World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

South African miners continue strike in aftermath of massacre

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலைகளுக்கு பின்னரும் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

By Chris Marsden
20 August 2012
Back to screen version

தென்னாபிரிக்க பிளாட்டின சுரங்கத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 16 அன்று பொலிசார் மழையெனப் பொழிந்த தோட்டாக்கள் மூலம் அவர்களுடைய தோழர்கள் 34பேரை கொன்று மற்றும் ஒரு 78 பேரைக் காயப்படுத்திய பின்னரும் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். அவர்களுடைய கோபம் சுரங்க உரிமையாளர் லோன்மின் மற்றும் பொலிசாருக்கு எதிராக மட்டுமின்றி, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) அரசாங்கம், தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் (NUM)  ஆகியவற்றின் மீதும் உள்ளது.

ஜோகன்ஸ்பேர்க்கிற்கு வடகிழக்கே உள்ள மரிகானா சுரங்கத்தில் 3,000 தோண்டும் தொழிலாளர்கள் தங்களுடைய 400 ராண்ட் ($480) குறைந்தப்பட்ச மாத ஊதியம் 12,500 ராண்டுகள் ($1,400) என 300% உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிசும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் பெருநிறுவன நலன்களை செயல்படுத்தும் வகையில் நடக்கின்றன. தென்னாபிரிக்க முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை மிருகத்தனமாகச் சுரண்டுவதற்கு எதிரான பரந்த அரசியல் மற்றும் சமூக அதிருப்தி, அதற்குச் சவால் விடுவது என்றவகையில் வெளிப்படையாக வந்துள்ள இந்த வேலைநிறுத்தத்தை சமாளிப்பது ஓர் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் அவை உறுதியாக உள்ளன.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் எப்படி நிறப்பாகுபாடு முடிவுற்ற காலத்தில் இருந்து சமூக சமத்துவமற்ற நிலை விரிவடைவதற்கு தலைமை தாங்கிவருகிறது என்பதற்கு சுரங்கத் தொழில் பெரும் எடுத்துக் காட்டாக உள்ளது. இதில் முக்கிய நபர்களாக இருக்கும் ஒரு மிகச் சிறிய கறுப்ப்பின முதலாளித்துவத்தினர்தான் செல்வக் கொழிப்பை அடைந்துள்ளனர்.

மிக இழிந்த சூழலில் உழைத்து வாழும் சுரங்கத் தொழிலாளர்கள் பேரழிவு தரும் விலையை செலுத்தும் நிலத்தில் இருந்து எடுக்கப்படும் பிளாட்டினம் அவுன்ஸ் ஒன்றிற்கு 1,400 டாலருக்கும் மேலாக விற்கப்படுகிறது. இதன் விலையும் லோன்மின் ஆறு நாட்கள் உற்பத்தி இழப்பால் போட்டியாளர்களால் உயர்த்தப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட 15,000 அவுன்ஸ் பிளாட்டினம் என்று 2,100,000 டாலர் மதிப்பு உடையதாகிறது. லோன்மின்னுடைய பங்குகளும் பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 20% சரிந்துவிட்டது. இதனால் உலகின் மூன்றாம் மிகப் பெரிய பிளாட்டினச் சுரங்க உரிமையாளரின் சந்தை மதிப்பில் 610 மில்லியன் டாலர்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

அடிக்கடி இறப்புக்கள் ஏற்படும் வரலாற்றை லோன்மின் கொண்டுள்ளது. இதைத்தவிரவும், இருக்கும் தொழிலாளர்களின் நிலைமையும் மிக மோசம் என்று Bench Marks Foundation அறிக்கை கூறுகிறது. இந்நிறுவனம் அந்த அறிக்கை பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

தற்போதைய பூசலில் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பெருநிறுவனங்களின் பங்காளி என்னும் முறையில் தன் பங்கைத் தொடர்கிறது. அது வன்முறை அடக்கல் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டுவதற்கு தீவிரமாக உதவுகிறது.

போட்டிச்சங்கமான Mineworkers and Construction Union (AMCU) என்பதால் இந்த வேலைநிறுத்தம் வழிநடத்தப்படுகிறது. இதற்கு தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் ஊழலினால் ஆதரவு கிடைத்துள்ளது. வியாழன் படுகொலைகளுக்கு முன்பு இம்முரண்பாட்டில் பத்து பேர் ஏற்கனவே இறந்துள்ளனர். அதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் லோன்மின்னுடைய கைக்கூலிகள் என இலக்கு வைக்கப்பட்ட மூன்று தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கத்தை படுகொலைகள் கொண்டிருந்தபோதிலும், அனைத்துக் குறிப்புக்களில் இருந்தும் அத்தகைய இலக்கில் அது தோல்வியுற்றுள்ளது என்பதுதான் தெரிகிறது. சுரங்கத் தொழிலாளர்கள் அச்சமின்றி, உறுதியாக உள்ளனர். சுரங்கப் பாதை விஞ்சை இயக்குபவரான மகோசி எம்போன்கனே அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பின்வருமாறு கூறினார்: அவர்கள் எங்களை அடிக்கலாம், கொல்லலாம், உதைத்துக் காலால் மிதிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாங்கள் வேலைக்குச் செல்லப்போவது இல்லை. மற்றவர்களை அவர்கள் வேலைக்கு அமர்த்தினால், அவர்களாலும் இங்கு வேலை செய்ய முடியாது. இங்கு நாங்கள் இங்கிருந்து அவர்களைக் கொன்றுவிடுவோம்.

