World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The lessons of Wisconsin

விஸ்கான்சினின் படிப்பினைகள்

Patrick Martin
7 June 2012

Back to screen version

ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் செவ்வாயன்று விஸ்கான்சின் திருப்பி அழைத்தல் தேர்தலில் படுதோல்வி அடைந்தமை, உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்பார்க்கக்கூடிய பிரதிபலிப்பைத்தான் உருவாக்கியுள்ளது. தீவிரவலதுகளிடம் இருந்து ஒரு நயமற்ற வெற்றிவாதத்தையும், ஒபாமா நிர்வாகத்தின் வக்காலத்து வாங்குபவர்களிடையே சுயநியாயப்படுத்தல், கைகளைப் பிசைதல் என்று தாராளவாத, போலி-இடதுகளிடையே இவ்வாறான பிரதிபலிப்பு இருந்தது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குடியரசுக் கட்சி ஆளுனர் ஸ்காட் வாக்கர் வெற்றியை முழங்கியுள்ளது; வரி செலுத்துவோர் பைகளில் இருந்து ஏகபோக உரிமையில், நிரந்தரமாகப் பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பும் சிறப்பு ஆர்வம் உடைய, நன்கு வசதி படைத்தவர்களின் சீற்றம் மிகுந்த தோல்வி ஆகும் என்றும் கூறியுள்ளது.

AFL-CIO தலைவர் ரிச்சர்ட் ரும்கா டெக்சாஸ் பில்லியனர்கள், வாக்கருக்கு நிதியுதவி வழங்கிய சர்வதேச நிறுவனங்கள் ஆகியோரைக் குறைகூறியுள்ளார். தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இழிந்ததன்மை மற்றும் மெத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில், ட்ரும்கா தன்னுடைய அரசியல் மூலோபாயத்தில் எவ்வித மாற்றமும் இராது என்றார்.

உத்தியோகபூர்வ அரசியலின் எத்தரப்பிலும் முற்றிலும் காணப்படாதது ஜூன் 5 தோல்விக்கான மூலகாரணங்களை பற்றித் தீவிர ஆய்வு ஏதும் இல்லாததுதான். உண்மையில் இது வெகுஜனத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள் வேலைநிறுத்தங்கள் என விஸ்கான்சினில் கடந்த ஆண்டு தொழிலாளர் விரோத, வரவு-செலவுத் திட்ட குறைப்புச் சட்டம் என்று வாக்கர் சுமத்தியதிற்கு எதிரான வெடிப்பை ஜனநாயக கட்சியும் தொழிற்சங்கங்களும் அடக்கியதனால் ஏற்பட்ட முன்கூட்டியே எதிர்பார்த்த விளைவுகள்தாம்.

பெப்ருவரி-மார்ச் 2011 நிகழ்வுகள் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியமான அரசியல் அனுபவமாகும். இது சர்வதேச அளவில் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்தது. வாக்கர் திடீரென பொதுத்துறை ஊழியர்களின் பேரம் பேசும் திறனைக் கிட்டத்தட்ட அகற்றிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியதும், தொழிலாளர்கள் நலன்கள், சமூகநலத்திட்டங்களில் இருந்து BadgerCare(மருத்துவ உதவி) யில் இருந்து பில்லியன் கணக்கை நீக்கியதும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்ற காரணமானதுடன் மாடிசனில் காபிடோல் ரொடுண்டாவை ஆக்கிரமித்தது  ஆகியவை நிகழ்ந்தன.

