World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Vote Socialist Equality in 2012!

2012 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்!

Statement by Jerry White, SEP candidate for US president
13 February 2012
Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதில் நான் பெருமிதம் அடைகிறேன். என்னுடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் பிலிஸ் ஷெரருடன், நான் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக, இந்த முக்கியமான தேர்தல் ஆண்டில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்வேன்.

அமெரிக்காவிற்குள்ளும், உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தினர் பெருமந்த நிலையின் இருண்டகாலத்திற்கும், 1930களிலும் 1940களிலும் இரண்டாம் உலகப் போர்க்காலத்திற்கு பின் மிகப் பெரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

கடந்த காலத்தில் முதலாளித்துவத்தின் பாரிய நிலைமுறிவு ஒரு கொடூரமான அளவிற்குத் துன்பங்கள், இறப்புக்கள் மற்றும் அழிவிற்கு வழிவகுத்தது. வெகுஜன வேலையின்மை, வறுமை, பாசிசம் மற்றும் போர் ஆகியவை மனிதகுலத்தை அழிவின் விளிம்பிற்குக் கொண்டுவந்தன. நெருக்கடி இறுதியாக முடிந்தவுடன், உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கப் போர்க்குணம் மற்றும் புரட்சிகரப் போராட்டங்கள் என்ற காட்சியால் பெரும்பீதி அடைந்த ஆளும் வர்க்கம், படிப்பினைகளை பெற்றுக்கொண்டுள்ளோம் எனவே முதலாளித்துவம் சீர்திருத்தப்படக்கூடியது, கடந்தக்கால பயங்கரங்கள் மீண்டும் ஏற்படாது எனக் கூறியது.

ஆனால் மீண்டும் முதலாளித்துவ முறையின் நெருக்கடி பெருந்திகைப்பு நிறைந்த நெருக்கடியில் உள்ளது. அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகளையும், வீடுகளையும் இழந்துள்ளனர். பல மில்லியன் மக்கள் தங்கள் ஊதியங்களில் குறைப்புக்களைக் கண்டதுடன், அடிப்படைச் சமூகப்பணிகளை அடையும் வழிவகைகளும் குறைந்துவிட்டதைக் காண்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டு, ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இளம் குடிமக்கள் ஒரு கௌரவமான கல்வி உரிமையை இழந்துவிட்டனர். கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு உடையவர்கள் பெரும் கடன்கள் என்ற சுமையை ஏற்பதுடன் வேலைகளும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பல மில்லியன் வயதான தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதியங்களை இழந்துவிட்டனர், தங்கள் சேமிப்புக்கள் தகர்க்கப்பட்டுவிட்டதால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கூட, வேலை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர வணிகர்கள் பெரிய வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதால், தங்கள் வர்த்தகத்தை மூடும் கட்டாயத்தில் உள்ளனர்.

இத்தகைய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு, இலாபங்களுக்கும் அதிகாரத்திற்கும் பேராசை கொண்டு, அதன் இராணுவச் சக்தியை பயன்படுத்துவதில் இன்னும் கூடுதலான பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. ஒரு போருக்குப்பின் மற்றொரு போர் என்று ஒரு தசாப்தம் கடந்த நிலையில், இப்பொழுது மூன்றாம் உலகப் போருக்கான அரங்கம் அமைக்கப்படுகிறது.

பேரழிவிற்குள் நுழையும் இத்தகைய வீழ்ச்சி நிறுத்தப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கிய பாதையை வளங்குகிறது. பிலிஸ் ஷெரரும் நானும் எங்கள் பிரச்சாரத்தை சில முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் அடித்தளமாக கொண்டுள்ளோம். .

