World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Spokeswoman for CLASSE: “We have shaken Quebec’s government”

CLASSE இன் செய்தித் தொடர்பாளர்: “நாங்கள் கியூபெக் அரசாங்கத்தை அதிர்விற்குள்ளாக்கினோம்”

By a WSWS reporting team
7 July 2012
Back to screen version

கிட்டத்தட்ட ஐந்து மாதகாலமாக நடைபெறும் கியூபெக் மாணவர் வேலைநிறுத்தம் பற்றி அளிக்கப்படும் தகவல்களின் ஒரு பகுதியாக உலக சோசலிச வலைத் தளம் சமீபத்தில் மாணவர் ஒருமைப்பாட்டு தொழிற்சங்க சங்கத்தின் பரந்த கூட்டணியான CLASSE இன் ஒரு தலைவரான ஜென்னி ரேனோல்ட்ஸ் உடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் தொகுத்தமைக்கப்பட்ட வடிவத்தை வெளியிடுகிறது.

கல்வி ஒரு சமூக உரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் CLASSE கியூபெக்கின் லிபரல் அரசாங்கத்தின் பல்கலைக்கழக பயிற்சிக் கட்டணத்தை பாரியளவு உயர்த்தும் திட்டங்களுக்கு எதிரான ஒரு மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தது. தொழிற்சங்கங்கள் மற்றும் பிற முக்கிய மாணவ அமைப்புக்கள், அனைத்தும் பெருவணிக Parti Quebecois (PQ) உடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு முற்றிலும் மாறாக CLASSE சட்டவரைவு 78 ஐ மீறுவதற்கு அழைப்பு விடுத்தது. இச்சட்ட வரைவு மாணவர் வேலைநிறுத்தத்தை குற்றம்மிக்கது என உறுதிப்படுத்துவதோடு, கியூபெக்கில் எந்த இடத்திலும் எந்தப் பிரச்சினை குறித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.

CEGEP (முன்-பல்கலைக்கழகத் துவக்க மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி) இன் ஒரு 20 வயது மாணவரான ஜென்னி ரேனோல்ட்ஸ், CLASSE செய்தித்தொடர்பாளர்கள் மூன்று பேரில் ஒருவராவார்.

WSWS ஆசிரியர் குழுவிலுள்ள கீத் ஜோன்ஸ் Reynolds உடன் நடத்திய பேட்டியில் எழுப்பப்பட்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார்:

WSWS: வேலைநிறுத்தம் இப்பொழுது அதன் நான்காம் மாதத்திற்கு வந்துள்ளது. அரசாங்கம் தெளிவாக ஒரு கடினப் போக்கை எடுத்துள்ளது—இறுதியில் சட்டம் 78ஐத் தொடர்ந்து பொலிஸ் அடக்குமுறையும் நடந்தது. மாணவர்கள் கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் ஏன் இத்தனை பிடிவாதமாக, விரோதப் போக்கைக் கொண்டுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: நடப்பவற்றை மாற்றுவது மிகவும் கடினம் என்பதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம். ஏனெனில் இந்த அரசாங்கத்தின் கட்டணப்பயிற்சி அதிகரிப்புக்கள் பனிப்பாறையின் உச்சி மட்டும்தான். எல்லாவற்றையும் மீறி, பயிற்சிக் கட்டண அதிகரிப்பு செயல்படுத்தப்பட்டால், அரசாங்கம் அனைத்துவித பயன்படுத்தும் கட்டண அதிகரிப்பைச் சுமத்துவதற்கு அதிக வாய்ப்பும், அதன் “கலாச்சார புரட்சியை” ஆரம்பிப்பதற்கும் [“செலவு செய்து பயனடையவும்” கொள்கைப்படி பொதுப் பணிகளைப் பெறுங்கள் என்ற விதிமுறை] முடியும். ஏனெனில் மக்கள் பிரிவில் மாணவர்கள் குழுதான் செயற்பாடுகளை எதிர்க்க, வேலைநிறுத்தங்களுக்குத் தயாராக இருக்கிறது.

அரசாங்கத்தின் பிடிவாதம் மிக இழிந்த நிலையில் உள்ளது. இது அரசாங்கத்தை அனைத்துவித பிழைகளையும் செய்ய காரணமாகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தாததால், மோதலை முடிவிற்கு கொண்டுவரமுடியவில்லை.