குடியரசுக் கட்சிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலச் சட்டமன்றம் எதிர்ப்புக்களைப் புறக்கணித்து, தொழிலாளர் விரோத சட்டத்தையும் இயற்றியபின், ஒரு பொதுவேலைநிறுத்தத்திற்கான வளர்ச்சியடையும் இயக்கம் இருந்தது. மாடிசனில் உள்ள தென் மத்திய தொழிலாளர் கூட்டமைப்பு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆனால் அதை செயல்படுத்தும் நோக்கத்துடன் இல்லாமல் அங்கத்தவர்களிடையே பெருகியிருந்த போர்க்குணத்திற்கு ஒரு வடிகால் அமைப்பதற்கு ஒரு தீர்மானத்தை இயற்றியது. சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் பொது வேலைநிறுத்த நடவடிக்கைக்கான ஒரு ஆக்கிரோஷமான பிரச்சாரத்தை மேற்கொண்டு, அறிக்கைகளை வெளியிட்டு, அவற்றை ஆயிரக்கணக்கில் வாக்கர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் வினியோகித்தன.

AFL-CIO,  அரசாங்கத் தொழிலாளர்கள் சங்கம் (AFSCME) மற்றும் WEAC எனப்படும் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் ஆகியவை தொழிலாளர் விரோதச் சட்டத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தைப் பிடிவாதமாக எதிர்த்தன. அவர்களின் முக்கிய வருமானமான அங்கத்துவ சந்தாக் கட்டணங்களை தடையின்றி பெற்றுக்கொள்வதையும் மற்றும் அதன் அங்கத்தவர்களின் வருமானம், நலன்கள் குறைப்பு பற்றிய பேச்சுக்களில் அவர்களுடைய பங்கை ஏற்றுக்கொள்வது என்ற நிபந்தனையை வாக்கர் உறுதிப்படுத்தியவுடன் வாக்கர் கோரிய அனைத்து வெட்டுக்களையும் அவை செயல்படுத்த முன்வந்தன.

தொழிற்சங்கத் தலைவர்கள் வாக்கர் எதிர்ப்பு இயக்கத்தை மூடி, தொடர்ந்த திருப்பியழைத்தல் பிரச்சாரங்கள்மீது அதைத் திசைதிருப்பி, குடியரசுக்கட்சி அரசியல்வாதிகளுக்குப் பதிலாக ஜனநாயகவாதிகளை நியமிக்க முயன்றனர். இது மாநில செனட் உறுப்பினர்களை கோடையில் அகற்ற முயன்றதில் ஆரம்பித்து, மனுக்கள் கொடுக்கும் நிலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டதால், ஜூன் 5ம் தேதி திருப்பியழைத்தல் தேர்தல் கட்டாயமாயிற்று.

தங்கள் பங்கிற்கு ஜனநாயக கட்சியினர்கள், பொது ஊழியர்களின் நலன்கள், சமூக நலன்களின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் வாக்கர் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்து, ஜனநாயக் கட்சியினரின் ஆதரவுத்தளத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நிலைமை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்தனர்.

அந்த நேரத்தில் WSWS விளக்கியதுபோல், திருப்பியழைத்தல் பிரச்சாரம் ஓர் இழிந்த, பிற்போக்குத்தன தந்திரோபாயமாகும். இது தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரண்டுவிடாமல் தடுக்கும் நோக்கம் உடையது. சமூகத் திட்டங்கள், தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதலுக்கான எதிர்ப்பைச் சிதைத்து  போராட்டத்தை வாக்கருக்கு எதிராக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக மாற்றுவது ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி ஒரு பொது வேலைநிறுத்தம் மூலம் வாக்கரை அகற்றுவதற்குப் பிரச்சாரம் நடத்தியது. இலாபமுறை, இரு பெருவணிகக் கட்சிகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்படுவது இதற்கான முதல் படி எனக் கூறியது.

அப்பொழுது நாம் எழுதினோம்: வாக்கர் அகற்றப்பட வேண்டும் என்று விடப்படும் அழைப்பு ஜனநாயகக் கட்சி மீது நம்பிக்கை வழங்கும் வாக்கு என்ற அர்த்தத்தை தந்துவிடாது. விஸ்கான்சினின் எல்லைகளுக்கும் அப்பால், ஜனநாயக கட்சி ஆளுனர்களும் நகரசபை தலைவர்களும் வாக்கர் கோரியதைவிடச் சற்றும் குறைவில்லாமல் வரவுசெலவுத்திட்ட வெட்டுக்கள் கடுமையாக வேண்டும் என்றுதான் செயல்படுகின்றனர். ஒபாமா நிர்வாகம் மாநில ஆளுனர்களுடனும் வாஷிங்டனில் காங்கிரசுடனும் நாடு முழுவதும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரும் நாசத்தை ஏற்படுத்தும் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் செயல்படுத்தப்படுவதற்கு ஒத்துழைக்கிறது. ...

