World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The scaffolding of an American police state

ஓர் அமெரிக்க பொலிஸ் ஆட்சிக்கு களம் அமைக்கப்படுகிறது

Bill Van Auken
6 January 2012
Back to screen version

எவ்வித குற்றச்சாட்டோ அல்லது வழக்கோ இல்லாமல் காலவரையின்றி இராணுவ காவலில் வைக்க அனுமதிக்கும் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தில் (NDAA) டிசம்பர் 31இல் கையெழுத்திட்டு, பராக் ஒபாமா அமெரிக்காவில் பொலிஸ் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய உறுதியான பயணத்திற்கு ஓர் ஈனத்தனமான பங்களிப்பைச் செய்துள்ளார்

ஊடக கவனிப்பிலிருந்தும், பொதுமக்களின் பார்வையிலிருந்தும் குறைத்துக்காட்டுவதற்காக புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில், பிரத்யேகமாக நடத்தப்பட்ட வெட்கக்கேடான கையெழுத்திடும் நிகழ்வால், அமெரிக்க யுத்த இயந்திரங்களுக்கு உரமூட்ட 662 பில்லியன் டாலர் அளிப்பதற்கு அழுத்தமளிக்கும் இந்த சட்டத்தின் பலமான தாக்கங்களை மூடி மறைத்துவிட முடியாது.

அமெரிக்க குடிமக்களையும் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களையும் இராணுவத்தின் பிடியில் அடைப்பதை சட்டரீதியிலாக்கும் வகைமுறைகளைக் கொண்டிருக்கும் அந்த சட்டமசோதாவை கொண்டு வருவது குறித்த உண்மையான உள்ளடக்கத்தை, ஜனாதிபதி அதுபற்றி அளித்த கபட அறிக்கையில் வெள்ளைமாளிகை சற்றே மாறியிருக்கிறது என்பது சிறிதளவு கூட மாற்றிவிட வில்லை.     

அவர் கொண்டுவந்த சட்டத்தைக் குறித்து "ஆழ்ந்த கவலைகளை" வெளியிட்ட ஒபாமா அறிவித்தது, “அமெரிக்க குடிமக்களை வழக்கு இல்லாமல் காலவரையற்ற இராணுவ காவலில் வைத்திருக்க என்னுடைய நிர்வாகம் அனுமதிக்காது.” அதுபோன்றவொரு நடைமுறை "ஒரு நாடு என்கிற விதத்தில் நம்முடைய மிகவும் முக்கியமான பாரம்பரியங்களையும், அதன் மதிப்புகளையும் உடைத்துக்கொண்டுவிடும்," என்றார்.  

ஒபாமாவின் வாக்குறுதி எந்தளவிற்கு போலித்தனமானதோ, அதேயளவிற்கு மதிப்பற்றதுமாகும். அமெரிக்க குடிமக்களை வழக்கு இல்லாமல் காலவரையின்றி காவலில் வைப்பதில், குறிப்பாக இராணுவத்தைத் தடுக்கும் சட்டக்குறிப்புகளை நீக்க, சட்டத்துறை நிகழ்முறையில் ஒபாமாவின் வெள்ளை மாளிகை நேரடியாகவே குறுக்கிட்டதென, இச்சட்டத்திற்கான ஜனநாயக கட்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான மிச்சிகன் செனட்டர் கார்ல் லெவின் அம்பலப்படுத்தினார்.  

கடந்த மூன்று ஆண்டுகளின் ஒபாமா நிர்வாகத்தின் சாதனைகளே அவற்றை பேசுகின்றன. புஷ் நிர்வாகத்தின் குற்றஞ்சார்ந்த யுத்தங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மீதெழுந்த பெரும் வெறுப்பலையால், இந்த ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி பதவியில் அமர்த்தப்பட்டார். ஒரே ஆண்டிற்குள் குவாண்டனமோ சிறைச்சாலை  முகாமை மூடிவிடுவதாக, பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்த அவர், "மக்கள் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது என்று ஒருபோதும் கூறாமல் அவர்களை அடைத்துவைக்கும்" ஒரு முறையை புஷ் உருவாக்கி வைத்திருப்பதற்காக" கண்டனம் தெரிவித்தார்.        