 [பிரித்தானிய] கார்டியனில் ஒருவேளை இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் கியூபெக் மோதல் வட அமெரிக்காவில் புதிய தாராளவாதத்திற்கு எதிரான உண்மையான அச்சுறுத்தல்களில் முதலாவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நான் இது சற்றே மிகைப்படுத்தப்பட்டதோ என நினைத்தேன். ஆனால் இப்பொழுது அது உண்மைதான் என நினைக்கிறேன். நாங்கள் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உறுதி குலைத்துள்ளோம். பின்னோக்கி தள்ளப்பட்டுள்ள அரசாங்கம் மிகத் தீவிர நடவடிக்கைகள் எடுத்ததின் மூலம் தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டது. இவ்வாறு செய்கையில் அது அதனுடைய உண்மை முகத்தை மக்கள் முன் காட்டியுள்ளது.

WSWS: வேலைநிறுத்தம் உண்மையிலேயே சாரெஸ்ட்டின் தாராளவாத அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. ஆனால் அதிக அதிர்ச்சி பெறுகையிலேயே, அது இன்னும் பிடிவாதமாகவும், கொடுமையையும் மேற்கொள்கிறது. இதற்குக் காரணம், நீங்கள் கூறுவதுபோல், அதன் முழுத் திட்டமும், பொதுப்பணிகளை அகற்றும் திட்டம், சமூக உரிமைகளை அழிக்கும் திட்டம் என்பது முழு ஆளும் உயரடுக்கின் திட்டம் கனடாவில் மட்டும் இல்லாமல், கிரேக்கம் மற்றும் உலகெங்கிலும் என உள்ளது.

ஜென்னி ரேனோல்ட்ஸ்: உண்மையே, இது ஒரு மோதல். ஏதேனும் ஒரு வகையில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஆனால் இங்கு கியூபெக்கில் போராட்டம் மாணவர் வேலைநிறுத்தம் என்னும் வடிவை எடுத்துள்ளது. இது மேலும்மேலும் ஒரு மக்கள் போராட்டத்தை நோக்கி இயக்கப்படுகிறது.

WSWS: இன்றுவரை போராட்டத்தை நீங்கள் நடத்திவரும் முறையில் தொடர்ந்தால், அரசாங்கம் இறுதியில் பேச்சுக்கள் நடத்திக் கைவிடும் கட்டாயத்திற்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: CLASSE ல் உள்ள நாங்கள் எப்பொழுதுமே பேச்சுக்களை நடத்த தயாராக உள்ளோம். அதாவது, அரசாங்கம் பேச்சுக்களை நடத்தக் கூப்பிட்டால், நல்லது, நாங்கள் போவோம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை இது ஒன்றும் போராட்டத்தின் முக்கிய அச்சு அல்ல. மோதல் தீர்க்கப்படுவதற்கான வழிவகை, பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இரத்து செய்யப்பட வேண்டும்; அல்லது வேறு ஒருவழிவகை உண்டு—தேர்தல்களை நடத்தவும். தேர்தல்களை அவர்கள் நடத்தாவிட்டால், நாங்கள் மீண்டும் ஆகஸ்ட் மாதம் வேலைநிறுத்தத்தைத் தொடர்வோம் [அப்பொழுது அரசாங்கம் ஒத்திவைக்கப்பட்ட பயிற்சிக் காலத்தை ஆரம்பிக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது]. தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள், பெரிய தொழிற்சங்கங்களின் ஆதரவு இருந்தால் ஒரு சில நாட்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த பெரிய அணிதிரட்டலுக்கூடாக,  எங்களுக்கு பெரிய, ஆற்றல்மிக்க பலம் கிடைக்கும்.

