World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Afghanistan rises in revolt against US occupation       

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சி எழுகிறது

Patrick Martin
27 February 2012
Back to screen version

அமெரிக்கத் துருப்புக்கள் பக்ரம் விமானத் தளத்தில் குர்ரான் பிரதிகளை எரித்தபின், கடந்த வாரம் முழுவதும் ஆப்கானிஸ்தான் முழுவதும் அமெரிக்க, நேட்டோ நிலையங்கஞக்கு எதிரே நடத்தப்பட்ட வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் இப்பொழுது 11வது ஆண்டில் இருக்கும் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆப்கானிய மக்களின் ஆழ்ந்த வெறுப்பிற்குச் சான்றாக உள்ளன.

குர்ரான் அவமதிக்கப்பட்டதை ஆப்கானிய உழைக்கும் மக்கள் கண்டவுடன், நாடு முழுவதும் அச்செய்தி பரவியது. அமெரிக்கத் தளங்களும், ஐக்கிய நாடுகள் சபை நிலையங்களும் தெற்கு ஆப்கானிஸ்தானத்தில் தலிபான் செயற்பாடுகள் மையங்களுக்கு மிகத் தொலைவில் இருக்கும் குண்டுஸ் போன்ற இடங்களில்கூடத் தாக்கப்பட்டன. ஆக்கிரமிப்புச் சக்கதிகளுக்கு மக்கள் விரோதப் போக்கு மிகப் பெரியஅளவில் இருப்பதை செய்தி ஊடகத் தகவல்கள் ஆவணப்படுத்துகின்றன; இது ஜனாதிபதி ஹமித் கர்சாய் இன் கைப்பாவை அரசாங்கத்திலுள்ள பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிடையேகூட உள்ளது.

ஒரு காபூல் சோதனைச் சாவடியில் உள்ள இரு ஆப்கானியப் பொலிசாரை வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது: “ஆப்கானியர்களும் உலகின் முஸ்லிம்களும் வெளிநாட்டவர்களை எதிர்த்து எழுச்சி செய்ய வேண்டும். நம்மிடத்தில் இனியும் பொறுமை இல்லை.” என்றார் ஒருவர். மற்றவர், “நாம் இருவரும் வெளிநாட்டு இராணுவத்தினரைத் தாக்குவோம் என்று சேர்த்துக் கொண்டார்.

காபூலிலேயே மிகவும் பாதுகாப்பான நிலையங்களில் ஒன்று எனக் கருதப்படும் ஆப்கானிய உள்துறை அமைச்சரகத்தின் கட்டுப்பாட்டு மையத்திற்குள்ளேயே ஒரு ஆப்கானிய அதிகாரி அமெரிக்க கேர்னல் ஒருவரையும், மேஜர் ஒருவரையும் கொன்றது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும். இரு அமெரிக்க அதிகாரிகளும் குர்ரானைக் கேலி செய்து, 25 வயதான அப்துல் சபூர் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு ஆப்கானிய அதிகாரியுடன் வாதிட்டுக் கொண்டிருந்தனர். சபூர் பின்னர் எட்டுமுறை சுட்டு இருவரையும் கொன்றார்.

இதன்பின் மிகவும் பாதுகாப்புடைய அமைச்சரகத்தில் இருந்து எந்தவிதத் தடையுமில்லாமல் சபூர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இது அவருடைய நடவடிக்கைகள் பரந்த பரிவுணர்வைத் தூண்டின என்பதைக் காட்டுகிறது.

ஆப்கானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பரந்த எதிர்ப்புக்கள் வெடித்துள்ளமை ஆக்கிரமிப்புச் சக்திகளிடையே கடுமையான குளிரலையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ஆப்கானிய அரசாங்க அமைச்சரகங்களில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டனர். ஜேர்மனியும் பிரான்ஸும் கூட அதேபோன்ற நடவடிக்கையை எடுத்தன. கர்சாய் இன் கைப்பாவை ஆட்சிக்கு தலிபான்-எதிர்ப்புப் போரில் முக்கிய பங்கை மாற்றும் ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயம் பெரும் சிதைவில் உள்ளது.

கர்சையை பொறுத்தவரை, 2001ல் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பின்போது ஜனாதிபதியாக இருத்தப்பட்டு, நீண்டகாலம்காபூல் மேயர் எனக் கேலிசெய்யப்பட்டவர், இப்பொழுது ஒரு வெறுக்கத்தக்க வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் கையாள் என அம்பலப்படுத்தப்பட்டு, அவருடைய பொலிசாராலேயே வெறுக்கப்படுகிறார்.

பக்ரத்தில் குர்ரான் அவமதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய ஆக்கிரமிப்பின் பிற்போக்குத்தன்மையில் இருந்து தவிர்க்க முடியாமல் வெளிவருகின்றது. இந்த ஆக்கிரமிப்புப் போர் அமெரிக்க, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பிற்கு நடுவே ஆப்கானிய மக்கள் மீது நடத்தப்படுகிறது.

