World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The betrayal of Nigeria’s general strike

நைஜீரியாவின் பொதுவேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டது

Robert Stevens
21 January 2012
Back to screen version

நைஜீரிய தொழிலாளர் காங்கிரஸ் (NLC) மற்றும் தொழிற்சங்கக் காங்கிரஸ் (TUC) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தது உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தீர்க்கமான படிப்பினைகளை கொண்டுள்ளது.

வேலைநிறுத்தம் ஜனவரி 9 அன்று ஆரம்பித்தது. உத்தியோகபூர்வமாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி குட்லக் ஜோனாதன் அரசாங்கத்துடன் பேச்சுக்களை அடுத்து இது திரும்பப் பெறப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்கள் முதல் நாளில் இருந்தே வேலைநிறுத்தத்தை முதுகில் குத்த தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர்.

தொழிற்சங்கங்களின் நடவடிக்கை அரசாங்கம் உடனடியாக விலையை இருமடங்காக உயர்த்திய எரிபொருள் உதவித்தொகையை நிறுத்தியதை அடுத்து தன்னியல்பாக மக்கள் எதிர்ப்புகள் தோன்றியபின்னர்தான் தொழிற்சங்கங்கள் நடவடிக்கைக்கு அழைப்பு விட்டன. முதல் ஐந்து நாட்களில் பொது வேலைநிறுத்தம் நைஜீரிய வரலாற்றில் மிகப் பெரிய சமூக இயக்கமாக வளர்ந்தது.  மில்லியன் கணக்கானவர்கள் வேலைநிறுத்தம் செய்து, தெற்கே 15 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட லாகோஸில் இருந்து வடக்கே கானோ வரை ஒவ்வொரு பெரிய நகர்ப்பகுதியிலும் வெகுஜன எதிர்ப்புக்கள் நடைபெற்றன. நைஜீரிய ஆக்கிரமிப்பு என்று எழுதப்பட்டிருந்த பதாகைகள், பொருளாதார வறிய நிலை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக உலகெங்கிலும் நடக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக போராட்டத்தை அடையாளம் காட்டின.

இது காட்டுமிராண்டித்தன அடக்குமுறையை எதிர்கொண்டது. குறைந்தப்பட்சம் 16 பேராவது கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானவர்களும் பொலிஸ், இராணுவத் தாக்குதலுக்கு உட்பட்டனர். முழு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டன, பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் சாலைத் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. வேலைநிறுத்தம் முடிவடைந்த அன்று அரசாங்கம் இன்னும் எதிர்ப்புக்கள் ஏற்பட்டால் அவற்றை அடக்குவதற்கு இராணுவத்தையும் திரட்டி வைத்தது.

நைஜீரியா, எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துவரும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான வெகுஜன இயக்கங்களின் தளமாக துனிசியா, எகிப்து, கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல் இன்னும் பிற நாடுகளின் வரிசையில் சேர்ந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளைப் போலவே நைஜீரிய நிகழ்வுகளும் தொழிலாள வர்க்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் வக்காலத்து வாங்குபவர்களின் தலமையின் கீழ் நிதியத் தன்னலக்குழுவின் கீழ் உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை நடத்த இயலாத தன்மையைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

ஜோனாதன் எரிபொருள் உதவித்தொகையை ஒரே இரவில் அகற்றியதின்மூலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் நேரடி உத்தரவுகளின் பேரில் அதிக பணயத்தை மேற்கொண்டுள்ளார். இத்தகைய உதவித்தொகை தகர்ப்பு என்பது தனியார்மயமாக்கல், செலவுக் குறைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான். இவை ஏற்கனவே பெருந்திகைப்பிலுள்ள மக்களை இன்னும் வறிய நிலைக்குத் தள்ளுகின்றன. உதவித்தொகைகளை அகற்றுதல் என்பது பரந்த முதலாளித்துவ எதிர்ப்பு சமூக இயக்கத்தின் குவிமைய புள்ளியாகிறது; இதில் வெகுஜன வேலையின்மைக்கு எதிர்ப்பு (இப்பொழுது 40 வயதிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு 40% என்று உள்ளது), மின்வசதி, தூய குடிநீர் ஆகிய அடிப்படைத் தேவைகள் இல்லாமையும் இணைந்துள்ளது; நாட்டில் 70%க்கும் மேலான மக்கட்தொகுப்பு நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்.

