World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan army instigates violence against Jaffna SEP members

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் சோ... உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடுகின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
28 January 2012
Back to screen version

வியாழக் கிழமை மாலை, யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ...) இரு உறுப்பினர்களை கைது செய்த இலங்கை இராணுவத்தினர், அவர்களை சட்ட விரோதமாக விசாரணை செய்ததோடு பின்னர் அவர்கள் மீதான சரீரரீதியான தாக்குதலுக்கும் திட்டமிட்டனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் நிலை நிறுத்தப்பட்டுள்ள அரச படைகளால் கட்சிக்கும் மற்றும் அதன் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மேலும் தொடுக்கப்பட்ட இந்த வெளிப்படையான தாக்குதலை சோ... கண்டனம் செய்கின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவத்தால் நசுக்கப்பட்ட போதிலும், தீவின் முழு வடக்கு கிழக்கும் இறுக்கமான இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த மாகாணங்களில், குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்துக்கு பரந்த அதிகாரங்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக் கிழமை சோ... நடத்தவுள்ள பகிரங்க கூட்டத்துக்காக இராசேந்திரன் சுதர்சன், 41, முத்துலிங்கம் முருகானந்தன், 40, ஆகிய இரு கட்சி உறுப்பினர்கள் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தனர். இரகசிய தடுப்பு முகாங்களில் இராணுவத்தால் அடைத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரும் பிரச்சாரத்தின் பாகமாகவே சோ.ச.க. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சுமார் மாலை 4 மணியளவில், யாழ்ப்பாண நகரை அண்டிய குருநகர் மீன் சந்தைக்கு அருகில் சுதர்சனும் முருகானந்தனும் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்ததை மூன்று சீருடையணிந்த படையினர் அவதானித்துக்கொண்டிருந்தனர். சோ.ச.க. உறுப்பினர்களை அழைத்த அவர்கள், கட்சி அரசாங்கத்திடமும் இராணுவத்திடமும் அனுமதி பெற்றதா என விசாரித்தனர்.

மண்டபத்துக்குள் நடக்கும் கூட்டத்துக்கு பொலிஸ் அனுமதி தேவையில்லை என சுதர்சனும் முருகானந்தனும் தெரிவித்தனர். சோ.ச.க. உறுப்பினர்களை தடுத்து வைத்த படையினர் ஒரு உயர் அதிகாரி வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றனர்.

10 நிமிடங்களில் அங்கு வந்த அந்த அதிகாரி, கட்சியின் தலைவர் மற்றும் யாழ்ப்பாண அமைப்பாளரின் பெயர்கள் உட்பட விபரங்களைக் கேட்கத் தொடங்கினார். அவர் சுதர்சன் மற்றும் முருகானந்தனின் முகவரிகளையும், அவர்களது கைதொலைபேசி இலக்கங்களையும் மற்றும் அவற்றில் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களின் இலக்கங்களையும் எழுதிக்கொண்டார்.

அந்த அதிகாரி விசாரித்துக்கொண்டிருக்கும் போதே இன்னும் ஆறு படையினர் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். சோ.ச.க. அந்த விளம்பர சுவரொட்டிகளை  அச்சடித்த இடம் எது மற்றும் அதற்கு எங்கிருந்து பணம் வந்தது போன்ற கேள்விகளை அவர்கள் கேட்டனர். அவர்கள் சோ.ச.க. உறுப்பினர்களின் அடையாள அட்டை இலக்கங்களை எழுதிக்கொண்டதுடன் அவர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்தனர்.

சுமார் மாலை 4.55 மணியளவில் அந்த இராணுவ அதிகாரி பிரச்சினையில்லை நீங்கள் போகலாம் எனக் கூறி சுதர்சனையும் முருகானந்தனையும் செல்ல அனுமதித்தார். பொலிஸ் அனுமதி பெறாதது மட்டுமே பிரச்சினை என அவர் கூறினார். படையினர் நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயன்ற போதிலும் அபகரித்த விளம்பர சுவரொட்டிகளை கொடுக்க மறுத்தனர்.

சோ.ச.க. உறுப்பினர்களை தடுத்து வைத்தது மற்றும் விபரங்களையும் புகைப்படங்களையும் எடுத்தது போன்ற அனைத்தும் சட்ட விரோத நடவடிக்கைகளாகும். மேலும், இந்த சம்பவங்கள் பாதுகாப்பு படையினர் சட்டத்தை மீறுவதை கோடிட்டுக் காட்டுவதோடு, யாழ்ப்பாணத்தில் சிவில் ஆட்சியை ஸ்தாபித்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்வதையும் பொய்யென நிரூபித்துள்ளது.

சுதர்சனையும் முருகானந்தனையும் விடுவித்திருந்தாலும், அந்த அதிகாரியும்  படையினரும் அவர்களை முன்னும் பின்னுமாக பின்தொடர்ந்தனர். ஒரு எரிபொருள் நிலையத்தில் நின்ற சோ.ச.க. உறுப்பினர்கள், அந்த இராணுவ அதிகாரி தொலைபேசியில் தொடர்புகொள்வதை கண்டனர். அவர்கள் அங்கிருந்து புறப்படும் போது, திடீரென அங்கு வந்த ஒரு நபர் டேய் என கத்திக்கொண்டு அவர்களைத் தாக்கினார். அப்போது படையினர் அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சுதர்சனும் முருகானந்தனும் மோட்டார் சைக்கிளுடன் கீழே தள்ளப்பட்ட போதிலும், காயங்கள் ஏதுமின்றி தப்பிக்கொண்டனர்.

அந்தக் குண்டன் சீருடையணியாத ஒரு சிப்பாயாக இருக்கக் கூடும் அல்லது இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் துணைப்படைக் குழுவைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும்.

