World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP campaigns for plantation workers’ congress

தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டுக்கு சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம்

By Panini Wijesiriwardane
17 April 2012
Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பின் உறுப்பினர்கள், மே 20 அன்று ஹட்டனில் நடைபெறவுள்ள தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டுக்காக பிரச்சாரத்தில் மத்திய பெருந்தோட்ட பிரதேசத்தில் ஷெனன் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்த போது அவர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

பிரச்சாரகர்கள் "இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றது" என்ற அறிக்கையின் பிரதிகளை வினியோகித்தனர். அது தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டத் தொழிலாளர்களை மாநாட்டுக்கு பிரதிநிதிகளை அனுப்புமாறு அழைப்பு விடுத்தது. தொழிலாளர்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளை பாதுகாக்க தாம் முன்னெடுத்த போராட்டங்களை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்தமை உட்பட, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடினர்.

ஹட்டனுக்கு அருகில் முதல் பிரிவு தோட்டமான ஷெனனில், தொழிலாளர்கள் தற்போது கம்பனி தேயிலை பறிக்கும் இலக்குகளை அதிகரித்துள்ளதை எதிர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். கம்பனிகள் சுரண்டலை உக்கிரமாக்கி இலாபங்களை பெருமளவில் அதிகரித்துக்கொள்ள முயற்சிக்கின்ற நிலையில், அதிக வேலைப் பளுவுக்கு எதிராக தோட்டங்களில் பரவலாக எதிர்ப்புக்கள் வெளிப்பட்டுள்ளன.

ஷெனன் தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மோசமான நிலையில் லையன் வீடுகளில் (வரிசை வீடுகளில்) வாழ்கின்றன. இந்த லையன் வீடுகள் தேயிலை தோட்டங்களில் பொதுவானவையாகும். சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் அமுல்படுத்தியதால், எரிபொருள் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையில், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமாகியுள்ளது.

பல தோட்ட நிர்வாகங்கள் டிசம்பரில் இருந்து தேயிலை பறிக்கும் இலக்குகளை அதிகரித்துள்ளன. பெப்ரவரியில் இருந்து ஷெனன் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட இலக்கு 17 கிலோகிராம் முதல் 20 கிலோகிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அதிகரிப்பை ஏற்க மறுத்த பின்னர், நிர்வாகம் அவர்களின் சம்பளத்தை வெட்டியது. தொழிலாளர்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாத சம்பள நாட்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு தொடர்ந்தும் பழைய வேலை முறைக்கேற்பவே வேலை செய்தனர்.

20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துரையாடலுக்காக சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. குழுவினரை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் பழிவாங்கப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்களது பெயர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை.

உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) சீற்றத்துடன் பேசிய ஒரு தொழிலாளி கூறியதாவது: "இந்த தேயிலைச் செடிகள் மிக பழையவையாக இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். நாம் நான்காவது அல்லது ஐந்தாவது தலைமுறையாக இந்தச் செடிகளில் கொழுந்து பறிக்கின்றோம். இந்தச் செடிகள் நன்கு வளர்ந்து நல்ல அறுவடை கொடுக்க உதவும் வகையில் கம்பனிகள் அவற்றுக்கு போதுமான உரம் போடுவதில்லை. எப்படி அதிகரித்த இலக்கு பூர்த்திசெய்ய முடியும்? நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டே முந்தைய வேலை இலக்குகளை நிறைவேற்றினோம். அவர்கள் அதிக அறுவடை பெற பணம் செலவிடுவதில்லை. மாறாக, அவர்கள் எங்களை எலும்பு வரை சுரண்ட முயற்சிக்கின்றனர்."

நிர்வாகம் இப்போது சம்பளத்தை எப்படி நிர்ணயிக்கின்றது என்பதை அவர் விளக்கினார்: "அவர்கள் பறித்த கொழுந்துகளின் மொத்த எடை பிரிப்பதன் மூலம் வேலை நாட்களை கணக்கிட்டு அதற்கேற்ப சம்பளத்தை சரி செய்கின்றனர். இதன் விளைவாக தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தைப் பெறத் தள்ளப்பட்டுள்ளனர்."

தான் முந்தைய மாதத்தை விட இம்முறை அதிக கொழுந்து பறித்திருந்த போதிலும், தனது சம்பளத்தை நிர்வாகம் குறைத்ததுவிட்டதாக ஒரு பெண் தொழிலாளி விளக்கினார். "இந்த அளவிற்கு வேலை செய்த பிறகும், நான் இந்த மாதம் சுமார் 8,000 ரூபா (63 அமெரிக்க டொலர்) மட்டுமே பெற்றேன். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வனளாவ உயரும் நிலையில், நாம் நாளொன்றுக்கு ஒரே குழம்புடன் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகின்றோம். மருத்துவர்கள் எங்களுக்கு சீரான உணவு வேண்டும் என ஆலோசனை கூறுகின்றனர். எப்படி நாம் இந்த அற்ப சம்பளத்துடன் அதை செய்ய முடியும்?"

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மூன்று பேர் கொண்ட குடும்பச் செலவுக்கு 7,500 ரூபாய் மாத வருமானம் போதும் என்று கூறியதை அவர் ஏளனம் செய்தார். "அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றார்கள் -7,500 ரூபாய் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவரது சாப்பாட்டுக்கே போதாது. ஆனால் அவர்கள் எங்களை பிச்சைகாரர்கள் போல் வாழச் சொல்கிறார்கள்."

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி உட்பட ஷெனன் தோட்டத்தில் ஐந்து தொழிற்சங்கங்கள் உள்ளன.

