World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Non-academic university staff strike in Sri Lanka

இலங்கையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம்

By Panini Wijesiriwardane
7 June 2012

Back to screen version

இலங்கை பல்கலைக் கழகங்களில் ஆயிரக்கணக்கான கல்விசாரா ஊழியர்கள், சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான தமது பிரச்சாரத்தின் பகுதியாக, உடனடியாக 25 சதவீத சம்பள உயர்வு கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்கின்றனர். இந்த வேலைநிறுத்தம், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட தீவு முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த 26 நிறுவனங்களையும் சேர்ந்த கல்விசாரா ஊழியர்கள் மே 22-23ல் நடத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய வேலைநிறுத்தம், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி.) போன்ற எதிர் கட்சிகளது தொழிற்சங்கங்களும், அதே போல் சுயாதீன தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுவனவும் உள்ளடங்கலாக, அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவினால் (IUTUJC) அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) சார்ந்த தொழிற்சங்கம் இந்த தொழிற்சங்க கூட்டுக் குழுவில் இருந்த போதும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வில்லை.

சம்பள முரண்பாட்டுக்கு முடிவுகட்டும் கோரிக்கை 2004ம் ஆண்டில் இருந்து இழுபட்டு வருகின்றது. அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையொன்று, கல்விசாரா ஊழியர்களின் சம்பள மட்டங்களை நியாயமாக தீர்ப்பதற்கு பிரேரித்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் விலை மானியங்கள் குறைத்து, பணவீக்க உயர்வை தூண்டிவிட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினை இப்போது எரியும் பிரச்சினையாகியுள்ளது.

அரசாங்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை அலட்சியம் செய்துவந்தன. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, தொழிற்சங்க கூட்டுக் குழு அலுவலர்களுடனான பல சந்திப்புகளை ஒத்திப்போட்டதோடு இறுதியில் அனைத்து கலந்துரையாடல்களையும் இரத்துச் செய்தார்.


கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமல் இருந்ததோடு கடந்த வரவு செலவுத் திட்ட உரையில் உறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை. ஆயினும்கூட, கடந்த மாதம் மறியல் போராட்டம் செய்த தொழிலாளர்கள் மத்தியில் பேசிய தொழிற்சங்க கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் ஆர். எம். சந்திரபால, "சம்பள முரண்பாட்டைத் திருத்திக்கொள்ள 2012 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூலம் பணம் ஒதுக்கியமைக்காக" ஜனாதிபதி இராஜபக்ஷவை பாராட்டினார்.

இந்த தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாடுகள் தொடர்வதற்கு நேரடி பொறுப்பாகும். அவை கடந்த தசாப்தங்களில் அடுத்தடுத்து போராட்டங்களை காட்டிக்கொடுத்தன. 2003ல் 22 நாள் வேலைநிறுத்தம் நடந்த பின்னர், யூ.என்.பீ. தலைமையிலான அரசாங்கம் இந்தப் பிரச்சினையை விசாரிக்குமாறு இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிலையத்திடம் (SLIDA) கொடுத்தது. கல்விசாரா ஊழியர்களின் ஊதியம், மற்ற பல்கலைக் கழக சம்பளங்களுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என SLIDA பரிந்துரைத்திருந்த போதிலும், அரசாங்கம் அந்த பரிந்துரைகளை நிராகரித்தது.

2004 செப்டம்பரில், முழு பரிந்துரைகளும் செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருக்கும் போது, கல்விசாரா ஊழியர்கள் மீண்டும் 2,500 ரூபா மாதாந்த கொடுப்பனவு கோரி வேலை நிறுத்தம் செய்தனர். தொழிற்சங்க அதிகாரிகள் 1,000 ரூபா கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டனர். அப்போது, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டிருந்த சந்தை சார்பு மறுசீரமைப்பை அமல்படுத்தி வந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் ஜே.வி.பி. ஒரு அங்கமாக இருந்தது.

2005 ஜூலையில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அதே கோரிக்கைகளுக்காக ஒரு மாதம் வேலை நிறுத்தம் செய்த போதிலும், அவர்களின் போராட்டத்தை ஜே.வி.பி. தலைமையிலான அனைத்துப் பல்கலைக்கழக சேவைகள் தொழிற்சங்கம் கீழறுத்தது. அப்போது குமாரதுங்க அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஜே.வி.பி., தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கூட்டாக சுனாமி நிவாரண நிதியை முகாமைத்துவம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கட்டமைப்புத் திட்டத்துக்கு எதிராக ஒரு பேரினவாத பிரச்சாரத்தை முன்னெடுத்தது. பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் மீதான எதிர்ப்பை உக்கிரமாக்கும் பொருட்டு, தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பல்கலைக்கழக சேவைகள் தொழிற்சங்கம் வலியுறுத்தியது.

ஜே.வி.பீ. 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ வெற்றி பெற ஆதரித்ததுடன் அவரது அரசாங்கம் 2006ல் புலிகளுக்கு எதிரான நீண்டகால உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்க எடுத்த முடிவை முழுமையாக ஆதரித்தது. முழு தொழிற்சங்க இயக்கமும் அரசாங்கத்தின் போர் முயற்சிக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்தது.