WSWS:  நீங்கள் இப்பொழுது கூறியிருப்பது பல வினாக்களை எழுப்புகிறது.  முதலாவது, தொழிற்சங்கங்கள் உங்களுக்கு ஆதரவு கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சட்டம் 78க்குத் தாங்கள் கீழ்ப்படியப்போவதாக அவை அறிவித்துள்ளன. இரண்டாவதாக, இதுவரை தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களில் இருந்து நீங்கள் பெற்ற ஆதரவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: தொழிற்சங்கங்களின் பொதுவான ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம். நாம் 30 ஆண்டுகள் அதற்கும் பின்னால் இருந்த தொழிற்சங்கவாதத்தில் இருந்து மிகத் தொலைவில் உள்ளோம் என்பது உண்மைதான். இப்போதுள்ள தொழிற்சங்கவாதம் குறைந்தளவு போர்க்குணம் கொண்டது, அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்லுவது. இவர்கள் ஒரு சமூக வேலைநிறுத்தத்திற்கான ஒரு திட்டத்தை வரைவார்களா, எங்களைப் பொறுத்தவரை அது முற்றிலும் சாதிக்கப்படக்கூடியதே. இது நடப்பதைப் பல நிகழ்வுகள் தடுத்துவிடும் என்பதை நான் அறிவேன். உதாரணமாக அவர்கள் பலவித விதிகளைக் கொண்டுள்ளனர். அதன் பொருள் தொழிலாளர்கள் அவர்களின் எதிர்பார்ப்பை இழுந்துவிட நேரிடும் என்பதுதான்.

இரண்டு குழுக்கள் உள்ளன. ஒரு சமூக நெருக்கடியை விரும்பாத ஒரு குழு. இதில் மக்களில் பெரும்பகுதியினரும், தொழிற்சங்க இயக்கமும் உள்ளடங்குகின்றது. அவர்களைப் பொறுத்தவரை, ஒழுங்கு குலைக்கப்படும் கணமே, தவறு ஏற்படுகிறது, ஒழுங்கு மீட்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. கியூபெக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பான FECQ அடிக்கடி கூறுகிறது: “நிகழ்வுகள் அமைதிப்படுத்தப்பட வேண்டும். நாம் சமூக அமைதிக்குத் திரும்ப வேண்டும்.” எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் நெருக்கடியில் இருக்கும்போது, அது எதற்கோ நல்லதற்காகத்தான். ஒரு கொதிநிலைக் கணத்தில் நாங்கள் உள்ளோம், புத்துணர்ச்சியுடன் எழும் வகையில். இது இன்னும் முக்கிய நன்மைதீமையை புரிந்துணர்ந்துகொள்ளும் நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது. அவை இன்னும் பெரிய, அதிக அணிதிரளலுக்கு இட்டுச்செல்லும்.

WSWS: நீங்கள் தேர்தல்களைப் பற்றிப் பேசினீர்கள். அவை எப்படி நிகழ்வுப் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? Parti Quebecois மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சாத்தியமாக இருக்கக் கூடிய மாற்றீடு என்று நினைக்கிறீர்களா?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: எங்களைப் பொறுத்தவரை தேர்தல்கள் உண்மையில் நிகழ்வுகளைத் தீர்க்காதவைதான். ஜனநாயகம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று கூறும்போது, அது நம்மை பற்களைக் கடிக்க வைக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, தெருக்களில் நாங்கள் இருக்கும் போது நாங்கள் வெளிப்படுத்தும் குரல்—அதுதான் ஜனநாயகம்.

WSWS: ஜூன் மாத ஆரம்பத்தில் CLASSE இன்னும் பிற மாணவர் சங்கங்கள் மாற்றுத்த்திட்டம் ஒன்றைக் கொடுத்தன. அதில் அவர்கள் ஏழு ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு அரசாங்கத்தின் பயிற்சிக் கட்டண அதிகரிப்பை ஏற்றனர். இத்திட்டத்தை அரசாங்கம் ஏற்றிருந்தால், மாணவர்களுக்கு அது ஏற்கத்தக்கதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த மாற்றுத்திட்டம் தேர்தல்கள் விரைவில் வர உள்ளதால், தேர்தல் மூலம் ஒரு PQ அரசாங்கம் அமைக்கப்பட்டு மாணவர்கள் கோரிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்ற அடிப்படையில் வரவில்லையா?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: FECQ, FEUQ போன்ற கூட்டமைப்புக்கள்தான் இந்த கருத்துக்களை பேச்சுவார்த்தை மேசையில் வலியுறுத்தின. ஆனால் எங்கள் பேச்சு நடத்தும் குழு இவ்விவகாரத்தை சற்றே கைநழுவிப்போக விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். எப்படியும், இத்திட்டம் மாணவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் எனக் கூறுவதற்கில்லை.

