World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Caterpillar strike and the impoverishment of the American working class

கட்டர்பில்லர் வேலைநிறுத்தமும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை ஏழ்மையாக்குவதும்

Joseph Kishore
27 July 2012
Back to screen version

2008 இலையுதிர்காலத்தில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னும், பெருநிறுவன அமெரிக்கா தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தன் தாக்குதலை அதிகரித்துக் கொண்டு வருகிறது. மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், வறுமைத் தர ஊதியங்களை ஒரு தேசிய அடையாளச்சின்னமாக்க மிகக் குறைந்த நலன்கள் அல்லது நலன்களே இல்லை என்ற ஒரு மூலோபாயத்தை வேண்டுமென்றே நிறுவ முயல்கிறது.

கனரக இயந்திர உற்பத்தியாளர் இல்லிநோய்ஸின் ஜோலியட்டில் உள்ள கட்டர்பில்லர் ஆலைத் தொழிலாளர்கள், நிர்வாகத்தின் இந்த இரக்கமற்ற மூலோபாயத்தைத் தொடரும் உறுதிப்பாட்டிற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் உள்ளனர்.

கட்டுமானத்துறை இயந்திரங்களை உலகில் மிக அதிக அளவு உற்பத்தி செய்யும் கட்டர்பில்லர், 150,000 க்கும் மேலான ஊழியர்களைக் கொண்டுள்ளது. இது மூன்று மாதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜோலியட் ஆலைத் தொழிலாளர்களை ஊதியத் தேக்கத்தை ஏற்குமாறும், சுகாதாரச் செலவினங்களுக்கான தொழிலாளர் பங்கில் தீவிர அதிகரிப்பை ஏற்குமாறும் கோருகிறது. பழைய, நல்ல ஊதியம் பெறும் தொழிலாளர்களை வேண்டும் என்றே வெளியே அனுப்பும் நோக்கத்தைக் கொண்ட நடவடிக்கையில், நிறுவனம் ஓய்வூதிய விடுமுறைக்குத் தகுதியுள்ள தொழிலாளர்களை ஓராண்டிற்குள் விலகுமாறும் இல்லாவிடின் அவர்கள் தங்கள் நலன்களை இழந்துவிடுவர் என்றும் கோருகிறது.

இரு கட்ட ஊதிய முறையைச் செயல்படுத்தும் முதல் நிறுவனங்களில் ஒன்றான கட்டர்பில்லரில் இருக்கும் குறைவூதியத் தொழிலாளர்கள் ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு 13 டாலர் தான் ஊதியத்தைப் பெறுகின்றனர். இதைத்தான் அளவீடாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிறுவனம் விரும்புகிறது. அதன் பின் இதைவிடக் குறைந்த ஊதியங்களுக்கும் இதுதான் அடித்தளமாக  இருக்க வேண்டும் என விரும்புகிறது.

கட்டர்பில்லர் ஓர் உலகளாவிய நிறுவனம் ஆகும். சீனா, இந்தியா, பிரேசில், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவில் இதன் செயற்பாடுகள் உள்ளன. இது ஒரு சர்வதேச மூலோபாயத்தைப் பின்பற்றுகிறது. கடந்த ஆண்டு ஒன்டாரியோவில் லண்டன் ஆலைத் தொழிலாளர்கள் நிர்வாகம் கோரிய 50% ஊதியக் குறைப்பை ($28 என்பதில் இருந்து $14 ஒரு மணிநேரத்திற்கு என்பதை) நிராகரித்தபின், நிர்வாகம் ஆலையை உடனே மூடிவிட்டு இந்தியானாவில் உற்பத்தியைத் தொடர்ந்தது. அங்கு தொழிலாளர்கள் மணிக்கு 12.50 டாலர் என்றுதான் ஊதியம் பெறுகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் மீதான இத்தாக்குதல் பெருநிறுவன இலாபங்களில் தீவிர அதிகரிப்பை சாத்தியமாகச் செய்துவிட்டது. இதனால் இரண்டாம் காலாண்டில் 1.7 பில்லியன் டாலர் இலாபத்தை அது அடைந்துள்ளது. இலாபங்களில் அதிகரிப்பு என்பது ஊதியங்களைக் குறைக்கும் உந்துதலைக் குறைத்துவிடவில்லை. மாறாக பெருநிறுவன நிர்வாகத்தின் பேராசைக்குக் கூடுதல் ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. இப்பொழுது அது அமெரிக்க உற்பத்தித்துறையில் இலாபத்தை மிகப் பெரியளவில் அதிகரிக்கும் வகையில் தொழிலாள வர்க்கத்தை ஏழ்மைக்குள்ளாக்க முற்படுகிறது.

இந்நிகழ்வைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த நியூ யோர்க் டைம்ஸ் சமீபத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது: ஒரு புதிய நடைமுறைக்களத்தின் முன்னணியில் இருக்க கட்டர்பில்லர் முயல்கிறது. இதனால் அது வணிகம் அதிகரித்தபோதிலும் கூட அதன் தொழிலாளர்களிடம் இருந்து தீவிர விட்டுக்கொடுப்புகளை எதிர்பார்க்கிறது;.

