World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German President Wulff resigns

ஜேர்மன் ஜனாதிபதி வுல்ப் இராஜிநாமா செய்கிறார்

By Peter Schwarz 
18 February 2012
Back to screen version

ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியான் வுல்ப் வெள்ளியன்று தன் இராஜிநாமாவை சமர்ப்பித்தார்.  தான் பரந்துபட்ட மக்களின் நம்பிக்கையை முற்றிலும் கொண்டிருக்கவில்லை என்று கூறிய அவர், அதற்கு மாபெரும் தேசிய, சர்வதேச சவால்களுக்கு தன்னை இன்னும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியிருந்ததாக கூறினார்.

1949ல் ஜேர்மனியக் கூட்டாட்சிக் கூடியரசு நிறுவப்பட்டதில் இருந்து வுல்ப் பத்தாவது ஜனாதிபதிதான். ஆனால் அங்கேலா மேர்க்கல் சான்ஸ்லராக இருக்கையில் இராஜிநாமா செய்யும் இரண்டாவது ஜனாதிபதி ஆவார். முதல் எட்டு கூட்டாட்சி ஜனாதிபதிகளும் ஒருதரம் அல்லது இரண்டுதரம் தமது ஐந்தாண்டு முழுப்பதவிக்காலத்தையும் முடித்திருந்தனர்.

வுல்பிற்கு முன் பதவியில் இருந்த ஒரு நிதிய அதிகாரியாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்த கோர்ஸ்ட் ஹோலர் மே 2010ல் தன்னுடைய இரண்டாம் வரைகாலம் தொடங்கியவுடன் எதிர்பாராமல் மே மாதம் 2010ல் இராஜிநாமா செய்தார். அப்பொழுது அவர் தவறாக மேற்கோளிடப்பட்டுவிட்டதாகவும், வெளிநாடுகளில் ஜேர்மனிய இராணுவத்தின் பிரசன்னத்தை பற்றித் தான் கூறிய கருத்தை செய்தி ஊடகம் மோசமாக கையாண்டது என்றும் கூறினார்.

அந்த நேரத்தில் லோயர் சாக்சோனி மாநிலத்தின் பிரதமராகவும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர், நேரடியாக மேர்க்கேலினால் ஹோலருக்குப் பின் பதவிக்கு வருவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD), பசுமைவாதிகளும் ஒரு போட்டி வேட்பாளராக நீண்டகாலமாக ஸ்டாசி ஆவண காப்பகத்தின் தலைவராக இருந்தவரும், கிழக்கு ஜேர்மனி மக்கள் உரிமைகள் செயலர் எனக் காட்டிக் கொள்ளுபவராமான ஜோகாயிம் கவுக் -Joachim Gauck- இனை நிறுத்தின. கவுக் பழைமைவாத மற்றும் வலதுசாரி சக்திகளிடையேயும் கூட ஆதரவைப் பெற்றார்.

இப்பொழுது, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக, ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் என்ற ஏராளமான குற்றச்சாட்டுக்களுக்கு இடையே வுல்வ்  இராஜிநாமா செய்துள்ளார்.

வுல்பின் இராஜிநாமாவிற்கு உடனடித் தூண்டுதல் ஹனோவர் நகரத்தின் அரசாங்க வழக்குதொடுனரால் ஜேர்மன் பாராளுமன்றத்திடம் நாட்டின் தலைவருக்கு மரபார்ந்த முறையில் கொடுக்கப்படும் சட்டபாதுகாப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரியதாகும். அரசாங்க வழக்குத்தொடுனர், புதிய ஆவணங்களைப் பரந்த முறையில் ஆய்வு செய்ததிலும், அதிக செய்தி ஊடகத் தகவல்கள் மதிப்பீடு செய்யப்பட்டதிலும் தான் வுல்ப் நலன்களை ஏற்றுக்கொண்டுள்ளார் அல்லது சலுகைகளை வழங்கியுள்ளார் எனச் சந்தேகிக்க இடம் உண்டு என்று அறிவித்திருந்தார்.