FECQ, FEUQ ஆகியவை அரசாங்கம் அடுத்த18 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு நேரத்தில் தேர்தல்களுக்கு அழைப்பு விட வேண்டும் என்ற காரணத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளன. அவை PQ அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு தீர்வு எனக் காண்கின்றன. ஆனால் எங்களைப் பொருத்தவரை, இது ஒரு தீர்வு அல்ல. ஒருக்கால் ஒரு குறுகியகாலத் தீர்வாக இருக்கலாம், ஏனெனில் PQ ஆட்சியை எடுத்துக் கொண்டால், அவர்கள் உண்மையிலேயே Jean Charest உடைய கியூபெக் தாராளவாதப் பிரதமர் போல் கடினப் போக்கை நிலைநிறுத்த முடியாது.

தாராளவாதிகள் மீண்டும் பதவிக்கு வருவது எங்களுக்கு முற்றிலும் பேரழிவைத்தான் கொடுக்கும். அதே நேரத்தில் PQ இக்கட்டத்தில் அதிகக் கடினப் போக்கைக் கொள்ள முடியாது என்பது உறுதி.

WSWS: முன்பு ஆட்சியில் இருந்தபோது PQ தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் கியூபெக்கின் வரலாற்றிலேயே மிக அதிக சமூகநல வெட்டுக்களைச் சுமத்தவில்லையா?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: ஆம், எனக்குத் தெரியும். அதனால்தான் தேர்தல்கள் நிகழ்வதற்கான சிறப்பான நிலைமை இக்கட்டத்தில் இல்லை என்று உங்களிடம் கூறினேன். நாம் நம் அணிதிரட்டலுடன் முன்னேறி, இந்த அரசாங்கத்தை முறிக்க வேண்டும். அது பள்ளிப் பயிற்சிக் கட்டணப் பிரச்சினையில் பின்வாங்கினால், அதன் பொருள் நம் அரசாங்கங்கள் பொருளாதார உயரடுக்குகளுக்காக அங்கு இல்லை என்பது ஆகும்; அவர்கள் ஒன்றும் வங்கிகள், பெருநிறுவனங்களாக்காக ஆட்சி செய்ய அங்கு இல்லை. நாட்டின் 1% இனருக்காக அல்ல, முழு மக்களுக்காக, அனைவருடைய பொதுநலத்திற்காகத்தான் ஆள்வதற்கு அங்கு இருக்கின்றனர் என்று பொருள்படும்.

PQ வை PLQ [கியுபெக்கின் லிபரல் கட்சி] இடம் இருந்து உண்மையிலேயே வித்தியாசப்படுத்துவது சுதந்திரம் பற்றி கனவுதானென்று நான் நினைக்கிறேன். ஆனால் உண்மையில், PQ வும் லிபரல் கட்சியைப் போலவே ஊழலிலும், சதிக்கூட்டிலும் ஆழ்ந்த சகதியில் அகப்பட்டுக் கொண்டது போல்தான் உள்ளது.... CLASSE உடய கருத்துக்களுடன் பெரிதும் இயைந்திருக்கக் கூடிய கட்சி Quebec Solidaire ஆகும். ஆனால் CLASSE இற்குள்ளேயே பல அரசியல் கருத்து வேறுபாடுகளும் பெரிதாக உள்ளன என்று நான் கூறத்தான் வேண்டும்—அனார்க்கிசத்தில் இருந்து கம்யூனிசம் வரை கருத்துக்கள் உள்ளன. இதைத்தவிர சமூக ஜனநாயக வாதிகளும் உள்ளனர்.

WSWS: நீங்கள் ஒரு சமூக வேலைநிறுத்தம் பற்றிப் பேசியுள்ளீர்கள். அது இப்பொழுது CLASSE உடைய மூலோபாயமா, ஒரு சமூக வேலைநிறுத்தம் என்றால் தெளிவாக என்ன என நீங்கள் கருதுகின்றீர்கள்?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: சட்டம் 78ஐப் பொறுத்தவரை, மாணவர்களுக்கான உதவிநிதியை பொறுத்தவரை நாங்கள் இக்கட்டான நிலையில் உள்ளோம். அதாவது, வகுப்புக்கள் நிறுத்த, வேலைநிறுத்த நிலைகளை அமைக்க நாங்கள் முடிவெடுத்தால், அரசாங்கம் எங்கள் மாணவர்களுக்கான உதவிநிதியை ஒரு பயிற்சிப் பருவக்காலத்திற்கு ஒவ்வொரு நாளும் வெட்டலாம். இரண்டு வாரங்கள் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அதன் பொருள் 14 பருவக்காலங்களுக்கு மாணவர்களுக்கு உதவிநிதி கிடையாது.