கடந்த வாரப் படுகொலைகள் 1960ம் ஆண்டு ஷார்ப்வில்லேப் (Sharpeville) படுகொலைகளுடன் பலமுறை ஒப்பிடப்பட்டுள்ளன. அவை நிறப்பாகுபாட்டின்போது ஏற்பட்ட வெகுஜன இயக்கத்தினை உறுதிப்படுத்தியது. மாரிக்கானவும் அதேபோன்ற ஊக்குவிக்கும் தாக்கத்தை இப்பொழுது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்  மற்றும் அதன் கூட்டணிப் பங்காளிகள் தென்னாபிரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பு ( Congress of South African Trade Unions -COSATU), தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (South African Communist Party -SACP) ஆகியவற்றிற்கு எதிராக நடத்தும் போராட்டங்களிலும் கொள்ளலாம். 

தேசிய சுரங்கத் தொழிலாளர் தொழிற்சங்கம் தொடர்ச்சியாக சுரங்கத்  தொழிலாளர்கள் மீது பொலிசார் நடத்தும் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்து வந்துள்ளது. படுகொலைகளுக்கு பின்னரும் இந்நிலைதான் உள்ளது. தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலர் பிரான்ஸ் பலேனி AMCU மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றிய தன் சிடுசிடுப்பை வெளிப்படுத்தும் வகையில் பின்வருமாறு கூறினார்: நீங்கள் அறியாமையில் இருக்கும் தொழிலாளர்களை தவறாக நடத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறீர்கள். இதன் விளைவுகளைத்தான் நேற்று நாங்கள் பார்த்தோம்.

சுரங்க தொழிலாளர்களின் நெருங்கியவர்கள் மருத்துவமனைகளில் கூடி தங்கள் கணவன்மார்கள், தந்தையர், மகன்கள் காயமுற்றோர் பட்டியலில் அல்லது பொலிஸ் காவலில் உள்ள பொது வன்முறையில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள 256 பேரில் இருக்கின்றனரா அல்லது சிலரைப் பொறுத்தவரை கொலைக்குற்றத்தில் தள்ளப்பட்டுள்ளனரா என்பதைக் காண முற்பட்டனர். இறந்தவர்கள் பெயர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்படவில்லை.

சுரங்கத் தொழிலாளர்களின் மனைவிகள் வெள்ளியன்று பொலிசாரே, எங்கள் கணவன்கள், மகன்களைச் சுடுவதை நிறுத்துக என எழுதப்பட்டிருந்த கோஷ பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய பொலிசின் தலைவராக மங்வாசி விக்டோரியா பியேகா ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஜனாதிபதியான ஜாகோப் ஜுமாவினால் ஜூன்மாதம் நியமிக்கப்பட்டார். முன்பு இவர் அரசாங்க சொத்துக்களை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு பொறுப்பைக் கொண்டிருந்தவர். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இவர் வன்முறையைத் தூண்டுவதாகத் தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டி, 6 பிஸ்டல்கள் மற்றும் 2 ஆயுதங்களை அவர்களால் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்தவற்றை எடுத்துக் கொண்டனர் என்று கூறியுள்ளார்.

எந்தவித ஆத்திரமூட்டலுமின்றி பொலிசார் சுரங்கத் தொழிலாளர்களை சுட்டனர் என்பதைக் காட்டும் ஒளிப்பதிவு நாடாக்களை அவர் புறக்கணித்தார். மேலும் South African Institute of Race Relations  கொடுத்துள்ள அறிக்கையையும் பொருட்படுத்தவில்லை. அவ்வறிக்கை கூறுவதாவது: பொலிசார் வேண்டுமென்றே கூட்டத்தில் பல பகுதிகளிலும் ரைபிள்கள், கைத்துப்பாக்கிகளினால் சுட்டனர் என்பதற்கு சான்றுகள் தெளிவாக உள்ளன. பலர் இறந்து வீழ்ந்தபின், பலர் ஓடத் தலைப்பட்ட நிலையிலும்கூட போலிசார் தொடர்ந்து சுட்டனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள், அவர்கள் மனைவியர், குடும்பங்கள் ஆகியவற்றிற்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின்  இளைஞர் அணியின் முன்னாள் தலைவரான ஜூலியன் மலேமா உரை நிகழ்த்தினார். இவர் ஏப்ரல் மாதம் ஓர் எதிர்ப்பிரிவிற்கு தலைமை தாங்கியதற்காக ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மலேமா ஓர் இடது வார்த்தையாடும் சந்தர்ப்பவாதியும் தேசியவாத, முதலாளித்துவ எதிர்ப்பு வார்த்தைஜாலங்களில் திறமை பெற்றவருமாவார். ஆனால் ஜனாதிபதி ஜுமா மற்றும் ஐக்கிய இராஜ்ஜிய தளமுடைய லோன்மினை அவர் கண்டித்துள்ளது மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜுமா பதவியில் இருந்து இறங்க வேண்டும், ஜனாதிபதி ஜுமாவின் அரசாங்கம் நம் மக்களைக் கொலை செய்கிறது. என்றார் அவர்.