லோவர் சாக்சோனியின் பிரதமராக இருக்கையில் தவறாக நடந்து கொண்டதாக வந்த குற்றச்சாட்டுக்கள் எழுந்து, இடைவிடாமல் அப்பிரச்சாரம் நடத்தப்பட்டதற்குப்பின் இப்படி அரசாங்க வக்கீலின் அலுவலகம் அறிவித்துள்ளது, கடந்த டிசம்பர் 13ல் Bild செய்தித்தாள் வுல்ப் தன் வீட்டை ஒரு நண்பர் மற்றும் வணிகரிடம் இருந்து தனிப்பட்ட கடன் பெற்று வாங்கினார் என்றும் அதன்பின் மாநிலப் பாராளுமன்றத்தின் குழு ஒன்றிடம் இக்கடன் பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் எழுதியுள்ளது. அப்பொழுது முதல் வுல்பும் அவருடைய மனைவியும் ஜேர்மனியில் செய்திதலைப்புக்களில் ஆதிக்கம்செலுத்தினர்.

தவறுகள் செய்துள்ளதாக வுல்ப் ஒப்புக் கொண்டார்; ஆனால் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றார். தன் இராஜிநாமா அறிக்கையில் அவர் நிலுவையில் இருக்கும் சட்ட தெளிவுபடுத்தல் முற்றாக தன்னை குற்றமற்றவராக காட்டுவதில் முடிவடையும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். ஆனால் ஹனோவரின் அரசாங்க வழக்குத்தொடுனர் கூட்டாட்சிக் குடியரசின் அரசியலில் ஒரு தனித்தன்மையான நிகழ்வான உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியை விசாரிக்கும் முடிவை எடுத்தவுடன் வுல்பிற்கான ஆதரவு அவருடைய அரசியல் முகாமிலேயே கரைந்துவிட்டது, அவர் பதவியில் தொடர முடியாமல் போய்விட்டது.

வுல்பிற்கு எதிரான அனைத்து நிரூபிக்கப்பட்ட மற்றும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை ஒன்றாகத் திரட்டுகையில், செல்வம் படைத்த வணிகர்களுடன் நெருக்கமான, சில நேரங்களில் பொருத்தமற்ற உறவுகளைக்கொண்டும், பலமுறை அவர்களிடம் இருந்து ஆதாயம் பெற்ற ஒரு அரசியல்வாதியின் சித்திரத்தை அவை அளிக்கின்றன. வுல்ப் குடும்பம் மில்லியனர் நண்பர்கள் வீடுகளில் பல விடுமுறைகளைக் கழித்துள்ளது, மலிவு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளது, உயர்ந்த ஓய்வுவிடுதிகளில் தங்கியுள்ளது, இன்னும் பல நன்மைகளை அனுபவித்துள்ளது.

குற்றங்களில் அளவு மிகவும் குறைவுதான். திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட் குரோனவோல்ட் 2007ம் ஆண்டு சில்ட் தீவில் ஜனாதிபதி தம்பதியினருடன்  சிறிதுகாலம் இரண்டு ஓய்வுவிடுதிகளில் தங்கியதற்கு செலவழித்த பணம் பற்றி அரசாங்க வழக்குதொடுனரின் விசாரணை கவனம் செலுத்துகிறது. இதில் தொடர்புடைய பணமே 1,000€ தான்.

குரோனவோல்டுக்கு சொந்தமான திரைப்பட நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னதாக லோயர் சாக்சனி மாநிலத்தில் இருந்து 4 மில்லியன் யூரோக்களுக்கும் மேற்பட்ட கடன் உத்தரவாதங்களைப் பெற்றது. செய்தி ஊடகத்தின்படி அரசாங்க வழக்குத்தொடுனர் இதனால் வுல்ப் சில இலஞ்சங்களைப் பெற்றார் என்ற முடிவிற்கு வந்தார் எனத் தெரிகிறது. ஆனால் குரோனவோல்ட் முன்பதிவுதான் செய்திருந்தார். ஓய்வுவிடுதி அறைக்குக் கொடுக்கப்பட்ட பணம் முன்பணம்தான், தான் பின்னர் அதை ரொக்கமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக வுல்வ் தெரிவிக்கிறார்.