பெருநிறுவன, நிதிய உயரடுக்கைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் மட்டுமே இதில் தொடர்பு கொண்டிருக்கவில்லை. மாறாக வர்க்க உறவுகளை நிரந்தரமாக மறுகட்டமைத்தல் என்ற கருத்துத்தான் உள்ளது. ஏற்கனவே 2008ல் முன்வைக்கப்பட்ட இந்த நிகழ்போக்கு, பெருமந்த நிலைக்குப் பின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததில் இருந்து அதிகம் விரிவாகியுள்ளது. பாரிய வேலையின்மை இதற்கு ஒரு பெரும் உந்து சக்தியாகக் காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் உயிர்வாழ்வதற்கு போதும் என்பதற்கான ஊதியங்களை ஏற்கும் கட்டாயம் புதிய வழமையான நிலையாக வந்துள்ளது.

ஆகஸ்ட் முடிவில் தற்போதைய ஒப்பந்தங்கள் முடிவடையும்போது அமெரிக்க எஃகு நிறுவனங்கள் தங்கள் மணிநேர ஊதியத்தையும் நலன்களின் விகிதங்களையும் கிட்டத்தட்ட 36% குறைக்கும் நோக்கத்தை செயல்படுத்த விழைகின்றன. உலகின் மிகப் பெரிய எஃகுத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ArcelorMittal ம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்  கொடுத்துள்ள தகவல்படி, குறைந்த செயற்பாட்டுக் காலங்களில் ஊதியங்களைக் குறைப்பதற்கான ஒருதலைப்பட்ச உரிமையை நாடுவதுடன், வாரத்திற்கு 32 மணிநேர வேலை என்னும் திட்டத்தையும் செயல்படுத்த விரும்புகிறது.

இதனால் அவர்கள் விரும்பும் விளைவு உற்பத்தித்துறை தொழிலாளர்களின் ஊதியம் சேவைத்துறை தொழிலாளர்களைவிட அதிகமாக இருக்கக்கூடாது என்பதாகும். ஏற்கனவே பல நிறுவனங்களில் இது உண்மையான நிலைமை என ஆகிவிட்டது. American Axle என்னும் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் Three Rivers ஆலையில் (இது ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டு 2008ல் தோல்வியுற்ற இடம் ஆகும்), புதிதாக வேலைக்கு எடுக்கப்படுபவர்கள் மணித்தியாலத்திற்கு $10 என்றுதான் ஊதியம் பெறுகின்றன. இது ஆண்டு ஒன்றிற்கு $21,000 என ஆகிறது. இது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு உத்தியோகபூர்வ வறுமைக் கோடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட $2,000தான் அதிகம்.

உற்பத்தித்துறை தொழிலாளர்களின் செலவுகள் சரிகின்றபோதிலும், உற்பத்தி அதிகரிப்பதுடன் தொழிலாள வர்க்கத்தின் வாழ்வதற்கான செலவுகள் தீவிரமாக உயர்ந்துள்ளன.

இத்தகைய போக்கு உற்பத்தித்துறை தொழிலாளர்களுடன் நின்றுவிடவில்லை. நியூயோர்க்கிலுள்ள பெரும் எரிசக்தி நிறுவனமான Con Edison ல் பெருநிறுவன நிர்வாகம் ஜூலை 1 முதல் 8,500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். இதன் நோக்கம் அவர்கள் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளில் கூடுதல் பங்களிப்பு, ஓய்வூதிய வயது அதிகரிக்கப்படுவது ஏற்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலாகும். இதைத்தவிர ஒரு புதிய 401(k) மாதிரியிலான ஓய்வூதியத்திட்டம் புதிய தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. நேற்று ஜனநாயகக் கட்சி ஆளுனர் மூலம் ஏற்பட்ட ஓர் உடன்பாடு தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும், நிர்வாகம் ஆணையிட்ட வழிவகையில் அறிவிக்கப்பட்டது.

இத்தாக்குதலுக்கு எதிராகத் தொழிலாளர்களிடையே எதிர்ப்பு இல்லாமல் போய்விடவில்லை. ஜோலியட்டில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் Con Ed இல் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பெரும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய போராட்டங்களுக்குத் தொழிலாளர் வர்க்கம் முழுவதும் பரந்த பரிவுணர்வும் ஆதரவும் உள்ளன.

ஆனால் ஆளும் வர்க்கத்தின் முழுமையான திட்டமிட்ட மூலோபாயத்திற்கு தொழிலாளர்கள் தங்கள் சொந்த மூலோபாயத்துடன் விடையிறுக்க வேண்டும்.

அத்தகைய மூலோபாயத்தின் அடிப்படை முன்னிலைப்பாடுகள் யாவை?

