World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe placed under the dictatorship of the banks

வங்கிகளின் சர்வாதிகாரத்தின் கீழ் ஐரோப்பா நிறுத்தப்பட்டுள்ளது

Chris Marsden
3 February 2012
Back to screen version

இந்த வார ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் நிகழ்வு இறுதியில் எட்டவேண்டிய தீர்மானத்தை பற்றி கலந்துரையாடாது எவை கைவிடப்பட வேண்டுமென்பதை முன்மொழிவதாக இருந்தது.

கூடுதல் கடன்களை வழங்குவதற்கான ஒரு முன்நிபந்தனையாக கிரேக்க வரவு-செலவுக் கொள்கையிலிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கும் அதிகாரத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தால் நியமிக்கப்படும் கிரீஸிற்கான ஒரு "வரவு-செலவுத்  திட்ட ஆணையாளரை" ஜேர்மனி கோரியது என்ற செய்திகளை அது மாநாட்டிற்கு முன்னதாக கசியவிட்டது. கிரீஸ் அதன் கடன்களுக்காக வங்கிகளுக்கு நிதிகளை வழங்க வேண்டியுள்ளது. இது அதன் "முதல் மற்றும் முக்கியமான" முன்னுரிமையாக வந்து நிற்கிறது. புதிய கடன்களாக அது கோர விரும்பிய 145 பில்லியன் யூரோவிற்கு முன்னரே அதன் கடன்கள் 350 பில்லியன் யூரோவில் உள்ளன. திவால்நிலையைக் காட்டி அதற்கு கடன் வழங்குபவர்களை அது அச்சுறுத்த முடியாது. அதேபோல ஒப்புக்கொள்ளப்பட்ட பிணையெடுப்பு நிதிகளை வழங்க வங்கிகள் பின்னடித்தாலும்கூட, நிதியியல் அமைப்புகள் என்னவெல்லாம் வெட்டுக்களை அதனிடம் கோருகின்றனவோ, அவற்றிற்கு அது உடன்பட்டே ஆக வேண்டியுள்ளது.       

ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி மற்றும் அயர்லாந்து உட்பட நிதியுதவிகளைப் பெறும் ஏனைய போராடிவரும் யூரோ மண்டல அங்கத்துவ நாடுகளையும் அந்த முன்மொழிவு கருத்தில் கொண்டிருப்பதாக ஒரு ஜேர்மானிய அரசு ஆதாரம் குறிப்பிட்டது.  

அந்த முன்மொழிவு கிரீஸில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இன்னும் கூடுதலாக 150,000 அரசு வேலைகளை நீக்குதல், அரசுத்துறை நிறுவனங்களில் வெட்டுகள் மற்றும் மூடுதல், மற்றும் மாத குறைந்தபட்ச கூலியை 750 யூரோவிற்கு குறைத்தல் ஆகியவற்றைக் கோரி ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வந்த கோரிக்கைகளும் அதனோடு சேர்ந்திருந்தன.    

அந்த முன்மொழிவு அரசியல்ரீதியாக மிகவும் அப்பட்டமாக இருந்ததால், இறுதி தருணத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டது. இது, ஐரோப்பிய அரசாங்கங்கள் தற்போது நேரடியாக நிதியியல் மேற்தட்டின் கட்டளைக்கு செயல்படுகின்றன என்பதையும், ஜனநாயகமென்பது அர்த்தமற்று போயிருப்பதையும் அனைவருக்கும் கண்கூடாக தெரிவதை உறுதிப்படுத்தி இருக்கும்.      

ஜேர்மனியின் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகள் மீண்டுமொரு முறை சிந்திக்குமாறு பேர்லினை வலியுறுத்தினர். இத்தாலிய பிரதம மந்திரி மாரியோ மொன்டி, ஜேர்மனியின் முன்மொழிவு ஒரு "ஆழ்ந்த தந்திரம் மற்றும் வெறுப்பானது" என்று குறிப்பிட்டார். பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கூறுகையில், நேரடியான ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடு "அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது; அது ஜனநாயகரீதியிலோ அல்லது செயல்படுத்த கூடியதாகவோ இருக்காது,” என்றார்.

அப்போதிருந்து, ஜேர்மனி அதன் முன்மொழிவை  விருப்பமில்லாமல் மட்டுமே கைவிட்டது. ஜேர்மனியின் சான்ஸ்லர் ஆங்கேலா மேர்கெல் வாதிட்டார்: “கிரீஸின் விஷயம் ஒரு தனிவகைப்பட்டது… அவர்கள் அந்த வேலைதிட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது,” என்றார்.     

