World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Syria and Bahrain

சிரியாவும் பஹ்ரைனும்

Bill Van Auken
18 April 2012
Back to screen version

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளுன் சிரியாவில் போர்நிறுத்தம் என்பது தோற்றுவிட்டது என்பதை அறிவிப்பதில் நேரத்தை வீணடிக்காததுடன், மேலும் மத்திய கிழக்கில் மூலோபாய முக்கியத்துவம் உடைய நாட்டில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட தலையீட்டிற்கான தீவிரமான தயாரிப்புக்களையும் மேற்கொண்டுள்ளன.

13 மாதங்களாக நடைபெறும் ஆயுதமேந்திய வன்முறைக்குப்பின், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் முயற்சியில் உருவான திட்டம் 48 மணி நேரத்திற்குள் மோதலை முற்றிலும் தீர்க்க முடியாமல் தோற்று விட்டமை சிரியாவின் நண்பர்கள் என அழைக்கப்படும் நாடுகளுக்கு மாற்றீட்டிற்கான சாத்தியத்திற்கு போதுமான நேரத்தைக்கொடுத்து விட்டது. அதாவது இப்பிராந்தியம் முழுவதும் பரவக்கூடிய முழு அளவிலான குறுங்குழுவாத மோதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐ.நா.வில் அமெரிக்கத் தூதராக இருக்கும் சூசன் ரைஸ் செவ்வாயன்று வாஷிங்டனின் நிலைப்பாட்டைத் தெளிவாக்கும் வகையில், ஐ.நா.வில் நடக்கும் சிறந்த இராஜதந்திர பணிக்கு ஆதரவை அளிப்பதுடன் நாங்கள் எங்கள் முயற்சிகளை நிறுத்திவிடவில்லை.  என்று அறிவித்தார். மாறாக அமெரிக்கா சிரியாவில் எழுச்சியாளர்கள் எனப்படுவோருக்கு கொலைசெய்யமுடியாத ஆயுதங்களை வழங்குவதின் மூலம் உதவும். இதில் இரவில் பார்க்கும் கண்ணாடிகள், சிறந்த தொடர்புத்துறைக் கருவிகள், அமெரிக்க உளவுத்துறை சேவை ஆகியவை கொடுக்கப்படும். இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் மீதான ஆயுதத் தாக்குதலுக்கு உதவும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

லிபியாவில் ஆட்சிமாற்றத்திற்காக அமெரிக்க நேட்டோப் போரில் முக்கிய பங்காளியாக இருந்த வாஷிங்டனின் அப்பிராந்தியத்தில் உள்ள நெருக்கமான நட்பு நாடுகளுள் ஒன்றான கட்டாரின் ஆளும் எமிர், ரோமில் செய்தியாளர் கூட்டத்தில் ஐ.நா. கோரியுள்ள போர்நிறுத்தம் அறநெறி பிறழ்ந்தது என்றும், அது வெற்றிபெற 3% க்கு மேல் வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். கட்டாரும் சவுதி அரேபியாவும் தங்கள் ஆதரவை அசாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் எதிர்த்தரப்பினருக்கு ஆயுதம் கொடுப்பதற்கு அறிவித்துள்ளன.

துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகான் போர்நிறுத்தம் பயனற்றது என்றார். சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அவகாசம் பெற முயல்கிறார். அக்காரணத்தினால்தான் துருக்கி அந்நாட்டில் போர்நிறுத்தத்தை நம்பவில்லை என்றார் எர்டோகான்.

துருக்கிய அரசாங்கம் தன்னுடைய நாட்டிற்குள் ஆயுதமேந்திய குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து வைத்துள்ளதுடன், அக்குழுக்கள் சிரிய பாதுகாப்புப் படைகளின் மீது வாடிக்கையாகப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி எல்லை கடந்த பூசல்களுக்குத் தூண்டுதல் கொடுக்கின்றன. இத்தகைய மோதல்கள் துருக்கிக்கு நேட்டோவுடன் கொண்டுள்ள பரஸ்பர பாதுகாப்பு உடன்பாட்டைக் காட்டி நேரடியான ஏகாதிபத்தியத் தலையீடு ஒன்றிற்குப் பாதையை திறக்க போலிக் காரணமாக அமையும். சிரிய நிலத்தை கைப்பற்றி ஒரு இடைத்தடை பகுதியை தோற்றுவிக்க வேண்டும், அங்கிருந்து தாக்குதல்களுக்கான தயாரிப்புக்கள் நடத்தப்படலாம் என்பது குறித்து விவாதங்களை அங்காரா வாஷிங்டனுடன் தொடக்கியுள்ளது.