முதலில், எந்தப் போராட்டமும் தொழிற்சங்கங்களுடன் அமைப்புரீதியாக முறித்துக் கொள்ளப்பட்ட பின்தான் சாத்தியமாகும். இதற்கு சுயாதீனமான தொழிலாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தொழிற்சங்கம் என்னும் சொல் இப்பொழுதுள்ள அத்தகைய அமைப்புக்களுக்கு முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் அச்சொல் ஆரம்பத்தில் நிறுவனங்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள் இணைக்கப்படுவதின் தேவையைத்தான் குறித்தது. உண்மையில் கட்டர்பில்லரின் ஜோலியட் ஆலையில் உள்ள International Association of Machinists உட்பட இந்த அமைப்புக்கள் வெடிக்கும் போராட்டம் எதையும் தனிமைப்படுத்துவதையே அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளன. அவை தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக மத்தியதர வர்க்க உயர்மட்ட நிர்வாகிகள் என்னும் சலுகை பெற்ற அடுக்கைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், பெருநிறுவன நிர்வாகத்தின் ஒரு கரம் போல்தான் செயல்படுகின்றன.

இரண்டாவதாக, பெருநிறுவனங்களின் சர்வதேச மூலோபாயம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச மூலோபாயத்தால் எதிர்கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் பெருநிறுவனங்கள் பல நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக ஊதியங்களைக் குறைக்கும் வகையில் போட்டி ஏற்படுத்தி மோத வைக்கின்றனர். பெருநிறுவனங்களுக்கு எதிரான எத்தகைய வெற்றிகரமான போராட்டமும் தொழிற்சங்கங்கள் சுமத்தும் தேசியத் தடைகளில் இருந்து தடையற்று சுயாதீனமாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, தொழிலாளர்களின் போராட்டங்கள் அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும். பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்குப் பின் அரசாங்கத்தின் அதிகாரம் உள்ளது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி இரண்டுமே இதில் உள்ளன. உண்மையில் உற்பத்தித் துறைத் தொழிலாளர்கள் மீதான குறிப்பான தாக்குதலுக்கு ஒபாமா நிர்வாகம் பச்சை விளக்குக் காட்டும் வகையில் 2009ல் கார்த்தயாரிப்புத் தொழிலில் கட்டாய மறு கட்டமைப்பிற்கு ஏற்பாடு செய்தது. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லரின் திவால் நிலை சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியச் செலவுகளில் தீவிர வெட்டுக்களைச் செயல்படுத்தப் பயன்பட்டது. அதேநேரத்தில் புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர்தான் ஊதியம் என்பதும் ஏற்படுத்தப்பட்டது.

இறுதியாக, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது என்பது இப்பொழுதுள்ள முதலாளித்தவ அமைப்புமுறையுடன் இயைந்து இருக்காது என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். இதுவோ உற்பத்தி முறைமீது தனியார் சொத்துடமையையும், இலாபத்தையும் அடித்தளமாக கொண்டுள்ளது. தங்கள் சொந்தச் செல்வக்கொழிப்பைத் தொடரும் இரக்கமற்ற செயற்பாடுகளை ஒட்டி, ஆளும்வர்க்கம் தான் பாதுகாக்கும் பொருளாதார முறையின் அடிப்படைக் கொள்கைகளைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவத்திற்கு மாற்றீடு சோசலிசம்தான். பொது உடைமை அதாவது பொருளாதாரம் சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான்.

தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் நிலைமைக்கு எளிய, சாதாரண தீர்வு ஏதும் கிடையாது. ஒரு புதிய, சமத்துவ அடிப்படையிலான சமூக வாழ்வு என்பது சர்வதேச ரீதியாக தொழிலாள வர்க்கம் பரந்த போராட்டங்களை நடத்தாமால் நடைமுறைக்குக் கொண்டவரப்பட முடியாது. கடந்த ஒன்றரை ஆண்டு நிகழ்வுகள் முதலாளித்துவ நெருக்கடியே அத்தகைய போராட்டங்கள் வருவதற்கு வகைசெய்துள்ளது என்பதை நிரூபித்துள்ளன. ஆரம்ப போராட்டங்கள் எதிர்காலத்தில் வரவிருப்பவை குறித்த சிறிய மாதிரிதான். உலக முதலாளித்துவத்தின் மையத்தில் உள்ள அமெரிக்கா சமூக எழுச்சிக்கு முதிர்ச்சியடைந்து நிற்கிறது. இந்த எழுச்சி இன்னும் தெளிவாக தொழிலாள வர்க்கத் தன்மையைத்தான் எடுத்துக் கொள்ளும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தேவைப்படுவது தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு புதிய அரசியல் தலைமை முறையாகக் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதுதான். இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் மைய மூலோபாய நோக்கம் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கு ஜெரி வைட், துணை ஜனாதிபதி பதவிக்கு பிலிஸ் ஷெரர் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பிரச்சாரத்தின் மைய நோக்கம் நாடெங்கிலும் தொழிலாளர்கள் இளைஞர்களிடையே ஒரு புதிய சோசலிச தலைமையை கட்டியமைப்பதாகும். இந்த முன்னோக்குடன் உடன்பாடு காணும் அனைத்துத் தொழிலாளர்கள், இளைஞர்ளையும் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு அழைப்பு விடுகிறோம். சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து சோசலிசத்திற்காகப் போராடுமாறு அழைப்பு விடுகிறோம். இன்னும் அதிக தகவல்களை என்னும் வலைத்தளத்தில் காண்க.