ஆனால் ஆட்சிக்கு வந்ததும், முந்தைய நிர்வாகத்தில், சித்திரவதையிலிருந்து சட்டவிரோத உள்நாட்டு ஒற்றுவேலைகளுக்கு காரணமான ஒவ்வொன்றையும் பொறுப்பாக்கும் முயற்சிகளில் இருந்து விடுவிக்க நீதிமன்ற வழக்குகளில் அந்த நிர்வாகம் மீண்டும் மீண்டும்  தலையிட்டது. காலவரையற்ற இராணுவ காவல்களுக்கு உத்திரவிடும் ஜனாதிபதியின் "உரிமையைத்" தூக்கிப்பிடித்த அது, வெளிநாடுகளிடம் “ஒப்படைக்கும்" அருவருப்பான நடைமுறையையும் தொடர்ந்தது. இந்த நடைமுறையில், சந்தேகத்திற்கு இடமானவர்களும் கூட பிரித்தெடுக்கப்பட்டு, விசாரணைக்காகவும் சித்திரவதைக்காகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.     

புஷ் நிர்வாகத்தையும் விட குறிப்பிடத்தக்க அளவிற்கு இன்னும் கூடுதலாக சென்ற ஒபாமாவின் வெள்ளை மாளிகை, அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல் அவர்களைத் தூக்கிலிட உத்திரவிடுவதற்கும் தம்மைத்தாமே "உரிமை" கொண்டாடியது. அதன் அடிப்படையில், புது மெக்சிக்கோவில் பிறந்த இஸ்லாமிய மதகுருவான அன்வர் அல்-அவ்லாகி மற்றும் அவரது 16 வயது மகனுக்கு எதிராக இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான படுகொலைகளை நடத்தியது

தற்போது, இலத்தீன் அமெரிக்காவில் இந்த ஆட்சிகளை எதிர்த்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள் (இவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்) பெண்டகன் மற்றும் CIAஆல் சிறையில் அடைக்கப்பட்டு, இரகசிய சிறைக்குள்ளும், சித்திரவதை மையங்களுக்கு உள்ளேயும் "மறைந்து போய்", அதன்பின்னர் ஒருபோதும் பார்க்க முடியாமல் போயிருப்பதைப் போல, பாசிச இராணுவ சர்வாதிகாரங்களைப் போன்ற ஒருவித அட்டூழியங்களை முக்கிய சட்டமாக்கும் சட்டவகைப்பாடுகளுக்கு ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.

அரசியலமைப்பின் மீதான இந்த தாக்குதலும், உரிமைகளுக்கான மசோதா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தின்முன் சமர்ப்பிக்கும் (habeas corpus) நூற்றாண்டுகள் பழமையான கோட்பாடும், மற்றும் ஓர் அமெரிக்க பொலிஸ் ஆட்சிக்கான களத்தை படிப்படியாக உருவாக்குவதும் ஆகிய இவையனைத்தும் வெறுமனே தனிப்பட்ட கண்ணோட்டங்களோ அல்லது புஷ்ஷினது அல்லது ஒபாமாவினது நிர்வாகத்தின் அரசியல் வெளிப்பாடோ அல்ல.

இந்த நிகழ்முறையானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளோடு பிணைந்துள்ளது. இது கடந்த ஒரு தசாப்தத்தினூடாக தடையற்ற விதத்தில் நன்கு வளர்ந்து வந்துள்ளது.

2000 தேர்தல் நெருக்கடியின் போது, புளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, புஷ் பெரும் வாக்குகளை இழந்திருந்த நிலையிலும், அவரை ஜனாதிபதியாக நியமிப்பதற்கான அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பானது, அமெரிக்க ஆளும் மேற்தட்டிலும் அதன் அரசியல் அமைப்புமுறையிலும், அங்கே ஜனநாயக உரிமைகளுக்கான எவ்வித முக்கிய ஆதரவும் நிலவவில்லை என்பதை தெளிவுபடுத்துவதாக சோசலிச சமத்துவ கட்சி எச்சரித்தது.

இந்த மதிப்பீடு, கடந்த 11 ஆண்டுகளில் நடந்த முந்தைய வேலைகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 11 தாக்குதல்களைப் போலிக்காரணமாக பயன்படுத்தி, அரசாங்கம் உள்நாட்டில் உளவுபார்ப்பதற்கு ஒரு பரந்த கருவியை ஏற்படுத்தியது; தேசப்பாதுகாப்பு சட்டத்தைக் (Patriot Act) கொண்டு வந்தது; உள்நாட்டு பாதுகாப்புத்துறையை ஸ்தாபித்தது; பெண்டகனின் வடக்கு இராணுவ பிரிவை உருவாக்கியது; அந்த பிரிவு அமெரிக்காவிலேயே இராணுவ பயன்பாட்டிற்கு பாதையைத் திறந்துவிட்டதோடு, CIAஆல் நடத்தப்படும் காவல் மற்றும் சித்திரவதை மையங்களின் ஓர் உலகளாவிய வலையமைப்பைச் ஸ்தாபித்தது. மிக சமீபத்தில், தேசியளவில் எழுந்த வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்போம் போராட்டக்காரர்கள் இராணுவமயமான பொலிஸ் படைகளால் திட்டமிட்டும், ஒருங்கிணைந்தும் ஒடுக்கப்பட்டதை அமெரிக்க மக்கள் கண்டனர்.