பாரிஸில் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலைன் யூப்பே சிரிய நண்பர்களின் அடிப்படை அங்கத்துவ நாடுகளான வாஷிங்டன், லண்டன், துருக்கி, வளைகுடா ஒத்துழைப்புக் குழுவில் உள்ள முடியாட்சிச் சர்வாதிகாரங்கள் பொருளாதாரத் தடைகளை இறுக்குவதற்கு கூட்டம் நடத்த வேண்டும் என்னும் திட்டங்களை அறிவித்துள்ளார். ஏற்கனவே இவை சிரியத் தொழிலாளர்களின் உண்மை ஊதியங்களைப் பாதியாகக் குறைத்துள்ளதுடன், வேலையின்மை விகிதமும் 35%ஐக் கடந்து விட்டது. இதன் நோக்கம் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி நிக்சன் சிலி நாட்டை பற்றிக் கூறியது போல், பொருளாதாரத்தை ஓலமிட வைக்க வேண்டும் அதையொட்டி சமூகச் சரிவு, உள்நாட்டுப் போர் ஆகியவற்றிற்குச் சிறந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும். என அமையும்.

இந்த ஆட்சி மாற்றத்தை முன்வைப்போரின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது அசாத்திற்கு அரசியல் மற்றும் உடல்ரீதியான தற்கொலையே தவிர வேறொன்றுமில்லை.

அசாத்தின் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பிரச்சாரம் பகிரங்கமாக அரபு வசந்தம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் இக்கூற்றுக்கள் அனைத்தும் அரபு தீபகற்பத்தின் மறுபுறத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக நடக்கும் வெகுஜன இயக்கத்தை நசுக்குவதைப் பற்றிப் பொருட்படுத்தாமல், உண்மையில் அதற்கு ஆதரவு தரும் நண்பர்களின் நிலைப்பாட்டினால் பொய் ஆகின்றன.

பஹ்ரைன் குறித்து கடுமையான சாடல் நிறைந்த அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புசபை -Amnesty International- இந்த வாரம் வெளியிட்டுள்ளது; அதிகாரிகள் வேறுவிதமாகக் கூறினாலும், அல் கலிபா குடும்ப ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு எதிரான அரசாங்க வன்முறை தொடர்கிறது, நடைமுறையில் பெப்ருவரி மற்றும் மார்ச் 2011ல் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள்மீது நடத்தப்பட்ட மிருகத்தனத் தாக்குதல்களைத் தொடர்ந்து எதுவும் மாறவில்லை என்று அதில் கூறப்படுகிறது. அந்த வன்முறை நடவடிக்கையில் சவுதி துருப்புக்களும் டாங்குகளும் பஹ்ரைனை அரபு தீபகற்பத்துடன் இணைக்கும் பாலத்தின் வழியே சென்று ஆயுதமற்ற எதிர்ப்பாளர்களை இராணுவரீதியான அடக்குமுறையில் நசுக்கின.

அமெரிக்கா மற்றும் சவுதி ஆதரவுடைய சுன்னி முடியரசு ஆகியவற்றின் ஆக்கிரோஷமான பொது உறவுகள் பற்றியும் அறிக்கை விவரமாகக் கூறுகிறது. அங்கு இனப்பாகுபாடு முறை உடைய அரசாங்கம் முறையாக 70% உள்ள ஷியாப் பெரும்பான்மையினருக்கு எதிராக நடந்து கொள்கிறது. மிக அதிகவிலை கொடுக்க நேரிடும் அமெரிக்கப் பொது உறவு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை தவிர, ஹமத் அரசரும் அவருடைய ஆட்சியும் BICI எனப்படும் பஹ்ரைனின் சுயாதீன விசாரணைக் குழுவைத் தோற்றுவித்தனர்; இது அதிகாரிகள் மனித உரிமைகள் மீறலை பொறுப்பற்ற முறையில் நடத்தியுள்ளனர் என்றும், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மிக அதிக வன்முறை பயன்படுத்தப்பட்டது, பரந்த அளவில் சித்திரவதை இன்னும் தவறாக நடத்தப்படுதல் ஆகியவை இருந்தன, நியாயமற்ற விசாரணைகளும் சட்டவிரோதக் கொலைகளும் இருந்தன என்று கூறியுள்ளது.

