World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The Bradford by-election and the need for a revolutionary socialist party

பிராட்போர்ட் இடைத் தேர்தலும் ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சிக்கான தேவையும்

Statement of the Socialist Equality Party (UK)
6 April 2012
Back to screen version

கடந்த வாரம் பிராட்போர்ட் மேற்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் ரெஸ்பெக்ட் கட்சியின் -Respect Party- வேட்பாளர் ஜோர்ஜ் காலோவே பெற்ற வெற்றி பிரித்தானிய அரசியல் ஆளும்வர்க்கம் மற்றும் செய்தி ஊடகம் முழுவதும் அதிர்ச்சியையும், கவலையையும் கொடுத்துள்ளது.

ஒரு போர் எதிர்ப்பு மற்றும் வெட்டுக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாகத் தொடர்ந்து தொழிற்கட்சி தக்கவைத்திருந்த மேற்கு யோர்க்சயர் தொகுதியை கைப்பற்றி காலோவே அக்கட்சியை அங்கிருந்து கலைத்துவிட்டார். அது முன்னதாக பெரும்பான்மையாக கொண்டிருந்த 5,000 வாக்குகள், காலோவே 10,000 வாக்குகள் அதிகம் பெற்று வென்ற நிலையில் தகர்ந்து போயிற்று. இது தொழிற்கட்சியில் இருந்து 36.5% வாக்குகள் மாறிவிட்டதைக் காண்பிக்கிறது. தொழிற்கட்சியின் மொத்த வாக்குகளில் பங்கும் அதன் 2010 பொதுத் தேர்தல் முடிவுகளில் இருந்து 20% சரிந்தது.

தேர்தலில் தொழிற்கட்சி மட்டும் பெரும் தோல்வியை அடையவில்லை. ஆளும் கன்சர்வேடிவ் மற்றுல் லிபரல் டெமக்ராட் கூட்டணியின் வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். தொழிற்கட்சி, கன்சர்வேடிவ்கள், லிபரல் டெமக்ராட்டுக்கள் ஆகிய அனைத்து வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்கைவிட காலோவே 56% வாக்குவிகிதத்தை பெற்றார். பிராட்போர்ட் மேற்குத் தொகுதியை வெற்றி கொள்ளலாம் என்று நினைத்த கன்சர்வேடிவ்கள் 2,746 வாக்குகள் மட்டும் பெற்றனர். அவர்கள் இதில் 10,000 வாக்குகளுக்கு மேலாக இழ்ந்துள்ளனர். லிபரல் டெமக்ராட்டுக்களின் வேட்பாளர் மொத்தமே 1,505 வாக்குகளைப் பெற்று அவருடைய கட்டுப்பணத்தொகையையும் இழந்தார்.

கூட்டணிக்கு எதிரான பெருகிய எதிர்ப்பை தொழிற்கட்சியினர் பயன்படுத்தி வெற்றி பெறக்கூடும் என்பதுதான் அரசியல் ஆளும்தட்டு கருதியிருந்த உண்மையாகும். காலோவே சற்றும் வெற்றிக்கு வாய்ப்பில்லாதவர் என்று கருதப்பட்டார். பிரச்சாரத்தின் தொடக்கத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதற்கான நிலைப்பாடு 200 க்கு1 என்ற நிலையில்தான் இருந்தது.

மே 3ம் திகதி, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தேர்தல்கள் வரவிருக்கையில், உத்தியோகபூர்வ கட்சிகள் பிராட்போர்டில் தாம் ஏன் இத்தகைய மோசமான வாக்குகளைப் பெற்றோம் என்பதை நியாயப்படுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது.

பிராட்போர்ட் மேற்கில் நடந்தது ஏதோ ஒரு முறைதான் நடப்பது என்று கூறி அவர்கள் முடிவை இனவாதவழியில் விளக்க முற்பட்டுள்ளனர். தொகுதியின் பெரும்பாலான முஸ்லிம் மக்களுக்கு அழைப்புவிட்ட வகையில்தான் காலோவே வென்றார் என்று வாதிடப்பட்டதுடன், மக்கள் ஈராக், ஆப்கானிஸ்தான் போருக்களுக்குக் காட்டும் எதிர்ப்பும் காரணமாக கூறப்பட்டது.