பெருகி வரும் வெகுஜன எதிர்ப்பின்மீது கட்டுப்பாட்டை மீண்டும் நிறுவும் பொருட்டு தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. எரிபொருள் உதவித்தொகை குறித்த பிரச்சினை ஒன்றுதான் தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி, அவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையும் நாடவில்லை என்பதை முழுக்காலத்திலும் வலியுறுத்தினர். முக்கிய மூலோபாய எண்ணெய் தொழிலில் தொழிலாளர்கள் வெளிநடப்புச் செய்யாமல் இருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்; இத்தொகுப்பு நைஜீரியப் பொருளாதாரத்தில் பெரும்பான்மையில் உள்ளது.

நான்கே நாட்களில், ஜனவரி 12ம் திகதி NLC பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவித்தது, ஜோனாதன் ஆட்சி சலுகைகளைக் கொடுத்துள்ளதாகவும் கூறியது. வேலைநிறுத்தமும் எதிர்ப்புக்களும் மறு நாள் வெள்ளியன்று நிறுத்தப்பட்டனஅது சனிக்கிழமை கூடுதல் பேச்சுக்களை அனுமதிக்க உதவும் என்று கூறப்பட்டது. இப்பேச்சுக்கள் மோசடித்தனமானவை. எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவதாக கூறப்படவில்லை. ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் பேச்சுக்களில் கலந்துகொள்ளுவதற்குக்கூட வரவில்லை. ஜனவரி 16, திங்களன்று வேலைநிறுத்தம் மீண்டும் தொடங்கும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்தனர். ஆனால் ஞாயிறன்று அச்சுறுத்தப்பட்டிருந்த எண்ணெய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இரத்து செய்யப்பட்டது.

இறுதியாக மூன்று நாள் இடைவெளிக்குப் பின்னர் வேலைநிறுத்த நடவடிக்கை மீண்டும் தொடங்கியபின், ஜோனாதன் தொலைக்காட்சியில் தோன்றி எரிபொருள் விலைகள் தற்காலிகமாக மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும் என்று அறிவித்தார். தெருக்களில் இராணுவம் நிற்கையில், தொழிற்சங்கங்கள் கடமையுணர்வுடன் வேலைநிறுத்தத்தையும், பிற எதிர்ப்புக்களையும் முடிவுக்கு கொண்டுவந்தனர்.

நைஜீரியத் தொழிற்சங்கங்களின் இழிந்த காட்டிக் கொடுப்பு ஒன்றும் ஒரு தனிமைப்பட்ட நிகழ்வு அல்ல. உலகில் தொழிற்சங்கங்கள் இத்தகைய பங்கை கொள்ளாத நாடே இல்லை. இவை பெரும் சலுகை படைத்த அதிகாரத்துவ தட்டின் கருவிகளாகச் செயல்பட்டு வர்க்கப் போராட்டங்களை பெருவணிகத்தின் சார்பில் நசுக்குகின்றன. எனவேதான் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களோடு ஒரு உடைவை செய்து வர்க்கப் போராட்டங்களுக்கான உண்மையான அமைப்புக்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டு கட்டமைப்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளன.

தொழிலாள வர்க்கத்தின்மீது தொழற்சங்க அதிகாரத்துவத்தின் மேலாதிக்கம் தொடர வேண்டும் என்று உறுதியாகக் காப்பவர்கள் பல முன்னாள் இடது குழுக்கள் என்பதையும் நைஜீரிய நிகழ்வுகள் காட்டுகின்றன. CWI (Committee for a Workers International) எனப்படும் சர்வதேச தொழிலாளர் குழு என்பது இதற்குத் தக்க மாதிரியாகும்; இதன் நைஜிரியக் கிளை அமைப்பு ஜனநாயக சோசலிச இயக்கம் (Democratic Socialist Movement -DSM)என்று அழைக்கப்படுகிறது.