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் தடையற்ற சர்வாதிகாரம் ஏற்கனவே நிலவுகிறது என்பதை பேர்லின் முறைமை தெள்ளந்தெளிவாக காட்டுகிறதோ இல்லையோ, ஆனால் அந்நிலைமை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையாக உள்ளது.

கிரீஸ் மற்றும் இத்தாலியில் ஏற்கனவே தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கங்களைக் கொண்டு வருவதில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெற்றி கண்டுள்ளன. அந்த அரசாங்கங்களின் ஒட்டுமொத்த நோக்கமே வாக்காளர்களின் விருப்பத்திற்கு எதிராக நிதியியல் செல்வந்த தட்டின் கோரிக்கைகளை கடமையுணர்வோடு நடைமுறைப்படுத்துவதாகும். முந்தைய போர்த்துகீசிய அரசாங்கத்தின் வீழ்ச்சியும் கூட உலகளாவிய ஊகவணிகர்களின் நேரடியான கட்டளையின்பேரில் தான் வடிவமைக்கப்பட்டது.     

தங்களின் பொருளாதார கொள்கையை வடிவமைக்கும் தேசிய அரசாங்கங்களின் சக்தியை இன்னும் அதிகமாக சுருக்கும் விதமாக, ஒரு நிதியியல் உடன்படிக்கைக்கு தற்போது அந்த உச்சிமாநாடு ஒப்புக்கொண்டுள்ளது. சட்டரீதியாக ஒரு சமப்படுத்தப்பட்ட வரவு-செலவு கணக்கைக் கோரும் ஒரு "பொன்மயமான வரையறையைக்" கொணர, அந்த உடன்படிக்கை அதில் கையெழுத்திட்டுள்ள 25 அரசுகளை நிர்பந்திக்கிறது. சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு, பொதுத்துறை வேலைகள், ஓய்வூதியங்கள், மற்றும் மருத்துவ கவனிப்பு என அனைத்திற்கும் செலவிடப்படும் செலவுகளை தீவிரமாக வெட்டவும், பெரும் நிதிகளை வங்கிகளுக்கு வழங்கவும் கோருவதற்கு ஆளும் வர்க்கம் பின்னர் இதே விதிகளைப் பயன்படுத்தும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றின் கடன்களைத் திருப்பி செலுத்த தவறும் நாடுகள், ஐரோப்பிய நீதிமன்றத்தால் (European Court of Justice) தண்டனைக்குரிய பொருளாதார தடைகளுக்கு உள்ளாக்கப்படும்.  

ஜேர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின், போலந்து மற்றும் எஸ்தோனியா ஆகியவை ஏற்கனவே இத்தகைய சம்பப்படுத்தப்பட்ட வரவு-செலவு கணக்கு தேவைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. பிரிட்டன் மற்றம் செக் குடியரசு இரண்டும் அதில் கையெழுத்திடவில்லை. அவை இரண்டும் சிக்கன நடவடிக்கைகளுக்கான உந்துதல்களுக்கு முழுமையாக உடன்பட்ட போதினும், தந்திரோபாய அரசியல் தேவைகளை கவனத்தில் கொண்டு அவ்வாறு செய்தன.

மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வின் மீது பாரிய தாக்கத்தைக் கொண்டிருக்க கூடிய இதுபோன்ற நடவடிக்கைகளை ஒரு மக்கள் வாக்கெடுப்பிற்கு கொண்டு வர அங்கே எந்த நோக்கமும் இருக்கவில்லை. உண்மையில், துல்லியமாக எந்தவொரு தொலைநோக்கு பார்வையிலிருந்தும் அல்லது மக்களின் செல்வாக்கிலிருந்தும் முக்கிய நிதியியல் முடிவுகளை விலக்கிவைக்க இத்தகைய நடவடிக்கைகள் நோக்கம் கொண்டுள்ளன. “கடன் தடைகள் கடமைப்பாடு உடையவையும் மற்றும் அவை எப்போதும் நடைமுறையில் இருக்கும். அவற்றை ஒருபோதும் ஒரு நாடாளுமன்ற பெரும்பான்மை மூலமாக மாற்றிவிட முடியாது,” என்று மெர்க்கல் பிதற்றினார்.  