எதிர்வருங்காலத்திற்கான திறவுகோல் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தில்தான் தங்கியுள்ளது என்பதை நாங்கள் முதலில் வலியுறுத்துகிறோம். ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் பாதுகாக்கப்பட முடியாது. ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாள வர்க்கத்தினர் உலகம் முழுவதும் இலாபங்களுக்காக அலைந்து திரியும் பன்னாட்டு பெருநிறுவனங்களினால் நசுக்கப்படுகின்றனர். நிதிய மற்றும் தொழில்துறை பெருநிறுவனக் கூட்டுத் தொகுப்புக்கள் ஊதியங்களைக் குறைத்தல், ஒரு கௌரவமான வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் அடிப்படையான சமூக நலன்களை அகற்றுதல் ஆகியவற்றைக் கோருகின்றன. ஐரோப்பாவில், சர்வதேச வங்கிகள் கிரேக்கத்தை, அம்மக்களின் வாழ்க்கைத் தரங்களை 50% குறைத்த வகையில், ஒரு மூன்றாம் உலக நாடாக மாற்றிவருகின்றன.

தேசியம், இனவழி, மதம் அல்லது மொழிப் பின்னணி எப்படி இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரே நலன்களைத்தான் கொண்டுள்ளனர். எனவே தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச மூலோபாயம் தேவைப்படுகிறது. மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தின் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள தொழிலாளர்கள், முதலாளித்துவத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களின் கூட்டணிகள் ஆவர்.

இரண்டாவதாக, நாம் சமூக சமத்துவத்திற்காக போராடுகிறோம். இதுதான் சோசலிசம் மற்றும் ஒரு மனிதத்தன்மையான சமூகத்திற்கு அஸ்திவாரம் ஆகும். கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக தேக்க நிலையில் இருந்தபின், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் 2008 வோல்ஸ்ட்ரீட் சரிவிற்குப் பின் சரிந்துவிட்டன. ஆனால் சமூகத்தில் ஒரு மிகச் சிறிய, செல்வச்செழிப்பான 5 சதவிகித பிரிவு அதன் செல்வக்கொழிப்பு வானளாவ உயர்வதைக் காண்கிறது. ஒரு வெகுஜன சமூகத்தில் பில்லியன் கணக்கான மக்களின் கௌரவமான வாழ்க்கைத்தரங்களை உத்தரவாதம் செய்வதற்குத் தேவையான பகுத்தறிவு சார்ந்த நிதிய ஆதாரங்களின் ஒதுக்கீடு தேவை என்ற நிலையில், மிகப் பெரிய செல்வக் கொழிப்புடையவர்களின் ஆண்டு ஊதியங்கள், மேலதிககொடுப்பனவுகள் ஆகியவற்றிற்காக நூற்றுக்கணக்கான பில்லியன்களை ஒவ்வொரு ஆண்டும் அள்ளிக்கொட்டுவது சிறிதும் நியாயப்படுத்தப்பட முடியாததாகும்.

கௌரவமான ஊதியமளிக்கும் வேலைகள், தரமான கல்வி, இயலக்கூடிய வீடுகள், அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, கௌரவமான ஓய்வு பெற்ற வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அனுபவிக்கும் வாயப்பு ஆகியவை ஒன்றும் சலுகைகள் அல்ல என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. இவை சிறிதும் மாற்றிவிடமுடியாத சமூக உரிமைகள், வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சியை தேடுதல் என்னும் தற்கால முன்தேவைகளாக இருக்கின்றன. தொழிலாளர்கள் இந்த உரிமைகளுக்காக கெஞ்சத்தேவையில்லை, இவற்றிற்காகப் போராட வேண்டும்.

முதலாளித்துவம் இந்த நவீனகால வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இயலாதது என்பதை நிரூபித்துவிட்டது. அது தோல்வியடைந்துவிட்டது, அதற்குப் பதிலாக இன்னும் மேம்பட்ட ஒரு பொருளாதார முறையான சோசலிசத்தால் இடம்பெயர்க்கப்படவேண்டும். தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் பெருநிறுவன இலாபங்களைவிட முன்னுரிமையுடையவையாக இருக்கவேண்டும்.

மூன்றாவதாக சோசலிச சமத்துவக் கட்சி ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றை எதிர்க்கிறது; இவை ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில் வழிநடத்தப்படுகின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவில் போர்களைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை இப்பொழுது சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவத் தலையீட்டிற்கான போர் முரசுகளை முழங்குகிறது. இது ரஷ்யா, சீனாவுடனான போர் என்ற ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளது. தங்கள் சக்தியையும் இலாபங்களையும் விரிவாக்குவதற்கு வங்கிகளும் பெருநிறுவனங்களும் எதையும் செய்யும். பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற போலிக்காரணத்தை காட்டி, உலகம் பெருகிய முறையில் அச்சுறுத்தப்படுகிறது. உள்நாட்டில் ஆட்கொணர்வுமுறை போன்ற அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்பு நெறிகள் மிதிக்கப்படுகின்றன.