அரசரும் அவருடைய பரிவாரமும் குழுவிற்கு முறையாக நன்றி செலுத்தி, அதன் பின் சர்வதேச மன்னிப்புசபை அறிக்கை கூறுவது போல் அது ஆவணமிட்ட அனைத்து குற்றங்களையும் தொடர்ந்தனர்அதாவது சட்ட விரோதக் கொலைகள், சித்திரவதை, இராணுவ நீதிமன்றங்கள், தங்கள் உரிமைகளுக்காக அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரே குற்றத்தைச் செய்த நூற்றுக்கணக்கான மக்களைச் சிறையில் அடைத்தல் என.

கைதிகளுள் ஒருவர் அப்துல்ஹதி அல்-க்வாஜா ஆவார். இவர் ஒரு முக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர் ஆவார். ஏப்ரல் 2011ல் கைது செய்யப்பட்டு, மிருகத்தனமாகச் சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் 20 எதிர்த்தரப்பினருடன் சேர்ந்து கொண்டு முடியாட்சியை வீழ்த்துவதற்கு பயங்கரவாதக் குழுக்களை நிறுவினார் என்ற குற்றச்சாட்டிற்கும் உட்படுத்தப்பட்டார்.

அதன் தீர்ப்புக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட இந்த கேலிக்கூத்திற்குரிய சுயாதீன ஆணையம் வாஷிங்டனுக்கும் மற்ற நேட்டோ சக்திகளுக்கும் அல்-கலீபா ஆட்சியை மூடிமறைக்கப் போதுமானதாகப் போயிற்று. அடுத்த வாரம் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா 1 ஐத் தடையின்றித் தொடர்வது என்பது ஒரு சர்வதேச ஒப்புதல் முத்திரை என ஆகிறது.

சிரியாவில் அசாத்தும் இதே போன்ற தந்திரத்தைக் கையாண்டால் ஏற்படக்கூடிய பெரும் கூக்குரலை எளிதில் கற்பனை செய்து கொள்ள முடியும்.

அமெரிக்கா மீண்டும் நிறைய ஆயுதங்களை அரசரின் சர்வாதிகாரத்திற்கு அளித்து வருகிறது. இதனால் அது தொடர்ந்து மக்களைக் கொல்லவும் நசுக்கவும் முடியும். சிரியாவை விட இங்கு அதிக சதவிகிதத்தினர் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதற்கிடையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் இழிந்த முறையில் அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த அப்பட்டமான இரட்டை நிலைப்பாட்டிற்கான காரணம் வெளிப்படையானதுதான். பஹ்ரைனில்தான் அமெரிக்கக் கடற்படையில் ஐந்தாம் பிரிவின் தலைமையகம் உள்ளது. அது பாரசீக வளைகுடாவிற்கு மேற்குக் கரைகளில் செயற்பாடுகளை நடத்த ஒரு தளமாக உள்ளதுடன்,  ஈரானை நோக்கி உள்ளது. இது மூலோபாய முக்கியத்துவம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியைத் தாக்கும் இலகுவான தூரத்தில் உள்ளது.

ஆனால் சிரியாவோ, ஈரானுக்கு எதிரான பேரழிவு தரக்கூடிய போரில் படிக்கட்டு போல் இருக்கலாம் என்று இலக்கு கொள்ளப்படுகிறது; அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானை பேர்சிய வளைகுடா மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய்ச் செழிப்பு உடைய பகுதிகளின் தன் மேலாதிக்கத்தை உறுதி செய்யும் உந்துதலுக்கு ஒரு தடையாகக் கருதுகிறது. இந்த மூலோபாயம் தவிர்க்க முடியாமல் சீனா, ரஷ்யா இரண்டையும் ஈடுபடச் செய்கிறது; அவை வாஷிங்டனின் போர்களும் உறுதிகுலைக்கும் நடவடிக்கைகளும் மத்திய கிழக்கில் தங்கள் நல்னகளையும் செல்வாக்குகளையும் அழிக்கும் நோக்கம் கொண்டவை எனக் கருதுகின்றன.

சிரியா குறித்த பெரும் அறநெறி நிலைப்பாடுகள், தலையீட்டை மனித உரிமைகள், ஜனநாயகம் என்ற பெயரில் தலையீட்டை நியாயப்படுத்தும் முயற்சிகள் பஹ்ரைன் ஆர்ப்பாட்டங்கள் நிரூபணம் செய்வது போல் முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும்; இவை இந்தக் கொள்ளைமுறை, ஆபத்தான போர் உந்துதலுக்கு மக்கள் கருத்தைத் திரிக்கும் ஒரே நோக்கத்தின் வடிவமைப்பு ஆகும்.