ஐரோப்பிய ஒன்றிய நடைமுறைகள் குறித்த வலதுசாரி விமர்சகர்களின் விமர்சனங்கள், தேசிய இறையாண்மையின் இழப்பு குறித்த புலம்பல்களோடு நிரம்பியிருந்தன. ஆனால் உண்மையில், ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அரசியலமைப்பிலிருக்கும் அரசாங்கங்களும் இரண்டுமே ஒட்டுமொத்தமாக நிதியியல் செல்வந்த தட்டுக்களின் உருவாக்கங்களாக உள்ளன.    

இப்போதிருக்கும் அமைப்புமுறையின்கீழ் முற்றிலுமாக தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புதிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஏற்பட்டிருக்கும் தேவையுமே இங்கிருக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

உழைக்கும் மக்களுக்காக பேசுவதைப் போல பாசாங்குகூட செய்யவோ மற்றும் ஐரோப்பா எங்கிலும் திணிக்கப்பட்டு வரும் கடுமையான சிக்கன முறைமைகளைத் தடுமாற்றமின்றி ஆதரிப்பதைக் வெளியில் காட்டிக்கொள்ளாத பெயரளவிற்கு இடது அல்லது வலது என்று கூறிக்கொள்ளும் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியும் கூட அங்கே இல்லை. ஆளும்வர்க்கத்தை ஜனநாயகரீதியாக பொறுப்பேற்பதிலிருந்து விடுவிக்கவும் மற்றும் சமூக எதிர்ப்பின் அனைத்து நேர்மையான வெளிப்பாடுகளையும் திணறடிப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் கடந்த காலக்கட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.     

அனைத்திற்கும் மேலாக, இது, வேலைநிறுத்தங்களை ஒன்று ஒடுக்கி அல்லது பயனற்ற ஒருநாள் போராட்டங்களுக்குள் அவற்றை அடக்கி, அக்கண்டம் முழுவதிலும் வெறுக்கப்பட்ட அரசாங்கங்களைப் பதவியிலிருந்து இறக்க நடத்தப்பட்ட எந்தவொரு அரசியல் போராட்டத்தையும், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி-இடது அனுதாபிகள் நிராகரித்தை சார்ந்துள்ளது

எவ்வாறிருந்த போதினும், இது எவ்வளவு தூரத்திற்கு தொடர முடியுமென்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது. உத்தியோகபூர்வமாக, ஐரோப்பாவில் 23 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலையின்றி உள்ளனர். நிஜமான புள்ளவிபரங்கள் இன்னும் அதிகமாக உள்ளன. கூலிகள் குறைக்கப்பட்டு வருகின்றன; ஓய்வூதியங்கள் கைவிடப்பட்டன; அத்தியாவசிய சமூக சேவைகள் அகற்றப்பட்டன; இவை அனைத்தும் ஒரு ஆரம்பம் மட்டுமே.

ஐரோப்பிய வங்கிகள் அவற்றின் மூலதனத்தை விட 30 மடங்கு, அதாவது மொத்தமாக ஐந்து ட்ரில்லியன் யூரோவிற்கும் மேலான, கடன்களைக் கொண்டுள்ளன. இந்த மோசடி கடன்களை ஈடுகட்ட தேவைப்படும் வெட்டுகள் அந்த கண்டத்தின் தொழிலாளர்களை நாசப்படுத்தி, அவர்களை படுமோசமான ஏழ்மையில் கொண்டு வந்து நிறுத்தும்.   

இதை ஜனநாயகத்தின் மூலமாக சரிகட்ட முடியாது, மாறாக இதற்கு சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டுமென்பதை ஆளும் வர்க்கம் நன்கு அறிந்துள்ளது. இதுதான் தற்போது செய்யப்பட்டு வரும் அரசியல் திருப்பத்தின் முக்கியத்துவமாகும்.

தொழிலாள வர்க்கம் இந்த அச்சுறுத்தலுக்கு அதன் சொந்த விடையிறுப்பைக் காட்ட வேண்டும். பெருநிறுவன மற்றும் அவற்றின் மாற்றீடுகளின் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் மற்றும் ஏனைய அனைத்து அரசாங்கங்களையும் தொழிலாளர் அரசாங்கத்தால் தூக்கியெறிவதை நோக்கமாக கொண்ட, ஒரு ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு புதிய, பரந்துபட்ட சோசலிச இயக்கம் எழ வேண்டும்.