எனவே வாக்கர் அகற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கை மிக முக்கியமான பிரச்சினையை எழுப்புகிறது. அதாவது தொழிலாளர்கள் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் குடியரசு, ஜனநாயகக் கட்சிகளுக்கு எதிராக தங்கள் சொந்த, சுயாதீன, சோசலிச மாற்றீட்டைத் தோற்றுவிக்க வேண்டும்.  (See: “Walker must go! For a general strike in Wisconsin!”)

இந்த முன்னோக்கு கடந்த 15 மாதங்களாக நடைபெறும் நிகழ்வுகளால் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. திருப்பி அழைத்தல் தேர்தலில் வாக்கரை எதிர்த்த ஜனநாயகக் கட்சி நியமித்தவர்கள் எவரும் தொழிலாளர் விரோதச் சட்டத்தை அகற்றவோ, அத்துடன் வந்துள்ள வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை அகற்றவோ உறுதிகொள்ளவில்லை. பின்னர் ஜனநாய வேட்பாளராக வந்த மிலுவாக்கீ நகரசபை தலைவர் ரொம் பாரெட் தான் ஒன்றும் தொழிற்சங்கங்களின் தேர்வு அல்ல என்று பெருமை பேசி, கிட்டத்தட்ட கூட்டு பேரம்பேசும் பிரச்சினை முழுவதையும் கைவிட்டார். அவரே வாக்கரின் சட்டத்தைப் பயன்படுத்தி மிலுவாக்கி நகரத் தொழிலாளர்கள் ஊதியங்களில் $19 மில்லியன் வெட்டுக்களைச் சுமத்தினார்.

திருப்பியழைத்தல் பிரச்சாரத்திற்குத் தான் கொண்டிருந்த விரோதப் போக்கை ஒபாமா நிர்வாகம் சிறிதும் மறைக்க முற்படவில்லை. பாரெட்டுடன் பிரச்சாரத்தில் ஒபாமா ஈடுபடவில்லை; பின்னர் வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை உதறித்தள்ளும் வகையில் பின்வருமாறு கூறினார்: திருப்பியழைத்தல் தேர்தலின் விளைவில் உங்களுக்கு ஏற்கெனவே ஒருமுறை வென்றுள்ள தற்பொழுதுள்ள ஆளுனரே கிடைத்தார்.  அவருக்கு சவால்விட்டவரைப் போல்7 அல்லது 8 மடங்குகள் மேலதிக சாத்தியங்களை கொண்டிருந்தார்...

திருப்பியழைத்தல் வாக்கின் விளைவு ஏற்கனவே செய்தி ஊடகங்களிலும் முக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களாலும் வாக்கர் சுமத்திய தீய சிக்கன நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவிற்கு நிரூபணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திருப்பியழைத்தல் திட்டம் நவம்பர் 6ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும் சரி ஜனநாயகக் கட்சிக்கு மட்டுமல்ல ஏன் அமெரிக்க அரசியல் அமைப்புமுறை முழுவதிற்குமே இன்னும் வலதிற்கு செல்ல ஒரு நியாயப்படுத்தலை கொடுக்கிறது.

