World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Social Conference outlines massive attacks on the working class

பிரான்ஸ்: தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களை சமூக மாநாடு கோடிட்டுக் காட்டுகிறது

By Antoine Lerougetel
12 July 2012
Back to screen version

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தால் கூட்டப்பட்ட “பெரும் சமூக மாநாடு” ஜூலை 9, 10 திகதிகளில் பாரிஸில் நடைபெற்றது. இது, பிரான்ஸின் கடனைக் குறைப்பதற்கும், பிரெஞ்சு வணிகத்தின் இலாபம், போட்டித்தன்மை ஆகியவற்றை அதிகரிப்பதற்குமான திட்டங்களை வரைய அரசு, தொழிற்சங்கங்கள், மற்றும் முதலாளிகளின் சங்கங்களில் இருந்து 300 அலுவலர்களை ஒன்றாகக் கொண்டுவந்து கூட்டியது.

பிரான்ஸும் ஐரோப்பாவும் இன்னும் ஆழ்ந்த முறையில் பொருளாதார மந்த நிலையில் சரிகையில், இச்சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிர தாக்குதல்களை செயல்படுத்துவதற்கு ஐக்கியமாய் இருப்பதில் உடன்பட்டுள்ளன.

மாநாட்டிற்குத் தன் ஆரம்ப உரையில் ஹாலண்ட், வெட்டுக்களுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒப்புதல் பெறுவது “கட்டாயமானது” என மேலும் குறிப்பிட்டார்: “இன்று கட்டாய ஆலோசனைகளை பொதுமுடிவுகள் எடுப்பதற்கு முன் தேவை என்பது உகந்த செயலாக இருக்க வேண்டும். பொருளாதார, சமூகப் பிரிவுகளில் பாராளுமன்றத்தில் எந்தச் சட்டமும் உரையாடல், ஆலோசனை என்ற கட்டம் இல்லாமல் இயற்றப்படக்கூடாது”, அவை தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே “சாதகமான சமரசத்தை” நிறுவும் நோக்கம் கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

பிரதம மந்திரி Jean-Marc Ayrault உடைய முடிவுரையும் இத்தகைய தொழிலாள வர்க்க விரோதக் கூட்டத்தின் கருத்துக்களைத்தான் விவரித்தது.

குறைந்தப்பட்ச சட்டபூர்வ ஊதியத்தில் (SMIC) அதிகரிப்புக்கள் என்பது விலைவாசி வீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது நிறுத்தப்படும்; மாறாக தேசிய வளர்ச்சியின் அடிப்படையில் கணக்கிப்படும். தேக்கம்அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றம் காணும் விலையேற்றம் இருக்கும் சூழலில், இதன் பொருள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் ஆழ்ந்த சரிவு என்பதாகும். இந்த வழிவகை கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டிருந்தால், இவை அனைத்தும் ஆழந்த பொருளாதார நெருக்கடியை கொண்ட ஆண்டுகள் இல்லை என்று இருந்தாலும், மாதாந்திரக் குறைந்தப்பட்ச ஊதியம் 200 யூரோக்கள் (அமெரிக்க டாலர் 240) அல்லது அதையும் விடக் குறைந்துதான் இருக்கும்.

தொழிலாளர் பிரிவுச் செலவுகள் சமூகப் பாதுகாப்புக்காக நிதி அளிக்கப்படுவது முதலாளிகளிடம் இருந்து தொழிலாளர்களின் முதுகுகளில் ஏற்றப்படும்; இது ஒரு பொதுச் சமூக பங்களிப்பு வரி (CSG) என்பதின் மூலம் செயல்படுத்தப்படும். இத்திடத்தின்படி தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பல பில்லியன் டாலர்கள் பறிமுதல் செய்யப்படும்; அதுவும் தற்போதைய நிலையில் சமூக பாதுகாப்பு (social security) நிதிக்குக் தொழிலாளர்கள் பங்களிப்பு ஐரோப்பிய மட்டத்தில் சராசரி 17.5 சதவீதமாக இருக்கையில், பிரான்சில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22.6 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Le Monde  கருத்தின்படி, “தொழில்துறை புதுப்பித்தலுக்கான வட்ட மேசையின் ஒருங்கிணைப்பாளரான’ EADS ன் (பாதுகாப்பு அளிப்புக்களுக்கு ஒப்பந்தக்கார நிறுவனம்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Louis Gallois இந்த வார இறுதியில் Aix-en-Provence ல் நடந்த பொருளாதார விவாதங்களில் 30ல் இருந்து 50 பில்லியன் யூரோக்கள் வரையிலான ஒரு மிகப் பெரிய “அதிர்ச்சித் திட்டத்திற்கு’, அதாவது சமூகப் பாதுகாப்பு பங்களிப்புக்கள் CSG க்கு மாற்றப்பட வேண்டும் என்று முறையீடு செய்தார்.

வணிகங்களில் இலாபங்களையும் போட்டித்தன்மையையும் அதிகரித்து முதலீடுகளை ஈர்ப்பதை விரிவாக்குவதற்காகத் தொழிலாளர் பிரிவுச் செலவுகளைக் குறைக்கும் வடிவமைப்புக் கொண்ட இந்த வரி, இழிந்த முறையில் வேலையின்மையை குறைப்பதற்கு ஒரு வழிவகை என நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் இது குறைவூதியத் தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரை மிகவும் கடுமையாக பாதிக்கும்.