அதிகரித்துவரும் சர்வாதிகார அச்சுறுத்தல், ஆழ்ந்த வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளன. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலக்கட்டம், ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான மற்றும் நிலையான தாக்குதல்களைக் கண்டன. அவை 1950களின் McCarthyite மாயவேட்டையிலிருந்து ஆரம்பித்து CIA-FBI உளவுவேலை வரையில் இருந்தது; அவை 1970களில் வாட்டர்கேட் நெருக்கடியில் கையாளப்பட்ட "இழிவான உத்திகளையும்" கொண்டிருந்தன.

எவ்வாறிருந்த போதினும், அரசியலமைப்பு உரிமைகளின் மீது நடத்தப்பட்ட இத்தகைய முந்தைய தாக்குதல்கள் அரசியல் அமைப்பிற்குள்ளேயே கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டன. சான்றாக, ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன் (Harry Truman) 1950 மெக்காரென் சட்டத்தை (McCarran Act) நீக்கும் ஒரு முயற்சியில் அவரது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அப்போது தான் இறுதிமுறையாக வழக்கு இல்லாமல் காலவரையின்றி காவலில் வைப்பதற்கான அரசாங்க அதிகாரம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. ட்ரூமேன், அந்த சட்டத்தை "சர்வாதிபத்தியத்தை நோக்கிய ஒரு நீண்டகால முன்னெடுப்பாகவும்", “உரிமைகளுக்கான சட்டமசோதாவின் (Bill of Rights) ஓர் அவமதிப்பாகவும்" குறிப்பிட்டார்

NDAA நிறைவேற்றப்பட்டதன் மற்றும் காலவரையற்ற காவலில் வைப்பதற்கான அந்த சட்டதொகுப்பின் முக்கிய முக்கியத்துவம் என்னவென்றால், அதற்கு எந்தவித குறிப்பிட்ட எதிர்ப்பும் இல்லாதது தான். முக்கிய செய்தி ஊடகமும், அரசியலமைப்பும் அந்த சட்ட மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டமைக்கு தோற்றப்பாட்டளவில் மௌனமாக இருந்துவிட்டன.

இந்த மாற்றம் அமெரிக்க சமூகத்தின் கட்டமைப்பில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்களோடு, குறிப்பாக சமூக சமத்துவமின்மையின் முன்னொருபோதும் இல்லாத வளர்ச்சியோடு பிணைந்துள்ளது. மேலேயுள்ள ஒரு சதவீதத்தினராக உள்ள பில்லியனர்களையும், பலகோடி மில்லியனர்களையும் பாரிய உழைக்கும் மக்களிடமிருந்து பிரிக்கும் இந்த பிளவு, ஜனநாயக போலித்தனத்தோடு கூட ஒத்துப்போக முடியதாது.  

அமெரிக்காவும் உலக முதலாளித்துவமும் ஒரு வரலாற்று உடைவை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டையும் கட்டுப்படுத்தி வரும் ஆளும் வர்க்கம், வர்க்கப் போராட்டத்தின் ஓர் எழுச்சிக்கு எதிராக செல்வவளத்திலும், அதிகாரத்திலும் அதன் ஏகபோகத்தைப் பாதுகாத்து வைக்க, பொலிஸ் சர்வாதிகார ஆட்சி உட்பட என்னென்ன கருவிகள் அவசியமோ அத்தனையையும் பயன்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. உலக நெருக்கடியின் தாக்கத்தின்கீழ், இதேபோன்ற அபிவிருத்திகள் ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நடந்து வருகின்றன.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதென்பது வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும் என்பதோடு ஒரு நிதியியல் செல்வந்த தட்டின் கையிலிருக்கும் பெரும் செல்வ திரட்சியின் மீது இன்று ஒரு நேரடியான தாக்குதலை நடத்தாமல் அது சாத்தியமும் இல்லை.

இதுபோன்றவொரு போராட்டத்தை, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறு-ஒழுங்கமைக்கும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியாக ஒன்றுதிரட்டுவதன் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும்.