2007 மேயில் கல்விசாரா ஊழியர்களின் மற்றொரு வேலைநிறுத்தத்துக்கு முடிவுகட்டிய தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணை செயலாளர் எச்.பீ. ஆரியபால, "அரசாங்கத்தின் நிதி நெருக்கடிகளையும் பிற சிக்கல்களையும் கணக்கில் எடுக்கும் போது," தொழிற்சங்கங்களுக்கு மாற்றீடு கிடையாது என பிரகடனம் செய்தார். அடுத்த மாதம் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்துவதற்கு அதே சாக்குப் போக்கைப் பயன்படுத்திய தொழிற்சங்கத் தலைவர்களும் "நாட்டில் மேலோங்கும் சூழ்நிலையை" காட்டின.

"மேலோங்கும் நிலைமை" என்பது இராஜபக்ஷவின் இனவாத யுத்தமாக இருந்ததுடன், "பண கஷ்டங்கள்" என்பவை கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி போன்ற அத்தியாவசிய சேவைகளின் இழப்பில் அரசாங்கம் செய்த பிரமாண்டமான இராணுவ செலவாகும்.

பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களின் படுகொலை மற்றும் பகிரங்க ஜனநாயக உரிமை மீறல்களை விளைவாக்கிய இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தம், புலிகளின் இராணுவத் தோல்வியுடன் 2009ல் முடிவுக்கு வந்தது. எவ்வாறெனினும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்ட ஒரு புதிய காலத்தை திறப்பதற்கு மாறாக, அரசாங்கம் இப்போது "பொருளாதார வளர்ச்சிக்கும்" "தேசத்தை கட்டியெழுப்பவும்," தியாகம் செய்யுமாறு கோருகின்றது.

கல்வியில் அரசாங்கம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியின் முக்கிய துறைகளை திறந்துவிட்டு, தனியார்மயமாக்கத்துடன் முன் செல்கின்றது. இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பாதுகாப்பு, தோட்டம் மற்றும் போக்குவரத்து உட்பட பல்கலைக்கழகங்களின் கல்விசாரா நிலைகள் ஏற்கனவே ஓரளவு வெளியில் இருந்து நிறைவேற்றப்படுகின்றன. ஒட்டுமொத்த ஊழியர்கள் படையும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் இடைவெளியை நிரப்பாமல் 13,000ல் இருந்து 10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் ஊதிய வெட்டுக்கள் மற்றும் பணிச்சுமை அதிகரிப்பும் அரசாங்கத்தின் சந்தை சார்பு நிகழ்ச்சித் திட்டத்துடன் பிணைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிலைமை போலவே, இராஜபக்ஷ சிக்கன நடவடிக்கைகள் மூலம் உழைக்கும் மக்கள் மீது உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை சுமத்தி, நிதிய சந்தைகளின் கோரிக்கைகளை அமல்படுத்தி வருகின்றார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முழுமையாக ஆதரிக்கின்ற போதிலும், தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் என்று எச்சரிக்கின்றது. அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன வேண்டும் தொழிற்சங்கங்களும் மற்றும் அவை சார்ந்துள்ள அரசியல் கட்சிகளும், அரசாங்கத்தின் கொள்கைகளுடன் அடிப்படை வேறுபாடுகள் எதையும் கொண்டிருக்காததுடன், இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்து சலுகைகள் பெற முடியும் என்ற மாயையை ஊக்குவிக்கின்றன.

தொழிலாளர்கள் ஜனாதிபதியிடம் கெஞ்சும் முன்நோக்கை நிராகரிப்பதோடு அரசாங்கத்துக்கு எதிராகவும் அது பாதுகாக்கின்ற இலாப அமைப்புக்கு எதிராகவும் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தொழிற்சங்கங்களிடம் இருந்து முழுமையா முறித்துக்கொள்வதன் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டியிருப்பதோடு இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் இலங்கையில் உள்ள ஏனைய பிரிவு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் பக்கமும் திரும்ப வேண்டும்.

தொழிலாள வர்க்கம், தனியார் இலாபத்துக்காக அன்றி சமூக தேவைகளுக்காக இயங்கும் வகையில் பொருளாதாரத்தை மறு ஒழுங்கு செய்வதற்காக, முதலாளித்துவ ஆட்சிக்குப் பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கும் ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்படல் வேண்டும். இந்தப் பணிக்கு முதலாளித்துவத்தின் சகல பிரிவினரிடம் இருந்தும் சுயாதீனமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், பிராந்தியத்திலும் உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதரர்களுடன் ஐக்கியப்படுவது அவசியமாகும்.


இலங்கை மற்றும் தெற்கு ஆசியாவில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இந்த முன்நோக்குக்காகப் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. நாம் தெற்காசியா முழுவதும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஆமைக்க அழைப்புவிடுக்கின்றோம். நாம் நமது முன்னோக்கை தீவிரமாக கற்குமாறும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்குத் தலைமை வகிக்கத் தேவையான ஒரு புதிய வெகுஜன புரட்சிகர கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதன் பேரில் அதில் சேர விண்ணப்பிக்குமாறும் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.