உண்மையில், பிராட்போர்டின் ஆறு தேர்தல் பிரிவுகள் ஒவ்வொன்றிலும், இன அல்லது மரவுவழி கூட்டமைவு எப்படி இருந்தபோதிலும்கூட, காலோவே வென்றுள்ளார். ரெஸ்பெக்ட் தலைவர் சல்மா யாகுப்பின் கருத்துப்படி, கடந்த ஆண்டு தொழிற்கட்சி 55.5 விகித வாக்குகளுடன் வென்ற Clayton பிரிவில் தொழிற்கட்சிக்கு கிடைத்துள்ள 40 வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கிட்டத்தட்ட 900 வாக்குகள் ரெஸ்பெக்ட்டிற்குப் போடப்பட்டுள்ளது.

காலோவேயின் சந்தர்ப்பவாத அரசியலை எப்பொழுதும் எதிர்த்துள்ளதாகத்தான் உலக சோசலிச வலைத் தளத்தின் நிலைப்பாடு உள்ளது. நீண்டகாலமாக அவர் ஸ்ராலினின் சோவியத் ஒன்றியம் மற்றும் காஸ்ட்ரோவில் கியூபா ஆகியவற்றைப் பாராட்டுபவராகவும், மத்திய கிழக்கில் தேசியவாத முதலாளித்துவ ஆட்சிகளைப் புகழ்ந்துபாடுபவராகவுமே செயல்படுகிறார்.

ஆனால் பலருக்கும் காலோவே 2005ல் ஈராக் போருக்கு எதிராக அமெரிக்க செனட்டில் எதிர்த்து நின்றதனால் அறியப்பட்டுள்ளதால், ஆளும்தட்டினருக்கு எதிரான பிரமுகர் என்றுதான் கருதப்படுகிறார். இளைஞர்கள் மற்றும் முதல் தடவை வாக்களிப்பவர்களிடையே இவர் பெற்றுள்ள வாக்குகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகும். அவர்கள் பிரித்தானியா மத்திய கிழக்கில் ஏதேனும் ஒரு கொள்ளைமுறைப் போரில் ஈடுபடாத காலத்தை ஒருபோதும் தெரியாது வளர்ந்ததும் கிடையாது.

கூட்டணியின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த அவருடைய எதிர்ப்பு நாட்டில் பல இடங்களில் இருப்பது போலவே தொற்றுபோன்ற வேலையின்மை, வறுமை ஆகியவற்றில் வாடும் நகரத்தில் பரிவுணர்வைப் பெற்றுள்ளது.

பிராட்போர்டில் இளைஞர் வேலையின்மை என்பது ஐக்கிய இராச்சியத்தின் சராசரியைப் போல் இருமடங்காகும். இது மூன்று ஆண்டுகளில் மும்மடங்கு ஆகிவிட்டது. தொழிற்கட்சியின் 13 ஆண்டுக்கால ஆட்சி 1997ல் இருந்து 2010 வரை இருந்தபோது, கிட்டத்தட்ட 15,000 உற்பத்தித்துறை வேலைகள் நகரில் அழிக்கப்பட்டுவிட்டன.

இத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சுமத்தப்பட்டுவரும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவுகளும் சேர்ந்துள்ளன. அதுவோ 2008ல் தொழிற்கட்சி வங்கிகளுக்குக் கொடுத்த பிணை எடுப்பைத் தொடர்ந்து வந்தது. அது கன்சர்வேடிவ்/லிபரல் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னரும் தொடர்கிறது. இத்தாக்குதல்கள் பிராட்போர்டின் தொழிற்கட்சியின் நகராட்சியாலும் அடிமைத்தன வகையில் சுமத்தப்பட்டுள்ளன. தொழிற்கட்சி £67 மில்லியன் பவுண்டுகளை முக்கிய தேவையாக இருந்த பணிகளில் இருந்து குறைத்துள்ளது; உள்ளூராட்சியில் 1,000 பணிகளை அகற்றிவிட்டது. தொழிற்சங்கங்கள் வேலைப்பாதுகாப்பு, ஊதிய, பணிகள் பாதுகாப்பை எதிர்த்துச் சிறிதும் போராடவில்லை. மாறாக இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத்தான் கொடுத்துள்ளன.