சில ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் லோன்மின் PLC பிளாட்டினச் சுரங்கத்தில் பங்கு வைத்துள்ளனர் என்றும் சுரங்கத் தொழிலாளர்களை காப்பதில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றும் மலேமா சுட்டிக் காட்டினார். இச்சகோதரர்கள் மீது ஜனாதிபதி ஒன்றும் இரங்கல் உணர்வு கொண்டிருக்கவில்லை. மாறாக அவர் முதலாளிகளை குளிர்சாதன அலுவலகங்களில் சந்திக்கச் செல்லுகிறார்.

மொசாம்பிக்கில் உச்சிமாநாடு ஒன்றில் இருந்து திரும்பிவந்த ஜுமா, கொலைகள் பற்றி உத்தியோகபூர்வ விசாரணை ஒன்றை அறிவித்தார். சந்தேகத்திற்கு இடமின்றி இது ஒரு பூசிமெழுகலாகத்தான் இருக்கும். அவரும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் பொலிஸ் நட்த்திய கொலைகளுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள். வேலைநிறுத்தத்தை குருதிவடியச் செய்ய வேண்டும் என்ற திட்டமிட்ட முயற்சியாகும் அது. பொலிஸ் அதிகாரிகள் அதை விடுதலை நாள் என்று குறிப்பிட்டு, மிக அதிக வன்முறை பயன்படுத்தப்படும் என்று முன்னதாகவே கூறியிருந்தனர்.

வெள்ளியன்று சுரங்கத்தை ஜுமா பார்வையிட்டார். ஆனால் வேலைநிறுத்தம் செய்து வந்த தொழிலாளர்களுடன் பேசவில்லை. ஞாயிறன்று அவர் நிலைமையை சமாளிப்பதற்கும் முயற்சியில் ஒரு வாரகாலம் தேசிய துக்க காலமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவித்தார். வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்குக் கொண்டுவரும் உந்துதலை முடுக்கிவிட்டார். ஜுமாவின் அறிவிப்பிற்கு முன் லோன்மின்னில் இருந்து இறுதி எச்சரிக்கை ஒன்று வெளிவந்தது. வேலைக்குத் திரும்பாத அனைத்து சுரங்கத் தொழிலாளர்களும் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அரசியல் அதிருப்தியை தென் ஆபிரிக்க முதலாளித்துவ பிரிவின் ஒன்றிற்றுக் பின் திசைதிருப்ப வேண்டும் என்பதுதான் மலேமாவின் பங்கு ஆகும். சுரங்கத் தொழில் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் அவருடைய கோரிக்கை சக்திவாய்ந்த எதிர்கொள்ளலை கொண்டுள்ளது; ஆனால் ஜுமாவைப் போலவே அவரும் பெருவணிகத்தின் பிரதிநிதிதான். அரசாங்க ஒப்பந்த அறிக்கைகளில் தொடர்பை நிறையக் கொண்டுள்ள இவர் அதையொட்டி “tenderpreneur” என்ற அடைமொழியைக் கொண்டுள்ளார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆளும் உயடுக்குடன் அவர் கொண்டுள்ள அதிருப்தி, அவர் முயற்சி செய்த ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிவுற்றதை அடுத்து வந்தது. இதில் 2010ம் ஆண்டு ASA  கிரோம் உலோக நிறுவனத்தில் ஒரு பங்கு பெறுவதும் அடங்கும்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் எந்தப் பிரிவு அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம் அல்லது ஸ்ராலினிஸ்ட்டுக்கள் எவருடனும் தொழிலாள வர்க்கம் நம்பிக்கை வைக்கக் கூடாது. நிறப்பாகுபாடு முடிந்து 18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்கள் தென் ஆபிரிக்காவை தொடர்ந்து சுரண்டுவதற்கு உண்மையான கூட்டு தேசிய முதலாளித்துவத்திற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையில் உள்ளது என்பதைத்தான் நிரூபணம் செய்துள்ளன.

கிராமப்புற வறியவர்களை திரட்டி தொழிலாள வர்க்கம் அதன் சொந்தக் கட்சியை கட்டமைத்து, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய அடக்குமுறையை தென் ஆபிரிக்கா மற்றும் கண்டம் முழுவதிலும் இருந்து அகற்றப் போராட வேண்டும்.