தொழிற்சங்கங்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்திய ஒரு தொழிலாளி கூறியதாவது: "உயர் இலக்குகளுக்கு எதிராக கொட்டியாகலை தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த ஒத்துழையாமை போராட்டத்துக்கு முடிவுகட்டிவிட்டு, கம்பனிகள் இலக்கை அதிகரிக்காமல் இருக்க உடன்பட்டதாக இ.தொ.கா. கூறிக்கொள்கின்றது. ஆனால் என்ன நடந்தது? எங்கள் நிர்வாகம் உயர் வேலை இலக்கைத் தொடர்கின்றது."

நிர்வாகம் பழைய வேலை முறைக்கு திரும்புவதாக ஒப்புக்கொண்ட பின்னர், கொட்டியாகலை தொழிலாளர்கள் நீண்டகாலமாக முன்னெடுத்த ஒத்துழையாமை போராட்டத்துக்கு முடிவுகட்ட மார்ச் மாதம் இ.தொ.கா. தலையிட்டது. இந்த எதிர்ப்பு ஏனைய தோட்டங்களுக்கும் பரவும் என்று கம்பனி அஞ்சியதோடு, மேலும் எதிர்காலத்தில் இலக்குகளை உயர்த்துவதற்கு இ.தொ.கா.வின் உதவியையும் எதிர்பார்க்கின்றது.

மற்றொரு தொழிலாளி பேசுகையில், "தாம் நஷ்டத்தில் இயங்குவதாக நிர்வாகம் கூறுகின்றது. நாங்கள் அதை நம்பவில்லை. பத்திரிகை அறிக்கைகளின் படி, வட்டவளை பெருந்தோட்டம் உட்பட தோட்ட கம்பனிகள், கோடிக்கணக்கான ரூபாய்களை இலாபமாகப் பெறுகின்றன," என்றார்.

தொழிற்சங்கங்களைப் பற்றி கூறிய அவர், "நிர்வாகம் மட்டுமல்ல, தொழிற்சங்கங்களும் அதே பாடலையே பாடுகின்றன. அவர்கள் நிறுவனத்தின் இழப்புக்களை பற்றி பேசி, புதிய இலக்குகளை கடைப்பிடிக்குமாறு எங்களை கேட்கின்றன. அவர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் சுமைகளை பற்றி கவலைகொள்ளவில்லை, என மேலும் கூறினார்.

பொலீஸ் கூட நிர்வாகத்தின் ஒரு கையாக செயல்படுகின்றது. "தொழிலாளர்கள் ஊதிய குறைப்பை நிராகரித்து ஒரு மறியல் போராட்டம் செய்த போது, நிர்வாகம் பொலீசுக்குத் தகவல் கொடுத்தது. பொலீசாரும் புதிய இலக்கின் அடிப்படையில் வேலை செய்யுமாறு எமக்கு கூறினர்," என ஒரு தொழிலாளி விளக்கினார்.

தொழிலாளர்கள் தங்களது உள்ளூர் தொழிற்சங்க தலைவர்களுடன் ஹட்டன் உதவி தொழில் ஆணையாளரை சந்தித்த போதும், அவரும் நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப வேலை செய்யுமாறு கூறினார். "நிர்வாகம் சுட்டிக்காட்டிய இழப்புகள் பற்றி குறிப்பிட்ட அவர், தொழிற்சாலையை மூடவேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என எங்களுக்கு கூறினார்." தொழிற்சங்க தலைவர்கள் தொழில் ஆணையாளரின் அறிவுரையைப் பின்பற்றுமாறு தொழிலாளர்களுக்கு கூறினர்.

பிரச்சாரகர்கள் சோசலிச சமத்துவ கட்சி அறிக்கையின் ஒரு பத்தியின் மீது கவனத்தை திருப்பினர்: "தொழிலாளர்களின் இழப்பில் இலாபத்தையும் உற்பத்தியையும் பெருக்குவதற்காக இடைவிடாது கூட்டுத் தாக்குதலைத் தொடுக்கும் அரசாங்கம், நிர்வாகம், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் ஒரு முக்கூட்டை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். இடைமறித்த ஒரு தொழிலாளி, "உண்மையில் நாம் எமது போராட்டத்தில் காணும் அனுபவம் இதுவே, என்றார்.

உலக நிதி நெருக்கடி மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றி கலந்துரையாடும் போது, இந்த வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் தோல்வியடைந்தது ஏன், என அதே தொழிலாளி கேட்டார். சோசலிச சமத்துவ கட்சி பிரச்சாரகர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு முன்னாள் இடது குழுக்கள் ஆற்றும் துரோகப் பாத்திரத்தை விளக்கிய பின்னர், தொழிலாளர்கள் இலங்கை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் செயற்படும் இது போன்ற அமைப்புக்களை அடையாளம் காணத் தொடங்கினர்.

"பெருந்தோட்டங்களில் செயற்படும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை ஏனைய தொழிலாளர் பிரிவுகளில் இருந்து பிரித்து வைக்க நனவுடன் முயற்சிக்கின்றன. அவர்கள் தமிழ் தொழிலாளர்களுக்கு ஒரு தனியான வேலைத்திட்டம் தேவை என்கிறார்கள். அரசியல் சுதந்திரமும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமும் எங்கள் போராட்டத்திற்கு முக்கியமானவை என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்," என ஒரு தொழிலாளி கூறினார்.

சோசலிச சமத்துவ கட்சி மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. உறுப்பினர்கள், தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்துக்கு தங்களது சொந்த சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதோடு, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கமொன்றுக்கான அவசியத்தையும் விளக்கினர். தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. தொழிலாளர்கள் குழுவினர் தங்கள் கைகளை உயர்த்தி சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கைக்கு தங்களின் ஆதரவை தெரிவித்ததோடு தோட்ட தொழிலாளர்களின் மாநாட்டில் பங்கேற்கவும் உடன்பட்டனர்.