வுல்பிற்கும் செல்வாக்குப்படைத்த முதலாளிகளுக்கும் இடையே உள்ள உறவு அகௌரவமானது; ஆனால் ஜேர்மனிய அரசியலில் அசாதாரணமானது அல்ல. மாறாக முற்றிலும் எதிர்மாறானதாகும். அரசியல், வணிக வட்டங்களுக்கு இடையே நெருக்கமான, இரகசியமான உறவு (தொழிற்சங்கங்கள் உட்பட) என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மனிய மாதிரிக்கான ஒரு அடையாளமாகும். போருக்குப் பின் முதல் சான்ஸ்லராக இருந்த கொன்ராட் அடிநோருக்கும் (CDU) கொலோன் நகரவங்கியாளர் ரொபேர்ட் ஃபெயர்ட்மெங்கஸ் இற்கும் இடையே இருந்த நெருக்கமான உறவு மிகப் பெரிய முறையில் அறியப்பட்டு இருந்தது. அவ்வகையில்தான் வங்கியாளர் ஹேர்மான் ஜோசேவ் அப்ஸ் (Deutsche Bank) மற்றும் தொழில்துறையாளர் ஹென்ஸ் மெர்க்ல (Bosch) ஆகியோர் கொண்டிருந்த பங்கும் இருந்தது. அவர்கள் திரைக்குப்பின் பாரிய அரசியல் செல்வாக்குகளைக் கொண்டிருந்தனர்.

அங்கேலா மேர்க்கேல் Deutsche Bank  உடைய தலைமை நிர்வாகி ஜோசப் அக்கர்மன் மற்றும் IG Metall தொழிற்சங்கத் தலைவர் பெர்த்தோல்ட் ஹ்யூபருக்கும் சான்ஸ்லர் அலுவலகத்தில் பிறந்தநாள் விருந்துகளை நடத்தினார். ஆனால் செய்தி ஊடகத்தில் இருந்து இது பற்றிய எதிர்ப்புக்கள் ஏதும் வரவில்லை. பல ஆண்டுகள் லோயர் சாக்சனியின் பிரதமராகவும் இருந்தவரும் அவருக்கு முன் பதவியில் இருந்த ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD), எந்த அரசியல், சட்டத் தொல்லைகளையும் எதிர்கொள்ளாமல் வுல்ப் உறவுகள் கொண்டிருந்த அதே வணிக வட்டங்களுடன் வசதிவாய்ந்த உறவுகளைக் கொண்டிருந்தார்.  

1998ல் வுல்பின் புரவலர்களில் ஒருவரும் ஒரு நிதிய முதலீட்டாளர் கார்ஸ்டன் மெஸ்மேயர் ஷ்ரோடரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 650,000 ஜேர்மனிய மார்க்குகளை முதலீடு செய்தார். 2005ல் ஷ்ரோடர் பதவியில் இருந்த ஓய்வு பெற்றபோது, மெஸ்மேயர்  அவருக்கு நினைவுக்குறிப்புக்கள் எழுதுவதற்கு 1மில்லியன் யூரோக்கள் முன்பணம் கொடுத்தார். சான்ஸ்லர் ஷ்ரோடர் EnBW எரியசக்தி குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி உர்ஸ் கிளாஸன் உடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். அப்பொழுது கிளாஸன் விசைத்துறையில் உயர்மட்ட நிர்வாகிகளில் ஒருவராவார். EnBW பின்னர் ஷ்ரோடர் அவரது அரசில் வாழ்வை இராஜிநாமா செய்தபின் மிக அதிக ஊதியம் கொடுத்து செல்வாக்குத் திரட்டுபவராக நியமித்தது.

ஆனால் அதே போன்ற உறவுகள் வுல்பிற்குத் தீமை கொடுத்துள்ளன என்பதை உறுதியுடன் தீர்மானிக்க இயலாது. அநேகமாக ஆளும் உயரடுக்கு தமக்குள்ளே சகதிவீசிக்கொள்வதற்குப் பின்னே உள்ள உண்மையான காரணங்கள் எப்பொழுதாவது வெளிவருவதுடன், அவ்வாறு வெளிவந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான்.

 பல ஆண்டுகள் வுல்பிற்கு ஆதரவு கொடுத்து வந்த Bild அவருக்கு எதிராக உள்ளதற்கு ஒரு நோக்கம் ஜேர்மனிய சமூகத்தில் முஸ்லிம் குடியேறியவர்கள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அடிக்கடி வுல்ப் அறிக்கைகள் விடுவதாக இருக்கலாம்.