நான்காவதாக, தொழிலாள வர்க்கம் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளுக்கு அரசியலளவில் அடிபணியசெய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இக்கட்சிகள் பெருவணிகத்தினால் விலைகொடுத்து வாங்கப்பட்டுவிட்ட கருவிகள் ஆகும். ஜனநாயக கட்சி ஒருவகை மக்கள் கட்சி என்று கூறப்படுவது முற்றிலும் தவறாகும். இரு கட்சிகளும் ஒன்றின்மீது ஒன்று அவதூறுகளை வீசுகின்றபோதிலும், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் அற்பமானவை, கவனத்திற்கெடுக்கமுடியாதவை ஆகும்.

2008ம் ஆண்டு மில்லியன் கணக்கான மக்கள் புஷ் மற்றும் குடியரசுக் கட்சியின் இராணுவவாத, பெருநிறுவனச்சார்பு கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் ஒபாமாவிற்கு வாக்களித்தனர். ஜனாதிபதி ஒபாமாவோ இந்த வலதுசாரிக் கொள்கைகளை தொடர்ந்துள்ளது மட்டுமின்றி, விரிவாக்கமும் செய்துள்ளார்வங்கிகளுக்கு பிணை எடுப்புக் கொடுத்தல், கார்த்தயாரிப்புத் துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் இன்னும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவினரையும் தாக்குதல், சமூகநலத் திட்டங்களை வெட்டுவதில் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து செயல்படுதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் எங்கு அச்சுறுத்தப்பட்டாலும் உலகில் அங்கு போர் செய்யும் உரிமையை அறிவித்தல் ஆகியவை இதில் அடங்கும். ஒபாமாவின் ஆட்சிக்கால ஆண்டுகள் பெருநிறுவன இருகட்சி முறைமூலம் எத்தகைய மாற்றமும் வருவதற்கில்லை என்ற உண்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.

இந்த அரசியல் முறையினால் புறக்கணிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் ஒரு குரலைக் கொடுக்கும். மது பிரச்சாரம் ஒரு மரபார்ந்த வகைப்பட்டதாக இருக்காது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி மற்றும் சமூகத்தை புரட்சிகர மாற்றுவதை நடைமுறைப்படுத்த அவர்களை அரசியல்ரீதியாக ஒழுங்கமைப்பதை நோக்கமாக கொண்டது. வங்கிகள், பெரிய தொழில்கள், முக்கிய ஆதாரங்கள் ஆகியற்றிற்கு பதிலாக பொது உடைமை வரவேண்டும். சந்தையின் அராஜகம், மக்களின் தேவைகளுக்கேற்ப முடக்கப்பட்டு, பகுத்தறிவார்ந்த பொருளாதாரத் திட்டத்தின் துணை கொண்டு, அது ஜனநாயகமுறை கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும்.

இது நடைமுறைக்கு சரிவராது என சிலர் கூறலாம். பலருடைய இழப்பில் ஒரு சிலரின் செல்வத்தை எப்பொழுதும் நிலைத்திருக்கச் செய்யும் ஒரு முறையைத் தக்கவைப்பதைவிட வேறு எது கூடுதலான நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்க முடியும்? தங்கள் வேலைகளைக் காத்துக் கொள்ள 50% ஊதியக்குறைப்பை தொழிலாளர்கள் ஏற்க வேண்டும் என்று கூறுவது நடைமுறைக்கு ஏற்றதா அல்லது முதியவர்களை மருத்துவப் பாதுகாப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவது நடைமுறைக்கு ஏற்றதா அல்லது இளைஞர்களிடம் அவர்கள் கல்விபயிலாமல் இருக்க வேண்டும் என்று கூறுவது நடைமுறைக்கு ஏற்றதா?