உழைப்புக்கான செலவை குறைப்பதற்கும், வெட்டுக்களுக்கும் தொழிற்சங்கங்கள் பிரான்சில் ஒப்புக் கொண்டதைப் பாராட்டிய Le Monde கூறியது: “சமூகப் பங்காளிகள் [தொழிற்சங்கங்கள்],,,, உழைப்புக்கான செலவில் பிரச்சினை உள்ளது என்பதை இப்பொழுதுதான் முதல் தடவையாக பிரான்ஸில் ஒப்புக் கொண்டுள்ளனர். இது உண்மையான புரட்சியாகும். வலதுகள் இருகரங்களாலும் இதைக் கைதட்டிப் பாராட்ட வேண்டும்.”

மாநாட்டிற்குக் கொடுத்த ஆரம்ப உரையில், ஹாலண்ட் இழிந்த முறையில் வெட்டுக்களை, வேலைகளை காப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று காட்ட முற்பட்டார். “அனைத்துமே நம் நாட்டில் வேலை மிக உயர்ந்த மட்டத்தில் அடைய முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்” என்றார்.

அதேநேரத்தில் ஆலை மூடல்கள்அலையென நடப்பதை நிறுத்த ஹாலண்ட் ஏதும் செய்யவில்லை. வேலையின்மை விகிதம் 10%க்கும் அதிகமாகிவிட்டது; 15 முதல் 24 வயது வரை இருக்கும் தொழிலாளர்களிடையே 22.5% என உள்ளது. 60,000 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 84 ஆலைமூடல்கள் உடனடியாக உள்ளன; இதில் PSA, Valeo, Honeywell, Wonderbra, Air France இன்னும் சில வங்கிகளும் உள்ளன.

Ayrault முன்வைத்துள்ள நடவடிக்கைகள் தொழிலாளர்களுடைய ஊதியங்களையும் பணி நீக்கங்களையும் ஆழ்ந்த தாக்குதலுக்கு உட்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. Ayrault இந்த நடவடிக்கைகளை குறுகிய நேர வேலை ஏற்பாடுகளை மேம்படுத்த எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்; இதையொட்டி முதலாளிகள் தொழிலாளர்களைப் பதிவேட்டில் வைத்துக் கொள்ளலாம்—ஒரளவு அரசாங்க அளிப்பு அவர்கள் இழக்கும் ஊதியங்களுக்குக் கிடைக்கும்; இந்தத் திட்டம் பணிநீக்க கால இழப்பீட்டுத் தொகை கொடுப்பதை தவிர்க்கும்.

பிரெஞ்சு வணிகப் பிரமுகர்கள், தங்கள் பிரான்சின் குறுகிய நேர வேலை முறையை ஜேர்மனியின் Kurzarbeit  நடவடிக்கைகளை மாதிரியாகக் கொண்டு அமைக்க விரும்புகின்றனர்; பிந்தையதின்படி பொருளாதாரச் சரிவுக்காலத்தில் வணிகங்கள் இன்னும் விரைவாகத் தொழிலாளர்களின் ஊதியங்களை குறைக்க அனுமதிக்கப்படுகின்றன.

பிரெஞ்சு தொழிற்சங்கத் தலைவர்கள் ஆர்வத்துடன் PS அரசாங்கத்தின் வெட்டுகளுக்களுக்கு ஆதரவைக்கொடுத்தனர். கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கத்தில் இருக்கும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு CGT யின் தலைவர் பேர்னார்ட் தீபோ PS இன் “சமூக மாதிரி” குறித்து மகிழ்ச்சி கொண்டார்; PS உடன் பிணைந்த CFDT என்னும் பிரான்ஸின் ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பின் François Chérèque ஆலோசனைகள் நடத்தப்படுவது “மிக நல்ல விடயம்” என்று புகழ்ந்தார்.

FO (தொழிலாளர் சக்தி) உடைய Jean-Claude Mailly,  மாநாடு முடிவடைந்த பின்: “ஏராளமான பணிகள் உள்ளன, ஆனால் சமூக உரையாடல் அனைத்தையும் நிதானப்படுத்தியுள்ளது; இதையொட்டி நாம் இன்று மாலை பெரிதும் திருப்தியை அடைந்துள்ளோம்.” எனக் கூறினார்

PS அரசாங்கமும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் வெட்டுக்களுக்கு ஆதரவாக வரிசையில் நிற்பது பிரான்சின் குட்டி முதலாளித்துவம், போலி இடது கட்சிகள் ஆகியவற்றின் தொழிலாள வர்க்க விரோதத் தன்மை குறித்த பேரழிவு தரும் அம்பலப்படுத்துதல் ஆகும்; இவை அரசியல் அளவிலும் இந்த நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கின்றன.

LO எனப்படும் தொழிலாளர்கள் போராட்டம், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மற்றும் Jean-Luc Mélenchon உடைய இடது கட்சி ஆகியவை ஜனாதிபதித் தேர்தல்களில் இரண்டாம் சுற்றில் ஹாலண்டை ஆதரித்தன. தொழிற்சங்கங்களின் செல்வாக்கு, குறிப்பாக CGT உடையது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மீது செல்வாக்கை தக்க வைக்க தொடர்ந்து முயல்கின்றன.