ஜேர்மனிய மறு இணைப்பின் 20வது ஆண்டு நிறைவின்போது கிறிஸ்துவம், யூதமதம் ஆகியவற்றுடன் இஸ்லாமும் ஜேர்மனியில் முற்றிலும் ஒருங்கிணைந்த மதம் என்று அறிவித்தார். இது அவரை வலதுசாரி மற்றும் பழைமைவாத வட்டாரங்களுடன் மோதலுக்கு கொண்டுவந்தது. நேற்றைய சுருக்கமான இராஜிநாமா உரையில் வுல்ப் மீண்டும் ஜனாதிபதி என்னும் முறையில் அவருடைய மனப்பூர்வமான விருப்பம் இங்கு வசிக்கும் மற்றும் ஜேர்மனியச் சமூகத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் அனைவரும் தங்கள் வேர்கள் எப்படி இருந்தாலும் படித்து, பயிற்சிபெற்று மற்றும் வேலைகளை செய்ய வேண்டும் என்றார்.

ஸ்பிரிங்கர் குழுவின் ஒரு பகுதியான வலதுசாரிப் பத்திரிகை Bild, முஸ்லிம் குடியேறுவோர் ஜேர்மனிக்கு ஒரு அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கின்றனர் என்று கூறும் முக்கிய சமூக ஜனநாயகவாதியான திலோ சாரஜினின் இனவெறிக் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது.

வுல்பிற்கு எதிரான பிரச்சாரத்தில் இன்னும் முக்கிய செய்தித்தாட்களான Süddeutsche Zeitung  மற்றும் பொதுத் தொலைக்காட்சி நிறுவனங்கள் என்று சாரஜினுக்கு ஆதரவைக் கொண்டிராதவையும் சேர்ந்து கொண்டன.

வுல்பிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு மற்றொரு உந்துதல் சமூகப் பொருளாதாரக் கொந்தளிப்புப் பெருகியுள்ளதற்கு எதிர்கொள்ளும் வகையில் கவர்ச்சிகரமான வுல்ப் அவர் மனைவி ஆகியோரைவிட ஒரு வலுவான, சர்வாதிகாரப் போக்கு உடைய நபர் நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என்னும் விருப்பமாகவும் இருக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு ஜனாதிபதிகளின் இராஜிநாமா என்பது ஆளும் உயரடுக்கிற்குள் பெருகியுள்ள உறுதியற்ற தன்மை, மோதல் ஆகியவற்றின் வெளிப்பாடுதான். 2009 தேர்தலில் வெற்றிபெற்ற அரசாங்கக் கூட்டணி அழிவில் உள்ளது. சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) கருத்துக் கணிப்புகளில் 16% இல் இருந்து 3% எனக் குறைந்துவிட்டது. புதிய தேர்தல்களில், அது மத்திய பாராளுமன்றத்தில் நுழைவதற்குத் தேவையான இடங்களைப் பெறுவதில் தோல்வி அடையக்கூடும்.

பழைமைவாத முகாம் பல பிரச்சினைகளில் பிளவுற்றிருக்கிறது, கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவர் மேர்க்கேல் அனைத்து போட்டித்திறன் உடையவர்களையும் (வுல்ப் உட்பட) அவர்களை அகற்றிய அல்லது வேறுபதவிகளைக் கொடுத்து அனுப்பிய வகையில் ஒதுக்கிவிட்டார் என்பதால் முறிந்துவிடாமல் உள்ளது. இச்சூழலில், வுல்பிற்கு எதிரான பிரச்சாரம் கட்டுப்பாட்டை மீறி, சான்ஸ்லர் உட்படப் பலரும் விரும்பாத முறையில் அதிக தூரம் சென்றிருக்கலாம்.

இப்பொழுது வுல்பின் இராஜிநாமாவைப் பயன்படுத்தி மேர்க்கெல் பாராளுமன்றத்தில் இருக்கும் கட்சிகளை நெருக்கமாகப் பிணைக்க முயலலாம். வுல்பின் இராஜிநாமா அறிவிக்கப்பட்ட அரைமணி நேரத்திற்குப் பின், அவருடைய முயற்சிகளுக்காக மேர்க்கெல் அவருக்கு ஒரு நிமிடம் கூட நீடிக்காத மிகக் குறுகிய உரையில் நன்றி தெரிவித்தார். சமூக ஜனநாயக கட்சி மற்றும்  பசுமைவாதிகளைக் அணுகி அனைவரும் ஏற்கும் பதவிக்கு வரும் அடுத்தவர் குறித்துக் கண்டறியப்படும் என்று அவர் அறிவித்தார்.

சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைவாதிகள் உடனடியாகத் தங்கள் ஆதரவிற்கு அடையாளம் காட்டினர் சமூக ஜனநாயக கட்சி தலைவர் சிக்மார் காப்ரியேல் மேர்க்கெலுடன் பொது வேட்பாளராக நடத்துவதற்கு பேச்சுக்கள் நடத்தப்படும் என்று கூறி, Bild இடம் நாட்டின் தலைவர் பதவிக்கு, அதன் உரிய மரியாதை, கௌரவம் ஆகியவற்றை மீட்கும் நபரைக் கண்டுபிடிப்பது சமூக ஜனநாயக கட்சிக்கு முக்கியமாகும்என்றார். இதே போன்ற கருத்துக்கள் பசுமைவாதிகளின் மூத்த பிரதிநிதிகளாலும் கூறப்பட்டன.

இடது கட்சியின் தலைவரான கெசீன லொட்ஸ் அனைத்தப் பிரிவுகளும் ஏற்கும் ஒரு கூட்டு வேட்பாளர் தேவை என்னும் கருத்தை ஆதரித்தார். ஆனால் மேர்க்கெல் இடது கட்சியிடம் இதுபற்றி அணுகவில்லை.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டும் ஒரு அடுத்துவருபவருக்கு ஒப்புதல் கொடுப்பது என்பது முறையாக அல்லது முறைசாராமல் ஒரு பெரும் கூட்டணி அமைக்கப்படுவதை சுட்டிக்காட்டும் தெளிவான அடையாளம் ஆகும். ஒரு ஜனாதிபதித் தேரதல் புதிய அரசாங்கக் கூட்டணி அமைப்பதற்கு வழிவகுப்பது ஜேர்மனிய வரலாற்றில் இது முதல் தடவை அல்ல. கூட்டணி அமைப்பதற்கு வழிவகுப்பது ஜேர்மனிய வரலாற்றில் இது முதல் தடவை அல்ல. 1969 கோடைகாலத்தில் குஸ்டாவ் ஹைனமான்(SPD)  SPD-FDP கூட்டு வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது அதே ஆண்டு இலையுதிர்காலத்தில் வில்லி பிராண்ட்டின் கீழ் முதல் SPD-FDP கூட்டணி அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

பெரும்பாலான பாராளுமன்றக் கட்சிகள் தொழில்நுட்பவாதிகளின் அரசாங்கங்களான வங்கியாளர்கள் மரியோ மோன்டி மற்றுர் லூகாஸ் பாப்படெமோசின் ஆட்சிகளுக்கு முறையே இத்தாலி மற்றும் கிரேக்கத்தில் ஆதரவைக் கொடுத்திருப்பதைப் போலவே, ஜேர்மனியிலும் அனைத்துப் பாராளுமன்றக் கட்சிகிளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு என்பது பரந்த எதிர்ப்பிற்கு இடையே தொழிலாள வர்க்கத்தின் மீது சர்வதேசப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைச் சுமத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

ஜனாதிபதி மாளிகையான Bellevue இல் ஒரு வலுவான, சர்வாதிகார நபர் இருப்பது என்பது இவ்வகையில் மிகவும் பயனுடையதாக இருக்கும். இப்பங்கிற்கு ஒரு போட்டியாளர் 2010 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஜோகாயிம் கவுக் ஆவார். இவருடைய வலுவான கம்யூனிச எதிர்ப்புத் திட்டம் வலதுசாரி வட்டங்களில் மிகுந்த செல்வாக்கை உடையது. மற்ற வேட்பாளராகக்கூடிய தற்போதைய பாதுகாப்பு மந்திரி தோமஸ் டி மைசியர் (CDU),  தொழிலாளர்துறை மந்திரி ஊர்சுலா வொன் டெர் லேயன் (CDU) ஆகியோர் உள்ளனர்.