இந்த விதிகள் தற்காலிகமாக நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் ஏன் சமூகவேலைநிறுத்தம் செய்யக்கூடாது எனக் கேட்கிறோம். அவர்கள் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் செயல்படுத்த முடியாது, அதுவும் ஒரே நேரத்தில். இதுதான் பாரிய அணிதிரட்டிற்கு உகந்த காலமும், அனைத்துச் சிக்கனக் கொள்கைகளையும் முறிப்பதற்கான துல்லிய நேரம்.

அவ்வாறுதான் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கோடை காலத்தில் நாங்கள் கியூபெக்கைச் சுற்றி மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம், எங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்துவோம், சமூக வேலைநிறுத்தம் பற்றி விவாதிப்போம். எங்கள் கோரிக்கைகளை கொண்ட பிரகடன அறிக்கையை நேரடியாக மக்களுக்குக் கூறும் வகையில் தயாரிப்போம். அது நாட்டிற்கு ஒரு செய்தி போல் அமையும்.

ஒன்று மட்டும் உறுதி. நாங்கள் ஒரு சமூக வேலைநிறுத்தம் அல்லது ஒரு சில தினங்கள் பாரிய அணிதிரட்டை விரும்பினால், அதற்கு அனைத்து சாதாரண தொழிலாளர்களிடமும் செல்வது தேவையாகும். தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் சென்று எங்கள் சமூக வேலைநிறுத்தத்திற்கு இசைவு கொடுங்கள் என்று கோரமுடியாது, ஏனெனில் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். ஏன் இது தேவை என்பது குறித்து அவர்களை நம்பவைப்பதற்குத் தொழிலாளர்கள் மூலம் செல்வதுதான் உகந்தது. அவர்கள்தான் இதனை முன்னெடுப்பார்கள். அவர்கள்தான் தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மீது அழுத்தம் கொண்டு வருவர். ஆனால் அது ஒரு எளிய பணி அல்ல. எப்படி நிகழ்வுகள் நடக்கும் என்பது தெளிவாக இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். காலவரம்பற்ற சமூக வேலைநிறுத்தம் எங்களால் அடையப்பட முடியும் என நான் நினைக்கவில்லை. ஒருக்கால் சில தினங்களுக்கு நடத்தப்பட முடியும். ஆனால் நீண்ட காலத்திற்கு இயலாது.

WSWS: அரசாங்கத்தை வீழ்த்தும் முன்னோக்கு உடைய ஒரு வேலைநிறுத்தமாக இது இருக்குமா?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: அரசாங்கத்தை முறிப்பதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், சூழ்நிலையை மாற்றுவதற்கு: நாம் போதுமான சிக்கன அரசியலைப் பார்த்துவிட்டோம். எனவே இவை அனைத்தும் கருத்திற்கொண்ட நிகழ்வுகள் நடைபெறும். அரசாங்கத்தை வீழ்த்துவது குறித்து நாம் பேசுகிறோம் என்றால், நாம் ஒன்றும் தேசியச் சட்டமன்றத்திற்கு கவர்க்கோல்களை- pitchforks- கையில் எடுத்துக் கொண்டு போகப்போகிறோம் என நான் நினைக்கவில்லை. அந்த முன்னோக்குடன் அல்ல. ஆனால் எம்மிடம் உள்ள முன்னோக்குடன் நாம் இருப்பவற்றை மாற்ற முடிந்தால், நம் அரசியல் முறையை மாற்ற முடிந்தால், ஆம் நாங்கள் அதைச் செய்வோம். ஆனால் எங்களுடன் மக்களை எம்முடன் சேருமாறு நம்பிக்கை கொள்ள செய்யவது என்றால் அது ஒன்றும் எப்பொழுதும் எளிதானது அல்ல.