தேர்தல் முடிவை பிராட்போர்ட் வசந்தம் என்று காலோவே விளக்கியுள்ளார். இது கடந்த ஆண்டு எகிப்து மற்றும் துனிசியாவில் நடந்த எழுச்சிகளைப் பற்றிய குறிப்பு ஆகும். கடந்த கோடையில் பிரித்தானியா முழுவதும் குழப்பங்களுக்கு எரியூட்டிய அது அதிருப்தி மற்றும் அந்நியப்படல் போக்கில் இருந்துதான் இது வந்துள்ளது என்றார் அவர்.

பெரும் செல்வந்தர்களின் மூன்று அரசியில் கட்சிகள் குறித்தும் சீற்றமிகு எதிர்ப்பு மில்லியன் கணக்கான மக்களிடையே உள்ளது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. YouGov கருத்துக்கணிப்பு ஒன்று வாக்கெடுப்பின் வரலாற்றிலேயே முதல் தடவையாக கன்சர்வேடிவ்கள், லிபரல் டெமக்ராட்டுக்கள் மற்றும் தொழிற்கட்சி கட்சியின் தலைவர்கள் அனைவரும் சமமாக தாக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளது. இக்கருத்துக் கணிப்பு இக்கட்சிகள் அனைத்திற்கும் எதிர்மறை தரத்தைப் பதிவு செய்துள்ளது; டேவிட் காமரோன், நிக் கிளெக் மற்றும் எட் மிலிபாண்ட் ஆகியோர் நன்கு பணிபுரிகின்றனர் அல்லது புரியவில்லை என்பது பற்றிய வாக்காளர்களின் விருப்ப வேறுபாடு எப்பொழுதும் இல்லாத மிகக் குறைந்த அளவான -121% என்று உள்ளது.

பிரித்தானிய அரசியல் ஊழல் மலிந்தது என்று வாக்காளர்களில் 68% கருதுகின்றனர் என்றும் அளவை கண்டுள்ளது.

வாக்கெடுப்புக்கள் குறித்த வல்லுனரான மைக் ஸ்மித்சன், தற்கால ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் மூன்று முக்கிய தலைவர்களும் ஒரே நேரத்தில் இத்தகைய குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதைத் தான் காணவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த அழுகிய அரசியல் நிலைப்பாட்டிற்கு அடிப்படைச் சவால் எதையும் விடுவதான நோக்கத்தை காலோவே கொண்டிருக்கவில்லை. அவர் மற்றும் அவருடைய ரெஸ்பெக்ட் கட்சியின் செயற்பட்டியல் இத்தகைய வாக்குகள் இழப்பு தொழிற்கட்சியுடன் உணர்மையுடனான அரசியல் முறிவு என்னும் வடிவை எடுக்காமலிருப்பதற்கான முயற்சியை உறுதிப்படுத்துதல் என்றுதான் உள்ளது.