முதலாளித்துவமுறை சமத்துவமின்மையை தளமாகக் கொண்டது. அது இலாபம் மற்றும் தனியார் செல்வத்தை சமூக நலன்களுக்கும் மேலாக வைத்துள்ளது.

இந்த நாடு எல்லா மக்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்னர் என்னும் கோட்பாட்டில் நிறுவப்பட்டது. அந்நிலைப்பாடு 150 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் புதுப்பிக்கப்பட்டது. அப்போர் மக்களுடைய, மக்களால், மக்களுக்காக உள்ள அரசாங்கம் புவியில் இருந்து அழிந்துவிடாது என்ற உறுதிமொழியை அளித்தது. ஆனால் நாம் இன்று எதைக் கொண்டுள்ளோம்? ஒரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டின் கீழுள்ள மில்லியனர்கள், பில்லியனர்களின் தன்னலச் சிறு ஆட்சிக்குழு; செல்வந்தர்களுக்காக, செல்வந்தர்களின், செல்வந்தர்களால் நடாத்தப்படும் அரசாங்கத்தைத்தான்!

நாடு முழுவதும் தொழிலாளர்கள் இந்த அடிப்படை மாற்றத்திற்கான தேவையை அறிந்துள்ளனர். பழைய அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தங்களுக்கு எதையும் கொடுக்காது என்ற உண்மையை அவர்கள் விழித்து எழுந்து அறித்துள்ளனர். நீண்டகாலமாக முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள செய்தி ஊடகங்களினால் சோசலிசத்தைக் கண்டு அச்சப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றனர். ஆனால் சோசலிசம் என்றால் உண்மையான பொருள் என்ன என்பதை தொழிலாள வர்க்கம் அறிந்துகொண்டுவிட்டால், அது ஒன்றுதான் வருங்காலத்திற்காகப் போராட ஒரே வழி என்பதை அவர்கள் உணர்வர்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சோசலிச இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். எங்கள் வேலைத்திட்டத்துடன் நீங்கள் உடன்படுவீர்களாயின், எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருவது மட்டுமல்லாமல், அதில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இப்பிரச்சாரம் உங்களுடைய போராட்டம் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் 2012 தேர்தல் குழு ஒன்றை உங்கள் பணியிடத்தில், பள்ளியில், அல்லது வசிக்கும் பகுதியில் அமைத்து நம் தேர்தல் தகவல்களை வினியோகியுங்கள், பிரச்சாரத்திற்கு ஆதரவைப் பெருக்குங்கள். எங்கள் தேர்தல் நிதிக்கு நன்கொடை அளியுங்கள்.

எதிர்வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் பிலிஸ் ஷெரரும், நானும் இயன்றளவு மாநிலங்களில் வாக்குச்சீட்டில் பதிவைப் பெற முயல்வோம். பல மாநிலங்களில் ஜனநாயகமற்ற சட்டங்கள் பல மில்லியன் டாலர்களை செலவழிக்க முடியாதவர்கள் வாக்குப் பதிவிற்கு அணுகமுடியாத நிலையில் இருப்பவற்றில் நாங்கள் எழுத்து மூலமான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வோம். உங்கள் மாநிலத்தில் எழுத்துமூலப் பிரச்சாரத்திற்கான மிகத் திறைமையான செயற்பாடுகளை செய்வதின் மூலம் எங்களை வாக்குச்சீட்டில் பதிந்துகொள்ள உதவுங்கள்.

2011ம் ஆண்டு எகிப்தில் இருந்து விஸ்கான்சின் வரை சக்திவாய்ந்த சமூக இயக்கங்கள் வெளிப்பட்டதை குறித்துநிற்கிறது. இதில் உலகம்முழுவதும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு எதிரான எதிர்ப்புக்களும் அடங்கியிருந்தன. இது ஒரு ஆரம்பம்தான். எங்கள் பிரச்சாரத்திற்கூடாக சோசலிச சமத்துவக் கட்சியின், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூகப் போராட்டங்களை ஐக்கியப்படுத்த போராடுவதுடன், சமத்துவம், சமாதானம், சோசலிசம் ஆகியவற்றிற்காக போராடும் அரசியல் வேலைத்திட்டத்தையும் வழங்குவோம்.