WSWS: உழைக்கும் மக்கள், தொழிலாள வர்க்கம் வேலைநிறுத்தம் மற்றும் சட்டம் 78 குறித்தும் கொண்டுள்ள மனப்பான்மை என்ன என நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஜென்னி ரேனோல்ட்ஸ்: அது தெளிவாக இல்லை. ஏனெனில் தொழிலாளர் வர்க்கத்தினரில் பெரும்பாலானவர்கள், ஆலைகள் அத்தகைய இடங்கள் போன்றவற்றில் வேலை செய்பவர்கள், எங்களுடன் இருக்கின்றார்கள் எனக் கூறுவதற்கில்லை. இது ஒரு புதிய ஜனரஞ்சகவாதத்தை போன்றது. நான் கூறுவதின் பொருளை உங்களால் விளங்கிக்கொள்ள முடிகிறதா என எனக்குத் தெரியவில்லை. மக்கள் மிகக் குறைந்த வரிகளைத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள், இன்னும் அதிகம் வேண்டும் என்று கோருகின்றனர், அரசாங்கத்துடன் சீற்றத்தில் உள்ளனர், இன்னும் அதிகம் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். கியூபெக்கில் உள்ள தொழிலாளர் வர்க்கம் உண்மையிலேயே கடினமான காலத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தொழிலாளிகள் மிக, மிக நல்ல ஊதியம் பெறும் ஆலைகள் உள்ளன. இவர்களுக்குச் சிறந்த ஊதியம் கிடைப்பதால், பெரிய கார், பெரிய வீடு என்னும் கலாச்சாரம் ஆழமாக ஊடுருவியுள்ளது.

இந்த வர்க்கப்போராட்டக் கருத்து குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விடயங்கள் உண்மையில் மாறிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. மிக வறியவர்களில் ஒரு பிரிவினர் எங்களுடன் இருக்கிறார்கள் எனக்கூறுவேன். ஆனால் அவர்களுக்கு அரசியலில் அக்கறை கிடையாது.

மத்தியதர வர்க்கம் எம்முடன் உள்ளது எனக் கூறுவேன். மேலும் நாம் பாதுகாக்க விரும்பும் மதிப்புகளை  கொண்டுள்ள முதலாளித்துவத்தினர் சிலரும் எங்களுடன் தெருக்களுக்கு வருகின்றனர். எனவே வரையறைப்படுத்துவது பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்.

WSWS: நிலைமை நீங்கள் காட்டுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கடந்த 30 ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையில் வியத்தகு சரிவு ஏற்பட்டுள்ளது—சமூக சமத்துவமின்மை பெரிதும் பரவிவிட்டது, பொருளாதாரப் பாதுகாப்பின்மையும் பெருகிவிட்டது. உயர்மட்ட 10% இனர், குறிப்பாக உயர்மட்ட 1% விகித்தினர் வரி ஆதாயங்கள் முழுவதயும் எடுத்துக் கொண்டுள்ளனர்; அதே நேரத்தில் தொழிலாளர்களுடைய ஊதியங்கள் தேக்கம் அடைந்துள்ளன, அல்லது சரிந்துள்ளன. வரிச்சுமை அதிகரித்து விட்டது, அதே நேரத்தில் பொதுச்சேவைகள் அப்பட்டமாக இழப்புக்களைக் கண்டுள்ளன.

ஜென்னி ரேனோல்ட்ஸ்:  Rio Tinto Alcan இல் நடக்கும் மோதல்கள் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? வடக்கு கியூபெக்கில் உள்ள Alma வில் எனக்குப் பலரைத் தெரியும். அவர்கள் Rio Tinto Alcan இல் உள்ள தொழிலாளர்கள். அவர்களும் தற்பொழுது பணிநீக்கம் செய்யப்படாமல் இருந்தால், அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள் எனக் கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் உண்மையிலேயே அப்பகுதிச் செல்வத்தின்மீது கட்டுப்பாடு கொண்டவர்கள், பெரிய கார்கள், பெரிய நீச்சல் தடாகங்களை வைத்திருப்பவர்கள். எங்கள் பகுதியில் தென்மேற்கு கியூபெக்கில் ஒரு தொழில் நகரமான Salaberry-dd-Valleyfield இல் பல ஆலை மூடல்கள் நடந்துள்ளன. தெருக்களுக்கு அனுப்பப்பட்டுவிட்ட தொழிலாளர்களே பல பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் $300,000 மதிப்புடைய வீடுகளை வாங்கினர், கடனில் ஆழ்ந்தனர். வாழ்க்கை முறையை மாறிவிட்டது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