தன்னுடைய வழிவகைகளில் இருக்கும் தவறுகளை தொழிற்கட்சி கண்டறியவேண்டும் என்ற முறையீட்டுக் கொடுப்பதற்கு அவர் தன் வெற்றி உரையைப் பயன்படுத்தினார். கன்சர்வேடிவ்கள் அல்லது லிபரல் டெமக்ராட்டுக்களை நான் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆனால் 37 ஆண்டுக்காலம் நான் பணிபுரிந்த தொழிற்கட்சியைப் பற்றிக் கவலைப்படுகிறேன். அதில் 18 ஆண்டுக் காலம் நான் பாராளுமன்றத்தில் தொழிற்கட்சி உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

தொழிற்கட்சியின் முதலாளித்துவச்சார்பு, போர் ஆதரவு அரசியல் ஆகியவை பெரிதும் நிராகரிக்கப்பட்டுள்ளது இப்பொழுது என்ற நிலையிலும்கூட, அவர், தொழிற்கட்சி உண்மையான தொழிற்கட்சியாக மீண்டும் இருக்க வேண்டும் என அழைப்புவிடுகிறேன். அவர்கள் கொண்டிருந்த, நான் ஒரு பகுதியாக இருந்த அந்த முந்தைய கூட்டணியைப் பழையபடி ஒன்று சேர்ப்பதும் தேவை என முறையீடு செய்கிறேன். அதுதான் டோரிக்களையும் லிபரல் டெமக்ராட்டுக்களையும் உண்மையில் தோற்கடிக்கும் வழியாகும். என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, காலோவே பலமுறை பார்வையாளர்களிடம் தான் உண்மையான தொழிற்கட்சி என்றும் 2003ல் தன் போர் எதிர்ப்புக் கருத்துக்களுக்காக பிளேயரின் தலைமையில் கட்சியில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றால், இன்னமும் தொழிற்கட்சியில்தான் இருந்திருப்பேன் என்றும் கூறினார்.

இவருடைய முறையீடு இகழத்தக்கது ஆகும். தொழிற்கட்சி ஒரு வலதுசாரி, முதலாளித்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்திற்கு விரோதப் போக்கைக் காட்டுவது. கட்சி அல்லது அதன் பிரிவுகளுள் ஏதேனும் ஒன்றில் மறுபடி சேர்வதற்கு இந்த முடிவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று காலோவே நம்பினாலும், தொழிற்கட்சி சிக்கன நடவடிக்கள் மற்றும் போருக்கான அதன் கொள்கைகளில் முழு ஈடுபாட்டையும் நன்கு வெளிப்படுத்தியுள்ளது. எட் மிலிபாண்ட் தொழிற்கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல்கள் பிரசாசரத்தை ஆரம்பிக்கையில், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் கன்சர்வேடிவ்களைவிட மிஞ்சிய நிலையில் உள்ளார்.

முதலாளித்துவம் சர்வதேசரீதியாக உடைந்து விட்டது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எதிர்கொண்டுள்ள அரசியல் பணி இதை திருத்த முயலும் திவாலான முன்னோக்கு அல்ல; அல்லது அதேபோல் பயனற்ற முறையில் அழிந்துள்ள தொழிற்கட்சியைச் சீர்திருத்தம் செய்யும் முயற்சிகளிலும் இல்லை. அத்தகைய முறையில் இன்னும் பேரழிவை விளைவிக்கும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள்தான் ஏற்படும்.

உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதை முகங்கொடுக்கின்றனர்இருக்கும் அழுகிய அரசியல் கட்டமைப்பை அகற்றிவிட்டு பொருளாதாரத்தை சோசலிச வழிகளில் மறுகட்டமைக்க வேண்டும்.

இதுதான் பீட்டர்ஸ்பாரோ மற்றும் செயின்ட் ஹெலென்சில் தேர்தலில் நிற்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களான ஸ்டீபன் வூட்பிரிட்ஜ் மற்றும் டானி டிக்கின் ஆகியோருடைய வேலைத்திட்டமும் ஆகும்.

அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சி ஆகியவற்றில் இருந்து சுயாதீனமான தொழிலாளர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவ கட்சி போராடுகிறது; இதன்மூலமே கூட்டணி அரசாங்கத்தைக் வீழ்த்தி அதற்குப் பதிலாக ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை அமைக்க முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தரும் அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நம் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும், நம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேணடும், புரட்சிகரக் கட்சியில் இணைந்து அதைக் கட்டமைக்க வேண்டும் என்று முறையீடு செய்கிறோம்