தொலைபேசி கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கைக்கு பதிலிறுத்த திறைசேரி, 60 ரூபாய் என்ற அற்ப தொகையையே வழங்கியது. பட்டதாரிகளை வேலைக்கு இணைத்துக்கொள்வது பற்றி எதுவும் கூறப்படவில்லை.

சலுகைகள் கொடுப்பதற்கு மாறாக, அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிராக பொதுமக்களின் கருத்தை தூண்டிவிடும் முயற்சியில், வெகுஜன ஊடகங்களின் உதவியுடன் ஒரு உக்கிரமான பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தது. வேலைநிறுத்தம் மீண்டும் தொடங்கியபோது, ஐலண்ட் செய்தித்தாள், தொழிலாளர்கள் தொடர்ந்தும் தங்களுக்கு வேண்டிய இறைச்சித் துண்டைக் கேட்டுக்கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியது.

மோசமாக சுகயீனமடைந்திருந்த நோயாளர்களுக்கு உதவும் பொருட்டு, வேலைநிறுத்தம் செய்தவர்கள் மருத்துவமனைகளில் அவசர சேவைகளை வழங்கினர். குழந்தைகள் மருத்துவமனைகளிலும் மகப்பேற்று மனைகளிலும் ஊழியர்கள் வேலையிலிருந்து விலகவில்லை. இருந்த போதிலும், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் இறந்ததை பற்றிக்கொண்டு உடனடியாக வேலை நிறுத்தம் செய்தவர்களை குற்றஞ்சாட்டினார். "மருந்துகள் பற்றாக்குறை மற்றும் நேரத்துக்கு பரிசோதனைகள் நடத்தபடாமையின் காரணமாக" 400 நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சிறிசேன எந்த ஆதாரமும் இன்றி டெயிலி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

மேலும், இந்த வேலை நிறுத்தம் எந்தவொரு நிதிப் பிரச்சினைக்காகவும் செய்யப்படவில்லை, மாறாக, வேறு நிகழ்ச்சி நிரல்கள் முன்னணிக்கு வந்துள்ளன என பெயர் குறிப்பிடாத ஒரு சுகாதார அதிகாரியை மிரர் மேற்கோள் காட்டியிருந்தது.  "வேறு நிகழ்ச்சி நிரலுக்கு" எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டுகள், தொழிலாளர்களதும் வறியவர்களதும் வளர்ச்சிகண்டுவரும் போராட்டங்களை இலங்கைக்கு எதிரான மேற்கத்தைய சதியின் விளைவு என முத்திரை குத்தும் அரசாங்கத்தின் தேசியவாத பிரச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உண்மை என்னவெனில், அரசாங்கம் சுகாதார செலவுகளை வெட்டிக் குறைத்துள்ளதோடு நோயாளிகளுக்கு போதுமான மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்காமைக்கு அது பொறுப்புச் சொல்ல வேண்டும். மருத்துவமனைகளில் வைத்தியர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆஸ்பத்திரி பராமரிப்பாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது.

ஒரு வேலைநிறுத்தக்காரர் உலக சோசலிச வலை தளத்துக்கு விளக்கியதாவது: "நாங்கள் மிகவும் பொறுப்புள்ள கடமையில் இருக்கின்றோம். நாம் சில நாட்களில் காலை 8 மணியில் இருந்து அடுத்த நாள் 2 மணி வரை தொடர்ந்து வேலை செய்கின்றோம். நாங்கள் அலுவலக வேலைக்காக நமது சொந்த தொலைபேசியை பயன்படுத்த வேண்டியுள்ளது. 1996 ல் இருந்து எங்களுக்கு பதவி உயர்வுகள் இல்லை. நான் 26 ஆண்டுகள் வேலை செய்த போதும், எனது அடிப்படை மாத சம்பளம் 26,000 ரூபா மட்டுமே. நான் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற வேண்டும். எனக்கு பதவி உயர்வு இல்லாமல் ஓய்வுபெறச் செய்வது நியாயமற்றது."

 
தற்போதைய ஆளும் கூட்டணி உட்பட ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதத்துக்கும் குறைவான தொகைக்கு சுகாதார செலவை மட்டுப்படுத்தின. வரவு செலவு திட்ட பற்றாக்குறையை கடுமையாக குறைக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு பதிலிறுப்பாக, அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி தவிர்ந்த, அனைத்து அமைச்சுகளுக்குமான இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடுகளில் 9-10 சதவிகிதம் வெட்டுக்களை கடந்த மாதம் அறிவித்தது. அது ரூபாயை மதிப்பிறக்கம் செய்து எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை கூட்டியதால், அலை அலையான விலையதிகரிப்புக்கு வழிவகுத்தது.

அழுத்தம் பலனளிக்கும் என்ற சுகாதார தொழிற்சங்கங்களின் வலியுறுத்தல்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதை தடுக்கும் நோக்கம் கொண்டவையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, போர்க்குணத்தால் மட்டும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு பதிலடி கொடுத்துவிடவோ, அல்லது பொது மருத்துவமனை மற்றும் சுகாதார முறைமையை திட்டமிட்டு சீரழிப்பதை தடுத்துவிடவோ முடியாது.

தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்கு உதவும் தொழிற்சங்கங்கள் மூலம் தங்கள் நலன்களை காக்க முடியாது. சுகாதாரத் துறை மற்றும் ஏனைய அனைத்து வேலைத் தளங்களிலும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, ஒரு சோசலிச முன்னோக்கால் வழிநடத்தப்படும் ஒரு பொதுப் போராட்டத்தை ஏற்பாடு செய்ய தமது சொந்த உறுப்பினர்களின் குழுக்களை அமைக்க வேண்டும்.

அனைவருக்கும் போதுமான, ஒழுக்கமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, அதே போல் கல்வி போன்ற பிற அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்காக, பல நூறு கோடிகள் தேவை. இலாபத்துக்காக அன்றி, மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் மறு ஒழுங்கு செய்தால் மட்டுமே, சுகாதார ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகளில் முன்னேற்றத்தை யதார்த்தமாக்க முடியும். இந்த நடவடிக்கைகளுக்கான போராட்டம், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசியல் போராட்டத்துடன் பிணைந்துள்ளது.