வேலைநிறுத்தத்தின் முதல் நாள் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் DSM நைஜீரியாவில் தொழிற்சங்கங்கள் ஓர் இழிந்த பங்கைக் கொண்டிருந்தன என்றும் இப்போராட்டம் 2000த்தில் இருந்து நடந்த முந்தைய பொது வேலைநிறுத்தங்களின் விதியைப் போல், அதாவது தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த அல்லது சலுகைகளே இல்லாமல் ஓர் அழுகிய சமரசம் ஏற்பட்டுவிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், அத்தகைய விளைவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, DSM “பரந்த அணிதிரள்வு அல்லது எச்சரிக்கை கொடுக்கும் வேலைநிறுத்தங்கள் NLC, TUC தலைவர்களால் நடத்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டது.

எத்தயாரிப்பும் இல்லாமல் காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்தை அறிவித்து விட்டு அதைச் சில நாட்களிலேயே நிறுத்திவிடுதல் என்பது மீண்டும் வரக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்கள் எழுதினர். ஆனால் இதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் கூறியதெல்லாம், வேலைநிறுத்தம்/நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், அவற்றின் இலக்கு NLC இயக்க நெறி முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிபடுத்துதல் என்பதுதான். அதாவது தொழிற்சங்கக் கருவியின் அதிகாரத்தை நிலைநிறுத்துதல்!

DSM  மற்றும் அதன் தாய் அமைப்பான பிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சி ஆகியவை முழு நனவுடன்கூடிய ஏமாற்றுத்தனத்தை செய்தனர். நைஜீரியாவில் புரட்சிகர மாற்றத்தை அளிக்கும் வகையில் பொது வேலைநிறுத்தம் அதிகாரம் பற்றிய வினாவை முன்வைத்துள்ளது என்பதை ஒப்புக் கொண்ட அதே நேரத்தில் DSM அத்தகைய விளைவை மிகவும் எதிர்ப்பவர்கள் இயக்கத்தின் மீது கட்டுப்பாடு கொள்வதற்கு இசைவு கொடுத்தது.

இது தன்னை பிரிட்டனில் 1926 பொது வேலைநிறுத்தம் குறித்த ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களை அடித்தளமாக கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் ஒரு கட்சியால் நடத்தப்பட்டது; அந்த இயக்கத்தை ஸ்ராலினின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டிஷ் தொழிற்சங்கக் காங்கிரஸ் அதன் விதியை நிர்ணயிக்க அனுமதிக்க வலியுறுத்தியதின் மூலம் துல்லியமாகக் காட்டிக் கொடுப்பதற்கு அனுமதித்தது.

வேலைநிறுத்தத்திற்கு முன்பு வெளிவந்த DSM ன் அறிக்கை தொழிலாளர் கட்சி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது தேவையானது என அறிவித்தது. ஆனால் இத்தேவையின் பொருளுரை தொழிற்சங்கங்கள் சரணடைந்த மறுநாள் வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக்கப்பட்டது. அது அறிவித்தது: அதிக தொழிலாள வர்க்க உறுப்பினர்கள் இருக்கும் நிலையிலும் நவீன பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்கள் மூலோபாய முக்கியத்தவத்தை கொண்டிருப்பதாலும் தொழிற்சங்கங்கள் இத்தகைய மாற்றீட்டுக் கட்சியைக் கட்டமைக்கத் தொடங்கும் முக்கிய நிலைமையில் உள்ளன.

தொழிலாள வர்க்கம் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு தாழ்ந்து நிற்றல் மற்றும் அதிகாரத்துவத்தின் அமைப்புக்களுக்கு தாழ்ந்து நிற்றல், இதையொட்டி இந்தப் போலி சோசலிஸ்ட்டுக்கள் தலைமை அந்தஸ்தையும் அத்துடன் உள்ள சலுகைகளையும் அனுபவித்தல் என்பது CWI மற்றும் முழு முன்னாள்-இடது கூட்டத்தின் அரசியலுக்கு அடிப்படை ஆகும். இது அவர்களை சோசலிசத்திற்கான போராட்டத்தின் மிக உறுதியான, மிக நயவஞ்சக எதிரிகளாக வரையறை செய்கிறது.