WSWS: கனடாவிலும் உலகெங்கிலும் நடப்பது போலவே, கியூபெக்கிலும் தொழிலாளர்கள் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் சிக்கனத்தை வலியுறுத்தும் சமூக ஜனநாயக NDP ஆகிய“இடது” கட்சிகளாலும் திட்டமிட்டு காட்டிக் கொடுக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு ஒரே முன்னேறுவதற்கான பாதை சமூகத்தை முற்போக்காக மறு கட்டமைத்து, அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான் என்பதை அறிய வேண்டும். முதலாளித்துவம் அதை கொடுக்காது, கொடுக்கவும் முடியாது. நாங்கள் இந்த மாணவர் வேலைநிறுத்தம் கனடா அதற்கு அப்பாலும் அனைத்துப் பொதுப் பணிகள், வேலைகள், தொழிலாளர் உரிமைகள் ஆகியவற்றை பெருவணிகம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்து பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தைத் திரட்டுவதற்குக் ஊக்கியாக இருக்க வேண்டும் என்பதற்காக போராடுகின்றோம்.

ஜென்னி ரேனோல்ட்ஸ்:  நாங்கள் பணம் கொடுத்து பயனுறுக என்பதையும் மற்றும் அனைத்துப் பணிகளை தனியார்மயமாக்குவதையும், பொதுப்பணிகளை வணிகத் தன்மை உடையாதாக்குவதையும் எதிர்க்கிறோம். ஆனால் வெகுஜன செய்தி ஊடகம் எப்பொழுதும் ஒருக்கால் அமைப்புமுறையைக் காப்பாற்றுவதற்காக இருக்கலாம் என்பதற்காக இதை சிறிய அளவாக, குறுகியதாக காட்ட முனைவதுபோல் தெரிகின்றது. ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் என தெரியவில்லை. ஆனால் எனக்கு இவ்வாறே தோன்றுகின்றது. எம்மோடு ஏன் இதைப்பற்றி பேசவில்லை என பலர் எம்மிடம் கேட்கின்றார்கள். ஆனால் நாம் அதை செய்கின்றோம், இதனால் தான் ஒரு பிரசுர அறிக்கையை வெளியிட உள்ளோம். 

இந்த வேலைநிறுத்தத்தை நாங்கள் பயிற்சிக் கட்டண அதிகரிப்புக்கள் பிரச்சினை குறித்து ஆரம்பித்தோம். ஆனால் இப்போராட்டம் நாங்கள் தொடங்கியதைவிட அதிக தூரத்திற்கு நகர்ந்து விட்டது. எனவே நாங்கள் சற்று தலையை உயர்த்தி நிற்கிறோம் என நினைக்கிறேன். மக்கள் கேட்கிறார்கள்: “நீங்கள் ஏன் இதைச் செய்யவில்லை?” ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இந்த மக்கள் எங்களுடைய உதவிக்கு வரவேண்டும்.

WSWS: இங்கு நான்கு மாதமாக நடக்கும் நிகழ்வுகளின் சர்வதேச முக்கியத்துவம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜென்னி ரேனோல்ட்ஸ்:  அரபு வசந்தம், ஆக்கிரமிப்பு போராட்டம் போன்ற சர்வதேச அளவில் நடக்கும் போராட்டங்களின் ஆளுமைக்கு பலர் உட்பட்டுள்ளனர். நாங்கள் நடத்தும் வேலைநிறுத்தம் பேசாமல் கைகளை கட்டிக்கொண்டு இருந்து மற்றொரு கட்சி அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் வரை காத்திருக்காமல் எங்கள் பிரிவினர் மத்தியில் நேரடியாகச் செயல்பட்டால் மாற்றங்களை கொண்டுவரமுடியும் என்பதை காட்டியுள்ளது. மக்கள் தெருக்களுக்கு வருவதின் மூலம், பொருளாதார பாதிப்புக்கள் மூலம் மாற்றம் நேரடியாகக் கொண்டு வரப்படும். எல்லா இடங்களிலும் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். இவை ஒன்றின்மீது ஒன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. அனைவரும் இவ்வாறு செய்யத் தொடங்கினால், நாம் மாற்றங்களைக் கொண்டுவர முடியும், வேறுவிதமாகச் செயல்பட முடியும்.