இத்தகைய போர் நேட்டோ நாடுகளின் மக்களுக்கும் மற்றும் போரிடும் படையினருக்கும் பொய்களின் அடிப்படையில்தான் முன்வைக்கப்பட முடியும். ஆப்கானிஸ்தானில் மக்கள் எழுச்சிக்கு எதிரான போர்பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதி என்று அமெரிக்க படையினருக்கு கூறப்பட்டது. ஆப்கானியர்களை அவர்கள் தாக்குகையில் அவர்கள் செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பொறுப்பான பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுகின்றனர் எனவும் கூறப்பட்டனர்.

இத்தகைய ஒரு குற்றம் சார்ந்த புதுவகைக் காலனித்துவப் போர், தவிர்க்க முடியாமல் காட்டுமிராண்டித்தன செயல்களுக்கு வகை செய்கிறது. அமெரிக்க மரைன்கள் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் சடலங்கள்மீது சிறுநீர் கழிக்கும் காட்சி வீடியோவில் வந்துள்ளது ஓர் உதாரணம் ஆகும். அதேபோல் Stryker படைப்பிரிவு இராணுவத்தினர் ஆப்கானியக் குடிமக்களை கொன்றபின் அவர்களுடைய விரல்களையும் பிற உடல்பகுதிகளையும் வெற்றிக் கோப்பைகள் போல் எடுத்து வைத்துக் கொண்டனர்.

இத்தகைய நிகழ்வுகள் ஆப்கானிஸ்தானில் ஒரு ஏகாதிபத்திய ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் அன்றாடக் குற்றங்கள், கொடூரங்களில் ஒரு பகுதியாகும். நேட்டோ வான் தாக்குதல்கள் வாடிக்கையாக டஜன் கணக்கான நிரபராதியான குடிமக்களை எரித்துக் கொல்கின்றன. அமெரிக்க சிறப்புப் படைகள் நள்ளிரவுச் சோதனைகளில் வீடுகளில் நுழைந்து முழுக் குடும்பங்களையும் அச்சுறுத்துகின்றன. ஆயரிக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுதல், காவலில் வைக்கப்படுதல் மற்றும் சித்தரவதைக்கு உட்படுத்தப்படுதல் ஆகியவற்றை நேட்டோ படைகள் மேற்பார்வை இடுகின்றன.

இவ்வகையில் தொடர்ச்சியாக நடைபெறும் குற்றங்களுக்கான முக்கிய பொறுப்பு மக்களுடைய போர் எதிர்ப்பு உணர்வை சிதைத்து அதை ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாகத் திசைதிருப்பிய அரசியல் சக்திகளிடம்தான் உள்ளது. 2008 ஜனாதிபதித் தேர்தலின் ஆப்கானிஸ்தானில் போர் தொடரும் என்று கூறியிருந்தபோதிலும் பாரக் ஒபாமா ஈராக் போருக்கு உறுதியான எதிர்ப்பாளர் என்று காட்டிக் கொண்டு நின்றார். அதன்பின் அவர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கையை மும்மடங்கு ஆக்கியுள்ளார். அவர் வெள்ளை மாளிகளையில் நுழைந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆப்கானிய குடிமக்கள் இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் போர், ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சியைப் போலவே ஒரு ஏகாதிபத்தியப் போர், ஆக்கிரிமிப்புப் போரை ஆதரிக்கும் கட்சி என்பதைத்தான் நிரூபித்துள்ளது. ஒபாமா நிர்வாகத்தின்மீது இப்போர் ஒரு குற்றச்சாட்டு என்பது மட்டும் இல்லாமல், ஒபாமாவை, புஷ்ஷிற்கும் குடியரசுக் கட்சிக்கும் எதிரான ஒருபோர்-எதிர்ப்பு மாற்றீட்டாளர் என்று சித்தரித்த தாராளவாதிகள், போலி சோசலிசஇடதுகள் ஆகிய அனைத்துக் கட்சிகள்மீதும் ஒரு குற்றச்சாட்டு ஆகும். இவை 2012 ஒபாமா மறு தேர்தல் பிரச்சாரத்திலும் அவருக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றன.

போர் எதிர்ப்பிற்கு சமூக அடித்தளத்தை அரசியல் ஆளும்பிரிவின் எப்பிரிவிலும் காணப்பட முடியாது; சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் மட்டுமே காணப்பட முடியும். கடந்த ஆண்டு அச்சக்திதான் அமெரிக்க ஆதரவுடைய சர்வாதிகாரிகளை எகிப்து மற்றும் துனிசியாவில் போராட்டங்கள் மூலம் அகற்றியது.

அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அமெரிக்க, மற்றும் நேட்டோப் படைகள் உடனடியாக நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெறப்பட வேண்டும், ஆப்கானிய படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பிற்கு பொறுப்பானவர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆப்கானிய மக்களுக்குப் பெரும் இழப்பீடுகள் கொடுக்கப்பட வேண்டும் எனக் கோர வேண்டும்.