World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Protests erupt as Sri Lankan government enforces new IMF austerity measures

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்ற நிலையில் போராட்டங்கள் வெடிக்கின்றன

By Saman Gunadasa
15 February 2012
Back to screen version

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கோரும் புதிய சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்ற நிலையில் தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை வளர்ச்சியடைகின்றது. சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட புதிய எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக இரத்துச் செய்யுமாறு அல்லது நட்டஈடு வழங்குமாறு கோரி நேற்று இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான வறிய மீனவர்களும் மீனவத் தொழிலாளர்களும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாட்டின் வட-மேல் பிரதேசத்திலும் தெற்கின் சில பகுதிகளிலும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மீனவர்கள் வீதிக்கிறங்கினர். சீற்றமடைந்த மீனவர்கள் தமது குடும்பங்களுடன் வீதிக்கிறங்கி சிலாபம், நீர்கொழும்பு, மாரவில, கல்பிடிய மற்றும் வென்னப்புவ போன்ற வட-மேல் பிரதேச நகரங்களின் பிரதான வீதிகளை அடைத்தனர்.

ஆர்ப்பாட்டங்களை கலைப்பதற்காக நிலைகொண்டிருந்த பொலிசாருடன் மீனவர்கள் மோதிக்கொண்டனர். அரசாங்கம் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்காக இராணுவத்தை அழைத்தது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால இனவாத யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை அரசாங்கம் தொழிலாளர்களையும் வறியவர்களையும் நசுக்குவதற்காக கையிலெடுக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிவாரணம் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள், பெருமளவில் சிறிய உரிமையாளர்களும் திங்களன்று வேலை நிறுத்தம் செய்தனர்.

2009ம் ஆண்டு உத்தரவாதமளிக்கப்பட்ட 2.6 பில்லியன் டொலர் கடனின் கடைசிப் பகுதியான 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்காக, அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கை ஒன்றில் அரசாங்கம் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய ஒத்துழைப்பு அமைச்சர் சரத் அமுணுகம கடந்த வெள்ளிக் கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் முன்னர் வாக்குறுதியளித்த சிக்கன நடவடிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்தவில்லை என விமர்சித்த சர்வதேச நாணய நிதியம், இந்த தொகையை கடந்த ஜூலையில் இடை நிறுத்தியது.

இந்த புதிய உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்ன என்பதை அமுணுகம விளக்கவில்லை. எவ்வாறெனினும், சர்வதேச நாணய நிதியம், அரசாங்க செலவு இலக்குகளை கட்டுப்படுத்துமாறும், ரூபாயை மதிப்பிறக்கம் செய்யுமாறும், வட்டியை அதிகரிக்குமாறும் எரிபொருள் மற்றும் மின்சாரத்துக்கு உட்பட மானியங்களை வெட்டிக் குறைக்குமாறும் கோரியது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது தெளிவு:

* பெப்பிரவரி 3 முதல் மத்திய வங்கி ரூபாயை மதிப்பிறக்கம் செய்ய அனுமதித்தது. நேற்றளவில், ரூபாய் கிட்டத்தட்ட 6 வீதத்தால் மதிப்பிறங்கியதோடு மேலும் மதிப்பிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 113 ரூபாவில் இருந்து 120 ரூபா வரை அதிகரித்தது. இந்த மதிப்பிறக்கம், எல்லா இறக்குமதிப் பொருட்களதும் விலைகளை அதிகரிக்கச் செய்வதோடு, ஏனைய பொருட்களதும் சேவைகளதும் கட்டணத்தை அதிகரிக்கச் செய்யும்.

* சனிக்கிழமை, அரசாங்கம் பெற்றோல் விலையை 8 வீதத்தாலும் டீசல் விலையை 37 வீதத்தாலும் மற்றும் மண்ணெண்ணெய் விலையை 50 வீதத்தாலும் கூட்டியது. இது பெருந்தோட்டங்கள், சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட குறிப்பாக குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சாதாரண மக்களதும் வாழ்க்கைத் தரத்துக்கு ஒரு பெரும் அடியாகும்.

* திங்களன்று அரசாங்கம் தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளுக்கு கட்டணத்தை 20 மற்றும் 28 வீதத்துக்கு இடையில் அதிகரிப்பதற்கு அனுமதியளித்து, தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது மேலும் சுமைகளைத் திணித்தது. போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்தளவில் வைத்திருப்பதற்காக பஸ் உரிமையாளர்களுக்கு மானியங்கள் வழங்க அரசாங்கம் மறுத்துவிட்டது.

* நேற்று, மின்சார சபை 20 முதல் 40 வீதம் வரை கட்டண அதிகரிப்பை அறிவித்தது. இது குறிப்பாக வறிய நுகர்வோரை பெருமளவில் பாதிப்பதோடு சகல வழிகளிலும் விலைகளை அதிகரிக்கச் செய்யும்.

மீனவர்கள் டீசல் மற்றும் மண்ணெண்னையிலேயே தங்கியிருக்கின்றனர். தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தின் அழைப்பாளர் ஹேர்மன் குமார, 3,000 ரூபாயாக இருந்த ஆன்றாட எரிபொருள் செலவு, இந்த விலை அதிகரிப்பின் பின்னர் 4,500 ரூபா வரை அதிகரித்துவிட்டது என ஊடகங்களிடம் கூறினார்.

தொழிலாளர் மத்தியில் ஆழமடைந்துவரும் சீற்றத்தை தணிப்பதன் பேரில், தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரி பிரச்சாரத்தை முன்னெடுப்பதாக கூறி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மனோ கணேசன், விரைவில் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அனைத்து இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் சுமதிபால மானவடு, சம்பள உயர்வுக்காக மார்ச் மாத முடிவு வரை காத்திருப்பதாகவும் பின்னர் வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். சகல தொழிற்சங்கங்களும் தமது முன்னைய சம்பளப் போராட்டங்களை காட்டிக்கொடுத்து, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு வழிவகுத்துள்ளன.