யாழ்ப்பாண பொலிசார் சோ.ச.க. செய்த முறைப்பாட்டை நேற்று தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டனர். சுதர்சனின் மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாண பொலிசுக்கு கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், யாரால் கொண்டுவரப்பட்டது என்பதை கூற பொலிசார் மறுத்துவிட்டனர். இராணுவம் சம்பந்தப்பட்ட விடயங்களில் வழமையாகவே பொலிசார் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க., புலிகளுக்கு எதிரான யுத்தத்தை எதிர்ப்பதிலும் ஜனநாயக உரிமைகளைக் பாதுகாப்பதிலும் ஒப்பிடமுடியாத சாதனைகளைக் கொண்டுள்ளது. அது புலிகளின் பிரிவினைவாதத்துக்கு எந்தவொரு அரசியல் சலுகையும் கொடுக்காத அதே வேளை, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து துருப்புக்களை திருப்பியழைக்க இடைவிடாமல் கோரிவந்துள்ளது.

யாழப்பாணத்தில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்கள், மிகவும் கடுமையான யுத்த நிலைமைகளின் கீழும் மற்றும் இப்போது இராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் சோசலிச அனைத்துலகவாத முன்நோக்கிற்காக போராடி வருகின்றனர். இது ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான நடவடிக்கையாகும். இதன் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.

சுதர்சனும் முருகானந்தனும் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த சோ.ச.க. கூட்டம் இந்த வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் புலி சந்தேகநபர்க்ளாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான, பிரதானமாக தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கட்சி கோருகின்றது.

சோ.ச.க. அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் பாதுகாப்பதன் விளைவாக, அது இலங்கை இராணுவத்தினதும் பொலிசாரினதும் இலக்காகிவந்துள்ளது. யுத்தத்தின் போது, இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 2007 மார்ச் மாதம், சோ.ச.க. உறுப்பினரான நடராஜா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வேலனையில் காணாமல் போயினர். அவர்கள் கடற்படை முகாமுக்கு அருகிலேயே கடைசியில் காணப்பட்டனர்.

இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக தமிழர்கள் மத்தியில் சீற்றம் வளர்ச்சியடைவது பற்றி அரசாங்கமும் இராணுவமும் கவலைகொண்டிருப்பது தெளிவு. தெற்கில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடுவது அதிகரிக்கின்ற அதே வேளை, வடக்கில் அமைதியின்மை வளர்ச்சியடைவது பற்றி அவர்கள் குறிப்பாக அக்கறை கொண்டுள்ளனர்.

வடக்கில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் மீது பாயும் முயற்சிகளை இராணுவம் உக்கிரமாக்கியுள்ளது. ஜனவரி 17 அன்று, மக்கள் விடுதலை முன்னிணியில் இருந்து பிரிந்து சென்றுள்ள மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர்கள், தமது செயற்பாட்டாளர்கள் இருவர் காணாமல் போனதற்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்காக யாழ்ப்பாணத்துக்குப் பயணிப்பதை இராணுவம் தடுத்தது.

ஜனவரி 20 அன்று, பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, யாழ்பாணத்தில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான போராட்டங்களை நிராகரித்து, பாதிக்கப்பட்டவர்களை பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தினார். காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்கள் சிலரது படங்களை தூக்கிக்கொண்டு திரிபவர்கள், சட்டவிரோத அமைப்புக்களில் சேர்ந்துகொண்டவர்களைப் பற்றியே விசாரிக்குமாறு கோருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் சம்பந்தமாக ஆயுதப் படைகள் பொறுப்பேற்க முடியாது, என அவர் பிரகடனம் செய்தார்.

அதே வாரம், புணர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு, எந்தவொரு விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதியும், அரசாங்கத்தை தூக்கிவீச முயற்சிக்கும் அமைப்புகளில் சேர்ந்துகொண்டால் இராணுவம் அவர்களைக் கைது செய்யும், என எச்சரித்தார். காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்குமாறு அல்லது அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு விடுக்கப்படும் எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்பதையே இந்தக் கருத்துக்கள் எச்சரிக்கின்றன.

சோ.ச.க. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது உட்பட அதன் வேலைத் திட்டத்திற்காக போராடுவதையும், கட்சியை பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தையும் உக்கிரமாக்கும். யாழ்ப்பாணத்தில் தனது உறுப்பினர்களுக்கு நடந்தது என்ன என்பதை விளக்குவதற்காக நேற்று கட்சி நடத்திய நிருபர்கள் மாநாட்டில் அதிகளவானோர் பங்குபற்றியிருந்தனர்.

எமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான இராணுவ வன்முறையை கண்டனம் செய்யுமாறும் எமது கட்சியை பாதுகாக்குமாறும் சோ.ச.க. தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. முழுத்தொழிலாள வர்க்கமும் அதனது அடிப்படை உரிமைகளுக்காக போராட்டத்துக்கு வரும் நிலையில், இத்தகைய ஜனநாயக-விரோத வழிமுறைகளை பயன்படுத்துவதானது, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் தயார் செய்து வரும் பொலிஸ்-அரச ஒடுக்குமுறை பற்றிய ஒரு எச்சரிக்கையாகும்.

-----------------------------------------------

சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரசிங்கம் மண்டபத்துக்குப் பொறுப்பாளியான யாழ். மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் ஆர். இராஜாராம் மண்டபத்தை கொடுக்க மறுத்துவிட்டார். பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதி பாதுகாப்புப் படையும், அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளுக்கு மண்டபத்தை கொடுக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் சோ.ச.க. ஜனவரி 29 ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை கடுமையாக கண்டனம் செய்ய முன்வருமாறு நாம் அனைவருக்கும் வேண்டுகோள்விடுக்கின்றோம்.