சர்வதேச சோசலிச அமைப்பு (ISO-International Socialist Organization)  போன்ற போலி இடது குழுக்கள் விஸ்கான்சின் போராட்டத்தை நசுக்குவதில் முக்கியப் பங்கைக் கொண்டு, தொழிற்சங்கங்களின் அதிகாரத்தில் நம்பிக்கைவைத்து, பாரிய எதிர்ப்பு குடியரசுக் கட்சியினரின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்க்க ஜனநாயகக் கட்சியை நிர்ப்பந்திக்கும் என்ற முன்னோக்கை முன்வைத்தன. இவை வேண்டுமென்றே குடியரசுக்கட்சியைவிடச் சற்றும் குறையாத வகையில் பெருநிறுவன அமெரிக்காவின் கட்சியான ஜனநாயகக் கட்சியின் வர்க்க அடையாளத்தை மறைத்தன.

ஜனநாயகக் கட்சியின் தோல்வியை அடுத்து, ISO மூடிமறைத்தலைத் தொடர்கிறது. வாக்கரின் வெற்றி எழுச்சியில் இருந்து வெளிப்பட்ட இயக்கத்திற்கு வேதனை தரும் இழப்பு என விவரித்தது. இது தொழிற்சங்கங்கத் தலைவர்களின் கூற்றான திருப்பியழைத்தல் பிரச்சாரம் வாக்கருக்கு எதிராக வெகுஜன இயக்கத்தின் தொடர்ச்சி என்பதை ஏற்கிறது. ஆனால் இது உண்மையில் காட்டிக் கொடுப்பையும், முடிவுபெற்றதையும்தான் பிரதிபலிக்கிறது.

பெப்ருவரி-மார்ச் 2011ல் விஸ்கான்சினில் நடந்த நிகழ்வுகள் தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச எழுச்சியுடன் இணைந்திருந்தது. அதில் அமெரிக்கச் சார்புடைய துனிசிய, எகிப்துச் சர்வாதிகாரிகள் அகற்றப்பட்டனர். மேலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் ஸ்பெயின், கிரேக்கம், போர்த்துக்கல், இத்தாலி, இஸ்ரேலில்கூட, நடைபெற்றன.

விஸ்கான்சினில் கொந்தளிப்பை ஏற்படுத்திய பொருளாதார சீர்கேடுகளும் சமூக அழுத்தங்களும் இன்னமும் தீர்க்கப்படவில்லை. மாறாக அவை பாரியளவில் தீவிரமாகிவிட்டன. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்வர்க்கம் முதலாளித்துவத்தின் நெருக்கடியால் போராட்டத்திற்குள் தள்ளப்படுகின்றன. ஆளும் வர்க்கம் தன் செல்வத்தைக் காப்பதற்கு இரக்கமற்ற முறையில் வேலைகள், ஊதியங்கள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின் மீது தாக்கும் உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கும் போராட்டத்திற்கான புதிய அமைப்புக்களும் தேவைப்படுகின்றன. தொழிற்சங்கங்கள்மீது நம்பிக்கை வைக்கப்பட முடியாது. அவை பெருவணிகத்திற்குப் பொலிசாகத்தான் தொழிலாளர் வர்க்கத்திற்குள் செயல்படுகின்றன. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர் வர்க்கம் புதிய அமைப்புக்களைக் கட்டமைக்க வேண்டும். அவை அடிமட்டத் தொண்டர்களைக் கொண்டு, பொதுத்துறை, தனியார்துறைத் தொழிலாளர்களையும் பணியிடங்களில், பள்ளிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள இளைஞர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூகப் பணிகளின் போர்க்குணமிக்க பாதுகாப்பு இலாபமுறை, பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் இருகட்சிமுறை இவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டமாக வேண்டும். தொழிலாள வர்க்கம் முன்னேறுவதற்கு ஒரே வழி ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு, தொழிலாளர்களின் அதிகாரம், சோசலிசம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட சுயாதீன கட்சியை அமைப்பதுதான்.

விஸ்கான்சினின் முக்கிய படிப்பினை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியமைத்தல்தான்.  அதுதான் எதிர்வரவிருக்கும் சமூகப் போராட்டங்களில் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தினாலும் முன்னோக்கினாலும் தொழிலாள வர்க்கத்தினை ஆயுதபாணியாக்கும்.