பெப்பிரவரி 4 சுதந்திரத் தின உரையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தெரிவித்ததாவது: உலகின் பொருளாதார நெருக்கடியும் எமது நாட்டைப் பாதித்துள்ளது. யதார்த்தத்தை கவனத்தில் எடுப்பது முக்கியமானதாகும். இவை அனைத்தினதும் எதிரில், நாம் உலகுக்கு எமது பலத்தையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்த தயாராக வேண்டும்.

அவர் தேசப்பற்று வாதத்துக்கு பிற்போக்குத்தனமாக அழைப்புவிடுத்ததன் பின்னால், ஆழமடைந்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடி, அதே போல், 2009 மே மாதம் முடிவுக்கு வந்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் செலவுகளால் ஏற்பட்ட பிரமாண்டமான கடன்களதும் சுமைகளை திணிப்பதற்கு அவசியப்படும் எத்தகைய நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கும் என்பதையே இராஜபக்ஷ அர்த்தப்படுத்தினார்.

எஞ்சியுள்ள கடன் பகுதியைக் கொடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியக் குழுவின் தலைவர் பிரைன் எயிட்கென் அரசாங்கத்துக்கு தெரிவித்த மறுநாளே இராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

குறிப்பாக தற்போதைய நிச்சயமற்ற பூகோள சூழ்நிலையைப் பொறுத்தளவில், ஒரு ஆரோக்கியமான பேரின பொருளாதார (macroeconomic) தளத்தில் பொருளாதாரத்தை வைப்பதற்குத் தேவையான ஒரு தீர்க்கமான கொள்கைப் பிரதிபலிப்பாக [அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில்] ஒரு பரந்த உடன்படிக்கை ஒன்று உள்ளது, என எயிட்கென் அறிவித்தார்.

2012ம் ஆண்டில் வரவு செலவுப் பற்றாக்குறை இலக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6.2 ஆக இருக்கும் என எயிட்கென் தெரிவித்தார். 2011ம் ஆண்டின் 6.8 வீத இலக்கில் இருந்து அரசாங்கம் விலகிச் சென்றதால், அது கிட்டத்தட்ட 7.2 வீதமாக அதிகரித்தது. கேட்கப்பட்டுள்ள 1 வீத வெட்டு, இந்த ஆண்டு நலன்புரி சேவைகளை மேலும் அரித்தெடுக்கும். அரசாங்கம் சமுர்தி என்றழைக்கப்படும் அற்ப மாதாந்த நலன்புரித் தொகை கொடுப்பனவை ஏற்கனவே மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

ரூபாயின் பெறுமதியை பாதுகாப்பதையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதிய குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த ஜூலையில் இருந்து, மத்திய வங்கி ரூபாயைப் பாதுகாப்பதற்காக சுமார் 2.7 பில்லியன் பெருமதியான அமெரிக்க டொலர்களை விற்றுத் தள்ளியதால், அந்நிய செலாவனி நெருக்கடி நிலைமை உருவாக்கப்பட்டது.

2011ல் இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையானது, 2010ல் அதே காலப் பகுதியில் காணப்பட்ட 4.2 பில்லியன் டொலருடன் ஒப்பிடும் போது, கடந்த நவம்பர் வரை, 8.8 பில்லியன் டொலர்கள் வரை 111 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மாத முடிவில், நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு, ஜூலையில் 8.2 பில்லியன் டொலரில் இருந்து 6.2 பில்லியன் டொலர்வரை 36 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதத்தையும் அதிகரித்து கடனை இறுக்கியுள்ளது. அது வர்த்தக வங்கிகளின் கடன் வளர்ச்சி மீது 18 வீத வரையறையை விதித்துள்ளதோடு, மீள்கொள்வனவு மற்றும் மீள் விற்பனை வீதத்தை 50 அடிப்படை புள்ளிகளால், முறையே ஒவ்வொன்றையும் 7.5 வீதம் மற்றும் 9 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த பொருளாதார ஸ்திரமின்மை கொழும்பு பங்குச் சந்தை குமிழியை சிதறடித்து விட்டது. ஆசியாவில் மிகச் சிறப்பாக இயங்கும் இரண்டாவது பங்குச் சந்தை என ஒருமுறை பாராட்டப்பட்ட இலங்கை பங்குச் சந்தை, கடந்த வாரம் மிகவும் மோசமாக இயங்கும் பங்குச் சந்தையாக அறிவிக்கப்பட்டது. இதுவரை இந்த ஆண்டு எல்லா சந்தை விலைச் சுட்டெண்களும் 17.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இரத்தக்களரி போன்ற சொற் பதங்கள் இலங்கை ஊடகங்களில் பொதுவானவையாகி வருகின்றன. ஏழாவது நாளாகவும் சந்தையில் இரத்தக்களரி தொடர்கிறது, என வெள்ளிக் கிழமை ஐலண்ட் பத்திரிகை எழுதியிருந்தது.

பூகோள நெருக்கடியின் தாக்கத்தால் ஊசலாடிக்கொண்டிருக்கும் இராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச நிதிய மூலதனத்தின் கட்டளைகளை திணிக்க ஈவிரக்கமின்றி செயற்படும். கடந்த சில நாட்களுக்கு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள், எதிர்வரவுள்ள கொடூரமான வழிமுறைகளை பற்றிய எச்சரிக்கையாகும். அது சமூக வெடிப்புகள் மற்றும் பெரும் தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கும் களம் அமைக்கும்.